டெல்லியில் கடந்த 26 வருடங்களாக ஆட்சியில் இல்லாத பாஜக, இம்முறை ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று (பிப். 5) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 சனிக்கிழமை நடைபெறும்.
டெல்லியில் 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 2015ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 67 இடங்களையும், 2020இல் 62 இடங்களையும் வென்றது.
இந்தத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக முன்னிலை வகிப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதேசமயம் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது இடம் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சரியாக இருந்தால், 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சி அமைக்க முடியும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்
மேட்ரிக்ஸ் கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 32 முதல் 37 இடங்களும், பாஜகவுக்கு 35 முதல் 40 இடங்களும், காங்கிரஸுக்கு 0 முதல் 1 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
‘சாணக்யா ஸ்ட்ராடஜி’ நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 39 முதல் 44 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 25 முதல் 28 இடங்களையும், காங்கிரஸ் 2 முதல் 3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.சி-யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 39 முதல் 45 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 முதல் 31 இடங்களிலும், காங்கிரஸ் 0 முதல் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ கருத்துக்கணிப்பில், பாஜக 51 முதல் 60 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 19 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
‘போல் டைரி’ கருத்துக்கணிப்பில் பாஜக 42 முதல் 50 இடங்களிலும், காங்கிரஸ் 18 முதல் 25 இடங்களிலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 0-2 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் இன்சைட் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 40-44 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 25-29 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காங்கிரசுக்கு 0-1 தொகுதிகளே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பி-மார்க் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 39-49 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு 21 முதல் 31 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 0 முதல் 1 தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.