பட மூலாதாரம், ANI
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், அரவிந்த் கேஜ்ரிவாலால் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் ஜங்பூரா சட்டமன்ற தொகுதியில் தோல்வியடைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு அவர் இந்த முடிவை எடுத்தார்.
கேஜ்ரிவால் சிறையில் இருந்தபோது, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. மேலும் டெல்லி அரசாங்கம் சிறையில் இருந்து நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறி வந்தனர். ஆனால் இந்த கருத்துகளை கேஜ்ரிவால் புறக்கணித்தார்.
கடந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி அன்று கேஜ்ரிவால் சிறைக்குச் சென்றார். 2024 மக்களவைத் தேர்தலுக்கு சற்று முன்பு இது நடந்தது. இதன் பின்னர், எதிர்க்கட்சிகளை குறிவைக்க மத்திய அரசு முகமைகளை மோதி அரசாங்கம் தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் சுமார் ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார் (பின்னர் மதுபானக் கொள்கை ரத்து செய்யப்பட்டது).
“மக்கள் என்னும் நீதிமன்றத்துக்கு முன் செல்ல முடிவு செய்துள்ளேன். நான் நேர்மையானவனா இல்லையா என்பதை பொதுமக்கள் முடிவு செய்வார்கள்”, என்று டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் போது, கேஜ்ரிவால் கூறினார்.
இப்போது மக்கள் அவர்களது முடிவு பற்றி தெரிவித்துள்ளனர். இந்த முடிவு டெல்லியின் அடுத்த முதல்வர் கேஜ்ரிவாலா இல்லை பாஜகவைச் சேர்ந்தவரா என்பதை விட, கேஜ்ரிவால் நேர்மையற்றவரா அல்லது நேர்மையானவரா என்பது பற்றியது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது, 2030 ஆம் ஆண்டு தேர்தல் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை கேஜ்ரிவால் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒன்றின் மூலம் கேஜ்ரிவால் அரசியலில் நுழைந்தார். தனது கட்சியும் தானும் முற்றிலும் நேர்மையானவை என்று அவர் கூறி வருகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஊழல் வழக்கில் அவர் சிறைக்குச் சென்றபோது, அது அவரது கூற்றுக்கு எதிரானதாக இருந்தது.
“ஊழலுக்கு எதிரானவர் என்ற கேஜ்ரிவாலின் பிம்பம் நிச்சயமாக பலவீனமடைந்துள்ளது. ஆனால் இந்திய வாக்காளர்களுக்கு இது ஒரு முக்கிய பிரச்னையாக இருக்கவில்லை என்று நான் கருதுகிறேன்,” என்று பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியரான அஷுதோஷ் குமார் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
அரவிந்த் கேஜ்ரிவாலின் பிம்பம்
“இந்தியாவில் அரசியல்வாதிகள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாவது புதிதல்ல. பொதுமக்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 12 ஆண்டுகளாக கேஜ்ரிவால் தனக்கென அரசியலில் உருவாக்கிய பிம்பம் தற்போது பலவீனமடைந்துள்ளது என்பது உண்மைதான்”, என்று அஷுதோஷ் குமார் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரானவர் என்ற கேஜ்ரிவாலின் பிம்பத்தை பாஜக பலவீனப்படுத்தியுள்ளது என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
“எந்தவொரு எதிர்க்கட்சியும் தனது எதிரியை உத்தி ரீதியாக தாக்கலாம். ஊழலுக்கு எதிரானவர் என்ற கேஜ்ரிவாலின் பிம்பத்தை பாஜக உடைத்தது”, என்று மூத்த பத்திரிகையாளர் ஆதேஷ் ராவல் கூறினார்.
மேலும் அவர், “தான் நேர்மையானவரா இல்லையா என்பதை பொதுமக்கள் முடிவு செய்வார்கள் என்று கேஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இப்போது அது குறித்து தீர்ப்பு வந்துவிட்டது. தான் கூறிய கருத்தினை நியாயப்படுத்துவது கேஜ்ரிவாலுக்கு கடினமானதாக இருக்கும்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அரசு பங்களாவில் தங்க மாட்டேன் என்றும், தான் வைத்திருக்கும் சிறிய காரில் மட்டுமே பயணிப்பேன் என்றும் கேஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால் அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. இதன் பொருள், தான் உருவாக்க முயன்ற பிம்பத்தை கேஜ்ரிவாலே பலவீனப்படுத்தினார்”, என்று தெரிவித்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில், கேஜ்ரிவாலின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அஷுதோஷ் குமார் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என்ற சந்தேகம் டெல்லி மக்களின் மனதில் இருந்ததே கேஜ்ரிவால் தோல்வியடைந்ததற்கான முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்.
நான் டெல்லியில் மக்களிடம் பேசும் போது, ‘துணைநிலை ஆளுநர் பல தடைகளை ஏற்படுத்துகிறார். மத்திய அரசு கேஜ்ரிவாலை வேலை செய்ய விடுவதில்லை’ என்று அவர்கள் கூறினார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதே வாக்குறுதிகளை பாஜக அளிக்கிறது, துணைநிலை ஆளுநர் தங்களை வேலை செய்ய விடுவதில்லை என்று அக்கட்சியால் சொல்ல முடியாது. எனவே அதற்கு ஏன் வாக்களிக்கக்கூடாது என்று மக்கள் நினைத்தார்கள்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
மக்கள் ஏன் பாஜகவை தேர்ந்தெடுத்தார்கள்?
துணைநிலை ஆளுநர் பணி செய்ய அனுமதிக்கவில்லை என்றால், இதில் கேஜ்ரிவாலின் தவறு என்ன? அத்தகைய சூழ்நிலையில், மக்கள் கேஜ்ரிவால் மீது அனுதாபம் தானே கொண்டிருக்க வேண்டும்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அஷுதோஷ், “ஏழைகளிடமிருந்து நாம் அனுதாபத்தை எதிர்பார்க்க முடியாது. தினமும் உணவு உண்பதற்காக போராடும் ஒருவரிடம் நாம் எப்படி அனுதாபத்தை எதிர்பார்க்க முடியும்? நடுத்தர வர்க்கத்தினரும் கேஜ்ரிவாலை கைவிட்டனர். டெல்லியின் உயரடுக்கு பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கனவே தங்களது வரிப்பணம் மானியங்களுக்கே செல்வதாக கருதுகின்றனர். இலவச பேருந்து சேவை மற்றும் மின்சாரம், தண்ணீர் வசதிகளுக்கு வழங்கப்படும் மானியங்களுக்கு இவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை”, என்று கூறினார்.
“கேஜ்ரிவால் தண்ணீர்-மின்சாரம் மற்றும் பிற வகையான மானியங்களைப் பற்றி பேசியிருந்தார். ஆனால், இப்போது இந்தியாவில் பல கட்சிகள் இது போல செய்து வருகின்றன. இந்த மானியங்கள் வழங்கப்படுவதை நீக்கி பார்த்தால், ஆம் ஆத்மி கட்சியில் வேறு என்ன சிறப்பு எஞ்சியிருக்கும்?” என்று ஆதேஷ் ராவல் கேள்வி எழுப்புகிறார்.
2023-ஆம் ஆண்டில், நரேந்திர மோதி அரசு மத்தியில், டெல்லி சேவைகள் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, டெல்லி அரசாங்கத்தின் பெரும்பாலான அதிகாரங்கள் துணைநிலை ஆளுநரிடம் சென்றன.
”டெல்லியில் மதம் மற்றும் சாதி சார்ந்த அரசியல் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அத்தகைய சூழ்நிலையில் கேஜ்ரிவால் ஏழைகளின் பிரச்னைகளை களைவதற்கான அரசியலைத் தொடங்கினார். ஆனால் ஏழைகளின் நம்பிக்கை குறைந்தது ஆம் ஆத்மி கட்சிக்கு கடினமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது,” என்று அஷுதோஷ் குமார் கூறுகிறார்.
கேஜ்ரிவால் பல மாதங்களாக திகார் சிறையில் இருந்தார். முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்ல கூடாது போன்ற சில நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது தவிர்க்க முடியாத ஒன்றானது.
பட மூலாதாரம், ANI
கேஜ்ரிவால் சொன்னதற்கு மாறாக செயல்பட்டாரா?
2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி சார்பாக பஞ்சாபிலிருந்து தர்மவீர் காந்தி என்பவர் நாடாளுமன்ற உறுப்பினரானர். கேஜ்ரிவாலுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக, யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் அவர் கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தற்போது பட்டியாலா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
“தான் ஒரு சாதாரண மனிதர் என்றும், முதலமைச்சரான பிறகும் ஒரு சாதாரண மனிதனைப் போலவே இருப்பேன் என்றும் கேஜ்ரிவால் கூறியிருந்தார். ஆனால் அது பொய்யானது. அவர் தனக்கென ஒரு பெரிய பங்களாவைக் கட்டிக்கொண்டு விலையுயர்ந்த காரை வாங்கினார்.
தான் ஒரு ஜனநாயகத் தலைவர் என்றும் அவர் கூறியிருந்தார். அதுவும் தவறு என்று தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் ஜனநாயகம் இல்லை, அவருடைய உத்தரவுகள் மட்டுமே கட்சிக்குள் மேலோங்கி நிற்கின்றன”, என்று தர்மவீர் காந்தி தெரிவித்தார்.
“தான் ஒரு நேர்மையானவன், வெளிப்படையான அரசியல் செய்வேன் என்றும் கேஜ்ரிவால் கூறினார், ஆனால் இதுவும் தவறு என்று தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்ற அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மதம் மற்றும் சாதி சார்ந்த அரசியல் செய்யமாட்டேன் என்று கேஜ்ரிவால் கூறினார். ஆனால் அது உண்மை என்று நிரூபிக்கப்படவில்லை. கேஜ்ரிவால் தனது சாதியைப் பலமுறை குறிப்பிட்டுள்ளார். மதச்சார்பின்மை அவருக்கு ஒரு முக்கியமான சித்தாந்தம் அல்ல”. என்றார் அவர்
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களாக பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் மற்றும் பேராசிரியர் ஆனந்த் குமார் போன்றவர்கள் இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து பிரிந்துவிட்டனர்.
யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷண் தொடர்பாக டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் காரசாரமான விவாதம் நடத்தியதாக தர்மவீர் காந்தி கூறுகிறார்.
“யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷண் விஷயத்தில் நீங்கள் சரியானதைச் செய்யவில்லை என்று நான் கேஜ்ரிவாலிடம் கூறினேன். அதற்கு பதிலளித்த அவர் ‘ஒன்று இந்த பக்கம் இருங்கள் அல்லது அந்த பக்கம் இருங்கள்’ என்றார்.
இதுதான் கேஜ்ரிவால் கட்சிக்குள் நிலவும் ஜனநாயகமா? கேஜ்ரிவால் எந்தெந்த நபர்களை மாநிலங்களவைக்கு அனுப்பியுள்ளார் என்பதை நீங்கள் பாருங்கள். லவ்லி பல்கலைக்கழகத்தின் உரிமையாளரான அசோக் குமார் மிட்டல் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டார். பெரும்பாலும் நிதி அளிக்கக் கூடிய நபர்களே மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்படுகின்றனர்”, என்று தர்மவீர் காந்தி தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டது. அப்போது டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்றில் கூட அது வெற்றிபெறவில்லை. 2014 மக்களவைத் தேர்தல் முதல் 2020 வரை, டெல்லி மக்கள் நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜகவிற்கும், சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிக்கும் வாக்களித்து வருகின்றனர்.
ஆனால் 2025 ஆம் ஆண்டு தேர்தலில், இந்தப் போக்கும் நின்றுவிட்டது. இப்போது டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளும் பாஜக-வின் வசம் உள்ளன. டெல்லி அரசாங்கமும் பாஜக வசம் உள்ளது.
காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் அரசியலை ஆம் ஆத்மி கட்சி மூலம் அரவிந்த் கேஜ்ரிவால் அடித்தளமிட்டார். ஆனால் ஒரு வருடத்துக்குள், அதாவது 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவர் காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் அரசாங்கத்தை அமைத்தார்.
49 நாட்களில், கேஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு மீண்டும் காங்கிரஸூக்கு எதிராக குரல் கொடுத்தார்.
2024 வாக்கில், அரவிந்த் கேஜ்ரிவால் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்தார். டெல்லி மற்றும் குஜராத்தில் மக்களவைத் தேர்தல்களிலும் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இருந்தது. ஆனால் அது எந்த பலனையும் தரவில்லை.
இருப்பினும், 2025 சட்டமன்றத் தேர்தலில் பல இடங்களில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காததால் ஆம் ஆத்மி கட்சி இழப்பைச் சந்தித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.