செவ்வாய்க்கிழமை இரவுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், நான்கு மணி நேரத்திற்குள் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
“எங்கள் ராணுவத்தின் வலிமையின் காரணமாக, எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணிக்குள் ஈரானில் உள்ள ஒவ்வொரு பாலமும் அழிக்கப்படும்; ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையமும் செயலிழக்க செய்யப்பட்டு, எரிந்து, வெடித்து சிதறி, மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும். அதாவது, இரவு 12 மணிக்குள் முழுமையான அழிவு ஏற்படும். நாங்கள் விரும்பினால், இது வெறும் நான்கு மணி நேரத்திற்குள் நிகழ்ந்துவிடும்,” என்று டிரம்ப் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை கிழக்கு நேரப்படி இரவு 8 மணிக்குள், அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறும், எண்ணெய் தடையின்றி செல்வதற்காக ஹார்முஸ் நீரிணையை திறந்துவிடுமாறும் அவர் ஈரானைக் கேட்டுக்கொண்டார்.
ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது சாத்தியமான போர்க்குற்றமாக அமையக்கூடும் என்ற குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, டிரம்ப், “இல்லை, நிச்சயமாக இல்லை,” என்று பதிலளித்தார்.
ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்கு உடன்பட்டால், அந்நாட்டை மீண்டும் கட்டமைப்பதில் அமெரிக்கா உதவக்கூடும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இதுகுறித்து பேசும் போது, “அவர்கள் தங்கள் நாட்டை மீண்டும் கட்டமைக்க உதவுவதில் நாங்கள் கூட ஈடுபடக்கூடும்,” என்று டிரம்ப் கூறினார்.
45 நாட்கள் போர் நிறுத்தம் குறித்த முன்மொழிவை ஈரான் நிராகரித்ததுடன், போருக்கு ஒரு நிரந்தர முடிவு ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை திறக்க வேண்டும், இல்லையெனில் பொதுமக்கள் வசிக்கும் இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை சந்திக்க நேரிடும் என்று கூறி, ஈரான் மீதான தனது மிரட்டல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
“போர் தொடங்கிய முதல் நாளிலிருந்து ஒப்பிடுகையில், இன்றைக்குத்தான் மிக அதிக அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளன. நாளை, இன்றைவிட அதிகமான தாக்குதல்கள் நடைபெறும். ஈரானுக்கு ஒரு தேர்வு காத்திருக்கிறது. புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுங்கள்- ஏனெனில், அதிபர் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார். நீங்கள் சுலைமானியை கேட்டுப் பார்க்கலாம்; மதுரோவை கேட்டுப் பார்க்கலாம்; காமேனியை (Khamenei) கூட கேட்டுப் பார்க்கலாம்,” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்தார்.