பட மூலாதாரம், Getty Images
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 68 புகைப்படங்களின் புதிய தொகுப்பு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
புகைப்படங்களில் இடம்பெறுவதால் மட்டுமே, அவர்கள் ஏதேனும் தவறு இழைத்திருப்பார்கள் என எந்த உத்தரவாதமும் இல்லை, மேலும் அதில் இடம்பெற்றுள்ளவர்களில் பலர் எப்ஸ்டீன் தொடர்பாக எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.
எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன? என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files) என்றால் என்ன?
2008-ஆம் ஆண்டில், 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம், எப்ஸ்டீன் தனது பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் தங்கள் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். ஆனால் எப்ஸ்டீன், அரசு வழக்கறிஞர்களுடன் ஒரு குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை (plea deal) மேற்கொண்டார்.
அந்த பாம் பீச் வீடு முழுவதும் சிறுமிகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டன, மேலும் அவர் ஒரு மைனரிடம் பாலியல் சேவையை நாடியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டார். குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தின் விளைவாக அவர் கடுமையான சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார்.
பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, பாலியல் தொழிலுக்காகக் குறைந்த வயதுடைய சிறுமிகளைக் கொண்ட ஒரு நெட்வொர்க்கை நடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் விசாரணைக்காகக் காத்திருந்த காலகட்டத்தில் சிறையில் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு குற்றவியல் விசாரணைகள் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுடனான நேர்காணல்களின் எழுத்துப் பிரதிகள் மற்றும் எப்ஸ்டீனின் பல்வேறு சொத்துக்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உட்பட ஒரு பெரிய ஆவணக் குவியல் திரட்டப்பட்டது.
அமெரிக்க நீதித்துறையின் 2025-ஆம் ஆண்டின் குறிப்பாணையின்படி, அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) அதன் தரவுத்தளங்கள், வன்வட்டுகள் (hard drives) மற்றும் பிற சேமிப்பகங்களில் 300 ஜிகாபைட்டிற்கும் அதிகமான தரவுகள் மற்றும் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது.
இந்தக் கோப்புகளில் சில, எப்ஸ்டீனை விசாரிக்க ஃபெடரல் மட்டத்திலும் புளோரிடா மாநில மட்டத்திலும் பணியாற்றும் விசாரணை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருக்கலாம் என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் பிற சட்டவிரோத சிறார் துஷ்பிரயோகப் பொருட்கள் ‘பெருமளவில்’ இருப்பதாக நீதித்துறை கூறுகிறது.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டும் தகவல்களைத் தடுத்து வைக்க, அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட சமீபத்திய சட்டம் நீதித்துறைக்கு அனுமதி அளிப்பதால், இந்தக் கோப்புகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படாது.
பாலியல் கடத்தலுக்காகச் சிறுமிகளைப் பயன்படுத்த எப்ஸ்டீனுடன் சதி செய்ததாக 2021-ஆம் ஆண்டில் குற்றம் நிரூபிக்கப்பட்ட, அவரது பிரிட்டிஷ் கூட்டாளியும் முன்னாள் காதலியுமான கிஸ்லைன் மேக்ஸ்வெல் மீதும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே சிவில் வழக்குகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
எப்ஸ்டீன் தொடர்பாக ஏற்கனவே என்ன வெளியிடப்பட்டுள்ளது?
கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்டங்களில், இந்த வழக்குகள் தொடர்பான சில ஆவணங்கள் பொதுவெளியில் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம், எப்ஸ்டீன் எஸ்டேட்டுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆவணங்களை ‘ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டி’ வெளியிட்டது, அவை பெரும்பாலும் மின்னஞ்சல்கள் ஆகும்.
முன்னதாக செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பில், பிறந்தநாள் வாழ்த்து புத்தகம் ஒன்று இருந்தது; அதில் டிரம்ப் பெயரில் எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்ட ஒரு குறிப்பு இருந்தது, ஆனால் அதை எழுதியதை டிரம்ப் மறுத்துள்ளார்.
பிப்ரவரி மாதம், டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களுக்குப் பிறகு, நீதித்துறையும் எஃப்பிஐ அமைப்பும், எப்ஸ்டீன் கோப்புகளின் “முதல் கட்ட வகைப்படுத்தப்படாத கோப்புகள்” என்று விவரித்ததை வெளியிட்டன.
வலதுசாரி இன்ஃப்ளூயன்ஸர்களின் ஒரு குழு வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு வழங்கப்பட்ட 341 பக்கங்கள் ஏற்கனவே வெளிவந்திருந்த ஆவணங்கள் என்பதை அவர்கள் உணர்ந்தபோது ஏமாற்றமடைந்தனர்.
அதில் எப்ஸ்டீனின் விமானத்தின் பயணப் பதிவுகள் (flight logs) மற்றும் அவருக்குத் தெரிந்த பிரபலமான நபர்களின் பெயர்களைக் கொண்ட அவரது தொடர்பு புத்தகத்தின் திருத்தப்பட்ட பதிப்பு ஆகியவை அடங்கும்.
ஜூலை மாதத்தில், நீதித்துறை மற்றும் எஃப்பிஐ ஒரு குறிப்பாணையில் இனி கூடுதல் ஆவணங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று கூறின.
அது இப்போது மாறியுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் எந்தெந்த பெயர்கள் உள்ளன?
வெளியிடப்படாத ஆவணங்களின் உள்ளடக்கங்கள் இன்னும் அறியப்படவில்லை.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியின்படி, ‘மே மாதம் அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை டிரம்பிடம், அவரது பெயர் எஃப்பிஐ ஆவணங்களில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.’
‘அவர் எப்ஸ்டீனுடன் நண்பராக இருந்தார், ஆனால் கோப்புகளில் பெயரிடப்படுவது தவறான செயலுக்கான ஆதாரம் அல்ல’ என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிட்டது.
வெள்ளை மாளிகைப் செய்தித் தொடர்பாளர் இந்தச் செய்தியை ‘பொய்யானது’ என்று விவரித்தார், இருப்பினும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர், ‘டிரம்பின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதை நிர்வாகம் மறுக்கவில்லை’ என்று கூறினார்.
பொதுவெளியில் ஏற்கனவே உள்ள ஆவணங்கள் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய பல உயர்மட்ட நபர்களைக் குறிப்பிடுகின்றன.
அதேசமயம், பெயர்கள் இடம்பெறுவது அந்த நபர்கள் ஏதேனும் தவறு இழைத்திருப்பார்கள் என்பதைக் குறிக்கவில்லை.
2024-ஆம் ஆண்டில் நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டபோது, அரசர் மூன்றாம் சார்லஸின் சகோதரரும் முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் உட்பட பல பெயர்கள் வந்தன.
கிளிண்டன் மற்றும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று மறுக்கின்றனர். ஜாக்சன் 2009-இல் காலமானார்.
சிறார் பாலியல் கடத்தலுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மேக்ஸ்வெல்லின் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவை.
செப்டம்பரில் வெளியிடப்பட்ட விமானப் பயணப் பதிவுகளில் பில்லியனர் ஈலோன் மஸ்க் மற்றும் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் ஏற்கனவே எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாக மறுத்துள்ளார். எப்ஸ்டீன் தன்னைத் தீவுக்கு அழைத்ததாகவும் ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாகவும் மஸ்க் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 12 அன்று வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் எஸ்டேட்டுக்குச் சொந்தமான மின்னஞ்சல்களின் தொகுப்பில் கிளிண்டனின் முன்னாள் கருவூலச் செயலர் லாரி சம்மர்ஸ் மற்றும் டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஸ்டீவ் பானன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
சம்மர்ஸ் பின்னர் பொதுப் பொறுப்புகளிலிருந்து விலகுவதாகக் கூறினார், அவர் ஒரு அறிக்கையில்: “எப்ஸ்டீனுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எனது தவறான முடிவிற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
எந்தத் தவறும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படாத பானன், பிபிசியின் கருத்துக்கான கோரிக்கைக்குப் பதிலளிக்கவில்லை.
அந்த சமீபத்திய ஆவண வெளியீட்டிலும் டிரம்பின் பெயர் பலமுறை குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் எப்போதும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறார்.
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப்/எப்ஸ்டீன் உறவு பற்றி இதுவரை தெரியவந்தது என்ன?
டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்ததாகவும் ஒரே மாதிரியான சமூக வட்டத்தைக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.
முன்பு வெளியிடப்பட்ட கோப்புகள், எப்ஸ்டீனின் தொடர்புகளின் ‘கருப்பு புத்தகத்தில்’ (Black book) டிரம்பின் விவரங்கள் இருந்ததைக் காட்டுகின்றன. டிரம்பின் விமானப் பதிவுகள் அவர் எப்ஸ்டீனின் விமானத்தில் பல சந்தர்ப்பங்களில் பறந்ததைக் காட்டின.
அவர்கள் 1990-களில் உயர்மட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இருந்தது புகைப்படம் எடுக்கப்பட்டது, மேலும் சிஎன்என் வெளியிட்ட புகைப்படங்கள் டிரம்பிற்கும் அவரது அப்போதைய மனைவி மார்லா மேப்பிள்ஸிற்கும் நடந்த திருமணத்தில் எப்ஸ்டீன் கலந்து கொண்டதைக் காட்டுகின்றன.
2002-இல், டிரம்ப் எப்ஸ்டீனை ஒரு ‘அற்புதமான மனிதர்’ (Terrific guy) என்று விவரித்தார். எப்ஸ்டீன் பின்னர், “நான் 10 ஆண்டுகளாக டொனால்டின் நெருங்கிய நண்பராக இருந்தேன்” என்று குறிப்பிட்டார்.
டிரம்பின் கூற்றுப்படி, எப்ஸ்டீன் முதன்முதலில் கைது செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2000-களின் தொடக்கத்தில் அவர்கள் பிரிந்தனர். 2008-வாக்கில், தான் “அவரது ரசிகர் அல்ல” என்று டிரம்ப் கூறி வந்தார்.
அவர்களது பிரிவு எப்ஸ்டீனின் நடத்தையுடன் தொடர்புடையது என்றும், “அதிபர் அவரை ஒரு அருவருப்பானவர் (creep) என்பதால் தனது கிளப்பிலிருந்து வெளியேற்றினார்” என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இதற்கிடையில், வாஷிங்டன் போஸ்ட் ‘அவர்களது உறவு முறிவு புளோரிடாவில் உள்ள சில ரியல் எஸ்டேட் தொடர்பான அவர்களது போட்டி காரணமாக இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளது.
மக்கள் எப்ஸ்டீன் வழக்குகள் மீது ஏன் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்?
எப்ஸ்டீனின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய முக்கிய உண்மைகளை அதிகாரிகள் மறைப்பதாக, டிரம்பின் ‘மாகா’ (MAGA) இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் நீண்டகாலமாக நம்பினர்.
அவர்களில் சிலர், அமெரிக்க சமூகத்தின் உயர்மட்டங்களில் சிறார் துஷ்பிரயோகம் செய்யும் ஒரு குழு (cabal) இயங்கி வருகிறது, அது அரசால் பாதுகாக்கப்படுகிறது என்ற கோட்பாட்டை நம்புகின்றனர். ‘க்யூ’ (Q) என்று அழைக்கப்படும் ஒரு புனைப்பெயரால் வெளியிடப்பட்ட மறைபொருளான செய்திகள் மூலம் இந்தக் கோட்பாடு பரவியது.
சில மாகா (MAGA) இன்ஃப்ளூயன்ஸர்களால் முன்வைக்கப்பட்ட சதி கோட்பாடுகளில் ஒன்றில், எப்ஸ்டீன் இஸ்ரேலிய அரசாங்கத்தின் ஏஜென்ட்டாக இருந்தார் என்று கூறப்பட்டது.
பொது மக்களிடமும் எப்ஸ்டீன் குறித்துப் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன – குறிப்பாக ஏன் அவருக்குப் புளோரிடா வழக்கில் இவ்வளவு மென்மையான தண்டனை வழங்கப்பட்டது, அவரும் மேக்ஸ்வெல்லும் உண்மையில் தனியாகத்தான் செயல்பட்டார்களா, மற்றும் அவரால் சிறையில் எப்படித் தற்கொலை செய்து கொள்ள முடிந்தது என்பது போன்ற கேள்விகள்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு