மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் போட்டியிட்டன.
மறுபுறம், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணியில் தேர்தலை சந்தித்தன.
டைம்ஸ் நவ்-ஜேவிசி கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி 150 முதல் 167 தொகுதிகளிலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 107-125 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில்மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 150-170 தொகுதிகளையும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 110 முதல் 130 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மற்றவர்களுக்கு 8 முதல் 10 தொகுதிகள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 182 தொகுதிகளும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 97 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சாணக்யா ஸ்ட்ராட்டஜிகருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 152 முதல் 160 வரையிலான தொகுதிகளையும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 130-138 வரையிலான தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி மார்க் கருத்துக்கணிப்பில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 137- 157 தொகுதிகளையும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 126-146 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு மாறாக, சில கருத்துக்கணிப்புகளில் இரு கூட்டணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதை முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு 125-140 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு135-150 தொகுதிகளும் மற்றவைக்கு 20-25 தொகுதிகளும் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.
லோக்ஷாஹி மராத்தி-ருத்ரா கருத்துக்கணிப்பு பாஜக கூட்டணி 128-142 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 125-140 தொகுதிகளையும், மற்றவை 18-23 தொகுதிகளையும் கைப்பற்றுவார்கள் என்று கணித்துள்ளது.
ஜார்க்கண்டில் நிலை என்ன?
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு அதன் கூட்டணியில் உள்ள அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கத்திற்கு பத்து இடங்களை வழங்கியது.
இந்தியா கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் களம் கண்டது.
ஜார்க்கண்ட் தொடர்பாக வெளிவந்துள்ள பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றன.
மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக் கூட்டணி 42-47 தொகுதிகளும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 25-30 தொகுதிகளும், மற்றவை 1-4 தொகுதிகளும் கைப்பற்றக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சாணக்யா ஸ்ட்ராட்டஜி கருத்துக்கணிப்பில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 45-50 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 35-38 தொகுதிகளையும், மற்றவை 3-5 தொகுதிகளையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 44-53 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 25-37 தொகுதிகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைம்ஸ் நவ்-ஜேவிசி கருத்துக்கணிப்பு ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி 40-44 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், இந்தியா கூட்டணி 30 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளது.
மற்ற கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது. இந்தியா கூட்டணி 53 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 25 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணித்துள்ளது
இந்தத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை அதாவது நவம்பர் 23-ஆம் தேதி வெளியாகும்.