உலகப் பணக்காரர்களுள் ஒருவரான கௌதம் அதானிக்கு கடந்த வியாழன் மிகவும் கடினமான நாளாக இருந்தது.
லஞ்சம் மற்றும் மோசடி ஆகிய குற்றங்களுக்காக அமெரிக்காவில் அவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஒப்பந்தம் ஒன்றை தனது நிறுவனம் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த குற்ற செயலை மறைக்கவும் 250 மில்லியன் டாலர்களை லஞ்சமாக அவர் வழங்கியுள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நேற்றைய நாளின் தொடக்கத்தில் இந்த செய்தி வெளியான உடனே அனைத்து ஊடகங்களிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகின. எதிர்க்கட்சியான காங்கிரஸ், கௌதம் அதானியை கைது செய்ய வலியுறுத்துகிறது. மேலும், பிரதமர் நரேந்திர மோதியுடன் இணைந்து இவர் கூட்டு சதி செய்ததாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அதானிக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டு வெளியான நிலையில், நேற்றைய பங்குச்சந்தை தொடங்கிய உடனேயே அதானி குழுமத்தின் பங்குகளும் அதனுடன் தொடர்பிலிருந்த நிறுவனங்களின் பங்குகளும் 20% குறைந்துவிட்டது.
அமெரிக்க ஊடகமான ப்ளூம்பெர்க் கருத்துப்படி, கௌதம் அதானி மீது மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து, அவரது சொத்து மதிப்பில் வியாழன் அன்று 15 பில்லியன் டாலர் வரை குறைந்துள்ளது.
பங்கு சந்தையின் முடிவில் அவரது நிகர மதிப்பு 72 பில்லியன் டாலராக இருந்தது. 2023 இறுதியில் அவரது நிகர மதிப்பு 84 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் 3 இல், அவரது மொத்த சொத்து மதிப்பு 122 பில்லியன் டாலரை எட்டியது.
இந்நிலையில், இக்குற்றச்சாட்டுகளை மறுத்து வியாழன் மதியம் அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், “அமெரிக்க நீதித்துறை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதரமாற்றவை. அக்குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் தாக்கம்
அமெரிக்காவில் எழுந்த குற்றச்சாட்டுகளின் தாக்கம் பங்குச் சந்தையில் மட்டுமின்றி பிற இடங்களிலும் பிரதிபலித்தது. வியாழன் மாலை, கென்யாவின் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ திடீரென விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி ஒப்பந்தத்திற்காக கெளதம் அதானியுடன் கையெழுத்திட்ட பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.
கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், தனது விசாரணை முகமைகள் மற்றும் நட்பு நாடுகளின் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அவர் தனது உரையில் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடவில்லை. முன்னதாக அதானி குழுமம் கென்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தது. இதன் கீழ், கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள முக்கிய விமான நிலையம், புதிய ஓடுபாதைகள் மற்றும் டெர்மினல்கள் கட்டுவது உட்பட விரிவாக்கம் செய்யப்பட இருந்தது. அதற்கு ஈடாக நைரோபி விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்கும் பொறுப்பு அதானிக்கு கிடைப்பதாக இருந்தது.
அதானி உடனான இந்த ஒப்பந்தம் கென்யாவிலும் அதிகம் விமர்சிக்கப்பட்டது மற்றும் விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பு அதானிக்கு கிடைத்தால், அங்குள்ள பணி நிலைமைகள் மாறி, வேலை இழக்க நேரிடும் என விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
அதானியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் ப்ளூம்பெர்க்கிடம், “புதன்கிழமை மாலை வரை எல்லாம் சரியாக இருந்தது. அதானியின் பசுமை ஆற்றல் வணிகம் பத்திர விற்பனை மூலம் 600 மில்லியன் டாலர் திரட்டியது. வியாழன் அதிகாலை மூன்று மணியளவில், சக ஊழியர் ஒருவர் அவருக்கு கவலையளிக்கும் செய்தியை தெரிவித்தார். அவர் மீதும் அமெரிக்காவில் உள்ள அவரது சக ஊழியர்கள் சிலர் மீதும் மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த சக ஊழியர்ன் அதானியிடம் கூறினார்.” என தெரிவித்துள்ளார்.
டிரம்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, “சில நிமிடங்களில், அதானி குழுமத்தின் மூத்த நிர்வாகிகள் கான்ஃபரன்ஸ் அழைப்பிற்கு வந்தனர். லஞ்ச ஒழிப்பு விதிகள் குறித்து அதானியும் அவரது சகாக்களும் அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பொய் கூறியதாகவும் 250 மில்லியன் டாலருக்கும் அதிகமாக லஞ்சம் கொடுக்க உறுதியளித்ததாகவும் நியூயார்க்கில் உள்ள மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்”.
“இந்தியா முழுவதும் இந்த விவகாரம் பரவுவதற்குள், அதானி இந்த முழு சர்ச்சைக்கும் எப்படி எதிர்வினையாற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தார்.
மும்பையில் பங்குச்சந்தை துவங்கியதும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிய ஆரம்பித்தன. பிற்பகலில், அதானி குழுமம் ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலும் நிராகரித்தது. அதானி குழுமம் இவ்விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறியது” என்று குறிப்பிட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் செய்தியில், “அதானி மீதான அரசியல் சர்ச்சை வரும் மாதங்களில் அதிகரிக்கலாம். அவரை நாடு கடத்துவது தொடர்பாக பதற்றம் ஏற்படும். டொனால்ட் டிரம்ப் விரைவில் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்பார், அவர் விரும்பினால், அவர் இந்தியாவுடன் இதுதொடர்பாக பேசக்கூடும்” என்று எழுதப்பட்டுள்ளது.
“டிரம்பின் பார்வையில், சீனாவின் அதிகாரப் போக்கிற்கு எதிராக இந்தியாவும், அதானியும் முக்கியமான கூட்டாளிகள். டிரம்பின் குடும்ப உறுப்பினர்களும் ஆமதாபாத்தில் உள்ள அதானியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர் என்று அதானியின் விவகாரங்களை அறிந்தவர்கள் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) கூறியுள்ளனர். அப்படியானால், வழக்கு தொடர பல மாதங்கள் ஆகலாம். அது டிரம்பின் நீதித்துறையின் நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்து அமையும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் செய்தியில், “அதானி தொடர்பாக அமெரிக்காவில் என்ன நடந்தாலும் அதன் விளைவு அந்த நிறுவனத்தை மட்டும் இன்றி அந்த நிறுவனத்திற்கு கடன் வழங்கும் உலகளாவிய வங்கிகளையும் பாதிக்கும். இது தவிர, வெளிநாடுகளில் தங்களை நிலைநிறுத்த விரும்பும் இந்திய நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் எதிர்மறையாக பாதிக்கப்படும்” என்று எழுதியுள்ளது.
“இது அதானியின் உலகளாவிய விரிவாக்கத்தை பாதிக்கும் என்று நான் அஞ்சுகிறேன். அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் வளர்ந்து வரும் இந்தியாவை மெதுவாக்க விரும்புகின்றன என்ற கவலையை இந்த வழக்கு இந்தியாவில் எழுப்பக்கூடும்” என்று `திங்க் டேங்க் சென்டர் ஃபார் ஸ்ட்ராடஜிக் மற்றும் எமர்ஜிங்’ ஆசியா பொருளாதாரத்தின் தலைவர் ரிக் ரோசோவ் கூறியதாக ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் என்ன பாதிப்பு ஏற்படும்?
ப்ளூம்பெர்க் செய்தியில், “கடந்த பல ஆண்டுகளாக, உலக முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் அதானி குழுமத்தில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளனர். இன்று, துறைமுகங்கள், மின்சாரம், சாலைகள் முதல் விமான நிலையங்கள் வரை அதானியின் வணிகம் விரிவாகி உள்ளது. அதானியின் வணிகத் திட்டங்கள் வியட்நாமில் இருந்து இஸ்ரேல் வரை பரவியுள்ளன. அதானி குழுமத்தின் உலகளாவிய லட்சியங்கள் சீனாவின் `பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்துக்கு இணையான திட்டமாக உருவெடுக்க வேண்டும் என்பது தான்” என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் செய்தியில், “அதானி ஒரு சாதாரண இந்திய கோடீஸ்வரர் அல்ல. அதானி இந்திய அரசின் ஒரு நீட்சியாகவே பார்க்கப்படுகிறார். அதானி குழுமம் துறைமுகங்களை கட்டமைக்கிறது மற்றும் வாங்குகிறது. இது பெரும்பாலும் இந்திய அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் அல்லது உரிமங்கள் மூலம் நிகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
”அதானிக்கு சொந்தமாக மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. விமான நிலையங்களை இயக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது. இப்போது அதானி தொலைக்காட்சி செய்தி சேனலையும் வைத்திருக்கிறார். 2014-ல் நரேந்திர மோதி பிரதமரான பிறகு, அதானியின் வர்த்தகம் இந்தியாவில் விரிவடைந்தது. உலக அரங்கில் பிரதமர் மோதி இந்தியாவை மையமாக கொண்டு வந்தது போல், அதானியும் இந்தியாவின் முக்கிய சக்தியாக உருவெடுத்தார்” என்றும் எழுதியுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ் செய்தியில், “இந்தியாவின் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இந்த கோடையில் அதானியின் சூரிய ஆற்றல் திட்டத்தை பார்வையிட்டார். அதைப் பார்த்த பிறகு, அதானியை ஒரு ஊக்கமளிக்கும் நபர் என்று வர்ணித்தார் கார்செட்டி.” என்று குறிப்பிட்டது.
வாஷிங்டன் போஸ்ட் செய்தியில், “கௌதம் அதானி பிரதமர் நரேந்திர மோதியுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் சென்றுள்ளார். இருவரின் வருகையின் போது அதானி குழுமத்தின் வணிக ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இலங்கையில் இருந்து இஸ்ரேல் வரை பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தியாவில் பிரதமர் மோதியின் எரிசக்தி மற்றும் உற்பத்தி கொள்கைகளை அதானி பின்பற்றுகிறார், இது அவருக்கு அரசியலை கையாள்வதற்கு உதவுகிறது. அதானியின் வணிக வெற்றி இந்தியாவின் எழுச்சியாக பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் “அமெரிக்காவில் அதானிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை சிக்கலாக்கும். சமீபத்திய ஆண்டுகளில், அதானி இந்தியாவிற்குள் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார். குறிப்பாக பிரதமர் மோதியுடனான அவரது உறவு பற்றி விமர்சிக்கப்பட்டது. அதானி சிக்கலில் சிக்கிய போதெல்லாம், பாஜக அவருக்கு ஆதரவாக நின்று அதானியை விமர்சிப்பவர்களை இந்தியாவின் எதிரிகள் என்று கூறியது” என்று குறிப்பிட்டுள்ளது.
ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின் தெற்காசிய திட்டத்தின் இயக்குனர் மிலன் வைஷ்ணவ், வாஷிங்டன் போஸ்டிடம், “பைடன் நிர்வாகம் இந்தியா உடனான உறவில் நேர்மறையான சூழலுடன் வெளியேற வேண்டும் என்று நம்புகிறது. வெளிப்படையாக, இந்த சம்பவம் மோதியின் மனநிலையை கெடுத்துவிடும்.” என்று கூறியுள்ளார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு