பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்திலும் உங்களின் நண்பர்கள், உறவினர்கள் குறிப்பாக பெண்கள் வண்ணமயமான புடவைகளை அணிந்துகொண்டு, தலையில் பூச்சூடி, காட்சியளிக்கும் புகைப்படங்கள் பதிவிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
முதலில் இதைக் கண்டதும் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் உங்களுக்கு தெரிந்த பெண் என உங்களுக்கு தோன்றாது. யாரோ 90-களின் கதாநாயகி என்றே தோன்றும்.
அதில் பெரும்பாலானவர்கள் நீங்கள் இதற்கு முன் புடவை கட்டியே பார்த்திடாதவர்களாக இருப்பர்.
இதுபோன்ற அனைத்து புகைப்படங்களும் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டவை ஆகும்.
சமீபத்தில் கூகுளின் நானோ பனானா (Nano Banana) என்ற புதிய ஏஐ மாதிரி (image generation and editing model from Google DeepMind) இதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இதன் உண்மையான பெயர் ஜெமினி 2.5 ப்ளாஷ் இமேஜ் (Gemini 2.5 Flash Image) ஆகும். தற்போது நானோ பனானா என்ற பெயரில் பிரபலமாகி வருகிறது.
சாதாரண புகைப்படத்தை உயர்தர 3D புகைப்படமாக மாற்றித் தருவதே இதன் முக்கிய பங்காகும்.
இந்த ஏஐ கருவியின் உதவியுடன் சாதாரண நபரின் புகைப்படம் 90-களில் தோன்றும் நடிகர்/நடிகையைப்போல காட்சியளிக்கிறது.
நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலோனோர் தங்களின் புகைப்படங்களை இந்த கருவியின் மூலம் மாற்றி தங்களின் சமூக வலைதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், இந்த ஏஐ கருவி ஆபத்தானது என்றும், கவனமாக இருக்க வேண்டும் என்றும் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்ட காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது.
ஜலந்தர் போலீஸ் எச்சரிப்பது என்ன?
பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் ஜெமினை(Gemini) செயலி மூலம் புகைப்படங்களை 3D புகைப்படங்களாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவிடும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
இந்த ஏஐ அம்சத்தை பயன்படுத்துபோது மக்கள் கவனமாக இருக்குமாறு ஜலந்தர் சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் மீனா குமாரி தனது சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உங்களின் புகைப்படத்தை 3D புகைப்படமாக மாற்றும் ஜெமினை மென்பொருள் அதிகம் ட்ரெண்டாகி வருகிறது. அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளிலேயே, உங்களின் புகைப்படம் எங்களின் பயிற்சி தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”
இதனால் உங்களின் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படலாம். நீங்கள் சைபர் கிரைம் குற்றத்திலோ, மோசடியிலோ சிக்கக்கூடும். அதனால் யாரும் 3D புகைப்படங்களுக்காக ஜெமினை செயலியை பயன்படுத்தாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
செயற்கை நுண்ணறிவு என்ற வார்த்தை முதன்முதலில் 1956ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.
1960ஆம் ஆண்டு மனிதனின் முடிவுகளை கணினிகளுக்கு எப்படி புகுத்துவது என்பதை விஞ்ஞானிகள் கற்றுக்கொடுத்தனர்.
ஒரு கணினியை மனிதன் நினைப்பதைப் போலவே இயங்கச் செய்வதுதான் ஏஐ தொழில்நுட்பம்.
இந்த தொழில்நுட்பம், தன்னைச் சுற்றி இருக்கும் விஷயங்களில் இருந்து தகவல்களை சேகரித்து, அது அறிந்துகொண்ட மற்றும் அதன் அறிவுக்கு எட்டிய விஷயங்களைப் பொறுத்து தனது பதில்களை தயார் செய்கிறது.
நமது செல்போன்கள், வீடியோ கேம்கள், ஷாப்பிங் என பெரும்பாலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல கருவிகள் ஏஐ-யை சார்ந்தவை.
அதேபோல நாம் வீட்டில் பயன்படுத்தும் அலெக்ஸா, சிரி (Siri) போன்றவையும் ஏஐ தொழில்நுட்பத்தை சார்ந்தவையே.
நானோ பனானா என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது?
நானோ பனானா என்பது ஜெமினியின் புகைப்பட எடிட்டிங் கருவியாகும். கூகுளின் டீப் மைண்ட் (Deep Mind) பிரிவினர் இதை வடிவமைத்துள்ளனர். நானோ பனானா மூலம் உங்களின் புகைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் என ஜெமினியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் உங்களை முற்றிலும் வேறுபட்ட ஒரு காட்சியில் கற்பனை செய்துகொள்ளலாம். உங்களின் புகைப்படத்திற்கு எந்தவிதமான கற்பனைகளை வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கட்டளைகளை எழுத்து வடிவில் நீங்கள் கொடுத்தால், உங்கள் கற்பனையில் இருந்த காட்சியை ஜெமினி புகைப்படமாக உங்களுக்கு கொடுக்கும்.
- நானோ பனானா மூலம் பயனர்கள் தங்களின் புகைப்படத்தை பல விதமாக மாற்றிக்கொள்ள முடியும்.
- இது பயனர்கள் தங்களின் செல்ஃபி புகைப்படத்தின் பின்னணியை மாற்றவும் (Background) சாதாரண புகைப்படத்தில் கடல், மலை, அருவி என எதைவேண்டுமானாலும் சேர்க்கவும் உதவுகிறது.
- இருவேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒன்றிணைக்க உதவுகிறது.
- உங்களுக்கு பிடித்தமான புகைப்படங்களை சிறுவடிவமாக (miniatures) மாற்றிக்கொள்ளவும் உதவுகிறது. தற்போதைய புகைப்படங்களில் உள்ள உடைகளையும், காட்சிகளையும் கூட 80, 90-களில் இருப்பதைப் போல மாற்றுகிறது.
- நானோ பனானாவின் உதவியுடன் எந்த புகைப்படங்களும் பழங்காலத்து ஸ்டைலுக்கு (ரெட்ரோ ஸ்டைல்) மாற்றப்படுகின்றன.
- இதன் உதவியுடன் நீங்கள், உங்களுக்கு பிடித்த சிகை அலங்காரங்களையும் தேர்வு செய்து கொள்ள முடியும்.
ஜெமினி ஏஐ-யை பயன்படுத்துவது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
- ஜெமினி நானோ பனானாவை பயன்படுத்த முதலில் நீங்கள் கூகுள் ஜெமினிக்குள் நுழைய வேண்டும். உங்களின் கூகுள் கணக்கை உள்ளீடு (login) செய்துகொள்ள வேண்டும்.
- உங்களுக்கு கணக்கு இல்லை என்றால், உடனடியாக அப்போதே கணக்கை தொடங்கிக்கொள்ளலாம்.
- கூகுள் ஏஐ ஸ்டூடியோவில் ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ்-ஐ (Nano Banana) தேர்வு செய்தால் சிறிய வாழைப்பழம் போன்ற ஒன்று திரையில் தோன்றும்.
- பின் உங்களின் செல்போன் அல்லது கணினியில் இருந்து புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.
- உங்கள் புகைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக எழுத்து வடிவில் பதிவிட வேண்டும். இதற்கு ப்ரோம்ப்ட் (Prompt) எனப் பெயர். உதாரணமாக இந்த புகைப்படத்தின் பின்னணியில் கடல் இருப்பது போலவும், புடவை அணிந்திரிப்பது போலவும், தலையில் பூக்களைச் சூடிக்கொண்டிருப்பது போலவும் 3D வடிவில் மாற்றுக்கொடு எனப் பதிவிட வேண்டும்.
- பின் ஜெனரேட் என்ற பட்டனை அழுத்தியதும் நானோ பனானா உங்களின் புகைப்படத்தை எடிட் செய்யத் தொடங்கிவிடும்.
சிறப்பு புகைப்படத்திற்கான சிறப்பு கட்டளைகள்
கூகுளின் ஜெமினை நானோ பனானாவை பொறுத்தவரை அதற்கு கொடுக்கப்படும் கட்டளைகள்தான் மிகவும் முக்கியம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் கொடுக்கும் கட்டளைகளுக்கு ஏற்றவாறுதான் புகைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன.
உதாரணமாக உங்களுக்கு 3D மினியேச்சர் புகைப்படம் வேண்டுமென்றால் அதற்கான கட்டளை வேறுவிதமாக இருக்கும். அதே சமயம் உங்களுக்கு பாலிவுட் ஸ்டைலில் ஒரு புகைப்படம் வேண்டுமென்றால் அதற்கான கட்டளைகள் வேறுவிதமாக இருக்கும்.
எனினும் இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு வேளை நீங்கள் பிரபலங்களின் புகைப்படத்தை இதன் மூலம் மாற்ற விரும்பினால், அதுவே ‘பிரபலங்களின் புகைப்படங்களை மாற்ற முடியாது’ எனக் கூறிவிடுகிறது.
ஆனால் சாதாரண நபர்கள் இந்தக் கருவி மூலம் தங்களின் ஐடி-களில் இருந்து யாருடைய புகைப்படத்தையும் வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
இளம்பெண்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஜெமினை நானோ பனானா மூலம் தனது புகைப்படத்தை மாற்றியமைத்த ருச்சி ஷர்மா (28) என்ற பெண் இதுகுறித்து பிபிசியிடம் பேசினார். தனது நண்பர்கள் பலரும் ஜெமினை செயலியை பயன்படுத்தி புகைப்படத்தை மாற்றுவதைக் கண்டபின்தான் தனக்கும் இந்த யோசனை தோன்றியதாக தெரிவித்தார்.
“எனது நண்பரின் உதவியுடன் இந்த புகைப்படத்தை மாற்றினேன். இதில் என்ன கட்டளைகளைக் கொடுக்க வேண்டும் என்பதை அவரே எனக்கு அனுப்பினார்” எனக் கூறினார்.
“நான் எனது புகைப்படத்தை மட்டுமே பதிவிட்டேன். அது நான் அழகான புடவையில் இருக்கும் புகைப்படத்தை கொடுத்தது. எனக்கு அது பிடித்திருந்தது. எனது அனைத்து சமூகவலைதங்களிலும் இந்த ஏஐயால் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தேன்” என்கிறார்.
26 வயதான காஜல் அரோரா, தனது புகைப்படத்தை ஏஐ-யில் பதிவிட மாட்டேன் என இதற்கு முற்றிலும் மாறான கருத்தை பிபிசியிடம் தெரிவித்தார்.
இதுபோல ஏஐ-யிடம் புகைப்படத்தை கொடுப்பது நல்லதல்ல என்கிறார். நமது புகைப்படத்தை ஏஐ எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏஐ மிகவும் ஆபத்தானது. ‘யாருக்கு தெரியும் நமது புகைப்படம் தவறான காரணங்களுக்காகக் கூட பயன்படுத்தப்படலாம்.’ என்றார்.
ஜெமினை நானோ பனானாவில் செய்யக்கூடாதவை:
ஜெமினையின் நானோ பனானா குறித்து பஞ்சாபின் ஏஐ சிறப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சந்தீப் சிங் சந்தா உடன் பேசினோம். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பிஎச்டி பயின்றுள்ளார்.
ஜெமினியின் நானோ பனானா கருவியை பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும் என டாக்டர் சந்தீப் சிங் சந்தா எச்சரிக்கிறார்.
“கூகுள் ஒரு கவுரவமான நிறுவனம். ஒருவரின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பது குறித்து கூகுள் சில விதிமுறைகள் மற்றும் வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. இவற்றை கூகுள் ஒருபோதும் மீறாது” என்கிறார்.
“ஆனால் சாதாரண நபர் கூகுள் நானோ பனானா மூலம் தங்களின் புகைப்படத்தை எடிட் செய்து அதை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் பதிவிடும்போது ஹேக்கர்கள் இதை பயன்படுத்தி தவறான காரியங்களுக்கு புகைப்படத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது” என்கிறார்.
ஏஐ குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை:
ஏஐ-யிடம் நீங்கள் ஒருமுறை அளித்த தரவுகளை எப்போதும் நீக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என டாக்டர் சந்தீப் சிங் கூறுகிறார்.
நீங்கள் ஏஐ-யிடம் புதிதாக ஏதேனும் கேட்கும்போதெல்லாம், அது நீங்கள் கேட்ட முந்தைய கேள்விகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டே பதில் அளிக்கும்.
Setting-க்கிற்கு சென்று நாம் தேடிய தகவல்களை அழிக்க முடியும் (Delete) என பலரும் கூறுகிறார்கள். ஆனால் இது வரையறுக்கப்பட்டதுதான். பெரும்பாலனவர்கள் ஏஐ-யிடம் பகிர்ந்த தகவல்களை அழிக்க மாட்டார்கள்.
ஜெமினை நானோ பனானாவில் உங்களின் புகைப்படங்களை பதிவிட்டு அதை 3D படமாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதை சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள் என எச்சரிக்கிறார். அதை நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.