• Mon. Apr 13th, 2026

24×7 Live News

Apdin News

GT Vs LSG: பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு – இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ்

Byadmin

Apr 13, 2026


4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார் பிரசித் கிருஷ்ணா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார் பிரசித் கிருஷ்ணா

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கெதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ். முதலிரு போட்டிகளையும் தோற்று சீசனைத் தொடங்கியிருந்த அந்த அணி, இப்போது அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்த ஏகானா மைதான ஆடுகளத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். லக்னௌ அணி இழந்த 8 விக்கெட்டுகளையுமே டைட்டன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் தான் கைப்பற்றினார்கள். அவர்கள் சீராக விக்கெட்டுகள் வீழ்த்தியதால் சூப்பர் ஜெயின்ட்ஸால் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.

ஓப்பனர் மார்க்ரம் மட்டுமே லக்னௌ சார்பில் இந்தப் போட்டியில் 20 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வேறு எந்த எல்எஸ்ஜி பேட்டருமே 20 ரன்களைக் கூடத் தொடவில்லை. பந்த் 18, பூரன் 19, சமத் 18, முகுல் சௌத்ரி 18, ஜார்ஜ் லிண்டா 16, மொஹம்மது ஷமி 12, மிட்செல் மார்ஷ் 11, படோனி 9 என அனைவரும் விரைவிலேயே வெளியேறினார்கள்.

குஜராத் பந்துவீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா மிகச் சிறப்பாகப் பந்துவீசி 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஷோக் ஷர்மா 2 விக்கெட்டுகளும், ரபாடா மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்ஷன் விக்கெட்டை விரைவில் இழந்தது. அவர் 15 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஆனால், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த் ஷுப்மன் கில், ஜாஸ் பட்லர் இருவரும் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். மிகவும் அதிரடி காட்டாமல் தங்கள் வழக்கமான பாணியில் நிதானமாகவும் நல்ல வேகத்திலும் ரன் சேர்த்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தது. 56 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் கில் பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 60 ரன்கள் எடுத்திருந்த பட்லரை ஷமி வெளியேற்றினார்.

By admin