பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 5வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. 246 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் சேர்த்து 11ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அதுமட்டுமல்ல பஞ்சாப் அணி தனது ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து வென்றது.
முதல் போட்டி, புதிய அணி, புதிய வீரர்களுடன் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் ஆட்டத்திலேயே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார்.
சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ்
பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக்க வேண்டுமென்றே ஸ்ரேயாஸ் அய்யரை ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியதற்கு தகுதி இருக்கிறது. ஏனென்றால் ஆமதாபாத் மைதானத்தில் கடைசியாக நடந்த 5 போட்டிகளில் 4 ஆட்டங்கள் சேஸிங் செய்யப்பட்டுள்ளன. இது சேஸிங்கிற்கு ஏற்ற மைதானம் எனத் தெரிந்து, பெரிய ஸ்கோருக்கு பஞ்சாப் அணியை நகர்த்திய ஸ்ரேயாஸின் சாமர்த்தியம்தான் வெற்றிக்கு ஆதாரம்.
இந்த போட்டியில் 42 பந்துகளுடன் (9 சிக்ஸர்கள் 5 பவுண்டரி) 97 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஸ்ரேயாஸ் ஐயர் இருந்தார். ஸ்ரேயாஸ் நினைத்திருந்தால் கடைசிஓவரில் ஒரு ரன்னை சஷாங் சிங்கை அடிக்க வைத்து ஸ்ட்ரைக்கில் பவுண்டரி அடித்து ஸ்ரேயாஸ் சதம் அடித்திருக்க முடியும். ஆனால், அணியின் ஸ்கோர் முக்கியம், ஃபார்மில் இருக்கும் சஷாங் சிங்கை குலைத்துவிடக்கூடாது என்பதற்காக தனது சதம் அடிக்கும் வாய்ப்பை தியாகம் செய்தார் ஸ்ரேயாஸ் அய்யர், கடைசி ஓவரில் ஒரு பந்தைக் கூட சந்திக்கவில்லை என்று சிறிதுகூட வருத்தமும் இல்லை.
பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்ற மகிழ்ச்சியில் சஷாங் சிங்கை தோளில் தட்டிக்கொடுத்துஅழைத்துச் சென்றார் ஸ்ரேயாஸ். பஞ்சாப் அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு காரணமாக இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டநாயகன் விருது வெற்றார்.
பட மூலாதாரம், Getty Images
தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், சாய் கிஷோர் அசத்தல்
குஜராத் அணியில் வாங்கப்பட்ட புதிய வீரர்களான முகமது சிராஜ், காகிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பந்துவீச்சை நேற்று ஸ்ரேயாஸ், சஷாங் நொறுக்கினர். 3 பேரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 135 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே சேர்த்து, ஓவருக்கு 13 ரன்கள் வீதம் வாரி வழங்கினர். ஆனால் தமிழக சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அனுபவ வீரர் ரஷித்கான் பந்துவீச்சுகூட ஒரு கட்டத்தில் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால், சாய் கிஷோர் ஓவர்களில் 12 டாட் பந்துகளை வீசி 30 ரன்கள் மட்டுமே கொடுத்து ஓவருக்கு 7 ரன்கள் சராசரியே விட்டுக்கொடுத்தார்.
பட மூலாதாரம், Getty Images
அதேபோல பேட்டிங்கில், தொடக்க வீரராக வந்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் கடந்த 2 சீசன்களிலும் பிரமாதப்படுத்தி வருகிறார். இந்த ஆட்டத்திலும் அவரின் ஆகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தத் தவறவில்லை. சுப்மான் கில் விரைவாக ஆட்டமிழந்தநிலையில் குஜராத் அணிக்கு நம்பிக்கையூட்டி, பட்லருடன் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாய் சுதர்சன் 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் கில்லுடன் 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் என தமிழக வீரர்கள் தங்கள் முத்திரையைப் பதித்தனர். கடைசி நேரத்தில் களமிறக்கிவிடப்பட்ட தமிழக வீரர் ஷாருக்கான் தான்சந்தித்த முதல்பந்திலேயே சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்தார். ஷாருக்கான் போன்ற பெரிய ஹிட்டர்களை குஜராத் அணி நடுவரிசையில் களமிறக்காமல் பின்வரிசையில் களமிறக்கி திறமையை வீணடிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்கள்
ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி வாங்கிய பிரியான்ஷ் ஆர்யா, விஜயகுமார் வைசாக், தக்கவைக்கப்பட்ட சஷாங் சிங் ஆகியோர் வெற்றிக்கு முக்கியக் காரணமாகினர். அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா, தொடக்க வீரராகக் களமிறங்கி ரபாடா, சிராஜ் பந்துவீச்சை வெளுத்துக்கட்டினார். 23 பந்துகளில் 47 ரன்கள்(2 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) என பயிற்சியாளர் பாண்டிங் வைத்த நம்பிக்கையை பிரியான்ஷ் ஆர்யா காப்பாற்றியுள்ளார்.
சஷாங் சிங் பஞ்சாப் அணிக்கு கடந்த பல சீசன்களில் அற்புதமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த ஆட்டத்திலும் சஷாங் கடைசி நேரத்தில் களமிறங்கி குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிராஜ் வீசிய கடைசி ஓவரில் 5 பவுண்டரிகளை விளாசினார். ஒட்டுமொத்தத்தில் 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 44 ரன்களுடன் சஷாங் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
3-வதாக வேகப்பந்துவீச்சாளர் விஜயகுமார் வைசாக்கை ரூ.1.80 கோடிக்கு ஏலத்தில் பஞ்சாப் அணி வாங்கியது. ஆர்சிபி அணியில் இடம் பெற்ற வைசாக்கை அந்த அணி பெரிதாகப் பயன்படுத்தவில்லை. ஆனால், இந்த ஆட்டத்தில் விஜயகுமாரின் பந்துவீச்சுதான் நடுப்பகுதியில் துருப்புச்சீட்டாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் குஜராத் அணி தோல்விக்கு பெரும்பங்கு விஜயகுமார்தான் காரணமாக இருந்தார்.
விஜயகுமார் 3 ஓவர்கள் வீசி 28 ரன்கள் கொடுத்தார். இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் மட்டுமே அடங்கும். அதிலும் வைசாக் வீசிய 19-வது ஓவரில் மட்டுமே 18 ரன்கள் அடிக்கப்பட்டது. அதற்கு முன் வீசிய 2 ஓவர்களிலும் ஒரு பவுண்டரி கூட அடிக்கவிடாமல் 10 ரன்கள் மட்டுமே கொடுத்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. வைசாக்குடன் சேர்ந்து யான்சென் பந்துவீச்சும் நெருக்கடி கொடுத்தது.
15 முதல் 17 வரையிலான 3 ஓவர்களில் குஜராத் அணி 18 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒரு பவண்டரிகூட அடிக்காமல் இருந்ததுதான் தோல்விக்கான காரணமாக இருந்தது. இந்த 3 ஓவர்களில் குஜராத் அணி வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடி ஸ்கோர் செய்திருந்தால் நிச்சயமாக சேஸிங் செய்திருக்கும். ஆனால், இந்த 3 ஓவர்கள்தான் ஆட்டத்தை மாற்றிய தருணமாகும்.
பட மூலாதாரம், Getty Images
பேட்டிங்கில் ஜொலித்த சாய் சுதர்சன்
குஜராத் அணிக்கு கடந்த சீசனிலும் நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் சாய் சுதர்சன். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர் அடித்த சதத்தை மறக்க முடியாது. இந்த சீசன் தொடக்கத்திலும் குஜராத் அணிக்கு தூணாக முதல் போட்டியிலேயே ஜொலித்தார். சுப்மான் கில் விரைவாக ஆட்டமிழந்த நிலையில் அதன்பின் அணியின் ஸ்கோரை குறையவிடாமல் கொண்டு சென்றதில் சுதர்சனுக்கு முக்கியப் பங்கு உண்டு.
பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்களும், 31 பந்துகளில் அரைசதத்தையும் அடித்து சுதர்சன் பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 9-வது ஓவர் முதல் 14-வது ஓவர்கள் வரை குஜராத் அணி 87 ரன்கள் சேர்த்தமைக்கு முக்கியக் காரணமாக இருந்து சாய் சுதர்சனும், பட்லரும்தான். 41 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து சுதர்சன் ஆட்டமிழந்தார். சுதர்சன் களத்தில் இருந்தவரை பஞ்சாப் அணி 9.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது, ஆட்டமிழக்கும்போது 145ரன்கள் என வெற்றிக்கு தேவையான பாதி ரன்களை அடித்துக்கொடுத்துதான் விடைபெற்றார்.
அதன்பின் பட்லரும் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் அரைசதம் அடித்து 54 ரன்களில் யான்சென் பந்துவீச்சில் போல்டாகினார்.பட்லர் ஆட்டமிழக்கும்போது 199 ரன்களுடன் குஜராத் அணி இருந்தது. வெற்றிக்கு 45 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ரூதர்போர்ட் 28 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தாலும், அந்த 15 முதல் 17 ஓவர்களை வீணடித்து பவுண்டரி, சிக்ஸர் இல்லாமல் முடித்ததுதான் வெற்றியை தாரை வார்த்ததுபோல் இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
பஞ்சாபுக்கு நம்பிக்கையளித்த பந்துவீச்சாளர்கள்
பஞ்சாப் அணி பெரிய ஸ்கோரை அடித்திருந்தாலும் ஆமதாபாத் ஆடுகளத்தில் அதை டிபெண்ட் செய்வது கடினமாக இருந்தது. ஆனால், அதை கடைசி நேரத்தில் சாத்தியமாக்கியது பந்துவீச்சாளர்கள்தான். குறிப்பாக அர்ஷ்தீப் சிங் சாய் சுதர்சன், ரூதர்போர்டை ஆட்டமிழக்கச் செய்தது, கில்லை ஆட்டமிழக்கச் செய்த மேக்ஸ்வெல், விஜயகுமார் வைசாக்கிற்கு விக்கெட் இல்லாவிட்டாலும் அவரின் கட்டுக்கோப்பான 2 ஓவர்கள் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது.
மற்ற வகையில் சஹல், ஸ்டாய்னிஷ், யான்சென், ஓமர்சாய், மேக்ஸ்வெல் என பெரிய பட்டாளமே இருந்தபோதிலும் இந்த வைசாக், அர்ஷ்தீப் இருவர்தான் பெரிய தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்தினர்.
பட மூலாதாரம், Getty Images
அற்புதமான வெற்றி – ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி
வெற்றிக்குப்பின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் ” அற்புதமான வெற்றி முதல் போட்டியில் வெற்றி, 97 ரன்கள் என்பது பேரின்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நேர்மையாகச் சொல்வதென்றால் சிறப்பாக உணரவில்லை, இன்னும் பல வெற்றிகளுடன் சென்று தொடருக்குள் எங்களை தகவமைக்க வேண்டும். முதல் பந்தில் நான் பவுண்டரி அடித்தவுடன் எனக்கு படுஉற்சாகமாக இருந்தது. ரபாடா பந்தில் சிக்ஸர் அடித்தவுடன் என்னுடைய மனநிலை, ஆட்டம் மாறியது. கூடுதல் பவுன்ஸர் கிடைத்ததையும் சரியாகப்பயன்படுத்தினேன், சூழலுக்கு ஏற்ப மாறினேன்.
16 பந்துகளில் சஷாங் அடித்த 44 ரன்கள், சிறிது பனி, ஆகியவை ஆட்டத்தின் போக்கை மாற்றின. திட்டங்களை சரியாக செயல்படுத்தியது நன்று. வைசாக் சிறப்பாகப் பந்துவீசினார். அர்ஷ்தீப் முக்கியப் பங்காற்றினார், எச்சில் தொட்டு பந்து வீசும் அனுமதி கிடைத்ததையடுத்து, அர்ஷ்தீப்புக்கு கடைசி நேரத்தில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது” எனத் தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு