பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, H-1B விசா என்பது நீண்ட காலமாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப சந்தையில் கல்வி சார்ந்த தொழில்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் வேலைகளுக்கான ஒரு பாலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த பாலம் திடீரென பாதுகாப்பற்றதாக தோன்றுகிறது என்கிறார் வாஷிங்டன் டிசியிலிருந்து எழுதும் பிபிசி செய்தியாளர் இராம் அப்பாசி.
கடந்த செப். 19ஆம் தேதி, புதிதாக H-1B விசா விண்ணப்பிக்க ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த விதி இன்று (செப். 21) முதல் அமலுக்கு வருகிறது.
இந்த நடவடிக்கையை, அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கை என்றும், விசா நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது என்றும், அதிக திறன் உள்ள மற்றும் அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டு ஊழியர்களே தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு கூறுகிறது.
அமெரிக்க வர்த்தக செயலர் ஹோவர்ட் லுட்னிக் ராய்ட்டர்ஸ் செய்தியிடம் கூறுகையில், “நீங்கள் யாருக்காவது பயிற்சி அளிக்கப் போகிறீர்கள் என்றால், நம் நாடு முழுவதும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றிலிருந்து சமீபத்தில் பட்டம் பெற்ற ஒருவருக்குப் பயிற்சி அளியுங்கள். அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளியுங்கள். நமக்கான வேலைவாய்ப்பை மற்றவர்கள் தட்டிப் பறிக்கவிடாதீர்கள்” என்றார்.
தேசித்தின் பாதுகாப்பின் மீதான கவலைகளையும் வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. உணர்திறன் மிக்க தொழில்களில் வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பது அமெரிக்காவின் மீள்தன்மையை பலவீனப்படுத்துகிறது என்று எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு அதன் நோக்கம் குறித்த குழப்பம் ஏற்பட்டது. வழக்கறிஞர்கள், முதலாளிகள் மற்றும் விசா வைத்திருப்பவர்களின் நிலை என்ன என்பதை அறிய சிரமப்பட்டனர்.
தெற்காசிய வழக்கறிஞர் சங்கம் நடத்திய அவசரக் கூட்டத்தில், வழக்கறிஞர்கள் உரையை நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகும், அது எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டல் இல்லை என்று கூறினர்.
வெள்ளை மாளிகையின் விளக்கம்
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் ஏற்கனவே H-1B வீசா கொண்டவர்கள் வெளிநாடு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர். அமெரிக்காவிற்கு வெளியே உள்ளவர்களுக்கு, செப்டம்பர் 21-ஆம் தேதிக்குள் திரும்பி வருமாறும் அல்லது நீதிமன்ற தடையுத்தரவு வரும்வரை அங்கேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
சமீபத்தில் விசா பெற்றவர்கள், தெளிவான வழிகாட்டுதல்கள் வரும்வரை தங்களின் பயண நிலையை மாற்றவோ அல்லது சர்வதேச பயணம் மேற்கொள்ளவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால் 48 மணி நேரத்திற்குள், வெள்ளை மாளிகை அந்த சந்தேகங்களை தீர்த்தது.
ஊடக செயலாளர் கரோலின் லியாவிட் தனது X தள பதிவில், இது வருடாந்திர கட்டணம் அல்ல. ஒரு முறை மட்டுமே செலுத்தும் கட்டணம் என தெளிவுபடுத்தினார்.
அதே போல ஏற்கனவே H-1B விசா வைத்திருந்து தற்போது வேறு நாட்டில் இருப்பவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய ஒரு லட்சம் டாலர் வசூலிக்கப்படாது என்றும் H-1B விசா வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நுழையலாம் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் H1B விசா வைத்திருப்பவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்ப வேண்டும் எனவும் புதிய விதிகளில் தெளிவு கிடைக்கும் வரை சர்வதேச பயணங்களை தவிர்க்குமாறும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
2013ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட H-1B விசாக்களில் 3-ல் 1 பங்கு இந்தியாவை சேர்ந்தவர்களுடையது என ப்யூ ஆராய்ச்சி மையத்தின் தகவல் கூறுகிறது. இந்த அறிக்கையின் படி, 2வதாக சீனா 11% விசாக்களை பெற்றுள்ளது. மற்ற எந்த நாடுகளும் 2 சதவிகிதத்தை தாண்டவில்லை. அமெரிக்க அரசின் தரவுகள்படி, அக்டோபர் 2022 மற்றும் செப்டம்பர் 2023-ல் 70%-க்கும் அதிகமான H-1B விசாக்கள் இந்தியர்களுக்கு சென்றுள்ளது. இதன்மூலம் எந்த புதிய மாற்றம் ஏற்பட்டாலும் அது இந்திய தொழிலாளர்களை வெகுவாக பாதிக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் கவலை
பட மூலாதாரம், Getty Images
“இந்த புதிய விதி எனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது” என மிசோரி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற இந்திய பட்டதாரியும், அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவரும் பிபிசியின் அப்பாசியிடம் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு தனது விசாவை புதுப்பிக்க வேண்டும் எனக் கூறும் அவர், மேலும் தன் பல்கலைக்கழகத்தால் ஒரு லட்சம் டாலர் செலவை ஏற்க முடியாது எனவும் கூறுகிறார்.
H-1B விசா திட்டம் தன்னைப் போன்ற ஆய்வாளர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்த உதவுகிறது என்பதற்காகவே தான் அமெரிக்கா வந்ததாக விளக்கினார்.
புதிய விதிகள் பற்றிய குழப்பம் குறித்து அவர் கூறுகையில், இந்திய அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றார்.
பிபிசியிடம் பெயர் குறிப்பிடாமல் பேசிய நபர், H1B விசா விதிகளால் தனது வாழ்க்கையில் உள்ள சிரமங்களை விவரித்தார்.
சமூகவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்காக அவர் முதலில் அமெரிக்காவிற்கு வந்துள்ளார். பின்னர் H-1B மூலம் தனது முதல் வேலையைப் பெற்றார். அதன் பிறகு நான்கு ஆண்டுகளில், அவர் மூன்று நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். ஒவ்வொரு மாற்றத்திற்கும் அவர் இடமாற்றம் செய்ய, நெட்வொர்க்குகளை மீண்டும் கட்டியெழுப்ப மற்றும் புதிய தொழில்முறை கலாசாரங்களுக்கு ஏற்ப மாற்ற வேண்டியிருந்தது. குடும்பம் இந்தியாவில் உள்ளது. மேலும் சர்வதேச பயணம் மேற்கொள்ள முடியாததால், அவர் தனது தந்தையின் இதய அறுவை சிகிச்சை மற்றும் சகோதரியின் திருமணத்தைத் தவறவிட்டுள்ளார்.
பின் அவரது கணவரும் அமெரிக்காவுக்கு வந்துள்ளார். தனது சொந்த வேலைக்கான அனுமதியைப் பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார். உறுதியற்ற தன்மை தனது ஆரோக்கியத்தை பாதித்ததாகவும், ஆட்டோ இம்யூன் குறைபாடு ஏற்பட்டதாகவும், கல்வித்துறையில் அவருக்கு வரும் சம்பளம், விசா செலவுகளுக்கு போதவில்லை எனக் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் H-1B விசாவில் பணிபுரியும் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத பாகிஸ்தானியர் ஒருவர் பிபிசியின் இராம் அப்பாசியிடம் பேசுகையில் விதிகளில் தெளிவின்மை காரணமாகத் தான் கலங்கிப்போய் இருப்பதாகத் தெரிவித்தார்.
“நான் முற்றிலும் குழம்பிப்போய், மேலும் தகவலுக்காகக் காத்திருக்கிறேன்,” என்று அவர் விளக்கினார். தினமும் அதிகாரபூர்வமான தகவல்கள் மற்றும் சட்ட வழிகாட்டுதல்களைச் சரிபார்த்து வருவதாகவும், ஆனால் விதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்த தெளிவான வழிமுறைகளை இன்னும் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பலரைப் போலவே, இந்த நிச்சயமற்ற தன்மை தன்னை ஒரு குழப்பமான நிலையில் விட்டுவிட்டதாகவும், அமெரிக்காவில் நீண்ட காலத் திட்டங்களை வகுப்பதா அல்லது திடீரென வீட்டிற்குத் திரும்புவதற்குத் தயாராவதா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தக் குழப்பம் நிறைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க குடிவரவு கவுன்சிலின் கொள்கை இயக்குநர் ஜார்ஜ் லோவரி, இந்த நிர்வாக உத்தரவு குழப்பத்தை உருவாக்கியுள்ளது என்று பிபிசியிடம் கூறினார்.
“எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், எந்த வழிகாட்டுதலும் இல்லாமல், எந்தவொரு அமலாக்கத் திட்டமும் இல்லாமல் இந்தக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.
“விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடையே மட்டுமல்ல, முதலாளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிடையேயும் இந்தக் குழப்பத்தைக் காண்கிறோம். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர். மக்களின் வாழ்க்கையும், தொழில்களும் ஆபத்தில் இருக்கும்போது, விதிகளைப் பற்றித் தெளிவாகக் கூற வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு.”
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் குஞ்சன் சிங், இந்த உத்தரவு கடுமையாகவும், தெளிவற்றதாகவும் இருப்பதாகவும், H-1B வேலைகளுக்காக வரிசையில் காத்திருந்த நிபுணர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்கனவே பீதியை ஏற்படுத்தி இருப்பதாகவும் பிபிசியிடம் கூறினார்.
மேலும், இந்த அறிவிப்பு, நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதால், நிர்வாகத்தின் அதிகார வரம்பு மீறல் குறித்த அரசியலமைப்பு கவலைகளை எழுப்புவதாகவும் சிங் வாதிட்டார்.
அதே நேரத்தில், குடிவரவு அதிகாரிகளிடமிருந்து வரும் விளக்கங்கள், இந்தக் கட்டணம் புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறுவதால், ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு சிறிது நிம்மதி கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 20 அன்று, ரோகன் மேத்தா, எட்டு மணி நேரத்தில் 8,000 டாலருக்கும் அதிகமாகச் செலவழித்து, இந்தியாவில் உள்ள நாக்பூரிலிருந்து அமெரிக்காவிற்குப் பறக்க, பல விமானப் பயணங்களை முன்பதிவு செய்து, ரத்து செய்து, மீண்டும் முன்பதிவு செய்தார். விரல்விட்டு எண்ணக்கூடிய சில வழிகள் மட்டுமே இருந்த நிலையில், அவர் செப்டம்பர் 21, அதிகாலை 12:01 EDT (Eastern Daylight Time)மணிக்கு முன் வந்து சேர வேண்டும் என்ற காலக்கெடுவை எப்படியாவது முடித்துவிடவேண்டும் என போராடினார்.
மும்பையிலிருந்து ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்திற்கு விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் ஏறியவுடன், மேத்தாவுடன் (அவரது வேண்டுகோளின்படி பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசியின் இஷாத்ரிதா பேசினார்.
“நான் பல வழிகளை முன்பதிவு செய்தேன், ஏனென்றால் பெரும்பாலான வழிகள் காலக்கெடுவுக்கு மிக அருகில் வந்தன. ஒரு சிறிய தாமதம் ஏற்பட்டாலும், நான் காலக்கெடுவைத் தவறவிட்டிருப்பேன்” என்று அவர் கூறுகிறார்.
ஒரு மென்பொருள் நிபுணரான அவர், தனது குடும்பத்துடன் 11 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் தனது தந்தையின் நினைவு தினத்திற்காக நாக்பூருக்கு வந்திருந்தார். அவர், தங்கள் முதலாளிகளால் நிதியுதவி செய்யப்படும் H-1B எனப்படும் பணி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்களில் ஒருவர்.
செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதில், புதிய H-1B விசா ஊழியர்களுக்கு ஒரு முதலாளி 100,000 டாலர் கூடுதல் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி செப்டம்பர் 21, அதிகாலை 12:01 EDT-லிருந்து நடைமுறைக்கு வரும்.
H-1B விசா என்பது, அமெரிக்காவில் சிறப்புத் துறைகள் மற்றும் பணிகளில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான ஒரு பணி விசா திட்டமாகும். கடந்த ஆண்டு, அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் 85,000 H-1B விசாக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான விசாக்களை இந்தியர்கள் பெற்றனர். இந்த உத்தரவு இந்திய H-1B விசா வைத்திருப்போருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
“என் மனைவியும் மகளும் என்னுடன் வராதது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு அதிர்ச்சியூட்டும் அனுபவமாக உள்ளது. நான் வாழ்க்கையில் எடுத்த முடிவுகளுக்காக வருந்துகிறேன். இந்த நாட்டிற்காக உழைக்க எனது இளமைக்காலத்தின் முக்கிய பகுதியை நான் கொடுத்தேன். இப்போது நான் விரும்பத்தகாதவனாக உணர்கிறேன்” என்று மேத்தா கூறுகிறார்.
“என் மகள் தன் முழு வாழ்க்கையையும் அமெரிக்காவில் கழித்துவிட்டாள். நான் எப்படி என் வாழ்க்கையை அங்கிருந்து பிடுங்கி, இந்தியாவில் மீண்டும் புதிதாகத் தொடங்குவேன் என்று எனக்குத் தெரியவில்லை.”
இந்தியர்கள் பயணங்களை ரத்து செய்து, விடுமுறைத் திட்டங்களை கைவிட்டனர்
பட மூலாதாரம், Getty Images
பிபிசி இந்தியாவைச் சேர்ந்த பல H-1B விசா வைத்திருப்போரிடம் பேசியது. அவர்களில் பலர் பல தசாப்தங்களாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.
தங்கள் முதலாளிகளால் அங்கீகரிக்கப்படாததால், அவர்களில் யாரும் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை.
பலர் “கண்காணிப்பு” என்ற காரணத்தைக் குறிப்பிட்டு எங்களுடன் பேச முற்றிலும் மறுத்துவிட்டனர்.
நாங்கள் பேசிய அனைவரும் இந்த உத்தரவு குறித்துக் கவலை கொண்டவர்களாகத் தோன்றினர். ஆனால், ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அவர்களுக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்காவில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என்றும், வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் காலக்கெடுவுக்கு முன் திரும்பி வருமாறும் குடிவரவு வழக்கறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பாவில் விடுமுறையில் இருந்த H-1B விசா வைத்திருந்த இந்தியர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், “இப்போது நிலைமை மிகவும் தெளிவாக இல்லை. முதலாளிகள் எப்படிச் சிந்திக்கிறார்கள், இது எப்படி அமல்படுத்தப்படும் என்பதை நாம் இன்னும் பார்க்க வேண்டும். நான் புரிந்துகொண்டவரை, இந்த உத்தரவு புதிய H-1B விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். குடிவரவு வழக்கறிஞர்கள் இன்னும் அதை புரிந்துகொள்ள முயன்று வருகிறார்கள். மேலும், எங்களை திரும்பி வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்” என்று கூறினார்.
உள்நோக்கம் உள்ளதா?
இந்த விசா விதி, அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவில் உரசல் ஏற்பட்டுள்ள சமயத்தில் வந்துள்ளது.
ஆகஸ்டில், ரஷ்ய எண்ணெயை வாங்குவதைக் காரணம் காட்டி, அமெரிக்கா பல இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை 50%ஆக கூட்டியது.
இதை தண்டனை நடவடிக்கையாக கருதும் இந்தியா எதிர்த்து வருகிறது. அடுத்ததாக என்ன நடக்கும் என்பது நீதிமன்றங்களில் தீர்மானிக்கப்படலாம். இவ்வளவு பெரிய கட்டணம் வெளிப்படையான நாடாளுமன்ற அங்கீகாரம் இல்லாமல் சாத்தியமா என்பதைச் பரிசோதிக்க வழக்குகள் தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய நிறுவனங்கள் ஆன்சைட் பணியமர்த்தும் மாதிரிகளை மறுமதிப்பீடு செய்கின்றன. மேலும், பல்கலைக்கழகங்கள் அதிக செலவில் புதிய ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்ய முடியுமா என்று யோசிக்கின்றன.
தனிநபர்களைப் பொறுத்தவரை, விளைவுகள் ஏற்கனவே தெளிவாகத் தெரிகின்றன. ஒரு காலத்தில், H-1B விசா இந்தியாவின் சிறந்த மற்றும் திறமையானவர்களுக்கான ஒரு நுழைவாயிலாக இருந்தது. இன்று, அது ஒரு பலவீனமான உயிர் நாடியாகத் தெரிகிறது. இந்த வாயில் இப்போதும் திறந்திருந்தாலும், அதன் வழி குறுகிவிட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு