ரங்கா ராவுக்கு பத்து வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளது. அவர் முறையான உணவுப்பழக்கம், தினசரி உடற்பயிற்சி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வார். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அவர் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்கிறார்.
ஆனால், கடந்த மாதம் சீதாப்பழத்தைப் பார்த்ததும் ரங்கா ராவுக்கு அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. உடனே ஒரு கூடை நிறைய சீதாப்பழங்களை வாங்கி வந்து, ஒரு நாளைக்கு ஒன்று என சாப்பிட்டார்.
கடைசியாக நீரிழிவு சோதனை செய்து 8 மாதங்கள் ஆகிவிட்டன என்பதை உணர்ந்தவுடன், அவர் உடனடியாக மருத்துவரை சந்திக்க முடிவு செய்தார்.
ஆனால், இவ்வளவு சீதாப்பழங்களை சாப்பிட்டதற்கு மருத்துவர் தன்னைக் கடிந்துகொள்வார் என்று அவர் அஞ்சினார். எனவே, அவர் 2-3 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்க முடிவு செய்தார். மருத்துவரிடம் செல்வதற்கு முந்தைய மதியம் மற்றும் இரவு வேளையில் ஒரு சிறுதானிய ரொட்டியும் ஒரு முட்டையும் மட்டுமே அவர் சாப்பிட்டார்.
அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது, வழக்கமாக அவரை பரிசோதனை செய்யும் மருத்துவருக்குப் பதிலாக புதிதாக ஒரு மருத்துவர் இருப்பதை அவர் கண்டார். அவரது மருத்துவர் பத்து நாள் விடுப்பில் சென்றிருப்பதால், வேறு ஒரு புதிய மருத்துவர் அங்கு இருந்தார். இதனால் ரங்கா ராவுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.
ரங்கா ராவுக்கு வழக்கமான ஃபாஸ்டிங் சுகர் டெஸ்ட் (உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் எடுக்கப்படும் பரிசோதனை) மற்றும் உணவு உண்ட பிறகு எடுக்கும் பரிசோதனைக்குப் பதிலாக, புதிய ஒரு பரிசோதனை மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. ரங்கா ராவுக்கு இந்த பரிசோதனை செய்துகொள்வதில் விருப்பமில்லை. இருப்பினும், மருத்துவர் பரிந்துரைத்ததால் அவர் அதைச் செய்தார்.
ரங்கா ராவின் பரிசோதனை முடிவுகள் வந்தன. உணவுக்கு முன்பு எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அவரது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவு 150 mg/dl என இருந்தது. ஆனால், சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்டில் குளுக்கோஸ் அளவு 270 mg/dl என இருந்தது. மருத்துவர் செய்த புதிய பரிசோதனையில் குளுக்கோஸ் அளவு 9 சதவிகிதம் என்று இருந்தது.
இதற்கு முன்பு இருந்த மருத்துவர், பரிசோதனை முடிந்த பிறகு சாதாரணமாகப் பேசி ஆலோசனை வழங்கி மருந்துகளை பரிந்துரைப்பார். ஆனால், இந்த புதிய மருத்துவர் சற்று கண்டிப்பானவராக இருந்தார்.
“உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏன் இவ்வளவு அதிகரித்தது?” என்று புதிய மருத்துவர் கேட்டார்.
ரங்கா ராவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“சர்க்கரையின் அளவு மிகவும் அதிகமாகவில்லை தானே டாக்டர்?” என்று ரங்காராவ் தயக்கத்துடன் பதிலளித்தார்.
அதற்கு அந்த புதிய மருத்துவர், “நான் டாக்டரா அல்லது நீங்கள் டாக்டரா?” என்று கேட்டார். ரங்காராவ் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.
புதிய மருத்துவர் ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து அதில் சில எண்களை எழுதத் தொடங்கினார்.
“வழக்கமான சர்க்கரைப் பரிசோதனையில், சோதனை செய்வதற்கு முந்தைய நாள் நீங்கள் உண்ணும் உணவைப் பொறுத்து உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணக்கிடப்படும். ஆனால் இந்த புதிய சோதனையில், கடந்த 3 மாதங்களாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவு கணக்கிடப்படும். இது ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது,” என்றார் புதிய மருத்துவர்.
“இந்த பரிசோதனையில் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது”, என்று அவர் ரங்கா ராவிடம் கூறினார்.
“உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்பதை இது குறிக்கிறது. ஒருவர் அதிக இனிப்புகளை உட்கொள்வதால் இது நடக்கிறது”, என்று அவர் ரங்கா ராவிடம் விளக்கினார்.
HbA1C பரிசோதனை என்றால் என்ன?
HbA1C பரிசோதனை, A1C பரிசோதனை அல்லது ‘கிளைகேட்டட் ஹீமோகுளோபின்’ பரிசோதனை அல்லது ஹீமோகுளோபின் ஏ1சி பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள புரதத்துடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸின் அளவைக் கண்டறிய இந்த பரிசோதனை உதவுகிறது.
கடந்த 3 மாதங்களில் (8 முதல் 12 வாரங்கள்) ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை இந்த HbA1C அளவிடுகிறது. இந்த பரிசோதனையின் முடிவுகள் பரிசோதனைக்கு ஒரு நாள் முன்பு சாப்பிட்ட உணவை அடிப்படையாகக் கொண்டிருக்காது. மாறாக, மூன்று மாதங்களாக நாம் உண்ட உணவை அடிப்படையாகக் கொண்டு ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்பதை இந்த பரிசோதனை காட்டுகிறது.
இந்த பரிசோதனை நீரிழிவு நோயாளியின் சர்க்கரை அளவைக் கண்டறியவும், நீரிழிவு நோய்க்கு முந்தையை நிலையை கண்டறியவும் (pre diabetic) தீவிர நீரிழிவு நோயைக் கண்டறியவும் உதவுகிறது.
இந்த பரிசோதனைக்காக உணவு உண்ணாமல் இருப்பது போன்றவை தேவையில்லை. நீங்கள் என்ன உணவை எப்போது உட்கொண்டீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் ஒரு நாளின் எந்த நேரத்திலும் இந்த பரிசோதனையை செய்துகொள்ள முடியும்.
HbA1C முடிவுகளை வைத்து பிரச்னைகளை அறிந்துகொள்வது எப்படி?
நீரிழிவு நோய் பாதிக்கப்படாதவர்களுக்கு HBA1C அளவு பொதுவாக 4% முதல் 5.6% வரை இருக்கும்.
HbA1c அளவு 5.7% முதல் 6.4% வரை இருந்தால், அந்த நபர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறார். அதாவது, அந்த நபருக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இந்த அளவு 6.5% மற்றும் அதற்கு மேல் இருந்தால், அந்நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதைக் குறிக்கிறது. அவர்கள் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
இந்த அளவு 9% க்கு மேல் இருந்தால், அவர்களின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள். இதனால் உடலில் உள்ள சில உறுப்புகள் பாதிக்கப்படுவதற்கான அபாயம் ஏற்படலாம்.
இந்த பரிசோதனையை எப்போது செய்ய வேண்டும்?
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வயது வித்தியாசமின்றி ஆண்டுதோறும் HbA1C பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
30-45 வயதுக்குட்பட்டவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் அல்லது இதய நோய் உள்ளவர்கள் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஏதேனும் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தாலும் இந்த பரிசோதனையை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ப்ரீ-டயாபடீஸ் என்றால் என்ன?
ப்ரீ-டயாபடீஸ் என்றால், உடலால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற நிலையை குறிக்கிறது. இந்த நிலை ஏற்பட்டால் சில வருடங்களில் உறுப்புகள் சரியாகச் செயல்படாமல் போகலாம் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் போகலாம்.
உங்கள் அன்றாட உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறைகளில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு நோயிலிருந்து விலகி இருக்க முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம், உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் திறனை மீண்டும் பெறலாம்.
HbA1c பரிசோதனையில் உங்களுக்கு ப்ரீ-டயாபடீஸ் இருப்பது கண்டறியப்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது?
HbA1c பரிசோதனை என்பது மற்ற ரத்தப் பரிசோதனைகளைப் போலவேதான் இருக்கும். அங்கீகாரம் பெற்ற எந்த ஆய்வகத்திலும் இதை செய்துகொள்ளலாம்.
5 நிமிடங்களுக்குள் உடலில் இருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அன்றே வழங்கப்படும்.
இந்த பரிசோதனையின் மூலம் கடந்த 3 மாதங்களில் உடலில் உள்ள சர்க்கரையின் சராசரி அளவை அறிந்துகொள்ள முடியும். எனவே, சோதனைக்கு முன் நீங்கள் என்ன உண்ணும் உணவோ அல்லது நீராகாரங்கள் அருந்தினாலோ இந்த பரிசோதனையின் முடிவுகளை மாற்றாது.
இருப்பினும், HbA1C பரிசோதனையின் அடிப்படையில் மட்டுமே மருத்துவர்களால் மருந்து பரிந்துரைக்க முடியாது.
உணவுக்கு முன்பும் அதன் பிறகும் எடுக்கும் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே சர்க்கரையை கட்டுப்படுத்த சரியான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும்.
HbA1C அளவுகளை எவ்வாறு குறைக்கலாம்?
HbA1C என்பது மூன்று மாத காலத்திற்கான சராசரியான ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளும் ஒரு பரிசோதனையாக இருப்பதால், உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவோ அல்லது மருந்துகளை உட்கொள்வதன் மூலமோ இரண்டு அல்லது மூன்று நாட்களில் சர்க்கரை அளவை குறைக்க முடியாது.
குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தினமும் உடற்பயிற்சி செய்வது, உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறையை மாற்றிக்கொள்வது போன்றவற்றினால் மட்டுமே HbA1C அளவைக் கட்டுப்படுத்த முடியும்.
நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்பவர்கள், தினமும் தவறாமல் மருந்துகளை உட்கொண்டால் மட்டுமே, HbA1C-ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.
HbA1C என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவைப் பொறுத்து, செரிமான மண்டலத்திலிருந்து ரத்தத்தில் குளுக்கோஸ் வெளியிடப்படுகிறது. இந்த குளுக்கோஸ் ரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் நகரும்.
ரத்தத்தில் பல்வேறு புரதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹீமோகுளோபின் ஆகும், இது ரத்த சிவப்பணுக்களில் காணப்படுகின்றது மற்றும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இந்த ஹீமோகுளோபின் புரதம் உடல் முழுவதும் சுற்றும் குளுக்கோஸ் மூலக்கூறுடன் இணைக்கப்படும். இந்த செயல்முறை கிளைகேஷன் என்று அழைக்கப்படுகிறது.
ஹீமோகுளோபின் புரதம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸ் ‘கிளைகேட்டட் ஹீமோகுளோபின்’ என்று அழைக்கப்படுகிறது.
ரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் என்பதால், கடந்த மூன்று மாதங்களில் அவற்றில் எவ்வளவு குளுக்கோஸ் (சர்க்கரை) சேர்ந்துள்ளது என்பதை இந்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
ரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தால், அது அதிகமான ஹீமோகுளோபினுடன் இணைக்கப்படும் என்பதையே இந்த பரிசோதனை காட்டுகிறது.
இந்த பரிசோதனை அனைவருக்கும் அவசியமா?
குளுக்கோஸ் ஹீமோகுளோபின் புரதத்துடன் மட்டும் சேர்வதில்லை. கூடுதலாக அல்புமின், ஃபெரிடின் மற்றும் ஃபைப்ரினோஜென் போன்ற புரதங்களுடனும் சேர்க்கிறது.
ஆனால், அனைவருக்கும் இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லை.
கடுமையான ரத்த சோகை (ரத்தத்தில் மிகக் குறைவான அளவில் ஹீமோகுளோபின் இருப்பது), சிறுநீரகப் பிரச்னைகள் இருப்பவர்கள், உடலில் போதுமான ரத்தத்தை உற்பத்தி செய்ய முடியாதவர்கள் மற்றும் கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த HbA1c பரிசோதனையால் அதிகம் பயனடைய மாட்டார்கள். அத்தகையவர்களுக்கு மட்டுமே ஹீமோகுளோபினைத் தவிர மற்ற புரதங்களுடன் இணைக்கப்பட்ட குளுக்கோஸை தீர்மானிக்கும் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.
(குறிப்பு: கட்டுரையை எழுதியவர் ஒரு மருத்துவர். இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ரீதியாக எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்னர் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.