வடக்கு சீனாவில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (HMPV) தொற்று அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றி உலக அளவில் கொடிய தொற்றுநோயாக உருவெடுத்த கோவிட் -19 வைரஸ் தொற்று நடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
14 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதில் இருப்பவர்களிடம் இந்த HMPV தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மூத்த சீன சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அங்குள்ள மருத்துவமனைகளில் இந்த வைரஸால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.
இந்தியாவிலும் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
HMPV ஒரு புதிய வைரஸா?
அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) தரவுகளின்படி, இந்த வைரஸ் முதன் முதலில் 2001 இல் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் அதை விட பல தசாப்தங்களுக்கு முன்பாகவே இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் .
சாதாரணமாக, HMPV தொற்றின் அறிகுறிகள் சளி அல்லது காய்ச்சலைப் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை கூட ஏற்படலாம். சிலருக்கு இது மிகவும் தீவிரமாக இருக்கலாம்.
இந்த வைரஸ் அனைத்து வயதினருக்கும் மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்ற சுவாச நோய்களை ஏற்படுத்தலாம் என்றும் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்களிடம் இதன் பாதிப்பு அதிகம் என்றும் அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கின்றது.
இந்த வைரஸ் 3 முதல் 6 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். தொற்று எவ்வளவு வீரியமிக்கது என்பதைப் பொருத்து குறைந்த அல்லது அதிக நாட்களுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம். வைரஸ்களால் ஏற்படும் மற்ற சுவாச தொற்றுகளைப் போலவே இந்த பாதிப்பும் இருக்கும்.
குளிர் காலத்தின் பிற்பகுதியிலும் வசந்த காலத்திலும் HMPV தொற்று அதிகமாக இருக்கும் என்று அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
HMPV எப்படி பரவுகிறது?
HMPV பெரும்பாலும் இருமல் மற்றும் தும்மலின் போது வெளிவரும் நீர்த்துளிகளின் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
கை குலுக்குவதன் மூலமாகவோ அல்லது ஒருவருக்கொருவர் தொடுவதன் மூலமாகவோ இந்த வைரஸ் பரவலாம்.
இருமல் மற்றும் தும்மல் காரணமாக சளி நீர்த் துளிகள் விழுந்த இடத்தில் உங்கள் கைகளை வைத்த பிறகு, உங்கள் முகம், மூக்கு, கண்கள் அல்லது வாயைத் தொட்டால், இந்த வைரஸ் உங்களையும் பாதிக்கலாம்.
HMPV பொதுவாக குளிர் காலத்தில் மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடும் போது பரவுகிறது.
குழந்தைகள், முதியவர்களிடையே அதிகம் பரவுவது ஏன்?
ஒரு நபர் பல்வேறு முறையில் HMPV தொற்று பாதிப்புக்கு ஆளாகலாம். முதல் முறையாக வைரஸ் தொற்று ஏற்படும் போது சற்று கடுமையானதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹெச்.எம்.பி.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடலில் அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அதன் பிறகு அதே வைரஸ் தொற்று அவருக்கு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு தீவிரமாக இருக்காது.
HIV அல்லது புற்றுநோய் போன்ற பிற நோய் பாதிப்புக்கு ஆளாகி நோயெதிர்ப்பு சக்தி குறையாத வரை, இந்த HMPV தொற்று மற்றொரு முறை ஏற்பட்டாலும் அதன் தீவிரம் சற்று குறைவாக இருக்கும்.
HMPV தொற்றினால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளும், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் அல்லது சுவாச பிரச்னைகள் உடையவர்களும் ஏன் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இது விளக்குகிறது.
HMPV பல தசாப்தங்களாக இருந்ததாகக் கருதப்படுவதால், இந்த தொற்றுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உலகளவில் கணிசமான அளவு உருவாகியுள்ளதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
சீனாவில் என்ன நடக்கிறது?
சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வெளியாகின. இதனால் சீனாவில் இந்த தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்த பதிவுகளை கோவிட் நோய்த்தொற்றின் ஆரம்ப காலத்தில் பாதிப்பு அதிகரித்ததுடன் சில உள்ளூர் செய்திகள் ஒப்பிட்டன.
அதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தொற்று நோய் பிரிவின் தலைவர் கான் பியாவோ, குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் சீனாவில் பல்வேறு வகையான சுவாச நோய்களால் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
14 வயதிற்குட்பட்டவர்களிடையே HMPV தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் 2024 ஆம் ஆண்டில் நடந்த மொத்த சுவாச நோய் பாதிப்புகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட குறைவான அளவில் இருப்பதாக அவர் கூறினார்.
HMPV என்பது சீனாவில் குளிர்காலத்தில் பரவும் நான்கு வைரஸ்களில் ஒன்று மட்டுமே – மற்றவை ரெஸ்பிரேடரி சின்டிகல் வைரஸ், கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகும்.
குளிர்காலம் மற்றும் இந்த நான்கு வைரஸ்களின் பரவலால் சீன மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் விளக்கினார்.
குளிர்காலம் முழுவதும் சில சுவாச நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த தொற்று பாதிப்பை கண்காணிப்பதற்காக புதிய முயற்சிகளை சோதனை செய்து வருவதாக சீனா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் முதன்முதலில் தோன்றிய போது இருந்த குறைந்த அளவிலான தயார் நிலைக்கு இது நெரெதிராக இருக்கிறது.