இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் 17 விக்கெட்டுகள் சரிந்தன.
72 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்டின் முதல் நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்ந்தது இதுதான் முதல்முறையாகும்
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டம் முடிவில் 27 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது.
ஆஸ்திரேலிய அணி இன்னும் இந்திய அணியைவிட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது.
வேகப்பந்துவீச்சாளர்களின் நாள்
இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாகத்தான் இந்த ஆட்டத்தை பார்க்க வேண்டியதிருந்தது.
இரு அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட இரு அணிகளின் பேட்டர்களும் செய்வதறியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறியவாறு இருந்தனர்.
வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற அருமையான ஆடுகளம், தரமான பந்துவீச்சு, துல்லியமான லைன் அன்ட் லென்த் தாக்குதல், உச்சபட்ச சீமிங் என வேகப்பந்துவீச்சாளர்களின் நாளாகவே இன்று இருந்தது.
இரு அணிகளின் பவுலர்களும் எந்தவிதமான குறையும் இன்றி, துல்லியமாக, மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். எந்த அளவு திறமையான பேட்டர்களாக இருந்தாலும் பெர்த் ஆடுகளத்தில் இன்றைய ஆட்டத்தில் இரையாகி இருக்க வேண்டும் என்பதைப் போல் போட்டிபோட்டு பந்துவீசியதைக் காண முடிந்தது.
பும்ராவின் மிரட்டல் பந்துவீச்சு
பும்ரா முதல்முறையாக கேப்டன் பொறுப்பேற்று செயல்படுவதால், அவரின் பந்துவீச்சில் அனல் பறந்தது. துல்லியத்தன்மையோடு, லைன் லென்த்தில் பந்து சீறிப் பாய்ந்தது.
பும்ரா தனது பந்துவீச்சில் சிறிய தவறையும் செய்யாமல் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப், ஸ்விங் பந்துவீச்சை வீசியதால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் திகைத்தனர்.
அதிலும் 3வது ஓவரிலேயே நாதன் மெக்ஸ்வீன் விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடியை பும்ரா வழங்கினார்.
குறிப்பாக கவாஜாவுக்கு வீசப்பட்ட பும்ராவின் பந்தை எந்த பேட்டரும் கணித்து ஆடுவது கடினம். பும்ரா வீசிய பந்து லைனில் பிட்ச் ஆகி, பேட்டரை ஏமாற்றி லேசாக ஸ்விங் ஆகி வெளியேறியது. இதை கவனிக்காமல் பேட்டை வைத்த கஜாவா, 2வது ஸ்லிப்பில் இருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக முன்னாள் கேப்டன் ஸ்மித் ஆட்டமிழந்தவிதம் அற்புதமானது. பும்ராவின் ஸ்விங் பந்தை எதிர்பாராத ஸ்மித் ஸ்டெம்பை மறித்து கால்காப்பில் வாங்கினார். பும்ரா அப்பீல் செய்ததும், நடுவர் எந்த ஆட்சேபனையும் இன்றி அவுட் வழங்கினார். இரு விக்கெட்டையும் பும்ரா 7-வது ஓவரில் அடுத்தடுத்து வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியளித்தார்.
அச்சுறுத்தல் பேட்டர் என்று கூறப்பட்ட டிராவிஸ் ஹெட்டுக்கு அவுட் ஸ்விங் வீசிய ராணா, க்ளீன் போல்டாக்கி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவின் பக்கம் கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க் போன்றோர் கலக்கிய போது, இந்தியாவின் பக்கம் பும்ரா,சிராஜ், அறிமுக வீரர் ராணாவும் பந்துவீச்சில் பதிலடி கொடுத்து ஆஸ்திரேலிய பேட்டர்களை மிரட்சியில் உறைய வைத்தனர்.
பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இணையாக இந்தியப் வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களின் பலத்தை, திறமையை வெளிப்படுத்தி, ஆஸ்திரேலிய அணியை திணறவைத்தனர்.
அசுரத்தனமான பந்துவீச்சு
ஆஸ்திரேலிய பேட்டர்களை அலறவிட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, சிராஜ், ராணா ஆகியோர் சேர்ந்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பும்ரா 10 ஓவர்கள் வீசி 3 மெய்டன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ராணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்று ஒரே நாளில் மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே(19), ஸ்டார்க்(6) ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரெ விக்கெட்டை மட்டும் வீழ்த்திவிட்டால் அடுத்தாக பேட்டர்கள் இல்லை, 100 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி சுருட்டவும் வாய்ப்புள்ளது.
நாளை 2வது நாளில் பிட்ச்(விக்கெட்) இன்றும் வெயிலில் காய்ந்து, வேகப்பந்துவீச்சுக்கு இன்னும் அதிகமாக ஒத்துழைக்கும்.
வேகப்பந்துவீச்சை பேட்டர்களை ஆடுவதே படுசிரமமாக இருக்கும். 3வது நாளில் விக்கெட் விரிசல் ஏற்பட்டபின் ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாக மாறும். இந்திய அணி 50 ரன்கல் முன்னிலை பெற்று, 2வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் குவித்தாலே இந்த ஆடுகளத்தில் சாதித்துவிடலாம்.
எதிர்பாராத தாக்குதல்
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களிடம் இருந்து இப்படி ஒரு அசுரத்தனமான வேகப்பந்துவீச்சுத் தாக்குதலை ஆஸ்திரேலிய பேட்டர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
அனுபவமான பேட்டர்கள் யாரும் இல்லை, கோலியின் விக்கெட்டையும் விரைவாக எடுத்துவிட்டோம், இன்று நம்முடைய நாள் என ஆஸ்திரேலியய வீரர்கள் நினைத்திருந்தனர், ஆனால், அது அனைத்தும் அவர்கள் பேட் செய்ய வந்தபோது மாறிவிட்டது.
பும்ரா, சிராஜ் இருவரும் தங்களின் லைன் லென்த்தை மாற்றாமல் பந்துவீசியதால் இருவரின் பந்துவீச்சை கையாள ஆஸ்திரேலிய பேட்டர்கள் சிரமப்பட்டனர். இதனால் தவறான ஷாட்டை ஆடியபோது நாதன் மெக்ஸ்வீனி, ஸ்மித் ஆகியோர் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினர், சிராஜ் பந்துவீச்சில் லாபுஷேன் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.
அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 2 முறை சொந்த மண்ணில் கோப்பையை இழந்ததால், இந்த முறை கோப்பையை வெல்லும் நோக்கில் அனுபவ வீரர்களை அதிகமாக அணியில் வைத்திருந்தது. நாதன் மெக்ஸ்வீனி தவிர அனைத்து வீரர்களும் டெஸ்ட் போட்டி விளையாடிய அனுபவம் உள்ளனர்.
ஆனால், பும்ரா, சிராஜ் வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் உஸ்மான் கவாஜா(9),லாபுஷேன்(2), ஸ்மித்(0), டிராவிஸ் ஹெட்(11), மார்ஷ்(6), கம்மின்ஸ்(3) என வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர். ஆஸ்திரேலிய பேட்டர்கள் 7 பேர் ஆட்டமிழந்ததில், டிராவிஸ்ஹெட் சேர்த்த 11 ரன்கள்தான் அதிகபட்சமாகும்.
உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்த டிராவிஸ் ஹெட் அறிமுக வீரர் ஹர்சித் ராணா பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். ஃபார்மில் இல்லாத லாபுஷேன் 2 ரன்னில் பும்ரா பந்துவீச்சிலும், ஸ்மித் டக்அவுட்டில் சிராஜ் பந்துவீச்சிலும் பெவிலியன் திரும்பினர்.
இந்திய அணியிடமிருந்து இப்படியொரு சவாலான, மிரட்டலான பந்துவீச்சை எதிர்பாராமல் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சியடைந்துள்ளது. 100 ரன்களை முதல் இன்னிங்ஸில் கடக்குமா என்ற நிலை ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
52 பந்தில் 2 ரன்கள்
ஆஸ்திரேலிய அணியின் லாபுஷேனுக்கு இந்த ஆண்டு சீசன் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த ஆண்டில் அவர் விளையாடிய டெஸ்டில் சராசரியே 25 ரன்களைக் கடக்கவில்லை.
இந்த ஆட்டத்தில்கூட பும்ரா, சிராஜ் பந்துவீச்சை சமாளிக்க லாபுஷேன் கடுமையாகப் போராடினார். பும்ரா வீசிய லாபுஷேனுக்கு ஒரு கேட்சை பந்தில் 2வது ஸ்லிப்பில் கோலியும் கோட்டைவிட்டார்.கிடைத்த வாய்ப்பை லாபுஷேன் பயன்படுத்தவில்லை.
முதல் 24 பந்துகளைச் சந்தித்த லாபுஷேன் ஒரு ரன்கூட அடிக்கவில்லை. இதனால் பொறுமையிழந்த ரசிகர்கள் கைதட்டத் தொடங்கியவுடன், சிறிது நேரத்தில் ஒரு ரன் எடுத்தார். அதன்பின்பும் அவரின் பேட்டிங் படுத்துக் கொண்டது.
இறுதியாக 52 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்தநிலையில் சிராஜ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
சோதனைக்கூட எலிகள்
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் இதற்கு முன் பெர்த் மைதானத்தில் விளையாடியிராதவர்கள். இதனால் மின்னல் வேகத்தில் வந்த ஸ்டார்க், ஹேசல்வுட், ஸ்டார்க் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டை மளமளவென இழந்ததை வியப்புக்குரிய விஷயமல்ல.
முதல் செஷனிலேயே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக ஜெய்ஸ்வால்(0), படிக்கல்(0), கோலி(5), கே.எல்.ராகுல்(26) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியில் டெஸ்ட் போட்டி விளையாடிய அனுபவம் உள்ள சர்பிராஸ் கான் இருந்தபோது, உள்நாட்டுப் போட்டியில் அதிக விளையாடிய அனுபவம் இல்லாத தேவ்தத் படிக்கலை களமிறக்கியது ஏன் எனத் தெரியவில்லை.
உள்நாட்டுப் போட்டியில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் பெர்த் ஆடுகளத்தில் செய்வதறியாது பேட் செய்ய முடியாமல் திகைத்தார். ஸ்டார்க் 145 கி.மீ வேகத்தில் வீசிய பந்தில் முதல் ரன்னை அடிக்க ஜெய்ஸ்வால் முற்பட்டபோது கல்லியில் நின்றிருந்த மெக்ஸ்வீனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ரோஹித் சர்மா, கில் இல்லாத நிலையில் 3வது வீரராக களமிறங்க தேவ்தத் படிக்கல் வாய்ப்புப் பெற்றார். ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார் என்பதற்காக பரிசோதனையாக தேவ்தத் களமிறக்கப்பட்டார். ஆனால், 22 பந்துகளை சந்தித்தும் ஒரு ரன்னைக் கூட படிக்கல்லால் எடுக்க முடியவில்லை.
படிக்கல்லுக்கு ஏற்பட்ட அழுத்தத்தைப் பயன்படுத்திய ஹேசல்வுட் சில பந்துகளை பிட்சுக்கு உள்ளே வீசி, திடீரென வெளியே வீசியபோது திகைத்த படிக்கல் அதை தொடவே விக்கெட் கீப்பர் கேரெயிடம் கேட்சானது.
கோலியின் தவறான வியூகம்
அனைவரின் எதிர்பார்ப்பும் கோலியின் மீதுதான் இருந்தது. ஏனென்றால், இதற்கு முன் கோலி ஆஸ்திரேலியாவில் பதித்த தடம் அழுத்தமாக இருந்தது. ஆனால் அனைத்தையும் ஏமாற்றும் விதத்தில் கோலியின் ஆட்டம் அமைந்திருந்தது, தான் உண்மையிலேயே ஃபார்மில் இல்லை என்பதை நிரூபிப்பதைப் போல் இருந்தது.
இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு கோலி வந்திருந்தபோது க்ரீஸை விட்டு வெளியே நின்று பேட் செய்த வியூகம் அவருக்கு வெற்றியைக் கொடுத்தது, ரன்களை வாரி வழங்கியது. ஆனால், இந்த முறை கோலியின் வியூகத்தை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நன்கு தெரிந்து வைத்தனர்.
அதிலும் குறிப்பாக ஹேசல்வுட் சமீபகாலமாக கோலிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசக்கூடியவர். கோலி க்ரீஸை விட்டு வெளியே நின்றிருந்ததைப் பார்த்த ஹேசல்வுட் தனது பந்துவீச்சில் லென்த்தை மாற்றி குறைவான தொலைவிலேயே பந்தை பிட்ச் செய்து வீசினார்.
ஹேசல்வுட்டின் இந்த பந்தை சற்றும் எதிர்பாராத கோலியால் பேக்ஃபுட் செய்து விளையாட முடியாததால், வேறுவழியின்றி முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கோலியின் இந்த வியூகம் இந்த முறை தவறாக முடிந்தது.
ராகுல் அவுட்டால் சர்ச்சை
கே.எல்.ராகுல் ஓரளவு தாக்குப்பிடித்து நிதான ரிஷப் பந்துடன் பேட் செய்தார். இந்திய அணிக்கு முதல் பவுண்டரியை 12வது ஓவரில்தான் ராகுல் அடித்தார். ஸ்டார்க் வீசிய பந்து ராகுலின் பேட்டிலும், கால்காப்பிலும் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்சானதாகக் கூறி ஸ்டார்க் அப்பீல் செய்தார்.
இதற்கு களநடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோவும் அவுட் வழங்கினார். ஆனால், ராகுல் டிஆர்எஸ் முடிவுக்கு செல்லவே அங்கும் பலமுறை ரீப்ளே செய்துபார்த்தபோது அதில் பேட்டில் பட்டு பந்து சென்றதா அல்லது பேடில் பட்டதா எனத் தெரியவில்லை.
சந்தேகத்தின் பலன் பேட்டருக்குத் தரவேண்டும் என்ற தாத்பரியத்துக்கு மாறாக, மூன்றாவது நடுவரும் அவுட் வழங்கினார். ராகுல் 26 ரன்கள் சேர்த்து செட்டில் பேட்டராக இருந்தபோது அவருக்கு வழங்கிய அவுட் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியது.
இந்திய அணிக்கு ஆறுதல்
இந்திய அணிக்கு ஆறுதல் அளித்த விஷயம் ரிஷப் பந்த் அறிமுக பேட்டர் நிதிஷ் குமார் ரெட்டி பார்ட்னர்ஷிப்தான். இருவரும் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அனுபவமான விராட் கோலி ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு திணறிய அதேநேரம், ரிஷப்பந்த், நிதிஷ் கூட்டணி அனாசயமாக எதிர்கொண்டனர்.
அதிலும் கம்மின்ஸ் பந்துவீச்சில் ரிஷப் பந்த் ஒரு சிக்ஸர் அடித்து தன்னுடைய ஃபார்மை வெளிப்படுத்தினார். லேயான் பந்துவீச்சில் நிதிஷ் ஒரு சிக்ஸரை வெளுத்தார்.
ரிஷப் பந்த் 37 ரன்களில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் நிதிஷ் குமார் ரெட்டி கடைசிவரை களத்தில் இருந்து 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரின் பார்ட்னர்ஷிப் இல்லாவிட்டால் இந்திய அணி 100 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், ஸ்டார்க், மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு