பட மூலாதாரம், Getty Images
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு 5வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றது.
இதற்கு முன் 2000, 2002, 2013,2017 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இப்போது 5வது முறையாக தகுதியானது.
துபையில் இன்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 265 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
14 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வெற்றி
கடந்த 2011ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய அணியை ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் வெல்ல முடியாமல் தவித்தது இந்திய அணி. பலமுறை நாக்அவுட் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்விபெற்று இந்திய அணி வெளியேறியது.
ஆனால், கடந்த 14 ஆண்டுகால அவமானத்துக்கு இந்தமுறை நாக்அவுட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தலைநிமர்ந்தது இந்திய அணி.
இந்திய அணியின் வெற்றிக்கு, ஷமி, வருண், ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசியது, பேட்டிங்கில் மீண்டும் சேஸிங் மாஸ்டர் கோலியின் (84) ஆட்டம், நடுவரிசை நாயகன் ஷ்ரேயாஸ் ஐயரின் (45) பேட்டிங், ராகுலின் (42) பேட்டிங், ஹர்திக் பாண்டியாவின் கேமியோ ஆகியவை வெற்றிக்கு காரணமாக அமைந்தன. 2 கேட்சுகள் பிடித்து 84 ரன்கள் சேர்த்த கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
அதிலும் சேஸிங்கில் கோலி-ஷ்ரேயாஸ் ஐயரின் கூட்டணியின் 91 ரன்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஷ்ரேயாஸ் வீழ்ந்தாலும், கோலி மனம் தளராமல் கடைசிவரை ராகுலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்ததைப் பார்த்தபோது ‘வின்டேஜ் கோலி’ ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தது.
சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் அனாசயமாக் கையாண்ட கோலி, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயற்சிக்கவில்லை. மாறாக, ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஒரு ரன், 2 ரன்கள் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி ஆஸ்திரேலிய வீரர்களோடு ‘மைண்ட் கேமில்’ ஈடுபட்டார்.
கோலி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் தடுக்க முடியவில்லை.
துபை ஆடுகளத்தை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பயன்படுத்தினர். வருண், அஸ்கர், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் சேர்ந்து 34 ஓவர்கள் வீசி 176 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர், 102 டாட் பந்துகளாக வீசினர்.
ஷமி கொடுத்த ஷாக்
பட மூலாதாரம், Getty Images
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட் செய்தது. ஆஸ்திரேலிய அணியில் தன்வீர் சங்கா, கூப்பர் கனோலி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
டிராவிஸ் ஹெட், கனோலி ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது ஷமி தனது அனுபவத்தை 3வது ஓவரிலேயே வெளிப்படுத்தினார். ஷமி, ஆஃப் சைட் விலக்கி வீசிய பந்தை கனோலி கவர் டிரைவ் ஆட முற்பட்டு, விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்சானது. டக்அவுட்டில் கனோலி ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் ஸ்மித் களமிறங்கி, ஹெட்டுடன் சேர்ந்தார். வழக்கம்போல் டிராவிஸ் ஹெட் தனது அதிரடி ஆட்டத்தை ஆடத் தொடங்கினார். ஷமி ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார்.
டிராவிஸ் ஹெட் களத்தில் இருப்பது ஆபத்து எனத் தெரிந்து 9-வது ஓவரை வீச வருண் சக்ரவர்த்தி அழைக்கப்பட்டார். வழக்கமாக பவர்ப்ளேயில் அக்ஸர் அல்லது குல்தீப்பைத்தான் கேப்டன் ரோஹித் அழைப்பார். ஆனால் வருணை அழைத்ததற்கான காரணத்தை அவர் உணர்த்திவிட்டார்.
முதல் சந்திப்பில் வருணுக்கு விக்கெட்
பட மூலாதாரம், Getty Images
வருண் சக்ரவர்த்தியின் முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் சந்தித்த முதல் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு, சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து 39 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஸ்மித், ஹெட் 50 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ஹெட் ஆட்டமிழந்தவுடனே இந்திய அணிக்கு மனரீதியாக ஒரு தன்னம்பிக்கை, உற்சாகம் கிடைத்தது போல் பந்துவீசத் தொடங்கினர்.
அடுத்துவந்த லாபுஷேன், ஸ்மித்துடன் இணைந்து ஆடினார். சுழற்பந்துவீச்சாளர்களான அக்ஸர், குல்தீப், வருண் பந்துவீசத் தொடங்கியவுடன் ஆஸ்திரேலிய ரன்ரேட் குறையத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சை குறிவைத்து அடித்த ஸ்மித், லாபுஷேன் இருவரும் சுழற்பந்துவீச்சை கவனத்துடன் எதிர்கொண்டனர்.
அதிலும் ஸ்மித் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஒரு ரன், இரு ரன்களாகவே சேர்த்தார். 20வது ஓவரில்தான் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை எட்டியது. பவர்ப்ளேயில் 6.50 ரன்ரேட்டில் சென்ற ஆஸ்திரேலிய அணி அடுத்த 10 ஓவர்களில் 4 ரன்ரேட்டாகக் குறைந்தது.
லாபுஷேன், ஸ்மித் செட்டிலாகவிடாமல் தொடர்ந்து சுழற்பந்துவீச்சாளர்களை மாற்றி, மாற்றி ரோஹித் சர்மா பந்துவீசச் செய்தார். இதற்கு ஒரு கட்டத்தில் பலனும் கிடைத்தது.
ஜடேஜா வீசிய 23வது ஓவரில் கால்காப்பில் வாங்கி லாபுஷேன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் நீண்டநேரம் நிலைக்கவில்லை, ஜடேஜா பந்துவீச்சில் 11 ரன்கள் சேர்த்தநிலையில் கோலியிடம் கேட்ச் கொடுத்து இங்கிலிஸ் ஆட்டமிழந்தார். விராட் கோலி ஒருநாள் போட்டியில் 160 கேட்சுகளைப் பிடித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்து 2வது இடத்தில் இருக்கிறார்.
அலெக்ஸ் கேரி களமிறங்கி, ஸ்மித்துடன் சேர்ந்தார். கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய ஸ்மித் 68 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேரி, ஸ்மித் இருவரும் சேர்ந்தபின் ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் உயரத் தொடங்கியது.
சுழற்பந்துவீச்சை இருவரும் அருமையாகக் கையாண்டதால் ரன்ரேட் உயரத் தொடங்கியது. இருவரின் வேகமான ரன் சேர்ப்பால் 54 பந்துகளில் 50 ரன்களை பார்ட்னர்ஷிப் எட்டியது.
ஷமியும் ஸ்மித்தும்
பட மூலாதாரம், Getty Images
சதத்தை நோக்கி நகர்ந்த ஸ்மித் 76 ரன்கள் சேர்த்தநிலையில் ஷமியின் ஃபுல்டாஸ் பந்தை தவறவிட்டு க்ளீன்போல்டாகி ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் ஸ்மித்தை தொடர்ந்து 4வதுமுறையாக ஷமி ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஷமி பந்துவீச்சுக்கு எதிராக ஸ்மித் 29 சராசரிதான் வைத்துள்ளார்.
அடுத்துவந்த மேக்ஸ்வெல் 7 ரன்னில் அக்ஸர் பந்துவீச்சில் போல்டாகினார். இரு விக்கெட்டுகளை விரைவாக கைப்பற்றியபின் ஆட்டம் மீண்டும் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. ஒரு கட்டத்தில் 280 ரன்கள் வரை ஆஸ்திரேலியா எடுக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் ஆட்டத்தில் ஏற்பட்ட மந்தத்தால் 250 ஆகக் கணிப்பு குறைக்கப்பட்டது.
அலெக்ஸ் கேரியின் அதிரடி ஆட்டம்
பட மூலாதாரம், Getty Images
பென் வார்ஸூஸ், கேரி கூட்டணி ஸ்கோரை உயர்த்த எண்ணினாலும், இந்திய வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை. 48 பந்துகளில் அலெக்ஸ் கேரி அரைசதத்தை எட்டினார். அனுபவம் குறைந்த வார்ஸூஸ் 19 ரன்களில் வருண் பந்தவீச்சில் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் கேரி (61) ரன்னில் ரன்அவுட் ஆகவே, நேதன் எல்லிஸ், ஜாம்பா விரைவாக விக்கெட்டை இழந்தனர். கடைசி 25 ரன்களுக்குள் மட்டும் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.
49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
டாப் ஆர்டர் ஏமாற்றம்
265 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா, கில் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். ரோஹித் சர்மா 13 ரன்கள் சேர்த்திருந்தபோது ஒரு கேட்சை தவறவிட்டனர். பவர்ப்ளேயை பயன்படுத்திய ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். ஆனால், கில் 8 ரன்கள் சேர்த்திருந்தபோது, வார்ஸீயஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.
அடுத்துவந்த கோலி, ரோஹித்துடன் இணைந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 28 ரன்னில், கனோலி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 8 ஓவர்களில் இந்திய அணி 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
ஆட்டத்தை மாற்றிய கூட்டணி
பட மூலாதாரம், Getty Images
3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ், விராட் கோலி கூட்டணி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இருவரின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர். சுழற்பந்துவீச்சை ஆடுவதற்கு கோலி சற்று திணறினாலும், ஷ்ரேயாஸ் அற்புதமாக சுழற்பந்துவீச்சைக் கையாண்டு ரன்களைச் சேர்த்தார்.
விராட் கோலி லெக்ஸ்பின்னில் பலவீனமானவர் எனத் தெரிந்து அவருக்கு பந்தை நன்றாக டாஸ் செய்து ஜாம்பா வீசினார். ஆனால், ஜாம்பாவின் வியூக்தை அறிந்த கோலி, நிதானமாக ஆடி விக்கெட்டை தற்காத்தார். இந்திய அணி 19.3 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.
இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். 53 பந்துகளில் விராட் கோலி அரைசதத்தை எட்டினார்.
இருவரையும் பிரிக்க ஜாம்பாவின் அனுபவம் ஆஸ்திரேலியாவுக்கு கை கொடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயருக்கு அற்புதமான லெக் ஸ்பின் வீசி அவரை போல்டாக்கினார் ஜாம்பா. அரைசதத்தை நழுவவிட்டு 45 ரன்னில் ஷ்ரேயாஸ் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 91 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த அஸ்கர் படேல், கோலிக்கு ஈடுகொடுத்து ஆடினார். இருவரும் வேகமாக 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் நிலைத்து ஆடமுடியாத அக்ஸர் படேல் 27 ரன்னில் எல்லீஸ் பந்துவீச்சில் போல்டாகினார்.
வின்டேஜ் கோலி
பட மூலாதாரம், Getty Images
கோலி, சுழற்பந்துவீச்சில் பலவீனமானவர் என்பதை இந்த போட்டியில் மாற்றிவிட்டார். ஆடம் ஜாம்பா, தன்வீர், கனோலி ஆகியோரின் பந்துவீச்சை அனாசயமாகக் கையாண்ட கோலி, கச்சிதமான ஷாட்களை ஆடினார்.
இந்த போட்டியில் சழற்பந்துவீச்சாளர்களின் 45 பந்துகளை சந்தித்து 44 ரன்களை எடுத்துள்ளார், அதில் 13 டாட் பந்துகளாகும். அதுமட்டுமல்லாமல் கிடைக்கின்ற இடைவெளியில் ஒரு ரன், இரு ரன்களை அடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறவிட்டார்.
கோலி 26 சிங்கிள் ரன்களையும், 3 இரு ரன்களையும் சேர்த்தார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி வின்டேஜ் கோலியாக ஜொலித்தார்.
ராகுல் அதிரடி
கேஎல் ராகுல் களமிறங்கி, கோலியுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்தபின், ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ராகுல் அதிரடியாக ஆடி, ஜாம்பா பந்துவீச்சில் ஒரு சிக்ஸர், சங்கா பந்துவீச்சிலும், வார்ஸூயஸ் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் அடித்து வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றார்.
சதத்தை நோக்கி கோலி முன்னேறிய நிலையில் ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்சாகினார். கோலி 84 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல், கோலி கூட்டணி 47 ரன்கள் சேர்த்தனர்.
வெற்றியை எளிதாக்கிய ஹர்திக் பாண்டியா
பட மூலாதாரம், Getty Images
அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா, ராகுலுடன் சேர்ந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் இரு சிக்ஸர்களையும், தன்வீர் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரையும் விளாசிய ஹர்திக் பாண்டியா வெற்றியை நெருங்க வைத்தார்.
எல்லீஸ் வீசிய 48-வது ஓவரில் பவுண்டரி அடித்தநிலையில் அடுத்த பந்தில் மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து 28 ரன்னில் பாண்டியா ஆட்டமிழந்தார். சிறிய கேமியோ ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றி, வெற்றியை எளிதாக்கிவிட்டார்.
வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது, 12 பந்துகள் கைவசம் இருந்தன. மேக்ஸ்வெல் வீசிய 49-வது ஓவரில் ராகுல் சிக்ஸர் விளாசி வெற்றி பெற வைத்தார். இந்திய அணி 5வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு சென்றது.
48.1 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கே.எல்.ராகுல் 42 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு