ஐசிசி சாம்பியன்ஸ் டிராபித் தொடரின் இறுதிப் போட்டிக்கு 5-வது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று நடக்கும் நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதும். வரும் ஞாயிற்றுக்கிழமை துபையில் இறுதிப் போட்டி நடக்கிறது.
இந்திய அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்று அதில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2013-ம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இந்தியா-இலங்கை அணிகள் ஒரு முறை சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. மற்ற இருமுறையும் பைனலில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.
ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி 2017-ம் ஆண்டுக்குப் பின், இரு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை பைனல், 2024 டி2உலகக் கோப்பை பைனல் ஆகியவற்றுக்கு முன்னேறியுள்ளது. இதில் 2024 டி20 உலகக் கோப்பையை மட்டும்தான் இந்திய அணி வென்றுள்ளது. மற்ற 3 ஐசிசி போட்டிகளிலும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. 2013-ஆம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை இந்திய அணி வெல்லவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பின் அந்த பட்டத்தை வெல்ல இந்த வாய்ப்பை இந்திய அணி பயன்படுத்தும்.
துபையில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 264 ரன்களை அநாசயமாக சேஸ் செய்து இந்திய அணி அசத்தியது.
2011-ம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலிய அணியை ஐசிசி நாக்அவுட்டில் முதன் முறையாக இந்தியா தோற்கடித்துள்ளது. இந்திய அணியின் நேற்றைய அரையிறுதி வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியின் சிறப்பான செயல்பாடு காரணமாகக் கூறப்பட்டாலும் அதில் முக்கியமான 5 அம்சங்கள் உள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம்.
‘சேஸ் மாஸ்டர்’ கோலியின் ஆட்டம்
போட்டிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசுகையில் “ஒருநாள் போட்டிகளில் நான் பார்த்த வகையில் மிகச்சிறந்த சேஸ் மாஸ்டர் விராட் கோலி மட்டும்தான். இதில் விவாதத்துக்கு இடமே இல்லை, அவரின் புள்ளிவிவரங்களே அவரின் முக்கியத்துவத்தை சொல்லும்” என புகழாரம் சூட்டியிருந்தார்.
உண்மையில் விராட் கோலியின் நேற்றைய முத்தாய்ப்பான ஆட்டம் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து ஆகச்சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்திய கோலி நேற்றும் மிகுந்த பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 84 ரன்கள் சேர்த்தார்.
விராட் கோலியின் நேற்றைய ஆட்டத்தில் எந்தவிதமான பதற்றமோ, ரன் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தமோ, தவறான ஷாட்களை அடிக்க முயன்றதோ என ஏதும் இல்லை. 30 ரன்களில் இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்தவுடன் களமிறங்கிய கோலி, அணியின் சூழலை உணர்ந்து பொறுப்புடன் பேட் செய்தார்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றி, அவர்களுடன் “மைண்ட் கேமில்” விளையாடிய கோலி, பவுண்டரி, சிக்ஸர் என பெரிதாக அடிக்கவில்லை. ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஒரு ரன், 2 ரன் என ரன் சேர்த்தார்.
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து விமர்சித்தவர்களுக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதத்தையும், இந்த ஆட்டத்தில் சிறந்த இன்னிங்ஸையும் விளையாடி பதில் அளித்துள்ளார். இந்த போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களின் 45 பந்துகளை சந்தித்து 44 ரன்களை எடுத்துள்ளார். அதில் 13 டாட் பந்துகளாகும். அதுமட்டுமல்லாமல் கிடைக்கின்ற இடைவெளியில் ஒரு ரன், இரு ரன்களை அடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறவிட்டார். கோலி 26 சிங்கிள்களையும், 3 இரு ரன்களையும் சேர்த்தார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலி ஜொலித்தார்.
பட மூலாதாரம், Getty Images
தன்னுடைய ஆட்டம் குறித்து கோலி பேசுகையில் ” பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் போலத்தான் இந்த ஆட்டமும் இருந்தது. இந்த ஆட்டத்தில் சூழலை அறிந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும் என அறிந்து ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்தேன். அரையிறுதி, பைனல் போன்றவற்றில் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். நம் கைவசம் அதிகமான விக்கெட்டுகள் வைத்திருந்தாலே எதிரணியினர் தாங்களாகவே ரன்களை நமக்கு வழங்குவார்கள். எனக்கு சதம் அடிப்பது முக்கியமல்ல, பீல்டர்களுக்கு நடுவே ஒரு ரன், 2 ரன்கள் எடுப்பதில்தான் மகிழ்ச்சி. பாகிஸ்தானுக்கு எதிரான இன்னிங்ஸ், இந்த இன்னிங்ஸில் என்னுடைய ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
சர்வதேச அளவில் சேஸ் மாஸ்டர் என்று இன்றைய காலகட்டத்தில் விராட் கோலியை மட்டுமே அழைக்க முடியும். சேஸிங்கில் மட்டும் 8 ஆயிரம் ரன்களை கோலி கடந்து, சச்சினுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டி சேஸிங்ஸில் 64 ரன்கள் சராசரி வைத்து ஏபி டிவில்லியர்ஸுக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் கோலி அடித்த 51 சதங்களில் 28 சதங்கள் சேஸிங்கின் போது அடிக்கப்பட்டவை, சச்சின் அடித்ததைவிட 11 சதங்களை கூடுதலாக சேஸிங்ஸில் கோலி அடித்துள்ளார். சேஸிங்கில் கோலியின் ஆட்டம் இந்திய அணிக்கு பலமுறை வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
ஹெட்டை சாய்த்த வருண் சக்ரவர்த்தி
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணிக்கு எப்போதுமே தலைவலியாக இருப்பவர் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட். கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணிக்கு எதிராக 1000 ரன்களுக்குமேல் அடித்து குடைச்சல் கொடுத்து வந்தவர் டிராவிஸ் ஹெட். ஐசிசி டெஸ்ட் சாம்பியஸ்ஷிப், உலகக் கோப்பை, பார்டர்-கவாஸ்கர் தொடர் என அனைத்திலும் டிராவிஸ் ஹெட் ஆட்டம் இந்திய அணிக்கு தலைவலியாகவே இருந்தது.
இந்த ஆட்டத்திலும் தொடக்கத்தில் நிதானமாக ஆடி 11 பந்துகளில் ஒரு ரன் சேர்த்திருந்த ஹெட், அதன்பின் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கத் தொடங்கி, தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பினார். அக்ஸர், குல்தீப் பந்துவீசியும் டிராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. 9-வது ஓவரை வீச வருண் சக்கரவர்த்தி அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ஸ்மித் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை ஹெட்டிடம் வழங்கினார்.
சர்வதேச அரங்கில் வருண் பந்துவீச்சில் முதல் பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை இழந்தார். டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த இந்த தருணம் இந்திய அணி அடுத்த அடி எடுத்துவைக்க நம்பிக்கையை அளித்தது, பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கத்தை அளித்து உற்சாகத்துடன் பந்துவீசவைத்தது.
மீண்டு(ம்) வந்த ஷமி
பட மூலாதாரம், Getty Images
காயத்திலிருந்து ஓராண்டுக்குப்பின் அணிக்குத் திரும்பிய ஷமியின் பந்துவீச்சு குறித்த பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இங்கிலாந்து தொடரில் பெரிதாக பந்துவீசாத ஷமி, சாம்பியன்ஸ் டிராபியில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டார். ஒவ்வொரு போட்டியிலும் ஷமியின் பந்துவீச்சு மெருகேறிக் கொண்டே வந்துள்ளது.
துபை மைதானம் வேகப் பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்காது, அதிலும் முதல் 10 ஓவர்களுக்குப் பின் ஸ்விங் செய்ய சிரமமாக இருக்கும் நிலையில் 10 ஓவர்களுக்குள் ஷமி விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டார்.
இந்த ஆட்டத்திலும் தொடக்கத்திலேயே கனோலி விக்கெட், செட்டில் பேட்டர் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்ததுடன் நேதன் எல்லிஸ் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். அதிலும் முதல் இரு விக்கெட்டுகள், ஸ்மித்தை வெளியேற்றியது ஆகியவை ஷமியின் மாஸ்டர் கிளாஸ் பந்துவீச்சுக்கு உதாரணம். இந்தத் தொடரில் 4 போட்டிகளில் ஆடிய ஷமி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதில் வங்கதேசத்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
திருப்புமுனையை ஏற்படுத்திய பார்ட்னர்ஷிப்
இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் விரைவாகவே சுப்மன் கில், ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்ததும் தடுமாறியது. அப்போது 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ்-கோலி கூட்டணி ஆட்டத்தின் போக்கை மாற்றி, இந்திய அணியின் கையை ஓங்கச் செய்தனர். இருவரும் 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தி கோலியை ஆட்டமிழக்கச் செய்ய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அமைத்த வியூகங்களை கோலி தகர்த்தார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சை அவர் எளிதாக சமாளித்து ஆடினார். ஸ்ரேயாஸ் அய்யர் சுழற்பந்துவீச்சை ஆடுவதில் வல்லவர் என்பதால் அவரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்வதில் ஆஸ்திரேலிய அணியினர் தோல்வி அடைந்தனர். இருவரின் பேட்டிங்கால் இந்திய அணி சரிவில் இருந்து நிமிர்ந்தது.
ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த பின் அக்ஸர் படேலுடன் 44 ரன்கள், ராகுலுடன் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கோலி, இந்திய அணியின் இன்னிங்சை அருமையாக கட்டியெழுப்பினார். இந்த 3 பார்ட்னர்ஷிப்புகளும்தான் இந்த ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக திருப்பின.
பட மூலாதாரம், Getty Images
நிரூபித்த ராகுல்
சாம்பியன்ஸ் டிராபிக்கு ரிஷப் பந்தை ப்ளேயிங் லெவனில் களமிறக்கலாமா அல்லது கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பிங் செய்ய வைக்கலாமா என தொடக்கத்தில் இந்திய அணியில் பெரிய ஆலோசனை நடந்தது. ஆனால் ஐசிசி தொடர்களில் அனுபவம் மிகுந்த ராகுல் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கையை நேற்று கே.எல்.ராகுல் நிறைவேற்றிவிட்டார். தனக்கு வழங்கப்பட்ட பணியையும் செவ்வனே செய்து முடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி வந்த கே.எல்.ராகுல், நடுவரிசையில் ஆங்கர்ரோல் எடுத்து விளையாடவும் முடியும் என்பதை இந்தத் தொடரில் நிரூபித்துள்ளார், இந்திய அணியின் பேட்டிங்கை நடுவரிசையில் வலுவாகக் கொண்டு செல்வதில் முக்கிய பேட்டராக ராகுல் இருந்து வருகிறார். 84 ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை நேற்று ராகுல் கடந்தார், இதில் ஸ்ட்ரைக் ரேட் 88ஆக வைத்துள்ளார்.
இந்த ஆட்டத்திலும் 34 பந்துளில் 42 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்தார். ஐசிசி தொடர்களில் 24 போட்டிகளில் ஆடியுள்ள ராகுல், இதுவரை 919 ரன்களை குவித்து 61.26 சராசரி வைத்துள்ளார். ராகுலின் பொறுப்பான பேட்டிங், இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தது, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். ஹர்திக் பாண்டியா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் சேர்த்து சேஸிங்கில் இருந்த அழுத்தத்தை குறைத்தார்.