பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி வியாழக்கிழமை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற குல்தீப் யாதவை களமிறக்க வேண்டும் என்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன்.
தமிழ்நாடு அணிக்காக விளையாடியவரான வித்யுத் சிவராமகிருஷ்ணன், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார். இப்போது பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் செயல்பட்டுவருகிறார்.
குல்தீப் ஏன் தேவை?
ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் இந்திய அணி குல்தீப் யாதவை களமிறக்கவில்லை.
அதிக பேட்டிங் ஆப்ஷன்கள் வேண்டும் என்பதால் வாஷிங்டன் சுந்தர்தான் பிரதான ஸ்பின்னராக தேர்வு செய்யப்பட்டார். நித்திஷ் ரெட்டி, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் என 3 ஆல்ரவுண்டர்களோடு களமிறங்கியது இந்திய அணி.
ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற முன்னணி பௌலர் இல்லாத நிலையில், துருப்புச் சீட்டாக இருக்கக்கூடிய குல்தீப்பையும் சேர்க்காதது பரவலாக விமர்சிக்கப்பட்டது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய வித்யுத், “என்னை பொறுத்தவரை பிளேயிங் லெவனில் குல்தீப் இடம்பெற்றே தீரவேண்டும். பெரிய பௌண்டரிகள் கொண்ட ஆஸ்திரேலிய மைதானங்களில் குல்தீப் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்துவார். ஆடுகளங்கள் பெரிதாக சுழலுக்கு உதவாமல் போனாலும், இதுபோன்ற மைதானங்களில் அவரால் விக்கெட்டுகள் எடுக்க முடியும். துபை மைதானத்தில் கூட அவர் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைப் பார்த்தோம்” என்று கூறினார்.
மேலும், குல்தீப் இந்தப் போட்டியில் சேர்க்கப்படாதது தனக்கு ஆச்சர்யமளித்ததாகவும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
“மூன்று வகையான போட்டிகளிலும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் குல்தீப் ஜொலிக்கிறார். ஆனால் கடைசியில் அவரைத்தான் வெளியே அமரவைக்கிறார்கள். இப்போதெல்லாம் மிடில் ஓவர்களிலும் ரன்கள் எளிதாக அடிக்கப்படுகின்றன. 11-40 ஓவர்களில் 4 ஃபீல்டர்கள் மட்டுமே பௌண்டரி எல்லையில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படியிருக்கும்போது அந்த நேரத்தில் அட்டாகிங் பௌலிங் வீசும் ஒருவர் தேவை. அதற்கு குல்தீப் தான் மிகச் சிறந்த தேர்வாக இருப்பார்” என்கிறார் வித்யுத்.
முதல் போட்டியில் ஆடிய வீரர்களில் யாருக்குப் பதில் குல்தீப்பைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டதற்கு, ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து நிர்வாகம் அந்த முடிவை எடுக்கவேண்டும் என்று கூறினார்.
“பௌலரோ, ஆல்ரவுண்டரோ ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து யாரை வேண்டுமானாலும் வெளியேற்றலாம். ஆனால், குல்தீப் ஆடவேண்டும். அடிலெய்ட் ஓவல் மைதானம் எப்போதும் போல் இருக்கிறது என்றால் அங்கு 4 வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்கள் தேவைப்படாது. அர்ஷ்தீப் சிங், சிராஜ் என இரண்டு முழுநேர வேகப்பந்துவீச்சாளர்கள் போதும். நித்திஷ் ரெட்டியும் வேகப்பந்துவீச்சில் பங்களிப்பார் என்பதால் ஹர்ஷித் ராணாவுக்குப் பதில் குல்தீப்பைக் கொண்டுவரலாம்” என்றார் வித்யுத்.
ரோஹித் & கோலி செயல்பாடு வருத்தமளிக்கிறதா?
பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய பேட்டர்கள் தொடக்கம் முதலே தடுமாறினார்கள். 14வது ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
பெரிய எதிர்பார்ப்புக்குப் பின் மீண்டும் களமிறங்கிய ரோஹித் (8 ரன்கள்), கோலி (டக் அவுட்) ஆகியோரின் செயல்பாடு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.
இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 136 ரன்களே (மழையால் 36 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது) எடுத்தது.
இதுகுறித்துப் பேசிய வித்யுத், “இந்திய பேட்டிங் குறித்து நான் அதிகம் வருந்தமாட்டேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார்கள். அப்படியிருக்கும்போது வீரர்கள் தகவமைத்துக்கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். . அதுமட்டுமல்லாமல், டாஸ் இந்தியாவுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது. கடினமான பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பௌலர்களும் சிறப்பாக செயல்பட்டுவிட்டார்கள். அதனால் இதை அதிகம் அலசி விமர்சிக்கவேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
கோலி மற்றும் ரோஹித் பற்றிப் பேசிய அவர், “சமீபத்தில் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிடாத நிலையில் அவர்கள் இருவரும் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த சிறு அவகாசம் தேவைப்படும். அதனால் 3 போட்டிகள் முடிந்த பின்தான் நான் அவர்களின் செயல்பாடு குறித்து நான் யோசிப்பேன். இப்போது அதைப் பற்றி வருந்துவது அவசியமல்ல. இருவருமே ஃபிட்டாகத்தான் இருக்கிறார்கள். அதனால் நிச்சயம் அடுத்த போட்டியில் ஜொலிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்” என்றார்.
ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தேடிப்போய் அடித்து வழக்கமான முறையில் கோலி அவுட்டானதும் பரவலாகப் பேசப்பட்டது.
இதைக் கோலி தவிர்க்கவேண்டும் என்று பலர் சொல்லிக்கொண்டிருக்க, அப்படி முழுமையாகத் தவிர்க்க முடியாது என்று சொல்கிறார் வித்யுத்.
“டெஸ்ட் போட்டிகளில் அவர் அப்படி அவுட்டாகும்போது, பந்தை விடவேண்டும் என்று சொல்லலாம். ஆனால், ஒருநாள் போட்டிகளில் அப்படியில்லை. இங்கு ரன்ரேட் முக்கியம். நீங்கள் எல்லா பந்துகளையும் விட்டுக்கொண்டே இருக்க முடியாது. அடிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படவே செய்யும். அதனால் அதைத் தவிர்க்க முடியாது. அவர் நிச்சயம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அந்த ஷாட்டை ஆடியிருக்கலாம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், வெளியே செல்லும் பந்தை அவர் விட்டுவிடவேண்டும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” என்கிறார் வித்யுத்.
மேலும், அடிலெய்ட் ஓவல் கோலிக்கு பிடித்தமான ஆடுகளம் என்று சொல்லும் அவர், நிச்சயம் இந்தப் போட்டியில் அவர் கம்பேக் கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த மைதானத்தில் கடைசியாக ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலுமே சதமடித்திருக்கிறார் விராட்!
இந்திய பேட்டர்கள் என்ன செய்யவேண்டும்?
பெர்த் ஆடுகளத்தைப் போல் அடிலெய்ட் ஆடுகளம் பேட்டிங்குக்கு சவாலாக இருக்காது என்று சொல்லும் வித்யுத், இங்கு இந்திய பேட்ஸ்மேன்கள் நன்கு ரன் குவிக்க முடியும் என்று சொல்கிறார்.
“அடிலெய்ட் ஓவல் ஆடுகளம் பெர்த் ஆடுகளத்துக்கு நேரெதிரானது. ‘ஸ்டிரெய்ட் பௌண்டரிகள்’ பெரிதாக இருக்கும். அதேசமயம் ‘சைட் பௌண்டரிகள்’ கொஞ்சம் சிறிதாக இருக்கும். அதைப் பயன்படுத்தி ஆடும்போது பெரிய ஸ்கோர் எடுக்க முடியும். இந்தத் தோல்வியைப் பற்றி யோசிக்காமல் அவர்கள் தங்களின் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். சமீப காலங்களில் வெள்ளைப் பந்து போட்டிகளில் இந்திய அணி மிகப் பெரிய ஸ்கோர்களை பதிவு செய்திருக்கிறது. அது அடிலெய்டில் நடப்பதற்கான சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது” என்றார்.
அதேசமயம் இந்திய பேட்டர்களுக்கு மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜாஷ் ஹேசல்வுட் ரூபத்தில் பெரிய சவால் காத்திருக்கிறது என்பதையும் வலியுறுத்தினார் வித்யுத்.
“அவர்கள் இருவருமே முதல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினார்கள். வேகம், பௌன்ஸ், சீம் என அனைத்தையும் சரியாகப் பயன்படுத்தினார்கள். அதனால் இந்தப் போட்டியிலும் அவர்களின் சவால் தொடரும். அதனால் அவர்களின் முதல் ஸ்பெல்லில் அந்த 10-12 ஓவர்கள் இந்தியா கவனமாக எதிர்கொள்ளவேண்டும். அதிக ரன்கள் வராவிட்டாலும் விக்கெட்டுகள் விழாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அதன்பிறகு அனுபவம் குறைந்த பௌலர்களை இந்திய பேட்டர்கள் டார்கெட் செய்து விளையாடலாம். அது ஆஸ்திரேலியாவை ஆட்டத்தில் பின்னுக்குத் தள்ளும்” என்று கூறினார் வித்யுத்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா அப்படி சரியாகத் திட்டமிட்டு ஆடினால் பெரிய ஸ்கோரை பதிவு செய்ய முடியும் என்று கூறினார் வித்யுத் சிவராமகிருஷ்ணன். அப்படி பெரிய ஸ்கோரை பதிவு செய்வது ஆஸ்திரேலியாவின் அனுபவம் குறைந்த பேட்டர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.
முதல் போட்டியைப் போல் மழையின் தொந்தரவு இல்லாமல் இருந்தால் இந்தப் போட்டி இந்தியாவுக்கு சாதகமானதாக மாறும் என்பது அவரது கணிப்பாக இருக்கிறது.
“வழக்கமான அடிலெய்ட் ஆடுகளமாகவே இது இருந்து, முழுமையான 50 ஓவர்கள் ஆடப்பட்டால் அது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாக அமையும். அதேசமயம் மேகமூட்டம் இருந்தால், மழையின் தலையீடு இருந்தால் முதல் போட்டியைப் போல் பவர்பிளே சவால் இந்தியாவுக்கு வரும்” என்று கூறினார் வித்யுத்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த இரண்டாவது போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு