படக்குறிப்பு, இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இருவரும் கடைசியாக விளையாடினர்.கட்டுரை தகவல்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் களமிறங்கப் போவதால், ஆஸ்திரேலிய தொடர் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இவர்கள் இருவருமே கேப்டனாக அல்லாமல் வெறும் வீரர்களாக மட்டுமே களம் காணப்போகிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20ஐ போட்டிகளில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி பெர்த் நகரிலுள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று (அக்.19) நடக்கிறது. கடைசியாக 2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு விராட், ரோஹித் இருவரும் களத்தில் விளையாடுவதை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிட்டவில்லை. சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி, ரோஹித் இருவரும் இனி ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக பங்கேற்பார்கள்.
இந்நிலையில், இந்த 5 மாதங்களில் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அவர்கள் இருவருமே அணியில் இடம் பெற்றுள்ளனர். அதனால், இந்தத் தொடர் பற்றிய அனைத்து விளம்பரங்களும், செய்திகளும் ‘ரோ-கோ’ என இவர்களை முன்னிலைப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.
எதிர்காலத்தின் மீதான கேள்விகளும் பதில்களும்
அவர்கள் இருவரின் பங்கேற்பு பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதற்கான முக்கியக் காரணம், அவர்களின் எதிர்காலத்தின் மீது எழுந்திருக்கும் கேள்வி. இரண்டு வாரங்கள் முன்பு இந்திய ஒருநாள் அணிக்கும் சுப்மன் கில்லையே கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ நிர்வாகம்.
டெஸ்ட் அணியைப் போல் ஒருநாள் அணியையும் எதிர்காலத்தை நோக்கி எடுத்துச் செல்லத் திட்டமிடுகிறார்கள் என்று கூறப்பட்டது. மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதில் அக்ஷர் பட்டேல் சேர்க்கப்பட்டதும், இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஆடிடாத இளம் வீரர்கள் யஷஷ்வி ஜெய்ஸ்வால், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதும் அந்த வாதத்தை வலுப்படுத்தியது.
பட மூலாதாரம், Getty Images
எதிர்காலத்துக்கான அணியைக் கட்டமைப்பதுதான் இந்தியாவின் அணுகுமுறையெனில் சீனியர் வீரர்கள் கோலி, ரோஹித் இருவரின் நிலை என்ன என்றும், அவர்கள் அடுத்து நடக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார்களா என்றும் கேள்விகள் எழுந்தன. இந்தக் கேள்விகள் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடமும் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த கம்பீர், “50 ஓவர் உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. அதனால் அதைப் பற்றி யோசிக்காமல் நிகழ்காலத்தில் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இருவருமே திறமையான வீரர்கள். மீண்டும் அணிக்குள் வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் அவர்களின் அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அவர்கள் இருவருக்கும் இதுவொரு வெற்றிகரமான தொடராக இருக்கும் என நம்புவோம்.” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், 2027 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு விராட் கோலி லண்டனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தார் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். “நீண்ட நாள்களுக்குப் பிறகு விராட் கோலியின் வாழ்க்கையில் இப்போதுதான் இப்படியொரு பெரிய ஓய்வு கிடைத்திருக்கிறது. இந்தச் சமயத்திலும் அவர் லண்டனில் பயிற்சி செய்துகொண்டுதான் இருந்தார். வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று செஷன்கள் அவர் பயிற்சி செய்தார் என்று எனக்கு நன்கு தெரியும்.”
“இதுவே அவர் 2027 உலகக் கோப்பைக்குத் தயாராக இருக்கிறார் என்பதை சொல்லிவிடும். அவர் இருக்கிறாரெனில் நாம் கவலைப்படவே தேவையில்லை. ஏனெனில், நெருக்கடி மிகுந்த தருணங்களில் என்ன செய்யவேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அதை அவர் இன்னொருமுறை செய்வார்” என்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டி20 உலககோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா – விராட் கோலி
கடந்த காலத்தின் மீதான நம்பிக்கையும் பயமும்
ரோஹித், கோலி மீது அனைவரும் நம்பிக்கை வைக்கக் காரணம் ஆஸ்திரேலியாவில் அவர்களுடைய செயல்பாடு சிறப்பாக இருந்திருக்கிறது. இவர்கள் இருவருமே ஆஸ்திரேலிய மண்ணில் 50+ சராசரி வைத்திருக்கிறார்கள். தலா 5 ஒருநாள் சதங்களை விளாசியிருக்கிறார்கள்.
சவால் நிறைந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இவர்கள் இருவருமே தங்களின் தேர்ந்த ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பல இந்திய வீரர்கள் இந்த ஆடுகளங்களின் பௌன்ஸுக்கு தடுமாறும்போது, தன்னுடைய புல் ஷாட்கள் மூலம் எளிதாக அதை சமாளித்திருக்கிறார் ரோஹித். இந்தப் பெரிய மைதானங்களில் ஓடிஓடியே பல முக்கிய இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார் கோலி. ஒருநாள் போட்டிகளில் அவருடைய மிகச் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக வல்லுநர்கள் கருதும் 133 ரன்கள் (2012 முத்தரப்பு தொடரில் இலங்கைக்கு எதிராக) அடிக்கப்பட்டது ஆஸ்திரேலிய மண்ணில் தான்.
2016-ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடரில் இருவரின் செயல்பாடுமே அபாரமாக இருந்தது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் கோலி 2 அரைசதங்கள் & 2 சதங்கள் அடிக்க, 1 அரைசதமும் 2 பெரிய சதங்களும் விளாசி தொடர் நாயகன் விருதையும் வென்றார் ரோஹித் ஷர்மா. அதேபோல் மீண்டும் ஒருமுறை இருவரும் சேர்ந்து இந்தியாவுக்கு ஜொலிக்க வேண்டும் என்பதுதான் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இருவரின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் நல்லபடியாக அமையவில்லை
அதேசமயம் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இருவருக்கும் சிறப்பானதாக அமையவில்லை. 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராஃபி இவர்கள் இருவருக்குமே சவால் நிறைந்ததாக விளங்கியது.
முதல் போட்டியில் சதமடித்து நல்லபடியாக தொடரைத் தொடங்கியிருந்த கோலி, அடுத்த 4 போட்டிகளிலும் சோபிக்கத் தவறினார். கடைசி 4 போட்டிகளிலும் சேர்த்து (7 இன்னிங்ஸ்) அவர் எடுத்தது வெறும் 85 ரன்கள் தான்.
ஓப்பனிங், மிடில் ஆர்டர் என வெவ்வேறு இடங்களில் களமிறங்கிய கேப்டன் ரோஹித் ஷர்மா 3 போட்டிகளில் (5 இன்னிங்ஸ்) மொத்தமாக 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் அவரே தன்னை விலக்கிக் கொண்டார்.
கோலி, ரோஹித் தீவிர பயிற்சி
இப்படியாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த இரண்டு சீனியர் வீரர்களும் ஆஸ்திரேலியாவில் களமிறங்கப்போகிறார்கள். நீண்ட காலம் போட்டிகளில் பங்கேற்காத இவர்கள் இப்போது எப்படி தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்?
முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பெர்த்தின் ஆப்டஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. வியாழக்கிழமை இந்திய வீரர்களுக்கு விருப்ப பயிற்சி நாளாக அமைந்தது. இருந்தாலும், கோலி, ரோஹித் இருவருமே அன்றைய தினம் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்தப் பயிற்சிகளை மைதானத்தில் இருந்து பார்வையிட்ட பத்திரிகையாளர் டிரிஸ்டன் லாவலட், அதுபற்றி கிரிகின்ஃபோ தளத்தில் எழுதியிருக்கிறார். அதில், விராட் கோலி சுமார் 20 நிமிடங்கள் மிகவும் தீவிரமாக கேட்சிங் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறுயிருக்கிறார்.
பின்னர், வலைப்பயிற்சியின் போது 40 நிமிடங்கள் பேட்டிங் செய்த கோலி பெரும்பாலும் நித்திஷ், ராணாவை எதிர்கொண்டிருக்கிறார். இந்த மைதானத்தில் சவால் தரக்கூடிய ‘பேக் ஆஃப் தி லென்த்’ பந்துகளை அதிகம் சந்தித்து பயிற்சி எடுத்திருக்கிறார் கோலி. “சில கடினமான தருணங்கள் ஏற்பட்டபோதும் கோலி உறுதியாகவே காணப்பட்டார். கோலி ராணாவின் பந்துகளை எதிர்கொண்டவிதம் ஈர்ப்பதாக இருந்தது” என்றும் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் லாவலட்.
பட மூலாதாரம், Getty Images
அதேசமயம் ரோஹித் சர்மாவுக்கு வலைப்பயிற்சி சவாலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். “கோலி பந்துகளை தன் பேட்டின் நடுப்பகுதியில் அடித்த சத்தங்கள் ஒருபுறம் கேட்டுக்கொண்டிருக்க, ரோஹித் ஷர்மாவோ ஆரம்பத்தில் பந்தை சரியாக கணித்து அடிக்கத் தடுமாறினார். அவரது கால்கள் மிகவும் மந்தமாகவே நகர்ந்தன. கோலியை விட வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிட்ட ரோஹித்தின் நம்பிக்கை மெல்ல அதிகரித்தது. பல ஷாட்களை பலமாக அவர் அடித்ததைக் காண முடிந்தது” என்று எழுதியிருந்தார் லாவலட்.
ரோஹித் மற்றும் கோலியின் கம்பேக் குறித்து ஃபாக்ஸ் கிரிக்கெட்டுக்குப் பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “இவர்கள் இருவரும் வைட் பால் கிரிக்கெட்டில் பெரும் ஜாம்பவான்கள். நிச்சயம் தங்களை நிரூபிக்க நினைப்பார்கள். அவர்களின் சிறந்த கிரிக்கெட்டின் ஒரு பகுதியை ஆஸ்திரேலியாவில் ஆடியிருக்கிறார்கள். மற்ற ஃபார்மட்களிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இப்போது அந்த தாகம் அதிகமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.