பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 534 ரன்கள் என்னும் இமாலய இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
ஜெய்ஸ்வாலின் சாதனை சதம் (150), 491 நாட்களுக்குப் பின் கோலி அடித்த சதம் ஆகியவற்றால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
ஆட்டம் எப்படி செல்லும்?
ஆஸ்திரேலிய அணி 534 ரன்கள் மிகப்பெரிய இலக்கைத் துரத்தியது. ஆனால், பும்ராவின் துல்லியமான லைன் அண்ட் லென்த் பந்துவீச்சில் சிக்கி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியுள்ளது.
இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா அல்லது டிரா செய்யுமா அல்லது தோல்வியடையுமா என்பது மதில் மேல் பூனையாக இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்மித், கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்ஷ் ஆகிய 4 பேரில் ஏதேனும் இருவர் பெரிய இன்னிங்ஸ் ஆடினால்தான் தோல்வியிலிருந்து தப்பிக்க முடியும், குறைந்தபட்சம் டிரா செய்ய முடியும்.
பெர்த் ஆடுகளம் கடைசி இரு நாட்களில் அதிகமான பிளவுகளைக் கொண்டிருக்கும். பும்ரா, ஹர்ஷித் ராணா, சிராஜ் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கள் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். பிட்ச்சில் பிளவுகளை மறைக்க “ரோலர்” உருட்டி இறுக வைத்தால் மட்டுமே பேட்டிங்கிற்கு ஓரளவு சாதகமாக இருக்கும்.
இல்லாவிட்டால் நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் புதிய பந்தில் பும்ரா, சிராஜின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்வதும், பவுன்சர்களை சமாளிப்பதும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். கூக்கபுரா பந்து தேய்ந்து, மெதுவாக மாறும் வரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழக்காமல் பொறுமையாக பேட் செய்ய வேண்டும். ஒருவேளை விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழக்க நேர்ந்தால் நாளையே ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை.
தடுமாறாத பும்ரா – மிரளும் ஆஸி
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள்கூட பெர்த் பிட்ச்சில் சரியான லைன் அண்ட் லென்த்தை கண்டு பந்துவீச முடியாமல் கோட்டைவிட்டனர். ஆனால், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு, லைன் அண்ட் லென்த்தில் பட்டு பந்து சீறிப் பாய்வது, பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது, முதல் ஓவரை வீசிய பும்ரா நான்காவது பந்திலேயே நேதன் மெக்ஸ்வீனை கால்காப்பில் வாங்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார்.
அடுத்ததாக லபுஷேன் 10 பந்துகளைக்கூட எதிர்கொள்ளவில்லை, பும்ராவின் கத்திபோன்ற பந்தைவீச்சை எதிர்கொண்டு கால்காப்பில் வாங்கி வெளியேறினார். லபுஷேன் ஆட்டமிழந்த அந்தப் பந்தை எதிர்த்து நின்று பேட்டில் வாங்க முடியாத அளவுக்குத் துல்லியமான பிரமாஸ்திரமாக பும்ரா பந்துவீச்சு இருந்தது. இந்தப் பந்தை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாமல் லபுஷேன் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
நைட்வாட்ச் மேனாக களமிறங்கிய கம்மின்ஸின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தவே ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களின் உற்சாகத்தை, நம்பிக்கையை, ஆவேசத்தை ஒற்றை மனிதராக பும்ரா தனது பந்துவீச்சில் குறைத்துள்ளார்.
இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை எவ்வாறு ஆஸ்திரேலியா கொண்டு செல்லப் போகிறது என்பது விவாதத்துக்குரியது. ஆனால், இந்திய அணிக்கு அதன் திட்டம் தெளிவாக இருக்கிறது, வெற்றி ஒன்று மட்டும்தான் இலக்கு என்று விளையாடி வருகிறது.
கோலி 491 நாட்களுக்குப் பின் சதம்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 93 ரன்கள் மட்டுமே சேர்த்து கடுமையான விமர்சனத்தை கோலி எதிர்கொண்டார். ஆனால், அனைத்துக்கும் இந்த டெஸ்டில் கோலி சதம் அடித்து பதிலடி கொடுத்தார்.
டெஸ்ட் அரங்கில் 491 நாட்களுக்குப் பின், கோலி இன்று 143 பந்துகளில் சதம் அடித்தார். 70 ரன்களில் இருந்து 100 ரன்களை எட்ட கோலி 20 பந்துகளையே எடுத்துக்கொண்டார் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளை அடித்து கோலி சதத்தை நிறைவு செய்தார்.
சர்வதேச அரங்கில் கோலியின் 30வது டெஸ்ட் சதம், ஒட்டுமொத்தத்தில் 81வது சதமாகும். சச்சின், சுனில் கவாஸ்கர், டிராவிட்டுக்கு அடுத்தாற்போல் 30 சதங்களை கோலி எட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெர்த் மைதானத்தில் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார். 2018ஆம் ஆண்டு இதே மைதானத்தில் கோலி கடைசியாக சதம் அடித்தநிலையில் தொடர்ந்து இந்த முறையும் சதம் விளாசியுள்ளார்.
கடைசியாக 2023, ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக கோலி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன்பின் இப்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசியுள்ளார்.
இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி அடிக்கும் 10வது சதம். அதோடு, அந்நாட்டு மண்ணில் 7வது சதம். இதன் மூலம் சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக சச்சின் அடித்த 6 சதங்களை அடித்திருந்த நிலையில் கோலி அதை முறியடித்து 7வது சதத்தை பதிவு செய்தார்.
இந்திய அணி நேற்றைய 2வதுநாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 57 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்திருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது.
இன்றை 3வது நாள் ஆட்டத்தை ஜெய்ஸ்வால், ராகுல் தொடர்ந்தனர். 205 பந்துகளில் ஜெய்ஸ்வால் 122 ரன்கள் அடித்து, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான அறிமுக ஆட்டத்திலேயே சதத்தைப் பதிவு செய்தார்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய மண்ணில் தனது அறிமுக டெஸ்டில் சதத்தை, ஜெய்சிம்மா(1968), சுனில் கவாஸ்கர்(1968) ஆகிய இரண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் இப்போது மூன்றாவது பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.
வரலாற்று பார்ட்னர்ஷிப்
ராகுல், ஜெய்ஸ்வால் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு வெற்றிகரமாக 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே ராகுல் 77 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட் கீப்பர் கேரெயிடம் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய தொடக்க ஜோடி 38 ஆண்டுகளுக்குப் பின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பையும், 200 ரன்களுக்கு மேலும் குவித்த பெருமையை ஜெய்ஸ்வால், ராகுல் பெற்றனர். இதற்கு முன் கடந்த 1986ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் ஸ்ரீகாந்த், கவாஸ்கர் கூட்டணி தொடக்க ஜோடியாக 181 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி கடந்துள்ளனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சார்பில் தொடக்க ஜோடி மூன்றாவது முறையாக 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. இதற்கு முன் 1970ஆம் ஆண்டு ஓவலில் கவாஸ்கர், சேத்தன் சௌகான் ஜோடி 213 ரன்களும, 1936ஆம் ஆண்டு விஜய் மெர்ச்சன்ட்- முஸ்தாக் அலி ஜோடி 203 ரன்களும் சேர்த்திருந்தனர்.
குறிப்பாக கே.எல்.ராகுல் மட்டுமே தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தொடக்க ஜோடியில் ஒருவராக இருந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பேட்ஸ்மேனாக உள்ளார்.
லாட்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மாவுடன் இணைந்த 2021 ஆம் ஆண்டில் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப், 2021ஆம் ஆண்டில் செஞ்சூரியனில் மயங்க் அகர்வாலுடன் இணைந்து 117 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் ராகுல் அமைத்துள்ளார்.
அடுத்து களமிறங்கிய படிக்கல், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆனதால், படிக்கல் மிகுந்த கவனத்துடன் தேவையற்ற பந்துகளைத் தொடாமல் பேட் செய்தார். கால்களை நகர்த்தி நன்றாக ஆடியதால், எளிதாக டிபென்ட் செய்து ஆட்டத்தைக் கையாள முடிந்தது. மதிய உணவு இடைவேளையின் போது இந்திய அணி 275 ரன்கள் சேர்த்திருந்தது.
சாதனை நாயகன் ஜெய்ஸ்வால்
உணவு இடைவேளைக்குப் பின் சற்று வேகமாக ரன்களை குவித்த ஜெய்ஸ்வால், 275 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். இதில் 3 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும்.
ஜெய்ஸ்வால் 23 வயதைக் கடக்கும் முன்பே டெஸ்ட் போட்டியில் நான்காவது முறையாக 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். டான் பிராட்மேனின் ஐந்தாவது சதத்தை எட்ட ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் ஒரு சதம் தேவை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் தனது முதல் 4 சதங்களையும் 150 ரன்களாக மாற்றிய வகையில் இரண்டாவது வீரராக ஜெய்ஸ்வால் பெருமை பெற்றார். இதற்கு முன் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்திருந்தார்.
மேலும் சர்வதேச அளவில், முதல் இன்னிங்ஸில் டக்-அவுட்டில் ஆட்டமிழந்து, இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் குவித்த ஏழாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்திய அணி அளவில் நான்காவது இந்திய பேட்ஸ்மேன் (ஆப்தே, நயன் மோங்கியா, சர்ஃபிராஸ் கான்) என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஒரு காலண்டர் ஆண்டில் 150 ரன்களை 3 அல்லது அதற்கு அதிகமாக 3 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே வைத்திருந்தனர். சச்சின்(2002, 2004), சேவாக்(2004, 2008), கோலி(2016, 2017). இப்போது நான்காவது வீரராக அந்தப் பட்டியலில் ஜெய்ஸ்வாலும் சேர்ந்துள்ளார்.
அனுபவமற்ற பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கலை ஹேசல்வுட் எளிதாக வெளியேற்றினார். அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து பந்து வீசிய ஹேசல்வுட் ஆஃப் ஸ்டெம்பில் இருந்து சற்று விலக்கி வீசியபோது படிக்கல் அதை அடிக்க முற்பட்டு, ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்சானது. படிக்கல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலி களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். கோலியும் ஜெய்ஸ்வால் ஆட்டத்தைப் பார்த்துப் புகழ்ந்து சல்யூட் செய்து மைதானம் சென்றார்.
கோலி – ஜெய்ஸ்வால் பார்ட்னர்ஷிப் நீண்டநேரம் நிலைக்கவில்லை. மார்ஷ் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஸ்குயர்கட் ஷாட் அடித்தபோது அதை எட்ஜ் எடுத்து ஸ்மித்திடம் கேட்சானது. ஜெய்ஸ்வால் 161 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஜெய்ஸ்வால் பெவிலியன் திரும்பும்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
திடீர் சரிவு
ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு அடுத்தடுத்து 8 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. ரிஷப் பந்த்(1), ஜூரெல் (1) என விரைவாகச் சரிந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு வந்த வாஷிங்டன் சுந்தர், கோலியுடன் இணைந்து ஆடினார்.
முதல் இன்னிங்ஸில் சொதப்பிய சுந்தர், இந்த முறை கோலிக்கு அதிகமாக ஸ்ட்ரைக்கை வழங்கி, நிதானமாக பேட் செய்தார். விராட் கோலி 94 பந்துகளில் அரைசதம் அடித்து, கடந்த கால விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இருவரும் 6வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பொறுமையாக ஆடிய சுந்தர், ஸ்வீப் ஷாட் அடிக்கும் முயற்சியில் லயன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நிதிஷ் குமார், கோலியுடன் இணைந்தார். கோலி வேகமாக ரன் சேர்க்கத் தொடங்கினார். மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒவரில் அப்பர் கட் ஷாட் அடித்து கோலி சிக்சர் விளாசினார். கோலி அடித்த அப்பர் கட் ஷாட்டில் பவுண்டரி எல்லையில் அமர்ந்திருந்த பாதுகாவலரின் தலையில் பந்து பட்டு அவருக்குக் காயம் ஏற்பட்டது.
நிதிஷ் குமார், வந்ததில் இருந்து அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரி என விளாசினார். விராட் கோலி சதம் அடிப்பதற்காக கேப்டன் பும்ரா காத்திருந்தார். 70 ரன்களை எட்டிய கோலி, அடுத்த 30 ரன்களை 20 பந்துகளில் எட்டி 30வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.
கோலி, 100 ரன்களும், நிதிஷ்குமார் 38 ரன்களும் சேர்த்திருந்தபோது, டிக்ளேர் செய்வதாக கேப்டன் பும்ரா அறிவித்தார். 134.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் சேர்த்து இந்திய அணி டிக்ளேர் செய்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.