இந்தியா – ஆஸ்திரேலிய இடையே பிங்க் பந்தால், மின்னொளியில் நடத்தப்படும் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் வரும் 6-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணி 2 ஆண்டுகளுக்குப்பின் பகலிரவு டெஸ்ட் போட்டியில், பிங்க் பந்தில் விளையாடுகிறது.
பகலிரவு ஒருநாள், டி20 போட்டியில் இந்திய அணி பல ஆட்டங்களை விளையாடினாலும், அவற்றிலிருந்து பிங்க் பந்தில் நடத்தப்படும் இந்த பகலிரவு டெஸ்ட் முற்றிலும் வேறுபட்டது.
பகலிரவு டெஸ்டில் பயன்படுத்தப்படும் பிங்க் பந்து, டெஸ்ட் போட்டியில் வழக்கமாக பயன்படுத்தப்படும் சிவப்பு நிற கூக்கபுரா(எஸ்ஜி, டியூக்ஸ்) பந்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
பேட்டர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் முற்றிலும் புதிய அனுபவத்தை இந்த பிங்க் நிறப் பந்து வழங்கும். பேட்டர்களின் பேட்டிங் திறமைக்கு பெரிய சவாலாக அமையும்.
டெஸ்ட் போட்டி பாரம்பரியம் காக்க
கிரிக்கெட்டில் பாரம்பரியமாக நடத்தப்படும் டெஸ்ட் போட்டி என்றாலே பகலில் தொடங்கி மாலையில் முடிக்கப்படும் என்ற நிலை மாறி, பிற்பகலில் தொடங்கி இரவு வரை நடக்கும் பகலிரவு டெஸ்ட் முறை 2000-ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிக்குரிய இடத்தை டி20 போட்டி ஆக்கிரமிக்கத் தொடங்கியபின், டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களின் ஆர்வம் மெல்ல குறையத் தொடங்கியது.
டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், மாலை நேரத்தில் ரசிகர்களின் கூட்டத்தை கவர்ந்திழுக்கவும் பகலிரவு டெஸ்ட் நடத்தும் புதிய சிந்தனை உதயமானது.
பாரம்பரிய டெஸ்ட் போட்டிக்கு புத்துயிர் கொடுக்கவும், புதிய கோணத்தில் காலத்துக்கு ஏற்ப மாற்றவும் கொண்டுவரப்பட்டதே பகலிரவு டெஸ்ட் போட்டி.
இந்த டெஸ்ட் போட்டியின் முற்பகுதி சூரியஒளியிலும் பிற்பகுதி ஆட்டம் மின்னொளியில் நடக்கும்.
வழக்கமான சிவப்பு பந்துக்குப் பதிலாக எந்த நிறத்தில் பந்தைப் பயன்படுத்துவது என பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆரஞ்சு நிறம், மஞ்சள், பிங்க் ஆகிய வண்ணங்களில் பந்துகள் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டன.
2010-ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம்(ஈசிபி) ஒர் அறிவிப்பை வெளியிட்டது.
அதில் வங்கதேசத்துக்கு எதிராக 4 நாட்கள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி பகலிரவாக நடத்தப்பட்டு அதில் பிங்க் பந்து பயன்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் துர்ஹாம் மற்றும் வோர்ஷெஸ்டர்ஷையர் அணிகள் அதற்கு மறுத்துவிட்டன.
இதனிடையே 2010-ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கிந்தியத்தீவுகளில் பிங்க் பந்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.
கவுன்டிஅணிகளைச் சமாதானம் செய்தபின் 2010-ஆம் ஆண்டு “சாம்பியன்ஸ் கவுன்டி” போட்டித் தொடரை அபுதாபியில் மின்னொளியில் பிங்க் பந்தில் நடத்த ஈசிபி முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் கேன்டர்பரி கிளப்பும் கவுன்டி சாம்பியன்ஷிப்பை பிங்க் பந்தில் மின்னொளியில் நடத்தியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் 2010-11-ஆம் ஆண்டில் “குவாதி-இ-ஆசம்” கோப்பைத் தொடரை பகலிரவாக ஆரஞ்சு பந்தில் நடத்திப் பரிசோதித்து, இறுதிப்போட்டியை பிங்க் பந்தில் நடத்தியது.
2012ல் தென் ஆப்பிரிக்காவும், 2013-ஆம் ஆண்டில் வங்கதேச அணியும் பிங்க் பந்தில் விளையாடி பரிசோதனை செய்தன.
ஆஸ்திரேலியாவில் 2014-ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட ஷெப்பீல்ட் ஷீல்ட் போட்டிகள் அனைத்தும் பிங்க் நிற கூக்கபுரா பந்திலேயே நடத்தி பரிசோதிக்கப்பட்டது.
பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்தை பெரும்பாலான அணிகள் பயன்படுத்தியதைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதல் பகலிரவு டெஸ்ட்
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடிலெய்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடத்தப்பட்டது.
3 நாட்களில் முடிந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
பிங்க் பந்து பயன்பாட்டுக்காக பிட்ச்சில் கூடுதலாக புற்கள் வளர்க்கப்பட்ட நிலையில் பந்துக்கு லேசாக மட்டுமே தேய்ந்திருந்தது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த பிங்க் பந்து அமைந்திருந்தது. அதிகமான ஸ்விங், கூடுதல் வேகம், பவுன்ஸ் என வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யும் போட்டியாக பிங்க் டெஸ்ட் அமைந்திருந்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய கருத்துக் கணிப்பிலும் 81 சதவீத ரசிகர்கள் பிங்க் டெஸ்ட் போட்டியை ரசிப்பதாகவும், பிற்பகலில் தொடங்கும் டெஸ்டை இரவுவரைப் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு அடுத்தார் போல் ரசிகர்கள் கூட்டமும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இருந்தது.
2வது பிங்க் பந்து டெஸ்ட் போட்டி பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையே துபாயில் நடத்தப்பட்டது. பல அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியநிலையில் 4 ஆண்டுகளுக்குப்பின் 2019-ஆம் ஆண்டுதான் இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடியது.
2019-ஆம் ஆண்டு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக பிங்க் பந்தில் இந்திய அணி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.
22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள்
2015-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சர்வதேச அளவில் 22 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
அதில் ஆஸ்திரேலிய அணி 12 போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வென்று அசுரத்தனமாக இருக்கிறது. அடியெல்ட் மைதானத்தில்தான் அதிகபட்சமாக 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.
இதில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்திய நாடுகள்தான் 22 போட்டிகளில் 18 ஆட்டங்களில் வென்றுள்ளன, 4 போட்டிகளில்தான் விருந்தினராக வந்த அணிகள் வென்றுள்ளன.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா, துபாய் ஆகிய நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.
வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை அணிகள் தங்கள் நாடுகளில் இதுவரை பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தவில்லை.
ஏன் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மின்னொளியில் நடத்தப்படும்போது, இரு அணிகளின் வீரர்களும் வண்ண உடைகளில் விளையாடுவார்கள், அப்போது பந்து தெளிவாக பேட்டர்களுக்கு தெரிய வெள்ளைப்பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெள்ளை ஆடையயில் வீரர்கள் களமிறங்கி, வெள்ளைப் பந்து பயன்படுத்தப்பட்டால் பேட்டர்களால் பந்தை அடையாளம் காண்பதும், கவனிப்பதும் கடினம்.
மேலும் ஆடுகளத்தின் கறுப்பு அல்லது பிரவுன் நிறத்துக்கு எதிராக பந்து தெளிவாக தெரிய வேண்டும், பேட்டர்களுக்கு நன்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே “பிங்க் நிற” பந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்த பிங்க் நிறத்துக்காகவே பந்தில் சிறப்பு ரசாயனப் பூச்சு பூசப்படுகிறது.
வழக்கமான வெள்ளைப்பந்து விரைவில் நிறத்தை இழந்துவிடும்நிலையில் இந்த பிங்க் நிறம் எளிதாக தனது நிறத்தை இழக்காது, பந்தை தேய்ந்துபோகவிடாமல் ரசாயனப்பூச்சு பாதுகாக்கிறது.
ரசயான பூச்சால் பிங்க் பந்து கூடுதல் பளபளப்பாக இருப்பதால் வழக்கமான சிவப்பு பந்தோடு ஒப்பிடுகையில் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு ஸ்விங் செய்ய முடியும், ஸ்விங் அளவும் அதிகரிக்கும்.
அதாவது புதிய சிவப்பு பந்தில் குறைந்த ஓவர்கள்தான் ஸ்விங் செய்ய முடியும், ஆனால், பிங்க் பந்தில் 40 ஓவர்கள் வரை ஸ்விங் செய்ய முடியும்.
பிங்க் – சிவப்பு பந்து வேறுபாடு என்ன?
கிரிக்கெட்டில் விளையாடப்படும் பந்தின் எடை 156 கிராம் முதல் 162 கிராமுக்குள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பந்து நிராகரிக்கப்படும். இதற்காகவே கிரிக்கெட் பந்து தரமான தோலால் தயாரிக்கப்படுகிறது.
சிவப்பு பந்தைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தோலைவிட, பிங்க் பந்து தயாரிக்க அதிக தரமான தோல் பயன்படுத்தப்படுகிறது.
ஹாக்கி பந்து அளவுக்கு இணையாக, பிங்க் பந்து இருக்கும், இதன் விட்டம் 22.5 செ.மீ ஆகும். இதில் மொத்தம் 78 தையல்கள் போடப்பட்டிருக்கும்.
பிங்க் பந்தில் பந்துவீசும் போது, தொடக்க ஓவர்களில் வழக்கமான சிவப்பு பந்தைவிட 20 சதவீதம் கூடுதலாக ஸ்விங் ஆகும். இதற்கு பந்தின் மீது பூசப்பட்ட பிரத்தேய பிங்க் நிறமும், ரசாயன பாலிஷ்தான் காரணம்.
சிவப்பு பந்து வெள்ளை நூலால் தைக்கப்பட்டிருக்கும். ஆனால், பிங்க் பந்தில் கறுப்பு நூலால் தைக்கப்பட்டிருக்கும். பேட்டர்களுக்கு பந்து தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதற்காக கறுப்பு நூலால் தைக்கப்படுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்டில் பயன்படுத்தப்படும் கூக்கபுரா பிங்க் பந்தில் மொத்தம் 6 தையல்கள் போடப்பட்டிருக்கும். இரு தையல்கள் கையாலும்,4 தையல்கள் எந்திரத்திலும் போடப்பட்டிருக்கும். இதன் விலை சர்வதேச அளவில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம்வரை விற்கப்படுகிறது.
3 வகை பந்துகள்
சர்வதேச அளவில் கிரிக்கெட் பந்துகள் 3 வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் ‘எஸ்ஜி’ பந்துகளும் , இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், பாகிஸ்தானில் ‘டியூக்ஸ்’ பந்துகளும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ‘கூக்கபுரா’ பந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பந்திலும் அதன் தையல்கள் வேறுபட்டு இருக்கும். இதனால் பந்தின் வேகமும், உழைப்பும் மாறுபடும். அதாவது எஸ்ஜி(சான்ஸ்பேரல் க்ரீன்லாந்த்), டியூக்ஸ் பந்துகள் முற்றிலுமாக கையால் தைக்கப்படுபவை. ஆனால், கூக்கபுரா பந்துகள் எந்திரத்தாலும், கையாலும், சில நேரங்களில் முழுவதும் எந்திரத்தாலும் தைக்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏன் சாதகம்
பிங்க் பந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். பந்தின் மீது பூசப்பட்ட ஒருவகை ரசாயனத்தால் பந்தின் பளபளப்பு 40 ஓவர்கள்வரை தாக்குப்பிடிக்கும் என்பதால் நன்கு ஸ்விங் செய்யலாம், பந்தின் வேகமும் அதிகரிக்கும்.
பிங்க் பந்தில் இருக்கும் பாலிஷ் காரணமாக வழக்கமான சிவப்பு பந்தில் ஸ்விங் செய்வதைவிட கூடுதலாக 20 சதவீதம் ஸ்விங் ஆகும். அதாவது, பிங்க் பந்தை பந்துவீச்சாளர் வீசும்போது கையில் இருந்து பந்து வெளியேறுவதற்கும், தரையில் பிட்ச் ஆவதற்கும் இடையிலான வேகம் வழக்கமான சிவப்பு பந்தைவிட அதிகமாக இருக்கும்.
இதனால் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டர் தனது பேட்டிங்கின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் இல்லாவிட்டால் விக்கெட்டை இழக்க நேரிடும். இது பந்துவீச்சாளர்களுக்கு சற்று சாதகமாகும்.
ஆனால், சிவப்பு நிறப் பந்து மீது போடப்பட்ட வேக்ஸ்(மெழுகு) தேயும்வரை மட்டும் ஸ்விங் ஆகும், அது தேய்ந்தவுடன் ஸ்விங் தன்மை குறைந்தவிடும். ஆனால், 40 ஓவர்களுக்குப்பின் ரிவர்ஸ் ஸ்விங் செய்யலாம். ஆனால், பிங்க் பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய பந்து நன்றாகத் தேய வேண்டும்.
பிங்க் பந்தைத் தயாரிக்கப்படும் செயற்கை சணல் இரவு நேர பனிப்பொழிவின் போது ஈரப்பதத்தை உறிஞ்சிகொள்ளவும், பந்தை இறுக்கமாகப் பிடித்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசவும் பயன்படுத்தப்படுகிறது. 40 ஓவர்களுக்கு மேல் பந்து தேயும்போதுதான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பந்து ஓரளவுக்கு உதவும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு