சிட்னியில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 5வது மற்றும் கடைசி டெஸ்டின் முதல்நாளில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்திய பேட்டர்களில் ஒருவர்கூட அரைசதம் அடிக்காமல் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தனர்.
முதல் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 72.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்டநேர முடிவில் 3 ஓவர்களை சந்தித்த ஆஸ்திரேலிய அணி பும்ரா பந்துவீச்சில் கவாஜா விக்கெட்டை மட்டும் இழந்து 9 ரன்கள் சேர்த்துள்ளது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருக்கிறது.
கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
அவருக்குப் பதிலாக சுப்மான் கில் களமிறங்கியும், பெரிதாக எந்த ஸ்கோரும் அடிக்கவில்லை. ரோஹித் சர்மா இல்லாத நிலையில் அணிக்கு கேப்டனாக இருந்து பும்ரா வழிநடத்தி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஏன் வெற்றி முக்கியம்
இந்திய அணிக்கு இந்த சிட்னி டெஸ்ட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆஸ்திரேலிய அணிக்கும் வெற்றி அவசியமானது.
இந்திய அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழப்பது மட்டுமின்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 3வது முறையாக செல்லும் வாய்ப்பையும் இழக்க நேரிடும்.
ஒருவேளை இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான தொடரை 2-2 என வென்று கோப்பையைத் தக்க வைக்கும்.
அது மட்டுமின்றி இலங்கை-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தோற்கும்பட்சத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்பதால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி முக்கியம்.
கடைசி பந்தில் பும்ரா-கோன்ஸ்டாஸ் மோதல்
முதல்நாள் முடியும்போது கடைசி ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை வீசுவதற்காக பும்ரா சென்றபோது ஆஸ்திரேலிய பேட்டர் கோன்ஸ்டாஸ் ஏதோ கூற, பும்ராவும் பதிலுக்குப் பேசினார்.
இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதைப் பார்த்த நடுவர்கள் உடனடியாகத் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டனர். பும்ரா பந்தை எதிர்கொண்ட உஸ்மான் கவாஜா கடைசி பந்தில் ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கவாஜா விக்கெட்டை கடைசி பந்தில் வீழ்த்தியவுடன் கோன்ஸ்டாஸை நோக்கிச் சென்ற பும்ரா அவரைப் பார்த்தவாறு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார். கவாஜா விக்கெட்டை பும்ரா வீழ்த்தியதும் அரங்கில் இருந்த இந்திய ரசிகர்களும் ஆரவாரம் செய்து, கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.
ஒரு அரைசதம்கூட இல்லை
இந்திய அணியைப் பொருத்தவரை டாப்ஆர்டர் பேட்டர்கள் அனைவருமே இந்தத் தொடரில் பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
குறிப்பாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சுப்மான் கில் ஆகியோர் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஜெய்ஸ்வால் மட்டும் ஒரு சதம், அரைசதம் அடித்து ஆறுதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், மோசமான பேட்டிங் இந்த டெஸ்டிலும் தொடர்ந்தது. இந்திய அணியில் ஒரு பேட்டர்கூட அரைசதம் அடிக்கவில்லை, அதிகபட்சமாக ரிஷப் பந்த் 40 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்டர்கள் யாரும் 25 ரன்களை தாண்டவில்லை.
விராட் கோலியின் ‘வீக்னெஸ்’
விராட் கோலி முதல் பந்திலேயே கேட்சாகி கோல்டன் டக்-அவுட்டில் வெளியேறியிருக்க வேண்டும். ஆனால், ஸ்மித் பிடித்த கேட்சின்போது, பந்து தரையில் பட்ட பிறகு பிடித்ததாக மூன்றாவது நடுவர் தெரிவித்ததால் கோலியின் நிலை தப்பியது.
ஏற்கெனவே ஃபார்மின்றி தவித்து வரும் கோலியின் நிலைமை டக்-அவுட்டால் மேலும் மோசமாகியிருக்கும்.
இருப்பினும் கோலி தனது வழக்கமான “வீக்னஸ் பாயின்ட்” அவுட் சைட் ஆப்சைடில் போலந்த் வீசிய பந்தைத் தொட்டு 3வது ஸ்லிப்பில் வெஸ்ஸ்டரிடம் கேட்சாகி விக்கெட்டை இழந்தார்.
இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஏழு முறையும் விராட் கோலி அவுட் சைட் ஆப்சைடில் கேட்ச் கொடுத்து ஒரே மாதிரியாகவே ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈட்டி போல் இறங்கிய போலந்த் பந்துவீச்சு
ஆஸ்திரேலிய அணியின் தரப்பில் ஹேசல்வுட்டுக்கு பதிலாகச் சேர்க்கப்பட்ட போலந்த் இந்திய பேட்டிங் வரிசையை உருக்குலைத்து 20 ஓவர்கள் வீசி 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புதிய பந்திலும், பழைய பந்திலும் அதீத துல்லியம், லைன் அண்ட் லென்த்தில் வீசி இந்திய பேட்டர்களை திக்குமுக்காடச் செய்தார்.
அதிலும் சிட்னியில் இருக்கும் க்ரீன் பிட்ச் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமானது. இதைச் சரியாகப் பயன்படுத்திய போலந்த் தனது லென்த்தை மாற்றாமல் பந்து வீசியும், பவுன்சர்களை வீசியும் இந்திய பேட்டர்களுக்கு பெரிய தலைவலியாக மாறினார்.
புதிய பந்தில் மிட்ஷெல் ஸ்டார்ஸ், கம்மின்ஸ் ஆகியோர்கூட சில நேரங்களில் லென்த் தவறி வீசி ரன்களை வழங்கினர். ஆனால், போலந்த் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு ஈட்டி போல் இறங்கியது. இதனால் போலந்த் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழக்க நேர்ந்தது. விராட் கோலி(17), ரிஷப் பந்த்(40), நிதிஷ் ரெட்டி(0) ஆகிய முக்கிய விக்கெட்டுகளையும் போலந்த் சாய்த்தார்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்டர்கள் நிலைத்து நிற்க எந்த வாய்ப்பையும் தரவில்லை. எந்த பேட்டரையும் நீண்டநேரம் களத்தில் நிற்க அனுமதிக்காமல் தங்கள் உத்தியை மாற்றிக்கொண்டே இருந்தனர். போலந்த் டாப்-ஆர்டர் பேட்டர்கள் விக்கெட்டை குறிவைத்த நிலையில் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்தனர்.
ஆறுதல் அளித்த ரிஷப் பந்த் – ஜடேஜா
இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் பேட் செய்தனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப். ரிஷப் பந்த் 40 ரன்களிலும், ஜடேஜா 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடந்த இரு டெஸ்ட்களிலும் விரைவாக ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார் என்று கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இந்த முறை டிபென்ஸ் பேட்டிங்கை ரிஷப் பந்த் தீவிரமாகக் கையாண்டு, ஆக்ரோஷமான ஷாட்களை பெரிதாக ஆடவில்லை. வெப்ஸ்டர் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸரை மட்டுமே ரிஷப் பந்த் விளாசினார்.
போலந்த் வீசிய 56வது ஓவரின் 4வது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் நிதிஷ் ரெட்டி விக்கெட்டை இழக்க இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நிலைக்காத இந்திய பேட்டர்கள்
சிட்னி மைதானம் க்ரீன் டாப் கொண்டதால், புதிய பந்தில் ஸ்டார்க், கம்மின்ஸ், போலந்த் மூவரும் இந்திய பேட்டர்களை திணற வைத்தனர். ஜெய்ஸ்வால், ராகுல் இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். ஸ்டார்க் வீசிய 5வது ஓவரில் ராகுல் ஸ்குயர் லெக் திசையில் கோன்ஸ்டாஸிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
போலந்தின் அதீதமான துல்லியப் பந்துவீச்சில் சிக்கிய ஜெய்ஸ்வால் 10 ரன்கள் சேர்த்த நிலையில் மூன்றாவது ஸ்லிப்பில் நின்றிருந்த வெப்ஸ்டரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
ரோஹித் சர்மாவுக்கு பதிலாகக் களமிறக்கப்பட்ட சுப்மான் கில் நிதானமாக பேட் செய்து ரன்களை சேர்த்தார். ஆனால், நேதன் லேயனின் சுழற்பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கடந்த 4 இன்னிங்ஸ்களில் 3 முறை 20 ரன்களில் சுப்மான் கில் ஆட்டமிழந்துள்ளார், அவரால் அதிகபட்சமாக 31 ரன்களை கடக்க முடியவில்லை.
அடுத்து வந்த விராட் கோலி முதல் பந்திலேயே ஸ்லிப்பில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், பந்து தரையில் பட்டு வந்ததால் ஸ்மித் பிடித்த கேட்ச் அவுட் இல்லை என நடுவர் அறிவித்தார். இதனால், கோல்டன் டக்-அவுட்டில் இருந்த கோலி தப்பித்தார்.
இருப்பினும் பெரிதாக அவரால் இன்னிங்ஸை நகர்த்த முடியவில்லை. போலந்த் வீசிய அதே அவுட்சைட் ஆப் திசையில் சென்ற பந்தை தொட்டுப் பார்த்த கோலி, விக்கெட்டை இழக்க நேர்ந்தது. காலை தேநீர் இடைவேளைக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. ரிஷப் பந்த், ஜடேஜா ஓரளவுக்கு நிலைத்து ஆடினர், இவர்களின் கூட்டணியையும் போலந்த் உடைத்தார்.
கடந்த மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த நிதிஷ்குமார் ரெட்டி வந்த வேகத்தில் போலந்து வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து டக்-அவுட்டில் வெளியேறினார்.
கடைசி வரிசை பேட்டர்களை ஸ்டார்க், கம்மின்ஸ் இருவரும் ஆட்டமிழக்கச் செய்தனர். இதில் பும்ரா அதிரடியாக பேட் செய்து 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 22 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என இருந்தது. ஆனால், அடுத்த 28 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பும்ராவின் கடைசி நேர பங்களிப்பு, ரிஷப் பந்த், ஜடேஜாவின் பார்ட்னர்ஷிப் ஆகியவை இல்லாவிட்டால் இந்திய அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.