பட மூலாதாரம், Getty Images
ஓவல் மைதானத்தில் உள்ள ஜேஎம் ஃபின் ஸ்டாண்டின் உள்ளே, பெவிலியனுக்கு எதிரே, டெஸ்ட் போட்டி சிறப்பு கமெண்ட்ரி அறைக்கு செல்லும் ஒரு படிக்கட்டு உள்ளது. இது ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பரபரப்பான ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மைதானம் காலியாகிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த படிக்கட்டில் ஒரு இடது கால் ஷூ, உள்ளாடை, வலது கால் ஷூ ஒன்றும் இருந்தன.
அவற்றின் அளவை வைத்து பார்க்கும்போது அவை ஒரு ஆணுடையதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. தங்கள் உடைமைகளை அவர் எவ்வாறு தவறவிட்டார், அவற்றை இழந்ததை எப்போது உணர்ந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.
இருப்பினும், யாரோ ஒருவர் இந்த புகழ்பெற்ற மைதானத்தில் இருந்து செல்லும்போது, காலணிகள் மற்றும் உள்ளாடைகள் இல்லாமல் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இது, திங்கட்கிழமை காலை ஏற்கனவே நிகழ்ந்த உற்சாகமான களேபரத்துடன் முற்றிலும் பொருந்தியிருக்கும்.
அங்கு, நீங்கள் பார்க்க விரும்பும் மிக தீவிரமான, பரபரப்பான உணர்ச்சிகரமான விளையாட்டு 57 நிமிடங்கள் அரங்கேறியிருந்தது.
இருபத்தைந்து நாட்கள் தொடர்ந்த பரபரப்பான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதி நாளன்று, ஒரு ஒற்றைக் கை மனிதன் தெற்கு லண்டனின் 22 யார்டு புல்வெளியில் வலியுடன் ஓடுவதை பார்க்க முடிந்தது.
வாரத்தின் முதல் பணிநாளில் இங்கிலாந்தின் உற்பத்தித்திறன் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும், அல்லது மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் எத்தனை அலுவலகங்கள் முன்கூட்டியே மூடப்பட்டன என நினைத்துப் பார்க்க தோன்றுகிறது.
ஆனால் நான்காம் நாள் ஆட்டத்தின் மாலையில் ஆட்டம் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கும்போது, நிலைமை வித்தியாசமாக இருந்தது. மழை மற்றும் மங்கலான வெளிச்சம் காரணமாக வீரர்கள் டிரெசிங் ரூமிற்கு சென்றனர். பின்னர், மங்கலான மாலைப் பொழுது பளிச்சென மாறியபோதும், போட்டி மீண்டும் தொடரவில்லை.
ஞாயிறு மாலை நிகழ்வுகள் ஏற்படுத்திய எரிச்சல், திங்கள்கிழமை என்ன நடக்கும் என்ற ஆவலாக உருமாறியது. முப்பத்தைந்து ரன்கள் அல்லது நான்கு விக்கெட்டுகள்.
ஓவல் மைதானத்தின் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்திருந்தது, ஆனால் போட்டியை காண வருவதற்கு யாரேனும் அக்கறை காட்டுவார்களா? என்ற சந்தேகமும் இருந்தது.
ஆனால் ரசிகர்கள் வந்தார்கள், வந்து வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தை தொடர்ந்து சத்தத்தாலும், பரபரப்பான உற்சாகத்தாலும் நிரப்பினார்கள். 2005 ஆஷஸ் கிளாசிக் போட்டியில் இரண்டே பந்துகளுக்காக எட்ஜ்பாஸ்டன் மைதானம் நிரம்பியிருந்ததை இது நினைவூட்டியது.
பட மூலாதாரம், Getty Images
அன்று போலவே, இங்கு வந்தவர்களுக்கும் அற்புதமான விருந்து காத்திருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவை இரண்டு ரன்களில் இங்கிலாந்து வீழ்த்தியதற்குப் பிறகு, இந்தியாவின் இந்த ஆறு ரன்கள் வெற்றிதான் இந்த நாட்டில் இவ்வளவு நெருக்கமான வெற்றியாகும்.
போட்டித்தொடரின் இறுதி நாளன்று ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இந்திய அணி விளையாடத் தொடங்கியது, அங்கு, பாதுகாவலர்கள், சமையல்காரர், பேருந்து ஓட்டுநர் உட்பட அனைவருமே அந்தக் கூட்டத்தில் இருந்ததாகத் தோன்றியது.
பொருத்தமாக, இது சர்ரே அணிக்கு எதிராக எதிராக இங்கிலாந்து விளையாடுவது போல இருந்தது. ஜேமி ஓவர்டன் முதல் இரண்டு பந்துகளிலும் நான்கு ரன்கள் எடுத்தபோது, இங்கிலாந்துக்கு தேவையான ரன்களில் கால் பகுதியை கிட்டத்தட்ட எட்டியது. அதுதான் அன்று அவர்களுக்கு கிடைத்த சிறந்த தருணம்.
தனது முதல் ஐந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த ஜேமி ஸ்மித், சற்று சோர்வாக தெரிந்தார். அவர் இரண்டு பந்துகளை வீணாக்கினார், மூன்றாவது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு ஆட்டமிழந்தார். பாரத் ஆர்மியின் மேளம் “வி வில் ராக் யூ” இசையின் தாளத்தை அடித்து, அதிர வைத்தது. ஓவர்டன் காலில் பந்து பட்டபோது, நடுவர் குமார் தர்மசேனா, 2005-ல் ரூடி கோர்ட்ஸனின் மெதுவான விரல் அசைவை நினைவூட்டும் வகையில் தனது முடிவை அறிவித்தார்.
ஞாயிறு மாலை, வோக்ஸ் தனது முறிந்த தோள்பட்டையை கிரிக்கெட் வெள்ளை உடைகளுக்குள் திணித்துக்கொண்டு அரங்கிற்குள் வந்தார், இது நினைப்பதற்கே வலியைத் தருகிறது. டங்கின் ஸ்டம்புகள் பிரசித் கிருஷ்ணாவால் சிதறடிக்கப்பட்டபோது, பாதுகாப்பு பணியாளர்கள் ஆட்டம் முடிந்துவிட்டதாக நினைத்து மைதானத்திற்கு விரைந்தனர்.
ஆனால், கிரிக்கெட்டில் மிகவும் நல்ல மனிதரான வோக்ஸ்தான் மிகவும் தைரியமானவர் என்பது அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
பட மூலாதாரம், Getty Images
வோக்ஸ் தனது இடது கையில், கடந்த ஆண்டு காலமான தனது தந்தை ரோஜரின் நினைவாக பச்சை குத்தியிருந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஸ்வெட்டருக்குள் வோக்ஸின் காயமடைந்த இடது கை கட்டப்பட்டிருந்தது.
கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களிலும் உலகக் கோப்பை வென்றவராகவும், ஆஷஸ் கோப்பையை வென்றவராகவும், இங்கிலாந்தின் மைதானங்களில் சிறந்த ‘சீமர்’களில் ஒருவர் என்றும் கிரிக்கெட் சரித்திரத்தில் வோக்ஸ்க்கு சிறப்பான இடம் உண்டு.
அதிலும், தோள்பட்டை காயத்தால், ஒரு கையில் கட்டுப்போட்டிருந்த நிலையில், தனது அணியை காப்பாற்ற ஒற்றைக் கையால் பேட்டிங் செய்ய களமிறங்கிய மந்திரவாதி என்று கிரிக்கெட்டர் கிறிஸ் வோக்ஸ் போற்றப்படுவார்.
அடிபட்ட கையுடன் விக்கெட்டுகளுக்கு இடையில் நான்கு முறை ஓடுவது வோக்ஸுக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்கும் என்பதை அவர் ஓடும்போது, எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் அவர் தோள்பட்டை நடுங்கியதை வைத்து உணரமுடிகிறது. நல்லவேளையாக, ஒற்றை கையுடன் பந்துவீச்சை எதிர்கொள்ளும் நிலைமை அவருக்கு வரவில்லை.
ஸ்கோரை சமன் செய்து தொடரை வெல்லக்கூடிய சிக்ஸரை அடிக்க முயன்ற அட்கின்சன் லெக் சைடில் பெரிய ஷாட் ஒன்றை விளையாட முற்பட்டார். அந்த முயற்சி தோல்வியடைந்து, ஆஃப் ஸ்டம்பை பந்து பதம்பார்த்துவிட்டது.
பட மூலாதாரம், Getty Images
இளம் இந்திய அணியில் தளராத மனம் கொண்ட முகமது சிராஜ், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரது உத்வேகமான போர் குணத்தை எடுத்துச் செல்லும் திறன் சிராஜுக்கு இருந்தது.
இந்த டெஸ்டில் சிராஜ் பந்து வீசாமல் பெவிலியனில் இருந்த சந்தர்ப்பமே இருக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ராவின் நிழலில் விளையாடாதபோது, பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்படும் சிராஜின் சராசரி மற்றும் ஸ்ட்ரைக்-ரேட் இரண்டும் சிறப்பாக இருக்கும்.
இந்தத் தொடரில் இந்தியாவிற்கு கிடைத்த இரு வெற்றிகளும் பும்ரா விளையாடாத போட்டிகளில் இருந்தே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது வருத்தத்தை அளித்தாலும், தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது நியாயமான முடிவாகும்.
அந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவையோ அல்லது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் அடித்த சிக்ஸர்களில் ஏதேனும் ஒன்றையோ இங்கிலாந்து அணியினர் கேட்ச் செய்திருந்தால், நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது தொலைக்காட்சி தயாரிப்பு குழுவினரை பாடல் மூலம் வழிநடத்திய காட்சி, எந்த அணி இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை வெளிப்படையாகச் சொன்னது.
374 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, வெற்றிக்கு மிக நெருக்கமாக சென்றது மிகவும் பாராட்டத்தக்கது. இருந்தபோதிலும் ஒரு கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி தவறவிட்டது துரதிருஷ்டவசமானது.
தற்போதைய இங்கிலாந்து அணிக்கு இது இறுதி உள்நாட்டு டெஸ்ட் போட்டியாக இருக்கும் வாய்ப்புகளும் தென்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
மோசமான ஆஷஸ், கேப்டன் ஸ்டோக்ஸ் அல்லது பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் அணியில் இருந்து விலகிச் செல்ல வழிவகுக்கலாம்.
வோக்ஸின் வீரம் அனைவராலும் பாராட்டப்பட்டாலும், இது, அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய கடைசி போட்டியாக இருக்கலாம். மார்க் வுட்டுக்கு ஜனவரியில் 36 வயது. இங்கிலாந்தின் அடுத்த உள்நாட்டு டெஸ்ட் ஜூன் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் போட்டியின்போது சனிக்கிழமை காலை, இங்கிலாந்து பீல்டிங் செய்து, DRS மதிப்பாய்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தருணமும் இருந்தது. உரையாடலில் ஸ்மித், அட்கின்சன், சாக் கிராலி, ஜேக்கப் பெத்தேல், ஓலி போப் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் இருந்தனர். அடுத்த முறை இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது இங்கிலாந்தின் மூத்த வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான ஒரு காட்சியாக இதைப் பார்க்கலாம்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு