படக்குறிப்பு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்கட்டுரை தகவல்
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பான பயிற்சியின் போது சர்ரே மைதான பணியாளருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சர்ரே மைதானத்தின் தலைமை பணியாளர் லீ ஃபோர்டில் உடன் விரலை நீட்டி கம்பீர் பேசியது வலைப் பயிற்சி காணொளியில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியில் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது” மற்றும் “நீங்கள் ஒரு களப் பணியாளர் மட்டுமே, அதற்கு மேல் எதுவும் இல்லை” என உரக்க கூறியதை கேட்க முடிந்தது.
சம்பவம் நடந்த போது அங்கிருந்த இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது “டெஸ்ட் போட்டிகாக விக்கெட்டை (ஆடுகளத்தை) பார்வையிட பயிற்சியாளர்கள் சென்ற போது விலகிச் செல்லுமாறு கூறப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
“நாங்கள் விக்கெட் மீது நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மைதான பணியாளர்களில் ஒருவர் வந்து அங்கிருந்து இரண்டரை மீட்டர் தள்ளி நிற்குமாறு கூறினார். என்னுடைய கிரிக்கெட் கரியரில் யாரும் அப்படிச் சொல்லி நான் பார்த்ததில்லை” என கோடக் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சர்ரே மைதானப் பணியாளர்கள் ஆடுகளத்தை பார்வையிட இடையூறாக இருந்ததாகக் கூறுகிறார் கோடக்.
“அவர் தலைமை பயிற்சியாளரிடம் கயிற்றுக்கு வெளியே நின்று விக்கெட்டை(ஆடுகளத்தை) பாருங்கள் எனக் கூறினார். அவ்வாறு நின்று எப்படிப் பார்க்க முடியும் என எனக்குத் தெரியவில்லை.”
“ஒருவர் அவருடைய ஷூக்களை தேய்த்ததாகவோ அல்லது விக்கெட்டில் ஏதேனும் போட முயற்சித்தாகவோ அல்லது ஸ்பைக் அணிந்திருந்தாகவோ பொறுப்பாளர்கள் உணர்ந்தால் அவ்வாறு சொல்வதில் அர்த்தம் உள்ளது. ஆனால் அதைச் சொன்ன விதம் விசித்திரமானது” என்றார் கோடக்.
“மைதானத்தில் குறிப்பாக, ஸ்கொயர் மீது பொறுப்பாளர்கள் சற்று கூடுதல் கவனமாக இருப்பார்கள். தங்களிடம் பேசுகிறவர்கள் மிகவும் திறன்மிக்க, புத்திசாலியான நபர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “நீங்கள் மிகவும் புத்திசாலியான, அதிக திறன் மிக்க நபர்களுடன் வேலை செய்கிற போது, ஒருவர் ஆணவமாகப் பேசினால், நீங்கள் பதிலளிக்கலாம். ஆனால் இறுதியில் அது ஒரு கிரிக்கெட் மைதானமே. அது நீங்கள் தொடக் கூடாத, உடைந்துவிடக்கூடிய 200 ஆண்டுகள் பழைய கலைப்பொருள் அல்ல” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பயிற்சியில் இந்திய அணி (கோப்புப்படம்)
பயிற்சிக்கென குறிப்பாக எந்த வெளிப்புற களமும் இல்லாத நிலையில், அடுத்த டெஸ்டுக்கான ஆடுகளத்திற்கு அருகே வலை அமைக்கப்பட்ட 3 ஆடுகளங்களை இந்தியா பயிற்சிக்குப் பயன்படுத்தியது. இது தான் வழக்கமான நடைமுறைதான்.
பிபிசி ஸ்போர்ட் இதுகுறித்து சர்ரே நிர்வாகத்திடம் கருத்து பெற முயன்றபோது அவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் ஒரு காணொளி மூலம் இந்திய ஊடகங்களுக்குப் பதிலளித்த ஃபோர்டிஸ், “இதில் பேசுவதற்கு எதுவும் இல்லை. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இரு அணிகளுக்கும் இடையே காரசாரமான மற்றும் போட்டி மிகுந்த இந்தத் தொடரில் நிகழ்ந்த சம்பவங்களில் சமீபத்திய நிகழ்வு இது. ஓல்ட் ட்ராஃபோர்டில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சதமடிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியை முன்கூட்டியே டிரா செய்ய இந்தியா மறுத்துவிட்டது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் இங்கிலாந்து வீரர்கள் “கிரிக்கெட்டின் மாண்புக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள்” எனத் விமர்சித்திருந்தார். லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நேரத்தைக் கடத்தும் உத்திகளில் ஈடுபட்டதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நான்காவது டெஸ்டில் டிரா செய்வதில் சர்ச்சை
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மான்செஸ்டர் போட்டியைத் தொடர்ந்து அடுத்த போட்டிக்கு மூன்று நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில் இங்கிலாந்து தனது பந்துவீச்சில் மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டோக்ஸ் பல்வேறு காயங்களுடன் அவதிப்படுகிறார். ஜேமி ஓவர்டன், அட்கின்சன் மற்றும் ஜோஷ் டங் மாற்று வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், ப்ரைடன் கார்ஸ் இதுவரையிலான நான்கு போட்டிகளிலும் விளையாடி உள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பி, அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மறுபக்கம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். இந்திய அணி ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்த டெஸ்டில் ஆடுவாரா என்பது பற்றியும் முடிவெடுக்க வேண்டியுள்ளது. தொடருக்கு முன்பே அறிவிக்கப்பட்ட அதிகபட்சம் மூன்று போட்டிகளில் அவர் விளையாடிவிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கவுதம் கம்பீர் சர்ரே மைதான பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“ஓவல் டெஸ்டு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது”
பிபிசி ஸ்போர்ட்ஸின் தலைமை கிரிக்கெட் செய்தியாளர் ஸ்டீபன் ஷெமில்டின் பகுப்பாய்வு கீழே தரப்பட்டுள்ளது.
கவுதம் கம்பீர் மற்றும் லீ ஃபோர்டிஸ் இருவருமே வெளிப்படையான நபர்கள். எந்தவொரு கருத்து வேறுபாட்டிலும் இருவருமே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
இந்தத் தொடரின் அதீத உணர்வுகளுக்கு இது மற்றுமொரு உதாரணம். முதலில் லார்ட்ஸில் நிகழ்ந்த எரிச்சலூட்டும் நிகழ்வுகள், அடுத்து ஓல்ட் ட்ராஃபோர்டில் நிகழ்ந்த கைகுலுக்கல் சர்ச்சை, தற்போது இந்த சர்ச்சை நிகழ்வு.
ஓவலில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்டுக்கு முன்பே அழுத்தம் அதிகரித்துள்ளது. இது உச்சபட்ச விளையாட்டு. இங்கு ஒவ்வொரு முடிவும் முக்கியம். சம்மந்தப்பட்டவர்கள் அதன்மீது அக்கறையுடன் இருப்பார்கள். இதனால் சில சந்தப்ப்பங்களில் நிலைமை கைமீறிச் செல்வது ஒன்றும் புதிதல்ல.
தற்போது இருந்து ஓவல் பிட்ச் (ஆடுகளம்) வெளிச்சத்திலே இருக்கும். வரலாற்று ரீதியாக இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந்து வந்துள்ளது. தற்போது நிலைமை அவ்வாறு இல்லை.
அடுத்த டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் லியம் டாவ்சன் இடம் பெற மாட்டார் என்ற ஊகங்கள் உள்ளன. பென் ஸ்டோக்ஸ் தலைமையேற்ற பிறகு சுழற்பந்து வீச்சு ஸ்பெஷலிஸ்ட் இல்லாமல் இங்கிலாந்து அணி ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளது. இதன் மூலம் சுழற்பந்து வீச்சுக்கு அவர் தரும் முக்கியத்துவம் புரிய வரும்.
ஆனால், அது ஸ்டோக்ஸின் முடிவைப் பொருத்தது. ஓல்ட் ட்ராஃபோர்ட் டெஸ்டில் அதிக ஓவர்களை வீசி ஓய்ந்து போயுள்ள அவர் கடைசி டெஸ்டில் என்ன மாதிரியான பங்கு வகிப்பார் என்பது பற்றி கேள்விகள் உள்ளன.
ஸ்டோக்ஸ் 4 வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பார் என்றால் டாவ்சன் அணியில் இடம்பெறுவார். ஸ்டோக்ஸ் பந்துவீசுவதில் சிரமம் இருந்தால், இங்கிலாந்து அணிக்கு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படும் நிலை வரலாம். அவ்வாறான பட்சத்தில் டாவ்சன் அணியில் இடம் பெறுவது கடினம்.