• Fri. Aug 1st, 2025

24×7 Live News

Apdin News

IND Vs ENG: லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று கடைசி டெஸ்ட் – இந்திய அணிக்கு சாதகமான 3 அம்சங்கள்

Byadmin

Jul 31, 2025


IND Vs ENG

பட மூலாதாரம், Getty Images

கம்பீர்–ஓவல் மைதான பராமரிப்பாளர் மோதல், ஸ்டோக்ஸ் விலகல் என ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று கடைசி டெஸ்ட் தொடங்குகிறது.

பெரும்பான்மை வீரர்கள் ஃபார்மில் இல்லாத போதும், இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் 5 இடங்களில், 4 இந்திய வீரர்கள் உள்ளனர். அதிக விக்கெட்கள் கைப்பற்றவர்கள் பட்டியலில், முதல் 5 இடங்களில் 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய அணி சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியும், சில தவறான முடிவுகள், விவாதத்துக்குரிய அணித் தேர்வுகள் காரணமாக தொடரில் பின்தங்கியுள்ளது.

304 ரன்கள், 17 விக்கெட்கள் உடன் இருமுறை ஆட்ட நாயகன் விருதை வென்ற கேப்டன் ஸ்டோக்ஸ், தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வேலைப்பளு மேலாண்மையை கருத்தில்கொண்டு, அணி நிர்வாகம் பும்ராவுக்கு ஓய்வளித்திருப்பது, இந்திய அணியின் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சுப் படைக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

IND Vs ENG

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜாவுடன் கை குலுக்குகிறார்.

பென் ஸ்டோக்ஸ் காயம்

மான்செஸ்டர் டெஸ்டில் வலியை பொருட்படுத்தாமல் ஸ்டோக்ஸ் உயிரைக் கொடுத்து பந்துவீசியதே, காயத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த இரு டெஸ்ட்களில் 531 பந்துகளை வீசி, சோர்ந்துபோயிருக்கும் ஆர்ச்சருக்கும் சரியான லெங்த்தில் பந்தை தொடர்ச்சியாக வீசமுடியாமல் தடுமாறிய கார்ஸுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது; மாற்று வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்கள் டங், ஓவர்டன், அட்கின்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் மொத்தமாக 18 டெஸ்ட்கள் மட்டும் விளையாடியுள்ளனர். ஓவல் மைதானம், சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்காது என்பதால் டாசன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பெத்தேல் அணியில் இணைந்துள்ளார். ரூட்டுடன் சேர்ந்து பெத்தேல் பகுதிநேர சுழற்பந்து வீசுவார் என எதிர்பார்க்கலாம்.

By admin