பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது இந்திய அணி.
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி அரங்கில் நேற்று (பிப். 12) நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 356 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 357 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி, 34.2 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆட்டமிழந்து 142 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணி தொடர்ந்து 4வது ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகளிடம் இருமுறை என 2023 டிசம்பரிலிருந்து தொடர்ந்து தொடர்களை இங்கிலாந்து இழந்துள்ளது. 2023 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் 23 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இங்கிலாந்து அணி 16 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.
ஆமதாபாத் மைதானத்தில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் 2002ம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்ததே இந்திய அணியின் அதிகபட்சமாக இருந்தது.
இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்று ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி. அடுத்ததாக வரும் 19ம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கும் இந்திய அணி வலுவாகத் தயாராகியுள்ளது.
நான்காவது முறையாக ஒயிட்வாஷ்
இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் தோனி தலைமையிலான இந்திய அணி ஒயிட்வாஷ் செய்திருந்தது. அதன்பின், 14 ஆண்டுகளுக்குப்பின் இப்போது 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்துள்ளது.
இங்கிலாந்தை 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது என்பது, இரண்டாவது அதிகபட்ச ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். இங்கிலாந்துக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிக ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இருக்கிறது
இங்கிலாந்தை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது 4வது முறையாகும். இதற்கு முன்பு 1990 ஆம் ஆண்டு முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக முதல்முறையாக 2-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.
2008 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தொடரில் 5-0 என்ற கணக்கில் தோனி தலைமையில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்திருந்தது இந்திய அணி. இப்போது 4வது முறையாக ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மா கூறியது என்ன?
வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “எங்களுக்கு இன்னும் பெரிய சவால்கள் இருப்பது தெரியும். இந்தத் தொடரை சிறப்பாக முடித்துள்ளோம், எங்கள் மீது வீசப்பட்ட விமர்சனங்களுக்கும் பதில் அளித்துள்ளோம். இந்தத் தொடரில் நாங்கள் பெரிதாக தவறு செய்ததாக எதையும் பார்க்கவில்லை. சில விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் அதை அணி வீரர்களிடம் பேசி ஆலோசிப்போம்.
வீரர்களுக்கிடையே தகவல்தொடர்பு சிறப்பாக இருந்தால்தான் நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியும், திறமையைத் தவிர வேறு எதையும் ஆலோசிக்க மாட்டோம். சாம்பியன் அணி எப்போதுமே சிறப்பாக ஒவ்வொரு போட்டியிலும் ஆட வேண்டும் என விரும்புகிறோம். இந்த ஸ்கோர் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வீரர்களுக்கு ஏராளமான சுதந்திரம் அளித்துள்ளோம், விரும்பிய வழியில் விளையாடலாம். இதற்கு உலகக் கோப்பைதான் சிறந்த உதாரணம், அதே வழியைத் தொடர்வோம்” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
சுப்மான் கில் சாதனை சதம்
இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோர் குவிப்புக்கு முக்கியக் காரமணமாக இருந்தது துணை கேப்டன் சுப்மான் கில்தான். 102 பந்துகளில் 112 ரன்கள் குவித்து சுப்மான் கில் ஆட்டமிழந்தார். அது மட்டுமல்லாமல் ஆமதாபாத் மைதானத்தில் டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 ஃபார்மெட்டிலும் சதம் அடித்த ஒரே இந்திய பேட்டர் என்ற பெருமையை கில் பெற்றார். இதன் மூலம் ஒரே மைதானத்தில் அனைத்து ஃபார்மெட்டிலும் சதம் அடித்த 5-வது பேட்டர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார்.
இதற்கு முன் செஞ்சூரியனில் குயின்டன் டீ காக், கராச்சியில் பாபர் ஆஸம், அடிலெய்டில் டேவிட் வார்னர், ஜோகன்னஸ்பெர்கிக்ல டூ பிளசிஸ் ஆகியோர் 3 ஃபார்மெட்டிலும் சதம் அடித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
கில் நேற்று தனது 50-வது ஒருநாள் போட்டியில் விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் 50-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்டரும், உலகளவில் 13-வது பேட்டர் என்ற பெருமையை கில் பெற்றார். இதற்கு முன் முகமது கைஃப் தனது 50-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 95 ரன்கள் சேர்த்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. 50-வது போட்டிக்குள் கில் 7-வது சதத்தை அடித்துள்ளார், ஷிகர் தவான் தனது 50-வது போட்டிக்குள் 6 சதம் அடித்திருந்தார், அதை கில் முறியடித்துவிட்டார்.
அது மட்டுமல்லாமல், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2,500 ரன்களை 50 இன்னிங்ஸ்களில் கில் எட்டியுள்ளார். இதற்குமுன் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 51 இன்னிங்ஸ்களில்தான் இந்த மைல்கல்லை எட்டியிருந்த நிலையில் சுப்மான் கில் அவரை முறியடித்தார்.
இந்த ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் குவித்து 259 ரன்கள் சேர்த்த சுப்மான் கில் தொடர் நாயகனாகவும், கடைசி ஆட்டத்தில் சதம் அடித்தமையால் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
கடினமான இலக்கு
பட மூலாதாரம், Getty Images
357 ரன்களை சேஸ் செய்வது என்பது கடினமான இலக்குதான். ஓவருக்கு 7 ரன்ரேட்டுக்கு குறையாமல் கொண்டு சென்றால்தான் வெற்றிக்கு அருகே செல்ல முடியும் என்ற நிலையில்தான் களமிறங்கியது இங்கிலாந்து. அருமையான தொடக்கம் அளித்த சால்ட்(23), டக்கெட்(34) ஆட்டமிழந்த பின்பும்கூட 18-வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் என வலுவாகவே இங்கிலாந்து இருந்தது
ஆனால், நடுவரிசை பேட்டர்கள் திடீரென சரிந்ததே ஆட்டத்தின் சுவாரஸ்யத்தையே குலைத்தது. 126 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, அடுத்த 67 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை வேகமாக இழந்தது, கடைசி 8 விக்கெட்டுகளை 88 ரன்களில் இங்கிலாந்து பறிகொடுத்தது. கடைசி நேரத்தில் அட்கின்சன் 19 பந்துகளில் 38 ரன்களை அதிரடியாகச் சேர்த்து 200 ரன்களை கடக்க உதவினார்.
ஜடேஜா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், வருணும் தசைப்பிடிப்பால் பாதியிலேயே வெளியேறினார். குல்தீப், வாஷிங்டன், அர்ஷ்தீப் பந்துவீச்சுக்கு இங்கிலாந்து இரையானது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப், அக்ஸர், ஹர்சித் ராணா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணியில் அக்ஸர் படேல், குல்தீப் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 6 ரன்ரேட்டுக்கு மேல் வாரி வழங்கியுள்ளனர். இத்தனைக்கும் எந்த பந்துவீச்சாளரும் முழுமையான ஓவர்களை வீசவும் இல்லை.
இதுபோன்ற கட்டுக்கோப்பில்லாத பந்துவீச்சு ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் எடுபடாது என்ற நிலை உருவாகியுள்ளது. எதிரணி பேட்டர்களை அடிக்கவிடாமல் சரியான லைன் லென்த்தில் வீசும்போதுதான் ஆட்டத்தை தங்கள்போக்கில் திருப்பமுடியும், ஓவருக்கு 6 ரன் ரேட் விட்டுக்கொடுத்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசினால், அது பேட்டர்களுக்கு சேஸிங்கில் சுமையாகிவிடும்.
11-வது முறையாக கோலி
பட மூலாதாரம், Getty Images
இந்த ஒருநாள் தொடரில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த ஒன்று விராட் கோலியின் பேட்டிங் ஃபார்மாகும். ரோஹித் சர்மா சதம் அடித்து ஃபார்மை மீட்ட நிலையில் கோலியின் ஆட்டம் ஆவலை ஏற்படுத்தியிருந்தது. முதல் ஆட்டத்தில் உடல்நிலையால் விளையாடாத கோலி, 2வது போட்டியில் சொதப்பினார், ஆனால், இந்த ஆட்டத்தில் 50 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களில் அதில் ரஷித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலிக்கு அதில் ரஷித் வீசிய பந்து அற்புதமானது. அதில் ரஷித் பந்தை நன்கு உயரமாக டாஸ் செய்யவே பந்து பிட்ச் ஆனவுடன் லேசாக டர்ன் ஆகி ஆஃப் திசையில் திரும்பவே கோலி வழக்கம்போல் லெக் ஸ்பின்னுக்கு தனது விக்கெட்டை இழந்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதில் ரஷீத் பந்துவீச்சில் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 11வது முறையாக ஆட்டமிழந்துள்ளார். கோலியை 4 முறை டெஸ்ட் போட்டியிலும், 5 முறை ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியில் 2 முறை என 11வது முறையாக ஆட்டமிழக்க வைத்துள்ளார்.
கில்லின் பிரமாதமான சதம்
தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின் கோலியுடன், கில் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 116 ரன்கள் சேர்த்தனர். இருவரும் சீரான வேகத்தில் ரன்களைக் குவித்து கில் 51 பந்துகளிலும், கோலி 50 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர்.
கோலி ஆட்டமிழந்தபின், ஷ்ரேயாஸ் அய்யருடனும் கில் அமைத்த பார்ட்னர்ஷிப் ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. 3வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 96 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். சுப்மான் கில் 95 பந்துகளில் சதம் அடித்து 112 பந்துகளில் ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து நடுவரிசையில் ஸ்திரமான பேட்டர் என்பதை நிரூபித்தார். அதன்பின் களமிறங்கிய ஹர்திக்(17), அக்ஸர்(13), வாஷிங்டன்(14), ராணா(13) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நடுப்பகுதி ஓவர்களில் கவனம்
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீசுவதும், பேட் செய்வதும் ஒருநாள் போட்டிகளுக்கு மிகவும் முக்கியம். இந்தப் போட்டியில் 3 பவர்ப்ளேயிலும் இந்திய அணி 200 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி 236 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தத் தொடரைப் பொருத்தவரை இந்திய அணி நடுப்பகுதி ஓவர்களில் பேட்டிங்கில் ஓரளவு சமாளித்துவிட்டது ஷ்ரேயாஸ் அய்யர், அக்ஸர் படேல் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் ரன் சேர்த்துவிட்டனர். ஆனால், பும்ரா இல்லாத நிலையில் சாம்பியன்ஸ் டிராஃபிக்குச் செல்லும்போது நடுப்பகுதி ஓவர்களை வீசும் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
ஹர்சித் ராணா தவிர்த்து, ஹர்திக் பாண்டியா, வருண், அக்ஸர் , ஜடேஜா உள்ளனர். இதில், ஜடேஜா, ஹர்திக் மட்டுமே ஓரளவு அனுபவம் உடையவர்கள். ஆதலால், நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீசி எதிரணியை மடக்குவதும், பேட்டிங்கில் ரன் சேர்ப்பதும் முக்கியமானது.
இதைத்தான் கேப்டன் ரோஹித் சர்மாவும் 2வது ஆட்டத்தின் முடிவில் தெரிவித்திருந்தார். “தொடக்கம், டெத் ஓவர்கள்தான் முக்கியம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், நடுப்பகுதி ஓவர்கள்தான் ஆட்டத்தை நகர்த்துபவை, இதை சரியாகக் கையாண்டால் சிறப்பாக ஆட்டத்தைக் கொண்டு செல்லலாம்” என ரோஹித் சர்மா தெரிவி்த்திருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு