பட மூலாதாரம், Getty Images
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் ஞாயிற்றுக்கிழமை பலப்பரிட்சை நடத்துகின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் 2000ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை வென்று நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.
ஆனால், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் ஒருமுறை மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது, 3 முறை நியூசிலாந்து அணி வென்று வலிமையாக இருக்கிறது.
3 தோல்விகள்
2000ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பைனல், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி, 2021ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வென்று லட்சக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனங்களை நியூசிலாந்து நொறுங்கச் செய்தது.
ஆனால் 2023 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி பழிதீர்த்தது.
இந்நிலையில் மீண்டும் இரு அணிகளும் கோப்பைக்கான கோதாவில் இறங்கியுள்ளன. புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது இந்திய அணியைவிட நியூசிலாந்து அணி வலிமையாகவே இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் 119 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன, இதில் இந்திய அணி 60 வெற்றிகளும், நியூசிலாந்து 50 வெற்றிகளும் பெற்றுள்ளன. 7 போட்டிகளில் முடிவு ஏதும் எட்டவில்லை.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணியும் கடைசியாக 2013ம் ஆண்டுக்குப்பின் வெல்லவில்லை, ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப்பின் கோப்பையை வெல்லும் தாகத்தோடு இருக்கிறது, அதேபோல 25 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லவும் நியூசிலாந்து போராடும்.
பட மூலாதாரம், Getty Images
சளைத்தவர்கள் இல்லை
இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் சமவலிமையோடுதான் இருக்கின்றன. இரு அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்திய அணியில் ஷமி, அர்ஷ்தீப், ஹர்திக் இருப்பதைப் போல் ஹென்றி, ரூர்க், ஜேமிஸன் உள்ளன. சுழற்பந்துவீச்சில் வருண், ஜடேஜா, குல்தீப், அக்ஸர் இருப்பதைப் போல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா, பிரேஸ்வெல், டேரல் மிட்ஷெல் என வரிசையாக வீரர்கள் உள்ளனர். பேட்டிங்கிலும் இந்திய அணியைப்போல் 8-வது வீரர் வரை பேட்டர்களை வைத்துள்ளது நியூசிலாந்து அணி.
ஆதலால், ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், இந்திய அணியை எச்சரிக்கை செய்யும் விதத்தில், பந்துவீச்சு, பேட்டிங்கில் சவாலாக இருக்கக்கூடிய 5 வீரர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.
டேவன் கான்வே
பட மூலாதாரம், Getty Images
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை கான்வே இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஆனால், பைனல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டங்களில், அதிலும் இந்தியாவுக்கு எதிராக கான்வேயின் ஆட்டம் தனித்துவமாக இருக்கும். 4 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே கான்வே விளையாடியுள்ள நிலையில் இறுதி போட்டியில் களமிறங்கினால் இடதுகை பேட்டர் கான்வேயின் ஆட்டம் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.
இந்திய அணிக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடிய கான்வே ஒரு சதம் உள்பட 230 ரன்கள் சேர்த்துள்ளார், 92 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். தொடக்கத்திலேயே கான்வே விக்கெட்டை வீழ்த்துவது இந்திய அணிக்கு பாதுகாப்பானது, இல்லாவிட்டால் இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் பெரிய சவாலாக இருப்பார்.
ரச்சின் ரவீந்திராவின் விஸ்வரூபம்
பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து அணியின் நம்பிக்கை நாயகனாக ரவீந்திரா இருக்கிறார். இந்திய அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் பெரிய சவாலாக ரவீந்திரா இருப்பார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலயே ரவீந்திரா 2வது சதத்தை நிறைவு செய்து மிரட்டல் ஃபார்மில் இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடிய ரவீந்திராவின் பேட்டிங் நிச்சயம் சவாலாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபில் 3 போட்டிகளில் 226 ரன்கள் சேர்த்து 75 சராசரி வைத்துள்ளார்.
பந்துவீச்சிலும் நடுப்பகுதி ஓவர்களில் கட்டுக்கோப்பாக வீசக்கூடியவர். இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ரவீந்திரா, மெதுவாக பந்துவீசி, பேட்டர்களை திணறடிப்பார். இந்திய அணிக்கு எதிராக லீக் ஆட்டத்தில் 3 ரன்னில் ஹர்திக் பந்துவீச்சில் ரவீந்திரா ஆட்டமிழந்தார். ஆனால் இறுதிப் போட்டியில் ரவீந்திரா எளிதாக ஆட்டமிழக்கமாட்டார், கடும் சவலாக இருப்பார் என நம்பலாம்.
நடுப்பகுதியில் சான்ட்னர் சுழற்பந்துவீச்சு
மிட்ஷெல் சான்ட்னர் பந்துவீச்சை சமீபத்தில் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய பேட்டர்கள் மறந்திருக்கமாட்டார்கள். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் எவ்வாறு பந்துவீசுவது எனத் தெரிந்து வேகத்தைக் குறைத்து, பந்தை டாஸ் செய்து வீசுவதில் சிறந்தவர். நடுப்பகுதி ஓவர்களில் சான்ட்னர் பந்துவீச்சு இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கக்கூடும்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில்கூட சான்ட்னர் நடுப்பகுதியில் பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பந்துவீசுவதில் சான்ட்னர் வல்லவர். 4 போட்டிகளில் இதுவரை 7 விக்கெட்டுகளை சான்ட்னர் எடுத்துள்ளார். நடுவரிசையில் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், கோலி, ராகுல், அக்ஸர் ஆகியோருக்கு சான்ட்னர் பந்துவீச்சு சவாலாக இருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
வில்லியம்ஸன் பேட்டிங் ஃபார்ம்
முன்னாள் கேப்டன் வில்லியம்ஸன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கவலைதரக்கூடிய அம்சம்.
களத்தில் நங்கூரம் பாய்ச்சிவிட்டால் இவரின் விக்கெட்டை சாய்ப்பது கடினம். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த வில்லியம்ஸன், இந்திய அணி்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் 81 ரன்கள் சேர்த்து தனது ஃபார்மை நிருபித்துள்ளார்.
சுழற்பந்துவீச்சை நன்றாகக் கையாளக்கூடிய வில்லியம்ஸன், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருப்பார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வில்லியம்ஸன், ரவீந்திரா இருவரும் சேர்ந்து 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர், தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சையும் அனாசயமாகக் கையாண்டனர் என்பதால் இந்திய அணி எச்சரிக்கையாக இருக்கக்கூடிய வீரர்களில் வில்லியம்ஸனும் ஒருவர்.
பட மூலாதாரம், Getty Images
ஒருநாள் போட்டிகளில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக வில்லியம்ஸன் 2952 ரன்கள் சேர்த்து 47 சராசரியும், 86 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்து வலுவாக இருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிராக 30 ஒருநாள் போட்டிகளில் ஆடிய வில்லியம்ஸன் 1228 ரன்கள் சேர்த்துள்ளார், 45 சராசரி வைத்து 75 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். வில்லியம்ஸன் இரு அணிகளுக்கு எதிராக மட்டுமே ஆயிரம் ரன்களை ஒருநாள் போட்டியில் கடந்துள்ளார், அதில் ஒன்று இந்திய அணி மற்றொன்று பாகிஸ்தான். ஆதலால் இந்திய அணிக்கு எதிராக எப்போதுமே வில்லியம்ஸன் சிறப்பாக ஆடக்கூடியவர்.
ஹென்றியின் வேகப்பந்துவீச்சு
இந்திய அணியின் தொடக்க வரிசை பேட்டிங்கிற்கு பெரிய அச்சுறுத்தலை தரக்கூடிய பந்துவீச்சாளர் மாட் ஹென்றி. கடந்த போட்டியில் முதல் 10 ஓவர்களுக்குள்ளே கில், கோலி விக்கெட்டுகளை ஹென்றி வீழ்த்தினார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹென்றி இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 10 ஓவர்கள்வரை ஹென்றியின் பந்துவீச்சை இந்திய பேட்டர்கல் சமாளித்து ஆடிவிட்டால் அதன்பின் வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காது. இந்திய அணி சமாளித்துவிடும்.
ஆனால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் 7 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் ஹென்றி பாதியிலேயே வெளியேறினார். இன்னும் காயத்தால் முழுமையாக ஹென்றி குணமடையவில்லை என பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை ஹென்றி இறுதிப் போட்டியில் பந்துவீசவில்லை என்றால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். ஹென்றியைத் தவிர்த்துப் பார்த்தால் ஜேமிஸன், ரூர்க் ஆகியோரிடம் துல்லியம், லைன்லெத் இருக்காது என்பதால் எளிதாக இந்திய பந்துவீச்சாளர்கள் சமாளித்து விடுவார்கள்.
பட மூலாதாரம், Getty Images
மறக்க முடியாத தோல்விகள்
நியூசிலாந்திடம் ஐசிசி நாக்அவுட் போட்டிகளி்ல் இந்திய அணி அடைந்த அனைத்து தோல்விகளும் இன்னும் ஆறாத ரணமாக இருக்கின்றன.
குறிப்பாக 2000ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி வென்றுவிடும் என எதிர்பார்த்த நிலையில் கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றியவர் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ்.
இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி(113), சச்சின்(69) இருவரும் 149 ரன்கள் சேர்த்து முதல் விக்கெட்டுக்கு வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொடுத்தனர். ஆனால், அதன்பின் நடுவரிசை பேட்டர்கள் ராகுல் திராவிட்(28), யுவராஜ் சிங்(18), வினோத் காம்ப்ளி(1), ராபின்சிங்(13) என அனைவரும் சொதப்பியதால் 269ரன்கள்தான் சேர்க்க முடிந்தது.
265 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 24 ஓவர்களில் 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. அப்போது ஆல்ரவுண்டர்கள் கிறிஸ் கெயின்ஸ், கிறிஸ் ஹேரிஸ் இருவரும் அமைத்த 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.
இந்த பார்ட்னர்ஷிப்பை கடைசியில்தான் வெங்கடேஷ் பிரசாத் உடைத்தார். ஆனால், கிறிஸ் கெயின்ஸ் சதம் அடித்து 102 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். வெற்றியின் விளிம்புவரை இந்திய அணி சென்றும், கெயின்ஸ் விக்கெட்டை வீழ்த்த முடியாததால் கடைசி 2 பந்துகளில் தோல்வி அடைந்தது.
2019 தோனியின் ரன்அவுட்
2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இந்திய அணி அடைந்த தோல்வியும் மறக்க முடியாதது.
நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. 240 ரன்களை சேஸிங் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்விக்குழிக்குள் சென்றது.
ஆனால், ரவீந்திர ஜடேஜா, தோனி இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப் ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஜடேஜா 77 ரன்களில் ஆட்டமிழந்தாலும் தோனி களத்தில் இருப்பதால் வெற்றி குறித்த நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது. 216 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றியை நெருங்கியது,ஆனால், 48.3 ஓவரில் தோனியை மார்டின் கப்தில் செய்த ரன்அவுட் ஆட்டத்தையே திருப்பிப் போட்டு வெற்றி நியூசிலாந்து வசமாகியது.
2019ம் ஆண்டு அணியில் இருந்த வில்லியம்ஸன், டாம் லேதம், ஹென்றி, சான்ட்னர் ஆகிய 4 பேருமே சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி
2021ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது நியூசிலாந்து அணிதான். அந்த அணியில் இருந்த பலர் சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடுகிறார்கள். டாம் லேதம், டேவன் கான்வே, ஜேமிஸன், வில்லியம்ஸன் ஆகியோர் இப்போது விளையாடுகிறார்கள்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய பேட்டர்களை வீழ்த்தியதில் ஜேமிஸன் பந்துவீச்சு முக்கியப் பங்கு விகித்தது. இங்கிலாந்து காலநிலை, சவுத்தாம்டன் சூழல், வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற ஆடுகளம் ஆகியவை நியூசிலாந்துக்கு சாதகமா அமைந்தது. ஜேமிஸ் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.
அந்த போட்டியில் டேவன் கான்வே, வில்லியம்ஸன் பேட்டிங், பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மற்ற பேட்டர்களை விரைவாக வெளியேற்றியநிலையில் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய நீண்டநேரம் எடுத்தனர். 2வது இன்னிங்ஸில் வில்லியம்ஸன் அரைசதம் வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றும் கிடைத்த வாய்ப்பை நியூசிலாந்திடம் பறிகொடுத்தது இந்திய அணி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு