சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்யும் நியூசிலாந்து அணி அதிரடி தொடக்கம் கண்டுள்ளது. அந்த அணிக்காக ரச்சின் ரவீந்திரா – வில் யங் ஜோடி தொடக்க வீரர்களாக களம் கண்டது. முதல் ஓவரை முழுமையாக எதிர்கொண்ட வில் யங் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்தார்.
அடுத்த இரு ஓவர்களில் இருவரும் நிதானம் காட்ட நியூசிலாந்து அணி முதல் 3 ஓவர்களில் 10 ரன்களை எடுத்திருந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய நான்காவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா அதிரடியைத் தொடங்கினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை சிக்சருக்கு விளாசிய அவர், கடைசி இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஷமி வீசிய அடுத்த ஓவரிலும் ரச்சின் 2 பவுண்டரிகளை விளாசினார்.
இதையடுத்து இந்திய அணி அடுத்த ஓவரிலேயே மாயாஜால பந்துவீச்சாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தியை உள்ளே கொண்டு வந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட அவர், இந்த ஆட்டத்தின் முதல் ஓவரில் 3 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்தார்.
பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து 12-வது முறையாக டாஸை இழந்துள்ளார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாராவை அவர் சமன் செய்திருப்பதாக இஎஸ்பிஎன் இணையதள புள்ளிவிவரம் தெரிக்கிறது.
நியூசிலாந்து அணியில் ஒரே மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் ஹென்றிக்குப் பதிலாக நேதன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணி களமிறங்குகிறது.
மொத்தம் 25 ஆயிரம் இருக்கைகள் கொண்ட துபை மைதானம் முழுமையாக நிரம்பி, ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது. இந்திய மதிப்பில் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரையிலான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய 40 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் 2000-வது ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்குப் பின்னர் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. அந்த போட்டியில் நியூசிலாந்து வென்று கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்தியா இம்முறை சாதிக்குமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்தியா கடந்து வந்த பாதை
நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்திய அணி தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போடுகிறது. இதுவரையிலான ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய வலுவான அணிகளுடன், இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள நியூசிலாந்து அணியையும் இந்தியா வென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான அந்த லீக் ஆட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து கடந்து வந்த பாதை
நியூசிலாந்தைப் பொருத்தவரை, நடப்புத் தொடரில் இந்தியாவிடம் மட்டும் தோல்வி கண்டுள்ளது. லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு அணிகளையும் அந்த அணி வென்றது. அரையிறுதியில் வலுவான தென் ஆப்ரிக்க அணியை தோற்கடித்து நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.