நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி 208 ரன்கள் அடிக்க, அதை 15.2 ஓவர்களிலேயே அடைந்து வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் மிக விரைவாக 200-க்கும் மேலாக இலக்கை அடைந்து பாகிஸ்தான் சாதனையை இந்தியா தகர்த்துள்ளது.
இந்த சேஸிங்கில் இரண்டு இந்திய பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்தத் தொடர் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள இஷான் கிஷன், 32 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அதேபோல், கடந்த சில மாதங்களாகவே பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் தவித்த இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் 23 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அவர் அடித்த முதல் அரைசதம் இது.
அதேசமயம், நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜாக் ஃபோல்க்ஸ் தான் பந்துவீசிய மூன்று ஓவர்களில் 67 ரன்கள் விட்டுக்கொடுத்தது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. அவரது எகானமி: 22.33 ஆகும். கிரிக்பஸ் தரவுகளின்படி, டி20 போட்டிகளில் ஒரு முழுநேர ஐசிசி உறுப்பினர் அணியைச் சேர்ந்த பௌலர் ஒருவரின் (குறைந்தபட்சம் 12 பந்துகள் வீசியவர்கள்) இரண்டாவது மோசமான எகானமி இது.
ஆட்ட நாயகன் விருது வென்ற இஷான் கிஷனின் செயல்பாடு, மூன்றாவது விக்கெட்டுக்கு இஷான் – சூர்யகுமார் இருவரும் 122 ரன்கள் எடுத்தது, ஃபோல்க்ஸின் மோசமான ஸ்பெல் போன்றவை இந்தப் போட்டியின் முடிவில் தாக்கம் ஏற்படுத்தின. இது தவிர்த்து, இந்தியா பேட்டிங் செய்தபோது, பவர்பிளேவில் மிட்செல் சான்ட்னர், சூர்யகுமார் யாதவ் என இரண்டு கேப்டன்களும் ஆட்டத்தை அணுகிய விதமுமே இந்தப் போட்டியில் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது.
சான்ட்னர் எடுத்த முடிவும் அதன் விளைவும்
209 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி முதல் 7 பந்துகளிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இரண்டு ஓவர்கள் முடிந்தபோது ஸ்கோர் போர்டு 8/2 எனக் காட்டியது. 12 பந்துகளில் 9 டாட் பால்கள். சூர்யகுமார் யாதவ் 4 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். இஷான் கிஷன் 2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். முதல் ஓவரை வீசிய மேட் ஹென்றி, இரண்டாவது ஓவரை வீசிய ஜேக்கப் டஃபி இருவருமே தலா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
பொதுவாக, இதுபோன்ற சூழ்நிலைகளில் பந்துவீசும் அணியின் கேப்டன்கள், எதிரணி பேட்டர்களை ‘அட்டாக்’ செய்யவே நினைப்பார்கள். ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் அந்த அனியை இன்னொரு விக்கெட் வீழ்த்தி இன்னும் நெருக்கடிக்குள்ளாக்க நினைப்பார்கள். அதுவும் 23 இன்னிங்ஸ்களாக அரைசதம் அடிக்காத ஒரு வீரரும், அணியில் நிலையான இடம் பிடிக்கவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கும் ஒரு வீரரும் களத்தில் இருக்கும்போது, ‘அட்டாகிங் பௌலிங்’ மூலம் அவர்களுக்கு பன்மடங்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க முடியும். அதற்காக விக்கெட் வீழ்த்திய பௌலர்களுக்கு கூடுதல் ஓவர்கள் கொடுப்பார்கள்.
உதாரணமாக ஜனவரி 22-ல் நடந்த டபிள்யூபிஎல் ஆட்டத்தில், யுபி வாரியர்ஸ் வீராங்கனை கிராந்தி கவுட் பவர்பிளேவிலேயே 2 குஜராத் ஜெயின்ட்ஸ் விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஏற்கெனவே மூன்று ஓவர்கள் வீசியிருந்த அவருக்கு நான்காவது ஓவரையும் அப்போதே கொடுத்தார் மெக் லேனிங். முதல் 7 ஓவர்களில் அவருடைய முழு ஸ்பெல்லும் முடிந்திருந்தது.
அதேபோல், ஜனவரி 20 நடந்த போட்டியில் மரிசான் காப்-ஐ டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அப்படித்தான் பயன்படுத்தினார். பவர்பிளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் 23/2 என்ற நிலையில் இருக்க, ஏழாவது ஓவரில் மீண்டும் காப்-ஐ பயன்படுத்தி அவர் ஸ்பெல்லை முடித்தார் ஜெமிமா.
சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான கேப்டன்கள் இதுபோன்ற முடிவையே எடுப்பார்கள். ஒரேயடியாக 4 ஓவர்களையும் கூட சில சமயம் பயன்படுத்திவிடுவார்கள். ஆனால், நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் மேட் ஹென்றிக்கு தொடர்ச்சியாக இரண்டு ஓவர்கள் கூடக் கொடுக்கவில்லை. யாரும் எதிர்பாராத வகையில், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீச ஃபோக்ஸ் கையில் பந்தைக் கொடுத்தார் சான்ட்னர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மிட்செல் சான்ட்னர் பௌலர்களைப் பயன்படுத்திய விதம் குறித்து பலரும் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்
ஸ்டம்புக்கு மிகவும் அருகில் வந்து பந்துவீசக்கூடியவரான ஃபோக்ஸ், முதல் பந்தை வீசும்போதே தன் பக்கம் இருந்த ஸ்டம்பைத் தட்டிவிட்டார். கிரிக்கெட் விதிப்படி பௌலர் பந்துவீசும்போது அவர் பக்கமிருக்கும் ஸ்டம்பைத் தட்டிவிட்டால் அது நோ பால். இஷான் அந்தப் பந்தை பவுண்டரிக்கும் அனுப்பினார். அடுத்த ஃப்ரீ ஹிட் பந்தில் ஃபோக்ஸ் இரண்டு வைட்கள் வேறு வீசினார். ஆக, ஒரு பந்து கூட வீசாமல் 7 ரன்கள் எடுக்கப்பட்டிருந்தது.
மீண்டும் ஃப்ரீ ஹிட் பந்து வீசப்பட்டதால், எந்த அழுத்தமும் இல்லாமல் இஷான் இன்னொரு பவுண்டரி அடித்தார். இப்படியாக ஒரே பந்தில் 11 ரன்கள் கொடுத்திருந்தார் ஃபோக்ஸ். அது அவர் மீது நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த ஓவரில் மேலும் ஒரு பவுண்டரியும், ஒரு சிக்ஸரும் அடிக்கப்பட, மொத்தம் 24 ரன்கள் கிடைத்தன. அந்த ஓவர் தொடங்குவதற்கு முன் 8/2 என் இருந்த இந்தியா, ஓவர் முடியும்போது 32/2 என்ற நிலைக்கு வந்தது. ரன்ரேட் 10.67 என உயர்ந்திருந்தது. அந்த ஓவர் இஷான் கிஷனின் நம்பிக்கையயும் பன்மடங்கு அதிகப்படுத்தியது.
ஹென்றியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையா?
பவர்பிளேவில் மிகச் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட் வீழ்த்திக் கொடுக்கக் கூடியவர் மேட் ஹென்றி. உலகின் சிறந்த ‘நியூ பால்’ பௌலர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். அவர், முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்திருந்த நிலையில், அடுத்த ஓவரை அவருக்குக் கொடுத்திருந்தால் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அது இந்தியாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், சான்ட்னர் அப்படிப் பயன்படுத்தத் தவறிவிட்டார்.
மூன்றாவது ஓவரில் ஹென்றிக்குக் கொடுக்காவிட்டாலும், ஐந்தாவது ஓவருக்கு ஹென்றியை மீண்டும் அழைத்து வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், ஐந்தாவது ஓவரில் தானே பந்துவீச வந்தார் சான்ட்னர். அந்த ஓவரில் இஷான் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்து மேலும் உறுதியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்திய அணியும் ஐந்தாவது ஓவரிலேயே 50 ரன்களைக் கடந்தது.
இந்த முடிவுகள் எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்த ஹென்றியை ஆறாவது ஓவருக்கு அழைத்து வந்தார் சான்ட்னர். இதனால், ஹென்றி வீசிய ‘பௌலிங் எண்ட்’ மாறியது. இங்கு ஹென்றியாலும் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அந்த ஓவரில் அவர் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் சூர்யா ஒரு பவுண்டரி அடித்தார். பின்னர், நல்ல ஃபார்மில் இருந்த இஷான், அடுத்தடுத்து ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டர்கள் விளாசினார்.
இதன் காரணமாக பவர்பிளே முடிந்தபோது இந்திய அணி 75/2 என மிகவும் வலுவான நிலையை அடைந்தது. இஷான் கிஷன் அரைசதமே கடந்துவிட்டார். அதே வேகத்தை அவரும் சூர்யாவும் பவர்பிளேவுக்குப் பின்பும் தொடர, இந்தியா விரைவிலேயே வெற்றியை வசப்படுத்துவிட்டது.
இதே இஷான் கிஷன் 2 பந்துகளில் 1 ரன் என்ற நிலையிலும், சூர்யகுமார் 4 பந்துகளில் 1 ரன் என்ற நிலையிலும் இருந்தபோது, ராய்ப்பூர் ரசிகர்கள் நிசப்தமாக இருந்தபோது பந்துவீசியிருந்தால் ஹென்றியின் இரண்டாவது ஓவர் வேறு மாதிரி அமைந்திருக்கலாம். ஆனால், சூழ்நிலை அப்படியே தலைகீழாக மாறியிருந்தது.
மோசமான நிலையில் இருந்த இந்திய அணி, சிறப்பான கம்பேக்கை அரங்கேற்றி, சாதனை வெற்றியையும் வசப்படுத்திவிட்டது. இந்தியாவை நெருக்கடிக்குள் தள்ள கையில் இருந்த நல்ல வாய்ப்பை சான்ட்னர் தவறவிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மூன்றாவது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் – சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து 122 ரன்கள் எடுத்தனர்
சூழ்நிலையை சரியாக உணர்ந்த சூர்யகுமார்
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், சூழ்நிலையை தனக்கு சாதகமகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியிருந்தாலும், சூர்யகுமார் சூழ்நிலையை உணர்ந்து ஆட்டத்தை அணுகினார்.
ஃபோக்ஸ் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தை சூர்யா சந்தித்தார். ஏற்கெனவே இஷான் இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்ததால், ஒரு சிங்கிள் எடுத்து மீண்டும் இஷனுக்கு ஸ்டிரைக் கொடுத்தார் இந்திய கேப்டன். இஷான் கிஷன் அடுத்த 3 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார்.
அடுத்து டஃபி வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தில் சிங்கிள் எடுத்தார். அடுத்த ஐந்து பந்துகளில் இஷான் 11 ரன்கள் எடுத்தார். ஹென்றி வீசிய ஆறாவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்திருந்தாலும், அடுத்த பந்தில் மீண்டும் சிங்கிள் எடுத்தார். ஸ்டிரைக்குக்கு வந்த இஷான், கடைசி 4 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார்.
சூர்யா அந்த 4 ஓவர்களில் செய்த ஒரே விஷயம் இதுதான்: ஃபார்மில் இருக்கும் பேட்டர் அதிக பந்துகள் ஆடுவதை அவர் உறுதி செய்தார். நன்கு ஆடிக் கொண்டிருந்த இஷான், தொடர்ச்சியாக பவுண்டரிகள் அடிப்பதில் முனைப்பாக இருந்தார். அந்த நேரத்தில் இஷானின் அணுகுமுறையை உணர்ந்து, இந்திய கேப்டன் தன்னை ஓரடி பின்னால் வைத்துக்கொண்டார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், “இஷான் மதிய உணவாக என்ன சாப்பிட்டார், போட்டிக்கு முன் என்ன பயிற்சி செய்தார் என்று தெரியவில்லை. 6/2 என்ற நிலையில் இருந்து யாரும் இப்படி ஆடி நான் பார்த்ததில்லை. அந்த நிலையிலிருந்து பவர்பிளே முடிவில் சுமார் 70 ரன்கள் வரை வந்தது அது பெரிய விஷயம். இஷான் எனக்கு ஸ்டிரைக் கொடுக்கவில்லை என்று எனக்குக் கோபம் இருந்தது. ஆனால், எனக்கு கொஞ்சம் அவகாசம் இருந்தது. ஒரு 8-10 பந்துகள் ஆடினேன். பின்னர் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது என்னால் ரன் சேர்க்க முடியும் என்று எனக்குத் தெரியும்” என்று கூறினார்.
ஒரு கேப்டன், சிறப்பாக செயல்பட்டிருந்த தன் பௌலரைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல் விட்டார். இன்னொரு கேப்டன் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பேட்டருக்கு வழிவிட்டு தான் பின்னால் நிறுத்திக் கொண்டார். இந்த இரு கேப்டன்களின் முடிவுகளும் ஆட்டம் ஒருவர் பக்கமிருந்து இன்னொருவர் பக்கம் மாறியதில் பெரும் தாக்கம் ஏற்படுத்திவிட்டன.
பாகிஸ்தான் சாதனையை முறியடித்த இந்தியா
இந்த வெற்றியின் மூலம் 200-க்கும் மேற்பட்ட ரன்கள் வெற்றி இலக்கை அதிவேகமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 205 என்ற இலக்கை பாகிஸ்தான் அணி 16 ஓவர்களில் சேஸ் செய்ததே முந்தைய சாதனையாக இருந்தது.
அதே நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் இந்தியா 209 ரன்களை 15.2 ஓவர்களில் கடந்து, பாகிஸ்தான் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்திருக்கிறது.