பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், தினேஷ் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லீக் சுற்றில் பாகிஸ்தானை படுதோல்வி அடைய செய்த சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்று இந்த தொடரின் முன்னணி அணியாக திகழ்கிறது.
பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் பலவீனமாக உள்ள சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, முந்தைய தோல்விக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கியது.
கைகுலுக்குவதை மீண்டும் தவிர்த்த சூர்யகுமார் யாதவ்
பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தை போலவே, நேற்றும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
ஆட்டத்துக்கு முந்தைய நாள், துபையில் ஈரப்பதம், பனிப்பொழிவு நிலவியதால், பந்துவீச்சை தேர்வு செய்ததாக தெரிவித்தார். முன்னதாக, துபையில் பனிப்பொழிவு (dew) ஒரு பிரச்சினை அல்ல என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குறைவான வேகம் கொண்ட மைதானம் என்பதால், குல்தீப்–அக்சர்–வருண் என மூன்று சுழற் வீச்சாளர்கள் அடங்கிய முதன்மை அணியுடன் இந்தியா களமிறங்கியது. ஓமனுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் விளையாடிய அர்ஷ்தீப் சிங், ராணா நீக்கப்பட்டு, பும்ரா, வருண் மீண்டும் அணிக்கு திரும்பினர்.
பட மூலாதாரம், Getty Images
யூஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அக்சர் அணிக்கு திரும்பியது, இந்திய அணியின் சமநிலை குலையாமல் பார்த்துக்கொண்டது. சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணியில், இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆல்ரவுண்டர்கள் பஹீம் அஷ்ரஃப், ஹுசைன் டலாட் ஆகியோர் சேர்க்கப்பட்டு, ஹசன் நவாஸ், குஷ்டில் ஷா நீக்கப்பட்டனர். கடந்த மூன்று ஆட்டங்களில் டக் அவுட்டாகி சொதப்பிய சைம் அயூபிற்கு பதிலாக பர்ஹானுடன் அனுபவ வீரர் ஃபகார் ஜமான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.
கேட்ச்சை தவறவிட்ட அபிஷேக்; அதிருப்தியில் வெளியேறிய ஜமான்
ஹார்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே, பர்ஹான் விக்கெட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தேர்ட்மேன் திசையில் கிடைத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அபிஷேக் சர்மா தவறவிட்டார். வழக்கம் போல முதல் ஓவரில் மிக மெதுவான தொடக்கத்தை (6 ரன்கள்) பாகிஸ்தான் பெற்றது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில், கால்பக்கம் வீசப்பட்ட பந்தை லெக் சைடில் அழகாக ஃபிலிக் செய்து பவுண்டரிக்கு ஜமான் அனுப்பினார். அடுத்த பந்தில் இறங்கிவந்து மிட் ஆஃப் திசையில் மேலும் ஒரு பவுண்டரி விளாசி, பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் வருவதற்குள் விரைவாக ரன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பாகிஸ்தான் தொடக்க வீரர்களின் திட்டமாக இருந்தது. பும்ராவை திறம்பட எதிர்கொண்ட நம்பிக்கையில், பாண்ட்யாவின் அடுத்த ஓவரில் பாயிண்ட் திசையில் ஒரு அட்டகாசமான பவுண்டரியை ஜமான் விளாசினார்.
அடுத்த பந்தை பாண்ட்யா கொஞ்சம் குறைவான வேகத்தில் வீச, விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஜமான் நடையைக் கட்டினார். குறைந்த உயரத்தில் கிடைத்த கேட்ச்சை, மிகத் திறமையாக சாம்சன் பிடித்தார். மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் தனக்கு திருப்தியில்லை என்பதை ஜமான் வெளியேறும் போது வெளிப்படுத்தினார்.
பட மூலாதாரம், Getty Images
ஃபர்ஹானால் தலைநிமிர்ந்த பாகிஸ்தான்; தடுமாறிய பும்ரா
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சைம் அயூப், சந்தித்த இரண்டாவது பந்திலேயே பாண்ட்யா பந்தில் ஒரு புல் ஷாட் அடித்து அசத்தினார். முதல் ஓவரில் பொறுமையாக இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், அடுத்தடுத்த ஓவர்களில் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விளாசி, ரன் ரேட்டை தக்கவைத்து கொண்டது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர்களை மிகவும் அநாயாசமாக பாகிஸ்தான் பேட்டர்கள் எதிர்கொண்டனர். இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் பும்ரா நோ பால் உடன் சேர்ந்து இரண்டு பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தார்.
வேகப்பந்து வீச்சு எடுபடாத நிலையில், ஐந்தாவது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்தியை பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ். வருணும் தன் பங்குக்கு நான்காவது பந்திலேயே விக்கெட் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார். வருணின் ஆஃப் ஸ்பின் பந்தில் சைம் அயூப் ஸ்வீப் அடிக்க , அது டாப் எட்ஜ் ஆகி ஷார்ட் பைன் லெக் திசையில் இருந்த குல்தீப் யாதவ் கைகளுக்கு சென்றது. ஆனால், எளிதான கேட்ச் வாய்ப்பை குல்தீப் தவறிவிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் என்ற அழுத்தத்தில், இந்திய பீல்டர்கள் கேட்ச் வாய்ப்புகளை பதற்றத்தில் தவறவிடுகிறார்களோ என்று தோன்றியது. வழக்கத்துக்கு மாறாக நோ பால்கள் வீசுவதையும் பார்க்க முடிந்தது. கடந்த ஆட்டங்களை போல, தொடக்கத்திலேயே கட்டத்திலேயே மூன்று ஓவர்களை வீசிய பும்ரா, பவர்பிளேவின் கடைசி ஓவரில் 13 ரன்களை வாரி இறைத்தார்.
6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி, 55 ரன்களை எடுத்தது. இந்த தொடரில், இதுதான் பாகிஸ்தான் அணியின் சிறந்த பவர்பிளே ஸ்கோர் ஆகும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பும்ராவின் மோசமான பவர்பிளே பந்துவீச்சு இது.
பர்ஹான் ‘கன்ஷாட்’ கொண்டாட்டம்
கடந்த ஆட்டங்களில் கணிசமாக ரன் குவித்தாலும் குறைவான ஸ்ட்ரைக் ரேட் காரணமாக விமர்சிக்கப்பட்ட பர்ஹான், இந்தமுறை புயல் வேகத்தில் விளையாடினார். அடுத்தடுத்த ஓவர்களில் வருண், குல்தீப் பந்துகளில் இறங்கிவந்து லாங் ஆன் திசையில் சிக்சர்களை விளாசினார். கடந்த ஆட்டங்கள் போல ஆபத்தான கிராஸ் பேட் ஷாட்கள் ஆடாமல், முடிந்தவரைக்கும் சுழற்பந்து வீச்சை நேராக எதிர்கொண்டதை பார்க்க முடிந்தது.
அக்சர் படேலின் முதல் ஓவரில், லெக் சைடில் அபாரமாக ஒரு சிக்சரை மடக்கியடித்து அரைசதத்தை எட்டினார் சாஹிப்ஜதா பர்ஹான். அரைசதம் அடித்ததும் கன் ஷாட் (Gun shot) முறையில் கொண்டாடி, கவனத்தை ஈர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து, 91 ரன்கள் குவித்தது.
பட மூலாதாரம், Getty Images
ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பிய ஷிவம் துபே
முன்னணி வீச்சாளர்களின் பந்துவீச்சு பெரிதாக எடுபடாததால், 11–வது ஓவரில் ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை பந்துவீச அழைத்தார் சூர்யகுமார் யாதவ். கேப்டன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றிய துபே, சைம் அயூப் விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார். முதல் ஓவரில் கேட்ச் விட்டதற்கு பரிகாரமாக அபாரமாக டைவ் செய்து கேட்ச் பிடித்தார் அபிஷேக் சர்மா.
சைம் அயூப் விக்கெட்டுக்கு பிறகு பாகிஸ்தானின் ரன் வேகம் மட்டுப்பட்டது. 21 பந்துகளாக பவுண்டரி இல்லாத நெருக்கடியில், குல்தீப் யாதவ் பிளாட் செய்து வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று டாலாட் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெரிய ஷாட்களை முயன்றுகொண்டே இருந்தது. 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த ஃபர்ஹான் விக்கெட்டை ஆஃப் கட்டர் பங்கில் துபே கைப்பற்றினார்.
ஆறாவது விக்கெட்டுக்கு கேப்டன் சல்மான் அகா களமிறங்கினார். தொடக்கத்தில் அதிர விளையாடிய பாகிஸ்தான், மிடில் ஓவர்களில் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது. ஒற்றை, இரட்டை ரன்களை எடுக்க இயலாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் தடுமாறுவதை காண முடிந்தது.
பட மூலாதாரம், Getty Images
கடைசி கட்டத்தில் மீண்டும் அதிரடி
கடைசி 4 ஓவர்களில் மீண்டும் அதிரடியை கையிலெடுத்தது பாகிஸ்தான். குல்தீப் வீசிய 17–வது ஓவரில் சல்மான் அகா சிக்சர் அடிக்க, துபேவின் கடைசி ஓவரில் 18 ரன்களை பாகிஸ்தான் குவித்தது. 19–வது ஓவரில் பும்ரா நன்றாக வீசிய போதும், மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பை இந்தியா (கில்) தவறவிட, முகமது நவாஸ் ரன் அவுட்டான போதும் 11 ரன்கள் கிடைத்தது.
நவாஸ் பொறுப்பின்றி ரன் அவுட்டான விதம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் பஹீம் அஷ்ரஃப் சிக்சர், பவுண்டரி விளாச, பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக துபே 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
கில்–அபிஷேக் அபார தொடக்கம்; ஹாரிஸ் ராஃப் வாக்குவாதம்
172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, அப்ரிடி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி தொடக்கம் கொடுத்தார் அபிஷேக் சர்மா. வழக்கமாக முதல் பந்தை முழு நீளத்தில் அல்லது யார்க்கராக வீசும் அப்ரிடி, பவுன்சர் வீசி அதிர்ச்சியளிக்க பார்த்தார். ஆனால், சிரமமின்றி எதிர்கொண்ட அபிஷேக், பைன் லெக் திசையில் சிக்சருக்கு அனுப்பினார்.
முதல் ஓவரில் இந்திய அணி 9 ரன்கள் எடுத்தது. இரண்டாவது ஓவரை சைம் அயூப் வீச, அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்து தன் கிளாஸ் என்னவென்பதை கில் காட்டினார். சுழற்பந்து வீச்சாளர்கள் தடுமாறும் ஆடுகளத்தில், சைம் அயூபை பவர்பிளேவில் பந்துவீச அழைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தனது அடுத்த ஓவரில் அப்ரிடி ஷார்ட் பந்தின் மூலம் விக்கெட் வாய்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் மிட் விக்கெட் திசையில் கிடைத்த கடினமான கேட்ச் வாய்ப்பை நவாஸ் தவறவிட்டார்.
அதே ஓவரில், மிட் ஆஃபிலும் கவர் திசையிலுமாக இரு அட்டகாசமான பவுண்டரிகளை கில் விளாசி பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். நான்காவது ஓவரை இந்த தொடரில் 4 ரன்னுக்கும் குறைவாக எகானமி ரேட் வைத்துள்ள அப்ரார் அஹமது வீச, அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சருமாக அபிஷேக் விரட்டினார். பந்து வீச்சாளர்கள் மாறிய போதும், இந்திய பேட்டர்களின் வாண வேடிக்கை குறையவில்லை.
ஹாரிஸ் ராஃப் வீசிய ஓவரில் தொடக்க வீரர்கள் இருவரும் பவுண்டரி அடிக்க, 28 பந்துகளில் கில்–அபிஷேக் ஜோடி 50 ரன்களை கடந்தது. ராஃப், அபிஷேக் இடையிலான வாக்குவாதம், ஆட்டத்துக்கு மேலும் பரபரப்பை கூட்டியது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு செக் வைத்த ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ராஃப்
வேகப்பந்து வீச்சை விரும்பி விளையாடுகிறார்கள் என்று மீண்டும் சைம் அயூபிடம் சல்மான் அகா பந்தை கொடுக்க, அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை கில்–அபிஷேக் ஜோடி அடித்தது. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 69 ரன்களை குவித்தது. இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை 30 ரன்களை கடந்த அபிஷேக், பவர்பிளேவுக்கு அடுத்த அப்ரார் அஹமதுவின் ஓவரில் லெக் சைடில் இரு இமாலய சிக்சர்களை விளாசினார்.
அபிஷேக் சர்மா ஆஃப் சைடில் அதிரிபுதிரியான ஷாட் மூலம் அரைசதத்தை கடக்க, மறுபுறம் அவருக்கு சற்றும் குறைவில்லாமல் பாரம்பரியமான கிரிக்கெட் ஷாட்களின் மூலமே அதே வேகத்தில் ரன்களை குவித்தார் கில். 8.4 ஓவர்களில் இந்திய அணி எவ்வித சிரமமின்றி 100 ரன்களை கடந்தது. துபே பாணியிலான மிதவேகப் பந்துவீச்சு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், 10–வது ஓவரில் ஃபஹீம் அஷ்ரஃபை அழைத்தார் சல்மான் அகா.
பட மூலாதாரம், Getty Images
சல்மான் அகாவின் நம்பிக்கை, உடனடியாக கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த கில்லை பவுல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் ஃபஹீம் அஷ்ரஃப். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ராஃப் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் தனக்கு பிடித்தமான ஷாட் விளையாட முயன்று, லீடிங் எட்ஜாகி தேர்ட்மேன் திசையில் அப்ராரிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த விக்கெட்டுகள் ஆட்டத்தில் மீண்டும் சுறுசுறுப்பை கொண்டுவந்தன.
6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த போதும் அபிஷேக் சர்மா அதிரடியை நிறுத்தவில்லை. ஃபஹீம் அஷ்ரஃப் ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசியவர், அப்ரார் பந்தில் சிக்சர் அடித்து அசர வைத்தார். ஆனால், அடுத்த பந்திலேயே லாங் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்த அவர், இந்தியாவுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
டாப் ஆர்டர் வீரரான சஞ்சு சாம்சன் ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் அட்டகாசமான கவர் டிரைவ் அடித்த போதும், சாம்சனின் பேட்டிங்கில் வழக்கமான டைமிங் இல்லை. அப்ரிடி ஓவரில் திலக் வர்மா பவுண்டரி அடிக்க, கடைசி ஐந்து ஓவர்களில் இந்திய அணிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகும் இடக்கை சுழலர் முகமது நவாஸ் பந்துவீசவில்லை. இவருக்குதான் பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், உலகின் தலைசிறந்த டி20 சுழலர் என்று புகழாரம் சூட்டியிருந்தார்.
வலது–இடது பேட்டர்கள் இருக்கும்படி பேட்டிங் வரிசையை இந்தியா வடிவமைத்தது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியாக அமைந்தது. அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராஃப், தனது கடைசி ஓவரில் சாம்சன் (13) ஸ்டம்புகளை தகர்த்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே பாண்ட்யா பவுண்டரி அடித்தார். திலக் வர்மா சிக்சர், பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைக்க, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
பட மூலாதாரம், Getty Images
ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற அபிஷேக் சர்மா
இந்திய அணி பீல்டிங்கில் சொதப்பிய போதும் கேட்ச்களை தவறவிட்ட போதும் எளிதான வெற்றியை பதிவுசெய்துள்ளது. ராஃப், அஷ்ரஃப் உள்ளிட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசிய போதும், போதுமான ரன்கள் கைவசம் இல்லாததால் மீண்டும் ஒருமுறை இந்தியாவிடம் மண்ணைக் கவ்வியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு அதிரடி தொடக்கம் கிடைத்த நிலையில், மிடில் ஓவர்களில் அதை அடித்தளமாக கொண்டு பெரிய ஸ்கோரை பதிவுசெய்திருக்க வேண்டும். குறிப்பாக சமீப காலமாக அதிரடியாக பேட்டிங் ஆடிவரும் அப்ரிடியை பேட்டிங் வரிசையில் முன்னதாக கொண்டு வந்திருக்க வேண்டும். கடந்த ஆட்டத்தை போலவே ஆட்டம் முடிந்த பிறகும் இரு அணி வீரர்களும் சம்பிரதாயத்துக்கு கைகுலுக்கவில்லை. அதிரடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை பெற்றுள்ள இந்தியா, 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் புதன்கிழமை( செப்டம்பர் 24) வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. நாளை (செப்டம்பர் 23) நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானை சீண்டிய சூர்யகுமார்
பாகிஸ்தான் ஒரு வார இடைவெளியில் மீண்டும் வீழ்த்திய மகிழ்ச்சியில் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பை இந்திய கேப்டன் சூர்யகுமார் எதிர்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நீங்கள் அனைவரும் இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியைப் பற்றி கேள்விகள் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இரண்டு அணிகள் 15-20 போட்டிகளில் விளையாடி முடிவு 7-7 அல்லது 8-7 என இருந்தால், அதை நீங்கள் நல்ல கிரிக்கெட் என்று அழைக்கலாம், நீங்கள் அதை போட்டி என்று அழைக்கலாம். அது 13-0, 10-1 என இருந்தால், புள்ளிவிவரம் என்னவென்று எனக்கு துல்லியமாக தெரியவில்லை. ஆனால், இது இனி ஒரு போட்டி அல்ல. நாங்கள் அவர்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம், சிறப்பாக பந்து வீசினோம் என்று நினைக்கிறேன்,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி சொந்த நாட்டில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியினருக்கு சூர்யகுமாரின் கருத்துகள் உவப்பானதாக இருந்திருக்காது.
கடந்த 15 ஆண்டுகளில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் சந்தித்த 31 போட்டிகளில் 23 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
கன்ஷாட் கொண்டாட்டம் பற்றி விமர்சனம்
பாகிஸ்தான் வீரர் பர்ஹான் தனது அரைசதத்திற்குப் பிறகு கன்ஷாட் முறையில் கொண்டாடியது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் கேள்வி எழுப்பினார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “சபாஷ் மோடி ஜி! பார்க்க வேண்டியது இதுதான், அதனால்தான் அவருக்கு கிரிக்கெட் விளையாட வைக்கப்படுகிறது? அவர் இதை எப்படிச் செய்யத் துணிந்தார்? நரேந்திர மோடி ஒரு பலவீனமான பிரதமர்” என்று எழுதினார்.
சிவசேனா (UBT) தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், “பிசிசிஐக்கு வாழ்த்துகள். இந்தப் படங்கள் உங்களைப் போதுமான அளவு திருப்திப்படுத்தும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான ‘ஒலிம்பிக்’ உணர்வைப் பாதிக்காது என்றும் நம்புகிறேன். இது தொந்தரவாக இருக்கிறது. ஆனால் இரத்தத்தில் இருந்து பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருப்பவர்களுக்கு இது பொருந்தாது” என்று எழுதினார்.
அரசியல்வாதிகளைத் தவிர, பிற சமூக ஊடக பயனர்களும் பர்ஹானின் ‘கன்ஷாட்’ கொண்டாட்டம் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதை காண முடிந்தது. ஜிதேஷ் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் “சாஹிப்சாதா பர்ஹான் தனது அரை சதத்தைக் கொண்டாடியது இப்படித்தான். மோடி ஜி, இது போர் இல்லையென்றால், என்ன?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், கிரிக்கெட் மைதானத்தில் ஒரு வீரர் கன்ஷாட் முறையில் கொண்டாடியது இதுவே முதல் முறை அல்ல. முன்னாள் இந்திய கேப்டன்கள் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரும் இந்த முறையில் கொண்டாடியுள்ளனர்.
ஒரு ஐபிஎல் போட்டியின் போது, தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன் ரூஸோவும் பர்ஹானைப் போலவே கொண்டாடினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு