பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
விராட் கோலியின் ஆகச்சிறந்த சதத்தால் துபையில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் இருந்தநிலையில் தற்போது 3-3 என்ற கணக்கில் இந்தியா-பாகிஸ்தான் சமநிலையில் இருக்கிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு வரை விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பெரிய கவலையாக இருந்தது.
பெரும்பாலான கிரிக்கெட் விமர்சகர்கள் கோலியின் ஃபார்ம் பற்றி குறிப்பிடத் தவறவில்லை, விமர்சிக்கத் தவறவில்லை. ஆனால், அனைத்துக்கும் இந்த ஒற்றை சதத்தின் மூலம் பதில் அளித்துள்ளார் கோலி.
சதம் மூலம் பதில்
கோலி போன்ற ஆல்டைம் கிரேட் பேட்டர்களுக்கு ஃபார்ம் என்பது பிரச்னையே கிடையாது. இதுபோன்ற ஏதாவது ஒரு இன்னிங்ஸ் சிக்கிவிட்டது என்றால் இழந்த ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கண்முன் கொண்டு நிறுத்திவிடுவார்கள். ரசிகர்கள் கிங் கோலி என்பதற்கு விளக்கமாக இன்றைய கோலியின் ஆட்டம் அமைந்திருந்தது.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுக்கு எதிராக எப்போது சிறப்பாக ஆடக்கூடிய விராட் கோலி இந்த ஆட்டத்திலும் தனது மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறவில்லை.
சதம் அடிப்பாரா, அதற்கான வாய்ப்பு இருக்குமா என்ற நிலையில் கடைசியில் பவுண்டரி அடித்து 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் கோலி இருந்தார். அவருக்கே ஆட்டநாயகன் விருது அறிவிக்கப்பட்டது. சர்வதேச அரங்கில் 51-வது ஒருநாள் சதத்தையும் கோலி நிறைவு செய்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
அரையிறுதியில் இந்தியா, வெளியேறுகிறது பாகிஸ்தான்?
இந்திய அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. அதேசமயம் பாகிஸ்தான் அணி ஏறக்குறைய தொடரிலிருந்து வெளியேறிவிட்டது.
பாகிஸ்தான் அணிக்கு ஒரே வாய்ப்பு மட்டுமே இருக்கிறது, வங்கதேச அணியை பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும், நியூசிலாந்து அணி அடுத்த 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இப்படி நடந்தால் அரையிறுதிக்குள் பாகிஸ்தான் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இது நடக்குமா என்பது நிச்சயமில்லை.
இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் சுப்மன் கில்(46), ஸ்ரேயாஸ் அய்யர்(56) ஆகியோரின் பேட்டிங்கும் குறிப்பிடத்தக்கது.
இருவரும் சேர்ந்து கோலியுடன் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சுப்மன் கில், கோலி கூட்டணி 70 ரன்களும், ஸ்ரேயாஸ், கோலி கூட்டணி 114 ரன்களும் சேர்த்தது.
ஹர்திக் அற்புதமான பந்துவீச்சு
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் பந்துவீச்சும் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. பாபர் ஆசம் விக்கெட்டை வீழ்த்தி ஹர்திக் பாண்டியா தொடங்கி வைத்தார். பாண்டியாவின் பந்துவீச்சில் இன்று ஏகப்பட்ட வேரியேஷன்கள், ஸ்லோபால், ஸ்விங் என அற்புதமாக இருந்தது. 8 ஓவர்களையும் 3.4 ரன்ரேட்டில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா.
ஜடேஜா, அக்ஸர், குல்தீப், ராணா என மூவரும் சேர்ந்து 26 ஓவர்களை வீசி, 129 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பேருமே, 4 ரன்ரேட்டுக்கு மேலாக ரன்களை வழங்கவில்லை. குறிப்பாக நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்தாமல் இந்திய அணி திணறுகிறது என்ற விமர்சனத்துக்கு இந்த முறை பதில் அளித்து நடுப்பகுதியில் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை திருப்பினர்.
‘கோலியின் ஆட்டம் வியப்பைத் தரவில்லை’
பட மூலாதாரம், Getty Images
வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ” பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அருமையாக தொடங்கினோம். இந்த விக்கெட் பற்றி நன்கு தெரியும் என்பதால் எங்களின் பேட்டர்கள் நிதானமாக ஆடினர். குல்தீப், அக்ஸர், ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசினர். ரிஸ்வான், சவுத் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷமி, ஹர்திக், ராணாவும் சரியான நேரத்தில் சிறப்பாகப் பந்துவீசினர்.
ஒவ்வொரு வீரரும் என்ன விதமான பணி செய்ய வேண்டும் என்பதை அறிந்திருந்து செயல்பட்டனர். பேட்டர்களுக்கு யார் அதிகமாக தொந்தரவு கொடுப்பார்கள் என்பதை அறிந்து பந்துவீசச் செய்தேன். கோலி சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்திவிட்டார். ஓய்வறையில் இருப்போருக்கு கோலியின் ஆட்டத்தைப் பார்த்து பெரிதாக வியப்படையவில்லை” எனத் தெரிவித்தார்.
5 முறை ஆட்டமிழப்பு
242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா வழக்கம்போல் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அதிரடியாகத் தொடங்கினார்.
ஆனால், அப்ரிதி வீசிய 5வது ஓவரின் கடைசிப் பந்து கணிக்க முடியாத வகையில் வந்த இன்-ஸ்விங் யார்கரில் ரோஹித் சர்மா க்ளீன் போல்டாகி 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 8 முறை அப்ரிதி பந்துவீச்சை சந்தித்துள்ள ரோஹித் சர்மா அதில் 5 முறை அப்ரிதி பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் விராட் கோலி களமிறங்கி, சுப்மன் கில்லுடன் சேர்ந்தார். அப்ரிடி வீசிய 7-வது,9-வது ஓவர்களில் 4 பவுண்டரிகள் விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்த்தது.
பட மூலாதாரம், Getty Images
சச்சினை முந்தைய கோலி
ஹாரிஸ் ராப் வீசிய 13-வது ஓவரில் கோலி பவுண்டரி அடித்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களை எட்டி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார். சச்சின் 350 இன்னிங்ஸிலும், சங்கக்கரா 378 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை செய்த நிலையில் கோலி 287 இன்னிங்ஸில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார். அதே ஓவரில் கோலி கவர் டிரைவில் அற்புதமான பவுண்டரி விளாசினார்.
அப்ரார் அகமது வீசிய 18-வது ஓவரில் கில் 46 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
கோலி 2-வது அரைசதம்
அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், கோலியுடன் இணைந்தார். 20ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்திருந்தது. 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது.
நசீம் ஷா வீசிய 27-வது ஓவரில் டீப் கவர் திசையில் பவுண்டரி அடித்து தனது 74-வது அரைசதத்தை கோலி நிறைவு செய்தார். கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி அடித்த 2வது அரைசதமாகும்.
36-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 63 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 56 ரன்கள் சேர்த்திருந்தபோது, குஷ்தில் வீசிய 39-வது ஓவரில் இமாம் உல்ஹக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹர்தி்க் பவுண்டரி அடித்தநிலையில் 8 ரன்னில் அப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அக்ஸர் படேல் 3 ரன்களிலும், கோலி பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 42.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்து இலக்கை அடைந்தது.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் தோல்விக்கு காரணம் என்ன?
பாகிஸ்தான் அணி கவனமாக ஆட வேண்டும், விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற கவனத்தோடு ஆடியதே தவிர ரன்சேர்ப்பில் கவனத்தைச் செலுத்தவில்லை.
தொடக்கத்திலிருந்தே மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை இழந்த பாகிஸ்தான் அடுத்த 10 ஓவர்களில் 27 ரன்களையே சேர்த்தது.
பாகிஸ்தான் தரப்பில் சவுத் ஷகில்(62), கேப்டன் ரிஸ்வான்(42) தவிர வேறு எந்த பேட்டர்களும் பெரிதாக ரன்களைச் சேர்க்கவில்லை
இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஹர்திக், குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகிய 4 பந்துவீச்சாளர்களும் நடுவரிசையில் பாகிஸ்தான் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்ததால் பாகிஸ்தான் பேட்டர்களின் பேட்டிலிருந்து பெரிய ஷாட்களும் வரவில்லை, பெரிதாக ரன்களும் வரவில்லை.
பட மூலாதாரம், Getty Images
கேப்டன் ரிஸ்வான் ஆட்டமிழந்தவுடன் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி தொடங்கியது. அவர் ஆட்டமிழந்தபின் அடுத்த 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்து தடுமாறியது. நடுவரிசை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களும், கேப்டன் ரிஸ்வானும் ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்தாமல் விக்கெட்டை தக்கவைப்பதிலேயே கவனம் செலுத்தினர். ஆனால், அவர்கள் நினைப்புக்கு மாறாக நடுவரிசை பேட்டர்கள் சொதப்பலாக பேட் செய்தனர்.
200 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த 41 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. நடுவரிசை பேட்டர்களை நம்பி பாகிஸ்தான் கேப்டனும், தொடக்க வீரர்களும் ஏமாந்தனர்.
பாகிஸ்தான் அணி தேவையின்றி பந்துகளை வீணடித்தது அந்த அணியின் ஸ்கோர் குறைவுக்கு முக்கியக் காரணம். பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் மட்டும் 152 டாட் பந்துகளை விட்டுள்ளது, இது ஏறக்குறைய 25 ஓவர்களுக்கு சமம். ஒருநாள் போட்டியில் இந்த அளவு டாட் பந்துகளை விடுவது ஸ்கோரை பெரியஅளவு பாதிக்கும். டாட் பந்துகளை விட்டதற்கு விலையாக பாகிஸ்தான் அணி ஸ்கோரை பறிகொடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் என 3 பேருக்கும் கேட்சை கோட்டைவிட்டனர். இந்த கேட்ச்களை பிடித்திருந்தாலே ஆட்டத்தை நெருக்கடியில் கொண்டு சென்றிருக்கலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு