கிரிக்கெட் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் துபையில் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கும் லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளைப் பொருத்தவரை, ஆண்டுகள் பல ஆகியும் இன்னும் ஒரு விஷயம் மாறவில்லை என்றால் அது வசதி படைத்த கிரிக்கெட் ரசிகர்கள் எந்த விலை கொடுத்தேனும் டிக்கெட் வாங்க போட்டியிடுவதுதான்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 37 லட்சம் இந்தியர்களும் 17 லட்சம் பாகிஸ்தானியர்களும் வசிக்கின்றனர். துபையில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் தொடர்புகள் மூலம் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய முயற்சித்தனர். இரு நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியைக் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அரையிறுதிக்கான அதன் பாதை கிட்டத்தட்ட உறுதி செய்யப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், போட்டியை நேரில் காணும் இந்திய ரசிகர்களைப் பொருத்தவரை, பணத்திற்கு மதிப்புள்ள போட்டியாக மட்டுமல்லாமல், சாம்பியன்ஸ் டிராபிக்கு ஒரு வித்தியாசமான சிலிர்ப்பையும் தரும்.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒரு பெரிய ஐசிசி கோப்பையை நடத்தும் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக தோற்றுப் போனால் தொடரை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். ஐசிசி தொடர் ஒன்றை நடத்தும் நாடாக, பாகிஸ்தானுக்கு இதை விட வேதனையான எதுவும் இருக்க முடியாது. இந்த பயம் பாகிஸ்தான் அணியை அற்புதமான ஒன்றைச் செய்ய கட்டாயப்படுத்தலாம்.
பாபர் அசாமை அச்சுறுத்தும் பலவீனம்
பாகிஸ்தான் அணியில் தற்போதைய மிகப்பெரிய நட்சத்திர வீரரான பாபர் அசாமுக்கு சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. 2021 வரை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சராசரியாக 89.94 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஸ்கோர் செய்த அவர், அதன் பிறகு வந்த போட்டிகளில் தடுமாறுகிறார்.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பாபர் அசமின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான சராசரி 31.80 ஆகக் குறைந்துள்ளது, மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 67.65 ஆகக் குறைந்துள்ளது.
பாபருக்கு எதிராக சுழற்பந்து வீச்சாளர்களின் வலையை பின்ன இந்திய அணி நிச்சயமாக முயற்சிக்கும். இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தி போன்ற புதிரான சுழற்பந்து வீச்சாளருக்கு இந்தியா வாய்ப்பு அளித்தால், பாகிஸ்தானின் பிரச்னைகள் மேலும் அதிகரிக்கக் கூடும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யூடியூப்பில் பாபர் அசாமை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஒரே ஒரு போட்டி ஒரு வீரரின் எதிர்காலத்தை மாற்ற முடிந்தால், பாபர் அசாமுக்கு இன்று இந்தியாவுக்கு எதிராக நடக்கவிருக்கும் போட்டியாகவே இருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவாரா?
இந்திய அணிக்கு இருக்கும் ஒரே கவலை விளையாடும் 11 பேரில் யார், யாரை இடம்பெறச் செய்வது என்பது மட்டுமே.
கடந்த போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக இடது கை பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்புக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமா அல்லது நீண்ட காலத்திற்குப் பிறகு 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டுமா என்பதுதான் இந்திய அணியின் முன்னுள்ள ஒரே கேள்வி.
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நீக்கி வருண் சக்கரவர்த்திக்கு திடீரென இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டது. பெரிய போட்டிகளில் இந்த ஆச்சரியமான ஆயுதத்தைக் கொண்டு எதிரணி அணியை தோற்கடிப்பதே இந்திய அணியின் உத்தி.
பட மூலாதாரம், Getty Images
பாக். கேப்டன் சாடிய முன்னாள் வீரர்கள்
சமீபத்திய புள்ளிவிவரங்களும் வரலாறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரானதாகவே உள்ளன. இரு அணிகளுக்கும் இடையே நடந்த கடைசி 11 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 9 போட்டிகளில் வென்றுள்ளது. அது ஒருநாள் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, சாம்பியன்ஸ் டிராபியாக இருந்தாலும் சரி, டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே நம்பிக்கை அளித்த போதிலும், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அடைந்த இந்த தோல்வி பாகிஸ்தானை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் ரிஸ்வானின் கருத்துகளை பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்துள்ளனர். இதை ஒரு சாதாரண போட்டியைப் போலவே அணுகுவோம் என்று ரிஸ்வான் கூறியிருந்தார்.
புள்ளிவிவரம் இந்தியாவிற்கு சாதகமாக இருந்தாலும், ஐக்கிய அரபு அமீரக மண்ணில் பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட முடியாது.
இது ஒரு புதிய நாள், ஒரு புதிய மோதல், இந்த முக்கியமான போட்டியில் எதுவும் நடக்கலாம்.
இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.