இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தனது ஆல்ரவுண்டர் திறமையை நிரூபித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா சிக்கலில் இருந்தபோது, ஹர்திக் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார். பின்னர் தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
இந்திய தரப்பில் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தினார்.
ஹர்திக்கின் ஆல்ரவுண்டர் செயல்பாடு
பட மூலாதாரம், Getty Images
ஹர்திக்கின் அரைசதம் குறித்து பேசிய வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, “ஹர்திக்கிற்கு மாற்றை நாங்கள் தொடர்ந்து தேடுகிறோம், ஆனால் உண்மை என்னவென்றால், அவரைப் போன்ற யாரும் இல்லை. இந்திய இன்னிங்ஸை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் அவர் இதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் களமிறங்கியபோது, இந்தியா 11.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.” என்றார்.
போட்டி நடந்த கட்டாக் மைதானத்தில் உள்ள ஆடுகளத்தில் ரன் சேர்க்க அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறினர். ஆனால் ஹர்திக் மட்டுமே முழு ஃபார்மில் விளையாடினார். அவர் 210-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 59 ரன் எடுத்தார், ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களை அவர் அடித்திருந்தார்.
ஹர்திக்கின் ஆக்ரோஷமான பேட்டிங்கால் 150 ரன்களை எட்டுவது கடினமாகத் தோன்றிய ஒரு இன்னிங்ஸ் 175 ரன்களை எட்டியது. பந்துவீச்சில் டேவிட் மில்லரின் விக்கெட்டையும் ஹர்திக் வீழ்த்தினார். இந்த வடிவத்தில் 12 இன்னிங்ஸ்களில் மில்லரை அவர் ஆறு முறை அவுட் செய்துள்ளார்.
இந்த போட்டியில், ஹர்திக் 100 சிக்ஸர்களை அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் ஆனார். அந்த வரிசையில் 205 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.
போட்டி முடிந்த பிறகு, பேசிய வர்ணனையாளர் இர்ஃபான் பதான், “உள்நாட்டு தொடர்களில் விளையாடிய பிறகு ஹர்திக் முழுமையாக தயாராகிவிட்டார். கிரீஸுக்குப் பின்னால் இருந்து விளையாடும் திறன் அவரது ஆட்டத்தின் மிகப்பெரிய பலமாகும். இது பந்தை எதிர்கொள்ள அவருக்கு கூடுதல் அவகாசம் தருகிறது. அவரது ஷாட்கள் அதிக சக்தியைக் கொண்டுள்ளன.” என்று அவர் கூறினார். இந்தியா உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், ஹர்திக் முழு உடற்தகுதியுடன் இருப்பதும், சிறப்பாக விளையாடுவதும் முக்கியம்” என்றார்.
‘குதிரையில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்’
பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது குறித்து வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “அவர்களின் ஆட்ட பாணியைப் பார்க்கும்போது, அவர்கள் குதிரையில் இருப்பது போல் தெரிகிறது. அவர்கள் ஏதோ அவசரத்தில் இருப்பது போல் தெரிகிறது. உள்ளே வரும் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் மட்டையை சுழற்றுவதை காணலாம். எந்த பேட்ஸ்மேனும் ஆடுகளத்தில் நிலைத்து ஆட முயற்சிக்கவில்லை. அவர்களின் ஆட்ட பாணி, வெற்றி இலக்கு 250-ஆக இருப்பது போல் தோன்றியது. இலக்கு 176 ரன்கள் மட்டுமே இருந்தபோதும், எந்த பேட்ஸ்மேனும் விக்கெட்டின் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.” என்றார்.
தென் ஆப்ரிக்கா தரப்பில் டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்க்ரம் மற்றும் ஜான்சன் ஆகிய வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்னை எட்டினர். அதிகபட்சமாக பிரெவிஸ் 22 ரன் எடுத்தார்.
பும்ரா ‘சதம்’
பட மூலாதாரம், Getty Images
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா 100-வது விக்கெட்டை வீழ்த்தினார். அவரது நூறாவது விக்கெட்டாக டெவால்ட் பிரெவிஸின் விக்கெட் அமைந்தது. அர்ஷ்தீப் சிங்கிற்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் இவர் ஆவார். பின்னர் கேஷவ் மகாராஜின் விக்கெட்டை வீழ்த்தி தனது எண்ணிக்கையை 101ஆக அவர் உயர்த்தினார்.
அனைத்து வடிவங்களிலும் 100க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் ஐந்தாவது பந்து வீச்சாளர் ஆனார். முன்னதாக, டிம் சவுதி, ஷாகிப் அல் ஹசன், ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
வர்ணனையின் போது இர்ஃபான் பதான், “பும்ராவும் அர்ஷ்தீப்பும் இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடுவது அரிதாகவே இருக்கிறது. இந்தியா இந்த ஜோடியை களமிறக்க வேண்டும். இந்த ஜோடிக்கு பவர்பிளேயில் அழுத்தம் கொடுக்கவும், டெத் ஓவர்களில் ஸ்கோரை கட்டுப்படுத்தவும் தெரியும்” என்று கூறினார்.
அர்ஷ்தீப் தொடக்கத்தில் அதிர்ச்சி தரக்கூடியவர்
பட மூலாதாரம், Getty Images
அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டி20 பந்து வீச்சாளர் ஆவார். அவர் தொடக்கத்தில் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அதிர்ச்சி தரக் கூடியவர். இந்த போட்டியில், குயின்டன் டி காக் தனது இரண்டாவது பந்தில் கேட்ச் கொடுத்தார். இரண்டாவது ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.
இர்பான் பதான் தனது வர்ணனையின் போது, “அர்ஷ்தீப் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். பந்தை இரு திசைகளிலும் ஸ்விங் செய்யும் திறன் அவருக்கு உள்ளது. இந்தத் திறனால், பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் திறன் அவருக்கு உள்ளது” என்று கூறினார்.
தனது முதல் இரண்டு ஓவர்களில் 14 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை இந்தியாவுக்கு சாதகமாக திருப்பினார் அர்ஷ்தீப் சிங். ஐந்தாவது ஓவரில் அர்ஷ்தீப்பிற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கொண்டு வரப்பட்ட போது, அர்ஷ்தீப்பை இன்னும் ஒரு ஓவர் வீசச் செய்யலாம் என்று வர்ணனையாளர்கள் கூறினர்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜிதேஷ்
பட மூலாதாரம், Getty Images
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவுக்கு விளையாடும் வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கிறது. அவர் விளையாடும் வாய்ப்புகளைப் பெற்றாலும், அவர் ஐந்து அல்லது ஆறு பந்துகளுக்கு மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. அவர் பந்தை அடித்தாட முற்பட்டால் தனது விக்கெட்டை இழக்கும் அபாயம் உள்ளது. ஜிதேஷ் எடுத்த மூன்று அற்புதமான கேட்சுகள், பிளேயிங் லெவனில் அவரது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “ஒரு விக்கெட் கீப்பர் மிகவும் மோசமாக விளையாடுவது அல்லது மிகச் சிறப்பாக செயல்படுவது ஆகிய இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே கவனம் பெறுகிறார். அவரது வழக்கமான செயல்திறன் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை. ஆனால் ஜிதேஷ் கேட்சுகளை எடுத்த விதத்தைப் பார்க்கையில், அவர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படலாம்.” என்றார்.
இர்ஃபான் பதான் பேசுகையில் “அடுத்த உலகக் கோப்பைக்கு அணி நிர்வாகம் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். ஜிதேஷ் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் யாருக்கு அணியில் இடம் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்.” என்று கூறினார்.