பட மூலாதாரம், Getty Images
நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து: நாண்ட்ரே பர்கர் வீசிய பந்து ‘அவுட் சைட் எட்ஜ்’ ஆகி பௌண்டரி எல்லையை அடைந்தது.
நான்காவது ஓவரின் நான்காவது பந்து: பந்து பேட்டரின் காலில் பட, தென்னாப்பிரிக்க அணி எல்பிடபிள்யூ அப்பீல் செய்கிறது. ஆனால், நடுவர் மறுத்துவிடுகிறார்.
நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்து: டிஃபண்ட் செய்ய பேட்டர் முற்பட, ‘இன்சைட் எட்ஜ்’ ஆகி ஒரு ரன் கிடைக்கிறது.
யஷஷ்வி ஜெய்ஸ்வாலை அந்த ஓவரின் முதல் பந்தில் பர்கர் வெளியேற்ற, அந்த ஓவரின் மிச்ச பந்துகளை சந்தித்தது விராட் கோலி. ராஞ்சியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவருடைய இன்னிங்ஸ் இப்படி சில எட்ஜ்களும், அப்பீலுமாகத்தான் தொடங்கியது.
ஆனால், ஒருசில பந்துகளிலேயே அதையெல்லாம் நிவர்த்தி செய்த விராட் கோலி, 120 பந்துகளில் 135 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஒருநாள் போட்டிகளில் இது அவருடைய 52வது சதம். இதன்மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சச்சினின் சாதனையை (டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள்) முறியடித்தார் விராட் கோலி.
ஆனால், கோலியின் இந்த இன்னிங்ஸ் சீராக ஒரே மாதிரியானதாக இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப தன் அணுகுமுறையை அவர் மாற்றவேண்டியிருந்தது. அதனால் அவர் தன் ஆட்டத்தை மூன்று கட்டங்களாக வடிவமைத்தார்.
கட்டம் 1: ஃபீல்டிங் வியூகத்தை தகர்த்த கோலி
முதல் பந்தில் எட்ஜ் மூலம் பௌண்டரி கிடைத்த அவருக்கு, அடுத்த 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அவர் சந்தித்த பத்தாவது பந்தில் ஒரு ஸ்டிரெய்ட் டிரைவ் அடித்து, தான் நல்ல ஃபார்மில் இருப்பதை உணர்த்தினார் கோலி.
அதன்பிறகு அவர் கொஞ்சம் வித்தியாசமான பாணியிலேயே தன் இன்னிங்ஸை அணுகினார்.
முதல் 18 பந்துகளில் 12 ரன்கள் அடித்திருந்த கோலி, அடுத்த 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு பந்துகளை சிக்ஸரும் அடித்தார். வழக்கமாக ஒன்றிரண்டு ரன்களாக அதிகமாக ஓடியும், பவுண்டரி மூலமுமாகவே பெரும்பாலான ரன்களை சேர்க்கும் அவர், ஒருநாள் போட்டிகளில் தான் சந்தித்த முதல் 25 பந்துகளிலேயே இரண்டு முறை சிக்ஸர் அடிப்பது இதுவே மூன்றாவது முறை என்கிறது இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ வலைதள தரவு. அதிலும், முதலில் பேட்டிங் செய்த தருணங்களில் இதுவே முதல் முறை.
தென்னாப்பிரிக்க அணி விராட் கோலியை நெருக்கடிக்குள்ளாக்க ஒரு முயற்சி செய்தது. 30 யார்ட் வட்டத்துக்குள் இருக்கும் முக்கிய ஃபீல்டிங் பொசிஷன்களில், ஃபீல்டர்கள் வழக்கமாக நிற்கும் இடத்திலிருந்து சற்று முன்னே நின்றார்கள். கோலியின் பிரதான ஷாட்கள் மூலம் வரும் ரன்களைக் கட்டுப்படுத்தி அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த அவர்கள் அந்த முயற்சியை செய்தனர்.
இந்நிலையில் தான் வழக்கமாக தரையோடு ஆடும் விராட், வான் நோக்கி அதிகம் அடிக்கத் தொடங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூட இதைப் பற்றி X தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், “விராட் கோலி இந்த இன்னிங்ஸில் காட்டும் ஆக்ரோஷம் முக்கியமாக ஃபீல்டிங் பொசிஷன்களால் தான். ‘உங்கள் ஃபீல்டிங் மூலம் நீங்கள் எதையும் நிர்ணயிக்க முடியாது’ என்று அவர் சொல்லும் செய்தி தெளிவாகப் புரிகிறது. அந்த எண்ணம்! அந்த அறிவிப்பு!” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சிக்ஸர் அணுகுமுறையை முதல் பவர்பிளேவுக்குப் பின்னருமே கோலி தொடர்ந்தார். கார்பின் பாஷ் வீசிய 18வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் அவர்.
2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 360 என்ற இலக்கை சேஸ் செய்த போது கோலி 7 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அன்று, ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியர் ஒருவரின் அதிவேக ஒருநாள் சதத்தை (52 பந்துகள்) பதிவு செய்திருந்தார் அவர். பெரிய இலக்கு என்பதால் அந்த அதிரடி தேவைப்பட்டிருந்தது. அதேபோல், 2023ல் இலங்கைக்கு எதிராக அவர் 8 சிக்ஸர்கள் அடித்தார். அப்போதுகூட சதம் அடிக்கும்வரை அவர் 1 சிக்ஸர் தான் அடித்திருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் 71 ரன்கள் அடித்திருந்தபோதே 5 சிக்ஸர்கள் அடித்துவிட்டார் கோலி.
தங்கள் ஃபீல்டிங் மூலம் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்ற தென்னாப்பிரிக்காவின் வியூகம், கோலியின் எதிர்பாராத அதீத அதிரடியால் தகர்ந்து போனது.
கட்டம் 2: ஆடுகளம் மற்றும் விக்கெட் வீழ்ச்சிக்கு எதிராக நிதானம்
ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபோது 61 பந்துகளில் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார் கோலி. அப்போது அவர் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடித்திருந்தார். ரோஹித்தும் மற்றொரு பக்கம் அதிரடி காட்டியதால் இருவரும் நெருக்கடி இல்லாமல் ஆட முடிந்தது. அதனால்தான் வழக்கத்துக்கு மாறாக பவுண்டரிகளை விட அதிக சிக்ஸர்கள் அடித்திருந்தார் கோலி.
ஆனால், ரோஹித் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் ரன்ரேட் குறைந்தது. சரியாக அந்த சமயத்தில் ஆடுகளத்தின் தன்மை மாறியது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவானது. அடுத்து களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் வேகமாக ரன் சேர்க்கத் தடுமாறினார்கள். அதனால் அங்கு தென்னாப்பிரிக்காவின் கையும் சற்று ஓங்கியது போல் தோன்றியது. இப்படியான சூழ்நிலையில் விக்கெட் இழப்பைத் தவிர்க்க வேண்டும் என்பதை உணர்ந்த கோலி, நிதானமாக ஆடத் தொடங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
ரோஹித் ஆட்டமிழந்த பிறகு அவர் சந்தித்த முதல் 40 பந்துகளில் அவர் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் அடித்திருந்தார். சிக்சர் ஏதும் அடிக்கவில்லை.
போட்டிக்குப் பிறகு பேசிய விராட் கோலி, “20-25 ஓவர்களுக்கு ஆடுகளம் நன்றாக இருந்தது. ஆனால், அதன்பிறகு மெதுவாகிவிட்டது” என்று குறிப்பிட்டார்.
முதலில் தென்னாப்பிரிக்காவின் ஃபீல்டிங்குக்கு ஏற்ப அதிரடி காட்டியவர், அதன்பின் சூழ்நிலையை உணர்ந்து அப்படியே தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருந்தார்.
இதன்மூலம் விக்கெட் வீழ்ச்சி தவிர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நன்கு ஆடிக்கொண்டிருக்கும் விராட் கோலி ஒருபக்கம் இருந்ததால், மற்றொரு சீனியர் வீரர் கே.எல்.ராகுல் செட்டில் ஆகவும் அது உதவிகரமாக இருந்தது. ஆடுகளம் சற்று மெதுவாகியிருந்தாலும், கோலியின் அணுகுமுறையால் தென்னாப்பிரிக்க அணியால் அதிக விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. இது இறுதி கட்டத்தில் இந்தியா அதிரடி காட்ட உதவிகரமாக இருந்தது.
கட்டம் 3: பெரிய இலக்கை நோக்கிய அதிரடி
இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், அப்போது பேட்டிங் செய்வது சற்று சாதகம் இருக்கும். அதனால்தான் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. அதனால், பெரும்பாலான வல்லுநர்கள் இந்திய அணி 330 முதல் 340 ரன்கள் வரை எடுக்கவேண்டும் என்று கருதினார்கள்.
38வது ஓவருக்குப் பின்பான கோலியின் அதிரடி இந்தியாவை அந்த இலக்கு நோக்கிப் பயணிக்கவைத்தது.
பட மூலாதாரம், Getty Images
ராகுல் ஓரளவு களத்தில் செட் ஆனபிறகு மீண்டும் வேகமாக ஆடத் தொடங்கினார் கோலி. சுப்ரயன் வீசிய 39வது ஓவரில் அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் உள்பட 20 ரன்கள் (அவர் சந்தித்த 5 பந்துகளில்) எடுத்தார். ஓட்னீல் பார்ட்மேன் வீசிய அடுத்த ஓவரிலுமே இரண்டு பவுண்டரிகள் அடித்தார் கோலி. ஒருகட்டத்தில் குறைந்திருந்த ரன்ரேட், இந்த இரண்டு ஓவர்களில் காட்டிய அதிரடியால் மீண்டும் அதிகரித்தது.
38வது ஓவர் முடிவில் 6.13 ஆக இருந்த இந்தியாவின் ரன்ரேட், 43வது ஓவரில் அவர் அவுட் ஆகும்போது 6.44 ஆக அதிகரித்தது.
இதைத் தக்கவைத்த இந்திய அணி கடைசியில் 349 ரன்கள் எடுத்து, போட்டியை 17 ரன்களில் வென்றது.
முறியடிக்கப்பட்ட சாதனையும் விமர்சனங்களுக்கான பதிலும்
இந்த சதம், சர்வதேச அரங்கில் கோலி அடித்திருக்கும் 83வது சதம். ஒருநாள் போட்டிகளில் 52வது சதம். இதன் மூலம் ஒரு ஃபார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன் சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. கோலி, 2027 உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று கருதப்படுவதால், ஒருநாள் போட்டிகளில் அவர் மேலும் சில சதங்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
கோலிக்கு 37 வயது ஆகியிருந்தாலும், அவருடைய ஷாட்களில் இருந்த துல்லியம், அவரது அணுகுமுறையில் இருந்த உறுதி, ஓடுவதில் இருந்த வேகம், நீண்ட இன்னிங்ஸை ஆடிய ஃபிட்னஸ் அனைத்துமே இன்னும் முன்பைப் போல் இருப்பதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன், பெரிய இடைவெளிக்குப் பின்பு கோலி ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய போது அவருடைய ஃபார்ம் பற்றி நிறைய கேள்விகள் இருந்தன. அங்கு முதல் இரண்டு போட்டிகளிலுமே அவர் டக் அவுட் ஆனதால், விமர்சனங்கள் வலுப்பெற்றன. தொடர்ச்சியாக ஆடாமல் இருப்பதால் அவர் தடுமாறுகிறார் என்று பலரும் கூறினார்கள். ஆனால், சிட்னியில் அரைசதம், இப்போது ராஞ்சியில் சதம் என அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னுடைய ஃபார்மை நிரூபித்திருக்கிறார் விராட் கோலி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு