“டெல்லியில் நடந்த வங்கதேச அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் நான் என் விக்கெட்டை இழந்தவுடன், என் நண்பனிடமிருந்து மெசேஜ் ஒன்று வந்திருந்தது. அதில் அவன், ‘என் மொபைலின் டேட்டா தீர்ந்துவிட்டது, நீ ஆடுவதைப் பார்க்க நான் ரீசார்ஜ் செய்தேன். போட்டியை நான் பார்த்துக் கொண்டிருந்த போது நீ அவுட்டாகிவிட்டாய். நண்பா சஞ்சு, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? எதனால் இப்படி செய்து கொண்டிருக்கிறாய்?’ என கோபமாக அவன் மெசேஜ் செய்திருந்தான்.”
“முதலில் அதைப் பார்த்தவுடன் எனக்கு அவன் ஏன் எனக்கு கிரிக்கெட் ஆட செல்லித் தருகிறான் என கோபம் வந்தது. ஆனால் இப்போது, இவர்கள் அனைவரும் நான் நன்றாக ஆட வேண்டுமென விரும்புகிறார்கள் என்று புரிந்துகொண்டேன்.”
இந்த நிகழ்வு பற்றி சஞ்சு சாம்சன் சில தினங்களுக்கு முன் என்னிடம் கூறினார். ஒரு வீரர் நன்றாக செயல்பட வேண்டுமென எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன்.
மைதானத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், டிவியில் பல கோடி நபர்கள் மற்றும் இவர்கள் அத்தனை பேரையும் தாண்டி நம்மை நேசிப்பவர்கள் என பலர் இருக்கிறார்கள்.
டர்பனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை தொடக்க வீரராக சதமடித்திருக்கிறார். இந்த சதத்தை கொண்டாடியவர்களில் அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமில்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரும் அடங்குவர்.
சஞ்சு சாம்சனின் அடுத்தடுத்த இரண்டாவது சதத்தை கண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஒரு போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்த தனது சாதனையை ஒரு வீரர் சமன் செய்திருப்பதை ரோகித் சர்மா மிகவும் விரும்புவார்.
ரோகித் வழியில் ஒருநாள், டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பாரா?
சொல்லப்போனால், சஞ்சு சாம்சனில் தன்னுடைய தொடக்க கால சாரம் இருப்பதை ரோகித் சர்மா உணர்கிறார். இந்த உலகமே அவரது திறமையை கண்டு வியக்கும் போது, அதற்கு ஏற்ப ஒரு பெரிய இன்னிங்ஸை அவர் ஆடியதில்லை, இதுவே அவரை அப்படி உணர வைத்துள்ளது.
கிட்டத்தட்ட 5 ஆண்டு தடுமாற்றத்திற்கு பிறகே ஒருநாள் நாள் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். அதன் பின், அவரது கிரிக்கெட் வாழ்க்கையே மாறியது. அவர் டெஸ்ட் போட்டியிலும் கூட அதிரடியான பேட்ஸ்மேனாக பரிணமித்தார்.
சஞ்சு சாம்சனும் ரோகித் சர்மாவின் வழியை பின்பற்றுவாரா? ஏனெனில் ரோகித் சர்மா டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டியிலும் அவர் சில காலம் விளையாடாமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
கிங்ஸ்மேட் மைதானத்தில் பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர் மழை பொழிந்த சஞ்சுவின் அதிரடி ஆட்டம் இந்தியா வெற்றி பெற அடித்தளம் அமைத்தது. இந்திய அணி மொத்தமாக 17 பௌண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்களை அடித்திருந்தது, அதில் சஞ்சு சாம்சன் மட்டுமே 7 பௌண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
29 வயதான தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் இந்த ஆட்டத்தில் அடித்த 107 ரன்களில், 88 ரன்கள் பௌண்டரி, சிக்ஸர்களாலே அடிக்கப்பட்டவை.
“நீ செல்லும் வழியில் பள்ளமே இல்லை”
தென் ஆப்ரிக்கா செல்லும் முன் சஞ்சு சாம்சன் கொடுத்த ஒரு பிரத்யேக நேர்காணலில் அவரது தந்தையின் வித்தியாசமான பங்களிப்பை பற்றி குறிப்பிட்டிருந்தார்.
“சென்ற மாதம், நான் டெல்லியில் உள்ள ஃபெரோஸ் கோட்லா மைதானத்திற்கு பயிற்சிக்கு செல்லுமுன், தந்தையிடமிருந்து என் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதற்கு முன் நடந்த போட்டியில் நான் குறைந்த ரன்களில் என் விக்கெட்டை பறிகொடுத்திருந்தேன். இரண்டாம் போட்டி துவங்குவதற்கு முன், ‘மகனே, என்னை ஒரு கதை சொல்ல விடு’, என்றார். டெல்லி ஜிடிபி நகரின் கிங்ஸ்வே கேம்ப் பகுதியில் நாங்கள் தங்கியிருந்த காலத்தின் கதையை தந்தை கூறினார், மற்றவர்கள் போல நானும் அந்த சமயத்தில் தெருவொர கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தேன். ஒரு கால்பந்து வீரராக இருந்த போதிலும், தந்தை எனக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுத்தார். எங்கள் வீட்டின்முன் இருந்த சாலையிலே கிரிக்கெட் ஆடுவோம். ஒரு நாள் நான் அவுட் ஆனேன், அதுவும் கிளீன் போல்ட்.”
‘அப்பா, அந்த சாலையில் ஒரு பள்ளம் உள்ளது, பந்து அந்த பள்ளத்தில் விழுந்ததாலேயே நான் போல்டானேன்,’ என கூறினேன்.
“அடுத்த நாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது, சாலையில் அப்பா எதோ வேலை செய்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன். நான் கூர்ந்து கவனித்தபோது, சாலையில் பள்ளம் இருந்த இடத்தில் அவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பா அவர் கையால் சிமெண்ட் கலவையை பூசி கொண்டிருந்தார். பிறகு அப்பா சொன்னார், மகனே, “இப்போது எந்த பள்ளமும் இல்லை!” என்று சஞ்சு சாம்சன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்தார்.
அவர் தந்தை அன்று சாலையில் இருந்த அந்த தடையை மட்டும் அகற்றவில்லை. வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் தடைகளை எதிர்கொள்ள அவரது குடும்பம் அவரை ஊக்குவித்ததை சாம்சனின் இந்த வார்த்தைகள் நமக்கு உணர்த்துகின்றன.
“என் தந்தையின் பல நண்பர்கள் இதை கூறியுள்ளனர், ‘ஏய், உன் குழந்தைக்காக நீ மிகவும் கடினமாக உழைக்கிறாய். இது எல்லாம் சாத்தியமில்லை. நீ காணும் கனவு நிறைவேறப் போவதில்லை. உன் மகனை நீ எப்படி இந்திய கிரிக்கெட் அணிக்கு கொண்டு செல்வாய்? இது சாத்தியமில்லை.’ என்று கூறி தந்தையின் நண்பர்கள் அவரிடம் அனைத்தையும் விட்டுவிட சொல்வார்கள்.
“அது என் கைகளில் இல்லை. ஆனால், நான் அதனை சில வருடங்களுக்கு பிறகு பார்ப்பேன்,” என அவர்களுக்கு அப்பா பதிலளித்தார்.
சஞ்சுவின் கனவு
“நான் ஃபெரோஸ் ஷா கோட்லா ( தற்போது அருண் ஜெட்லீ மைதானம் ) மைதானத்தை அடைந்த போது, அப்பா சொன்னார், ‘மகனே, நான் நினைத்த அந்த நாள் இது, இன்று அந்த கனவு நிறைவேறிய நாள். இந்த கதையுடன், அவர் எனக்கு கிரிக்கெட்டின் முக்கியதுவம் என்ன என்பதையும் மற்றும் கனவு நனவாக எவ்வளவு கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் கூறினார்”, என்றார் சஞ்சு சாம்சன்.
டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சனால் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியாத போதிலும், அவர் ஹைதராபாத் மற்றும் டர்பன் டி20 போட்டிகளில் அடுத்தடுத்த சதம் அடித்தார். இதன் மூலம், டி20 ஆட்டங்களில் அடுத்தடுத்து 2 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தனது முன் மாதிரியாக கருதும் ரோகித் சர்மாவைப் போலவே இவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் திறமையை நிரூபிப்பார் என அவரது தந்தை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் நம்பிக்கையில் உள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே அவரது கனவு என சஞ்சு சாம்சனும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.