படக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும்.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்றது.
முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 39.5 ஓவர்களில், ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.
குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும். இதன் மூலம், மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 75 ரன்களும், விராட் கோலி ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்தனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். விராட் கோலி தொடரின் நாயகன் விருதை வென்றார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்ததால், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அதே நேரத்தில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, டி காக் 106 ரன்கள் எடுத்திருந்தபோது பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச முடிவு செய்தது.
தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக ரயன் ரிக்கில்டன் மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்காவிற்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து, ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் ரிக்கில்டன். அடுத்ததாக கேப்டன் டெம்பா பவுமா களமிறங்கினார்.
இந்த ஜோடி பத்து ஓவர்கள் வரை பொறுமையாகவே ஆடி வந்தது. அப்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. டி காக் 21 ரன்களும், டெம்பா பவுமா 19 ரன்களும் எடுத்திருந்தனர்.
அதன் பிறகு, டி காக் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுபுறம் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த டெம்பா பவுமா 48 ரன்களில், ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதற்கு முந்தைய ஒருநாள் போட்டியில் பவுமா 46 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல, இந்தத் தொடரில் ஜடேஜா வீழ்த்திய முதல் விக்கெட்டும் இதுதான்.
இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த டி காக்- டெம்பா பவுமா பார்ட்னர்ஷிப் உடைந்தது இந்தியாவுக்கு உற்சாகத்தை அளித்தது. அதன் பின்னர் மேத்யூ ப்ரீட்ஸ்கே களமிறங்கினார்.
டி காக் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது (93 ரன்கள்), 28வது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் மேத்யூ ப்ரீட்ஸ்கே. அவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய எய்டன் மார்க்கரமும் அதே ஓவரில், கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஹர்ஷித் ராணா வீசிய 29வது ஓவரில், ஒரு சிக்ஸர் மூலமாக சதத்தை எட்டினார் டி காக். பின்னர் அவர் 32வது ஓவரில் பிரசித் பந்தில் ஆட்டமிழந்தார். 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன், 89 பந்துகளில் 106 ரன்களை எடுத்திருந்தார் டி காக். அப்போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை எடுத்திருந்தது.
அதன்பிறகு, டெவால்ட் பிரெவிஸ் மற்றும் மார்கோ ஜான்சன் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் 38வது ஓவரில், குல்தீப் இருவரையும் ஒரே ஓவரில் அவுட்டாக்கி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 234/5 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, 270 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குல்தீப் 10 ஓவர்களில் 41 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பிரசித் கிருஷ்ணாவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அர்ஷ்தீப் சிங் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்தியா வெற்றிபெறுவதற்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி இந்திய அணிக்கு ஒரு உறுதியான தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து 155 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 271 ரன்கள் என்ற இலக்கை எளிதான ஒன்றாக மாற்றினர்.
ரோஹித் சர்மா 54 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் அரை சதமடித்தார்.
இருப்பினும், 26வது ஓவரின் கடைசி பந்தில், 75 ரன்கள் எடுத்திருந்தபோது, கேசவ் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. அவர் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன், 73 பந்துகளில் 75 ரன்கள் எடுத்திருந்தார்.
அதன் பிறகு, ஜெய்ஸ்வாலுடன் இணைந்த விராட் கோலி, அதிரடியாக அணியின் ரன்களை உயர்த்தினார்.
ஜெய்ஸ்வால் 111 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 100 ரன்களை எட்டினார். மறுமுனையில், கோலியும் அரை சதத்தைக் கடந்தார்.
இறுதியில், 39.5 ஓவர்களில் 271 ரன்களை எடுத்த இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில், இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதேசமயம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.
அடுத்ததாக, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். முதல் போட்டி கட்டாக்கில் நடைபெறும்.