- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
இந்திய அணி 2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணியிடம் வெற்றியை தாரை வார்த்தது. இந்திய அணியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் மூன்றே ஓவர்களில் மாறிப் போனது.
செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது தென் ஆப்ரிக்க அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது. 125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.
மிரட்டிய தென் ஆப்ரிக்கா, தடுமாறிய இந்தியா
இந்திய அணியின் டாப் ஆர்டரை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆட்டம் காண வைத்தனர். முதல் போட்டியில் சதம் அடித்த சாம்ஸன், திலக் வர்மா, சூர்யகுமார், அபிஷக் சர்மா ஆகியோர் இந்தப் போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
யான்சென், கோட்ஸி, சிமிலேன் ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்களும் சேர்ந்து சாம்ஸன், அபிஷேக், சூர்யகுமார் விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இந்திய அணி 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பவர்ப்ளேயில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஆனால் தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் கேசவ் மகராஜ், பீட்டர், மார்க்ரம் ஆகியோர் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினார்களேத் தவிர விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை. கடைசி நேரத்தில் பீட்டர், மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் கூட்டணி கடைசி நேரத்தில் 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். இந்திய பேட்டர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது பெரிய அளவுக்கு ரன்சேர்க்க முடியாததற்கு முக்கியக் காரணமாகும்.
இந்திய பேட்டர்கள் சாம்ஸன், அபிஷேக் சர்மா, திலக்வர்மா ஆகியோர் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டவே முயன்று நேற்று ஆட்டமிழந்தனர். அதிலும் குறிப்பாக சாம்ஸன் முதல் ஓவரின் 3வது பந்திலேயே ஸ்டெம்பை விட்டு விலகி அடிக்க முற்பட்டு யான்சென் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். பந்துவீச்சாளரின் பந்துவீச்சை கணிக்கக்கூட சிறிது நேரம் எடுக்காமல் பேட்டை சுழற்றினால் இப்படி விலை கொடுக்க நேரிடும்.
அதேபோல அபிஷேக் சர்மாவின் மோசமான ஃபார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பான தொடக்கத்தை அளித்தார் என்பதற்காக வாய்ப்புப் பெற்ற அபிஷேக் சர்மா இலங்கை தொடருக்குப்பின் பெரிதாக எந்த ஆட்டத்திலும் இன்னும் ரன்கள் சேர்க்கவில்லை.
அதேபோல ரிங்கு சிங் பெரிய ஃபினிஷராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை ரிங்கு சிங் சரிவர பயன்படுத்தவில்லை. ரிங்கு சிங் இந்த ஆட்டத்திலும் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மானம் காத்த ஹர்திக் பாண்டியா
இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தபின் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை நிறுத்தி நிதானமாக பேட் செய்தார். ஹர்திக் தனது முதல் 29 பந்துகளில் 19 ரன்களில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்திருந்தார். இந்திய அணியின் ரன்சேர்க்கும் வாய்ப்பை தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் கட்டிப்போட்டனர். நடுப்பகுதி 5 ஓவர்களில் இந்திய அணி 24 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்க்க முடிந்தது, 35 பந்துகளில் ஒரு பவுண்டரிகூட இந்திய அணி அடிக்கவில்லை. 18வது ஓவரில்தான் ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்தார். அதன்பின் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸர் என பாண்டியா அடித்து 100 ரன்களைக் கடப்பதற்கு உதவினார்.
வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம்
தென் ஆப்ரிக்க அணி எளிதாக 124 ரன்களை சேஸ் செய்யும் நினைப்புடன்தான் களமிறங்கியது. ரெக்கல்டான், ஹென்ட்ரிக்ஸ் அதிரடியாக பவுண்டரிகள் அடித்து தொடங்கினர். ரெக்கல்டான்(13) விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்தியபின், ஆட்டம் சூடுபிடித்தது.
வருண் சக்ரவர்த்தி எனும் மாயஜாலப் பந்துவீச்சாளர் பந்துவீச வந்தபின், தென் ஆப்பிரிக்க பேட்டர்கள் ரன் சேர்க்கத் திணறினர், பந்து எந்தத் திசையில் வரும் என கணித்து ஆடவே படாதபாடுபட்டனர். இதனால் வருண் பந்துவீச்சில் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது, 5 விக்கெட்டுகளை வருண் வீழ்த்திக் கொடுத்து வெற்றிக்கு அடித்தளமிட்டார். சர்வதேச அரங்கிலும் முதல்முறையாக டி20 போட்டியில் 5 விக்கெட்டுகளை வருண் வீழ்த்தினார்.
சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள் எனத் தெரிந்தபின்னும் அக்ஸர் படேலுக்கு ஓவர்களை வழங்காமல், வேகப்பந்துவீச்சுக்கு வழங்கி, கிடைத்த வெற்றி வாய்ப்பை கேப்டன் சூர்யகுமார் தவறவிட்டார்.
பேட்டராக ஜொலித்த கோட்ஸி
காயத்தால் நீண்ட ஓய்வுக்குப்பின் களத்துக்கு வந்த கோட்ஸி முதல் போட்டியிலும் 23 ரன்களை அதிரடியாகக் குவித்தார். இந்த ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் இருந்தது. வெற்றிக்கு 26 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அர்ஷ்தீப் வீசிய ஓவரில் சிக்ஸரும், ஆவேஷ் கான் ஓவரில் 2 பவுண்டரியும் அடித்து தென் ஆப்ரிக்காவின் தோல்வி அழுத்தத்தை பெருமளவுகுறைத்து, பேட்டராக ஜொலித்தார்.
தென் ஆப்ரிக்க அணி 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியை வெற்றிக்கு அழைத்து வந்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டெப்ஸ் ஆட்டம் அருமையானது.
டி20 உலகக் கோப்பை முடிந்தபின், இதுவரை 6 போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணிவிளையாடிய நிலையில் முதல் டி20 வெற்றியை நேற்றுதான் அந்த அணி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வருண் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்
அதேநேரம், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் உழைப்பு வீணானது. சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருணின் மாயஜாலப் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாட கடும் சிரமப்பட்ட தென் ஆப்ரிக்காவின் 4 பேட்டர்கள் க்ளீன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தனர்.
தவறாகிப் போன சூர்யகுமாரின் முடிவு
16 ஓவர்கள் வரை ஆட்டம் இந்திய அணியின் பக்கம்தான் இருந்தது. 7 விக்கெட்டுகளை தென்ஆப்ரிக்கா இழந்து தோல்வியின் பிடியில் இருந்தது. கடைசி 24 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 17, 18 மற்றும் 19 ஓவர்களை வீச வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் மற்றும் ஆவேஷ் கானை பயன்படுத்திய கேப்டன் சூர்யகுமாரின் முடிவு தவறாகிப் போய்விட்டது.
அர்ஷ்தீப் வீசிய 17-வது ஓவரில் கோட்ஸி ஒரு சிக்ஸரும், ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரியும் என12 ரன்கள் குவித்தனர். ஆவேஷ் கான் வீசிய 18-வது ஓவரில் கோட்ஸி 2 பவுண்டரிகள் உள்பட 12 ரன்கள் குவித்தார். அர்ஷ்தீப் வீசிய 19-வது ஓவரில் ஸ்டெப்ஸ் 4 பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
வேகப்பந்துவீச்சை விளாசுகிறார்கள் எனத் தெரிந்தபின்னும் தொடர்ந்து ஆவேஷ்கான், அர்ஷ்தீப் இருவருக்கும் டெத் ஓவரில் சூர்யகுமார் வாய்ப்பளித்தது தவறு என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா வர்ணனையின்போது தெரிவித்தார்.
“நான் பெருமைப்படுகிறேன்”
தோல்விக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில் “டி20 போட்டியில் 120 ரன்கள் குறைவானதுதான். இருப்பினும் நாங்கள் பந்துவீசிய அணுகுமுறை பாராட்டுக்குரியது, பெருமைப்படுகிறேன். 125 ரன்களை டிபென்ட் செய்யும்போது ஒருபந்துவீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரணமல்ல. இந்த வாய்ப்புக்குத்தான் வருண் நீண்ட காலமாக காத்திருந்தார். இரு ஆட்டங்கள் முடிந்துள்ளன, அடுத்த ஆட்டத்தில் பல சுவாரஸ்யங்கள் உள்ளன. ஜோகன்னஸ்பர்க்கில் பல வேடிக்கைகள் காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.