படக்குறிப்பு, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா.கட்டுரை தகவல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைப்படி மாற்றப்பட்ட 131 என்ற இலக்கை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அடைந்தது ஆஸ்திரேலியா.
பெர்த் நகரிலுள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இது இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ஷுப்மன் கில்லுக்கு முதல் போட்டி.
ஷுப்மன் கில், ரோஹித் ஷர்மா இருவரும் ஓப்பனர்களாகக் களமிறங்கினார்கள். முதல் பந்திலேயே தன் ரன் கணக்கைத் தொடங்கிய ரோஹித், சில பெரிய ஷாட்கள் அடிக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தார். மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் இருவரின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவரால் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை.
ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஹேசல்வுட் வீசிய பந்தை சரியாகக் கணிக்க முடியாத ரோஹித், இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முந்தைய பந்துகளை வெளியே வீசிக்கொண்டிருந்த ஹேசல்வுட், நான்காவது பந்தை கொஞ்சம் பின்னால் பிட்ச் செய்ததோடு மட்டுமல்லாமல், லைனையும் சற்று உள்ளே கொண்டுவந்தார். ஹேசல்வுட்டின் வழக்கமான பௌன்ஸ் ரோஹித்துக்கு அதிர்ச்சியளித்தது. அவர் தன்னுடைய பேட்டை விலக்க முடியாமல் போக, பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்றிந்த மேட் ரென்ஷா கையில் தஞ்சமடைந்தது. 14 பந்துகளை சந்தித்த ரோஹித் 8 ரன்கள் எடுத்தார்.
கோலி டக்-அவுட்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 8 பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆனார் விராட் கோலி.
ரோஹித்துக்கு அடுத்து களமிறங்கிய கோலியாலும் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. முதல் 7 பந்துகளிலும் ரன் எடுக்க முடியாத அவர், எட்டாவது பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார். ஸ்டார்க் வீசிய பந்து ஸ்டம்ப் லைனுக்கு வெளியே நன்கு சென்றது. அதைத் துரத்திச் சென்று கோலி அடிக்க, பாயின்ட் திசையில் நின்றிருந்த கூப்பர் கானலி பாய்ந்து கேட்ச் செய்தார். 8 பந்துகளை சந்தித்து ரன்னே எடுக்க முடியாமல் வெளியேறினார் விராட் கோலி.
இரண்டு சீனியர் வீரர்கள் வெளியேறிய அதிர்ச்சியில் இருந்த இந்திய அணிக்கு 9வது ஓவரில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. நாதன் எல்லிஸ் வீசிய முதல் பந்திலேயே கீப்பரிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார் புதிய கேப்டன் ஷுப்மன் கில். அவர் 18 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களில் அவுட் ஆக, 45/4 என மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது இந்திய அணி.
மழையால் பாதித்த ஆட்டம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, போட்டியின் இடையே மழை குறுக்கிட்டது.
பெர்த் நகரில் மழை அடிக்கடி ஆட்டத்தை பாதித்தது. அதனால் போட்டி அடிக்கடி நிறுத்தப்படுவதும், மீண்டும் தொடங்குவதும், மீண்டும் நிறுத்தப்படுவதுமாகவே சென்றது. இதனால் ஓவர்களும் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. ஆரம்ப கட்ட தடைகளுக்குப் பின் 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டம், மேலும் தொடர்ந்த மழையில் கடைசியில் 26 ஓவர் ஆட்டமாக மாறியது.
மழை ஒருபக்கம் தன் வேலையைக் காட்டிக்கொண்டிருக்க, ஆஸ்திரேலிய பௌலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்கள். சரியான இடத்தில் பந்துவீசி ரன் எடுப்பதை கடினமாக்கினார்கள். அதுமட்டுமல்லாமல், கேப்டன் மிட்செல் மார்ஷ் எடுத்த சில முடிவுகள் அந்த அணிக்கு சாதகமாக அமைந்தன.
உதாரணமாக, 12வது ஓவரில் ஏற்பட்ட மழை தடங்கலுக்குப் பிறகே ஆட்டம் 35 ஓவர் கொண்டதாக மாறிவிட்டது. அதனால் ஒரு பௌலர் அதிகபட்சமாக 7 ஓவர்கள் தான் பந்துவீச முடியும் என்ற நிலை ஏற்பட்டது. முதல் ஸ்பெல்லில் ஓரேயடியாக 6 ஓவர்கள் பந்துவீசியிருந்த ஹேசல்வுட்டை 14வது ஓவரும் எடுத்து வந்தார் மார்ஷ். அதுவே இந்த ஆட்டத்தில் ஹேசல்வுட்டின் கடைசி ஓவராக அமைந்திருக்கும். ஆனால், ஷ்ரேயாஸ் ஐயரைக் குறிவைத்து, அவர் விக்கெட்டை எடுக்க மிகவும் தைரியமான அந்த முடிவை எடுத்தார். அதற்குப் பலனாக அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷ்ரேயாஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ஹேசல்வுட்.
அதேவேகத்தில் மிட்செல் ஸ்டார்க்கையும் விடாமல் பயன்படுத்தினார் அவர். தடுமாறிக்கொண்டிருந்த இந்திய பேட்டர்களை தன்னுடைய பௌலர்கள் மூலம் மேலும் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தார். மிகவும் அட்டாகிங் கேப்டன்சியாகக் கருதப்பட்டாலும், ஆட்டத்தின் சூழ்நிலை உணர்ந்து அவர் செய்த செயலுக்கு தொடர்ந்து பலன் கிடைத்தது. வல்லுநர்களும் அவருடைய முடிவுகளை வெகுவாகப் பாராட்டினார்கள்.
அந்த 4 விக்கெட்டுகள் வேகமாக போனதால், ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த கே.எல்.ராகுல், அக்ஷர் பட்டேல் இருவரும் நிதானமாக ஆடினார்கள். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து மட்டுமே அடித்தார்கள். போட்டி 26 ஓவர்களாகக் குறைந்த பின்னர், ரன் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடித்து ஆடத் தொடங்கினார்கள். அதன் விளைவாக, 31 ரன்கள் எடுத்திருந்த அக்ஷர் பட்டேல் மேத்யூ கூனமென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் கே.எல்.ராகுல் மற்றும் நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் அடித்த சில பௌண்டரிகளால் இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தன் அறிமுக போட்டியில் ஆடிய நித்திஷ் குமார் ரெட்டி 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசல்வுட், கூனமென், மிட்செல் ஓவன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இலக்கு மாற்றம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிஎல்எஸ் முறைப்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி இலக்கு மாற்றப்பட்டது. 26 ஓவர்களில் 131 என்ற இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு எப்போதுமே சவால் கொடுப்பவரான டிராவிஸ் ஹெட்டை இரண்டாவது ஓவரிலேயே வெளியேற்றி நம்பிக்கை கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். ஆனால், அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.
மேத்யூ ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தைக் காட்டினார். ஷார்ட் வெளியேறியதும் மார்ஷ் உடன் இணைந்து சிறப்பாக ஆடி, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் ஜாஷ் ஃபிலிப். அவருக்கு அடுத்து வந்த அறிமுக வீரர் ரென்ஷாவும் எளிதாக பேட்டிங் செய்து ரன் சேர்த்தார். இந்திய தரப்பில் அவர்களுக்கு பெரிய சவால்களைக் கொடுக்க முடியவில்லை.
இந்திய பௌலர்களில் மொஹம்மது சிராஜ், அக்ஷர் பட்டேல் இருவரும் மட்டுமே ஓரளவு சிக்கனமாகப் பந்துவீசினார்கள். மற்ற வீரர்கள் அனைவருமே ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் வாரி வழங்கினார்கள். அதனால் எந்தவித சிக்கலும் இல்லாமல் 21.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா.
மிட்செல் மார்ஷ் 46 ரன்களுடனும், ரென்ஷா 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய பௌலர்களில் அர்ஷ்தீப், அக்ஷர், வாஷிங்டன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங், கேப்டன்சி இரண்டிலும் அசத்திய மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
கேப்டன் கில் பேசியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, “ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது” என்றார் கேப்டன் கில்.
தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கில், “ஆஸ்திரேலியாவில் ஆடுவது எப்போதுமே கடினமானது. பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழக்கும்போது நீங்கள் எப்போதுமே பின்தங்கிவிடுவீர்கள். இந்தப் போட்டியில் சில சாதகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன, சில படிப்பினைகளும் கிடைத்திருக்கின்றன. 26 ஓவர்களில் 130 ரன்களை டிஃபண்ட் செய்யும்போது ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது” என்று கூறினார்.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் அக்டோபர் 23ம் தேதி நடக்கிறது.