தற்போது லெபனானில் ஹெஸ்பொலாவுடன் போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல், லெபனானில் ஹெஸ்பொலா, காஸாவில் ஹமாஸ் என இரு முனைகளிலும் போரிட்டு வருகிறது.
இந்த மோதல் தொடர்ந்து தீவிரமடைந்தது, உலகெங்கும் உள்ள அரசியல்வாதிகள், ஆய்வாளர்களைக் கவலையடையச் செய்தது. இந்த மோதல் மத்தியக் கிழக்கில் முழு அளவிலான போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சத்தை அனைவரும் வெளிப்படுத்த இந்த மோதல் வித்திட்டது.
இந்தச் சூழலில்தான், லெபனானில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியோடு, காஸாவில் இன்னும் போர் நிறுத்தம் அறிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய கிழக்கு குறித்து செய்தி சேகரித்துவரும் பிபிசி செய்தியாளர்கள் இதுகுறித்து என்ன கூறுகின்றனர்?
இஸ்ரேலிய ராணுவம் சோர்ந்துவிட்டதா?
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் பிபிசி அரபு சேவை செய்தியாளர் கேரைன் டோர்பி, ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவை இஸ்ரேல் அணுகிய விதத்தில் வேறுபாடு இருப்பதாகக் கூறுகிறார். அவர் கூறுவது என்ன?
இஸ்ரேல், பிராந்தியத்தில் உள்ள தனது இரு முக்கிய எதிரிகளான, ஹெஸ்பொலா மற்றும் ஹமாஸை, எவ்வாறு அணுகியது என்பதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. காஸா தற்போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழுள்ள ஒரு பகுதி. ஆனால், லெபனான் தனிப்பட்ட இறையாண்மை கொண்ட ஒரு நாடு.
காஸா தற்போது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழுள்ள ஒரு பகுதியாக உள்ளது. ஆனால், லெபனான் முன்பு இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும், ஹெஸ்பொலா மற்றும் பிற குழுக்களின் கடும் எதிர்ப்புகளால் அது பின்வாங்க நேரிட்டது. தற்போது லெபனான் இறையாண்மை கொண்ட நாடு.
இஸ்ரேலிடம் மிகப்பெரிய ராணுவ திறன்களும் வான்வெளியில் தனது மேலாதிக்கமும் இருந்தபோதிலும், லெபனானில் தரைப்படை நடவடிக்கையில் அவதிப்பட்டு வருகிறது. சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த சண்டையின் முடிவிலும்கூட, தெற்கிலுள்ள நகரங்களைக் கைப்பற்றுவதில் இஸ்ரேல் தோல்வியடைந்தது. அதேவேளையில், இஸ்ரேலின் வடக்குப் பகுதிக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய ஹெஸ்பொலாவின் ராக்கெட் ஏவுதிறனைச் செயலிழக்க வைக்க முடியவில்லை.
இந்தச் சூழலில், ஹெஸ்பொலா தனது தாக்குதல்களை இஸ்ரேலுக்குள் மேலும் தீவிரப்படுத்தியது மட்டுமின்றி, அங்குள்ள முக்கிய நகரங்களில் மக்களின் வாழ்வைச் சீர்குலைத்து, உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. அதுவும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் தரப்பில் பலி எண்ணிக்கை அதிகரித்த நேரத்தில் இந்த நகர்வு வந்தது.
அதோடு, இஸ்ரேலால் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்த குடிமக்கள் மீண்டும் தங்கள் பகுதிகளுக்குத் திரும்புவதற்கான சூழலை உருவாக்க முடியவில்லை. ஹெஸ்பொலாவுடன் போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ள, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சம்மதிக்க வைப்பதில், இது பெரும் பங்கு வகித்திருக்கலாம்.
இவற்றோடு சேர்த்து, இஸ்ரேலிய ராணுவம் சோர்வடைந்துள்ளது. அதோடு, மேலதிக வீரர்களை போர்க்களத்திற்குக் கொண்டு வருவதில் அரசியல், பொருளாதார சிக்கல்களும் எழுந்துள்ளன.
மத்திய கிழக்கில் உலகளாவிய மற்றும் பிராந்திய உத்திகளில் நிபுணரான முனைவர் லெய்லா நிக்கோலஸ், “காஸாவில் சண்டை முடிந்த பிறகு செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்த தெளிவான திட்டம் எதுவும் இஸ்ரேலிடம் இல்லை,” என்கிறார்.
ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் வரை இந்த நிலை அப்படியே நீடிக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
இதற்கு நேர்மாறாக, லெபனானில் ஏற்கெனவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான அடிப்படைத் திட்டம் உள்ளது. அது போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னோக்கிக் கொண்டு செல்ல உதவுகிறது. கடந்த 2006இல் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர உருவாக்கப்பட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மான 1701இன் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் இருக்கிறது.
இந்த ஒப்பந்தம் அமைதிக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கட்டமைக்கிறது. இதுவே தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு அடித்தளமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், தெளிவான திட்டம் எதுவிமில்லாத காஸாவின் நிலைமையைப் போலன்றி, லெபனானில் ஏற்கெனவே அதற்கொரு கட்டமைப்பு நிலவுகிறது, அது பின்பற்றப்படுகிறது.
இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பல அம்சங்கள் தெளிவற்றவையாகவே உள்ளன. இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த தங்கள் உண்மையான குறிக்கோளைச் சிறிது மாற்றியமைத்துக் கொள்ள வேண்டியிருந்ததை இது உணர்த்துகிறது. இஸ்ரேலால் ஹெஸ்பொலாவின் அச்சுறுத்தலை முற்றிலுமாக அகற்ற முடியவில்லை என்பதோடு, ராணுவ நடவடிக்கைகள் மூலம் இஸ்ரேலின் வடக்குப் பகுதிக்குத் தனது குடிமக்கள் மீண்டும் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்யவும் முடியவில்லை.
அதேபோல், காஸாவில் போர் முடிவுக்கு வராமல், இஸ்ரேலிய தளங்கள் மீதான தனது தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று ஹெஸ்பொலா ஆரம்பத்தில் கூறி வந்தது. ஆனால் ஹெஸ்பொலா அதன் தலைமையில், ராணுவக் கட்டமைப்பில் கணிசமான சேதங்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, தனது அசல் குறிக்கோளைக் கைவிட்டதாகத் தெரிகிறது.
“நிதி ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் ஹெஸ்பொலாவுக்கு ஆதரவளிக்கும் இரான், ஹெஸ்பொலா ஒரு நீண்ட, முடிவற்ற போருக்குள் இழுக்கப்படுவதை விரும்பாது என்பது தெளிவாகிறது. அப்படி நடந்தால், அதில் தொடர்புடையவர்களை அந்த நீண்ட, முடிவற்ற போர் மிகவும் சோர்வடையச் செய்யும்,” என்று முனைவர் நிக்கோலஸ் கூறுகிறார்.
இஸ்ரேல் எதிர்ப்புக் கூட்டணியில் இருந்து ஹெஸ்பொலா விலகுகிறதா?
ஹமாஸ், ஹெஸ்பொலா, ஹூத்தி மற்றும் பிற சிறிய குழுக்கள் அடங்கிய இஸ்ரேல் எதிர்ப்புக் கூட்டணியில் ஹெஸ்பொலா விலகுவதாக இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து காஸாவில் சிலர் கருதுவதாகக் கூறுகிறார் காஸாவில் இருக்கும் பிபிசி அரபி செய்தியாளர் ஆட்னான் எல்-புஷ். அவரது விரிவான விளக்கம் இனி…
காஸாவில் உள்ள சிலர், இந்த ஒப்பந்தம் “முன்னணியில் இருக்கும் இஸ்ரேல் எதிர்ப்புக் கூட்டணி அமைப்புகள் ஒற்றுமையாக” எதிர்க்கும் உத்தியைப் பின்பற்றுவதை நிறுத்த ஹெஸ்பொலா முடிவு செய்திருப்பதைக் குறிப்பதாகக் கருதுகிறார்கள்.
இந்த உத்தி இஸ்ரேலுடனான போரின் தொடக்கத்தில் ஹெஸ்பொலா, ஹமாஸ் இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு திட்டம். காஸாவில் உள்ள பிற குழுக்கள், ஏமனில் உள்ள ஹூத்திகள், இராக்கில் உள்ள பிற சிறிய குழுக்களை உள்ளடக்கிய ஓர் “எதிர்ப்புக் கூட்டணியில்” பல்வேறு குழுக்களுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முக்கியமாக, இஸ்ரேலை எதிர்ப்பதில் ஒன்றாகச் செயல்படுவதற்கான ஒரு திட்டமாக இருந்தது. ஆனால், இப்போது ஹெஸ்பொலா அந்தத் திட்டத்திலிருந்து விலகிவிட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள்.
ஹெஸ்பொலா இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை லெபனான் அரசின் கைகளில் விட்டுவிட்டதுதான், அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதற்கும், காஸாவில் அது நடக்காததற்கும் இடையிலான முக்கிய வேறுபாடு. அதேநேரத்தில், காஸாவில் பேச்சுவார்த்தைகளை ஹமாஸ் வழிநடத்துகிறது, ரமல்லாவில் உள்ள பாலத்தீன அதிகாரத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட மறுக்கிறது.
பாலத்தீனர்களுக்கு இடையிலான பிளவுகளும், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைகளை நிர்வகிக்கும் ஓர் ஒருங்கிணைந்த, முறையாக அங்கீகரிக்கப்பட்ட நாடு இல்லாதது, காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்கான காரணங்களில் முக்கியப் பங்காற்றுகிறது.
ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்த பிறகு, அதன் தலைமைப் பதவிகளில் வெற்றிடம் நிலவுவதாகவும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இப்போது போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையைத் திறம்பட மேற்கொள்ளும் நிலையில் ஹமாஸ் இல்லை என்பதே இதன் பொருள். காஸாவுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கு இடையிலான தொடர்புகளில் உள்ள சிரமங்கள், இதை மேலும் சிக்கலாக்குகிறது.
காஸாவை சேர்ந்த எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் ஃபாத்தி சபா, “ஹமாஸ்தான் போரைத் தொடங்கியது, ஹெஸ்பொலா அல்ல என்பதன் அடிப்படையில், காஸாவில் நடப்பதையே இஸ்ரேல் தனது முக்கியப் போராகக் கருதுகிறது,” என்று பிபிசியிடம் கூறினார்.
மேலும், “லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவை தாக்குவது, காஸாவில் ஹமாஸின் திறன்களை அழித்துவிட்டதாக நினைக்கப்பட்ட நேரத்தில் இஸ்ரேலுக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு,” என்கிறார்.
ஹமாஸுடன் ஒப்பிடுகையில், ஹெஸ்பொலா அதிக ராணுவ திறன்களைக் கொண்ட ஒரு வலிமையான அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின்போது கவனத்தில் கொண்ட ஒரு காரணிகளில் இதுவும் ஒன்று என்கிறார் பேராசிரியர் சபா.
“டெல் அவிவ், ஹைஃபா போன்ற நகரங்களை அடைந்த ஹெஸ்பொலாவின் ராக்கெட்டுகள், இஸ்ரேல் மீதும் வடக்கில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீதும் வலிமிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாக” பேராசிரியர் சபா பிபிசியிடம் கூறினார்.
அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற அதன் நட்பு நாடுகளின் கவலைகளும் இஸ்ரேலின் இந்த முடிவுக்குக் காரணம் என்கிறார் பேராசிரியர் சபா. லெபனான் தலைநகர் பெயரூட் மீதான “இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு” என்று விவரிக்கப்பட்ட இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து அதன் நட்பு நாடுகள் பெரிதும் கவலை கொண்டன.
தனது முக்கிய ஆதரவாளர்களிடம் பெருகி வரும் இந்த அசௌகரியம், இஸ்ரேல் அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்கிறார் பேராசிரியர் சபா.
ஹெஸ்பொலா, ஹமாஸின் அரசியல் சூழல்
லெபனானில் போர் நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் எட்டியதற்கும், காஸாவில் ஹமாஸுடன் அதை எட்ட முடியாததற்கும் இடையே இருக்கும் ஒரு முக்கியக் காரணம், இரண்டுக்குமான அரசியல் சூழல் என்கிறார் பிபிசி அரபி மொழிக்கான ஜெருசலேம் செய்தியாளர் முகன்னத் டுடுன்ஜி. அவர் கூறுவது என்ன?
இந்தக் கட்டத்தில், இஸ்ரேலும் லெபனானும் ஓர் உடன்பாட்டை எட்டுவதில் பல காரணிகள் வழிவகுத்தன. குறிப்பாக, லெபனான் மற்றும் காஸாவின் தனித்துவமான அரசியல் மற்றும் ராணுவ எதார்த்தங்கள் இதற்குக் காரணமாக அமைகின்றன.
ஹெஸ்பொலா, லெபனானில் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் அமைப்பாக இருந்தாலும்கூட, அது மொத்த நாட்டையும் பிரதிநிதித்துவம் செய்வதில்லை. லெபனானில் உள்ள பல மதரீதியிலான மற்றும் அரசியல் ரீதியிலான குழுக்களில் ஹெஸ்பொலாவும் ஒன்று. அதோடு, அனைத்து லெபனான் மக்களும் இஸ்ரேலுடனான அதன் மோதல் குறித்து ஒரே மாதிரியான பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆனால், காஸாவின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அங்கு, ஆளும் அரசியல் சக்தியாகவும், ராணுவ சக்தியாகவும் ஹமாஸ் இருக்கிறது. அதோடு, இதேபோன்ற இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்ட வேறு சில பிரிவுகளால் ஆதரிக்கப்படுகிறது.
இதுவே, இஸ்ரேலியர்களுக்கு லெபனானில் நடக்கும் போரும், காஸாவில் நடக்கும் போரும் வித்தியாசமானது. லெபனான் மீதான ராணுவ நடவடிக்கை, வடக்கு இஸ்ரேலில் வாழ்பவர்களுக்கு இருக்கும் ராணுவ அச்சுறுத்தலை அகற்றுவதையும், அந்தப் பிராந்தியத்தில் அவர்களின் பாதுகாப்பை மீட்டெடுக்க முயல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கு மாறாக, காஸாவில் ஹமாஸை வேரறுக்கத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்தது. மேலும், அங்கு இன்னும் 101 பணயக் கைதிகளை மீட்பதையும் இஸ்ரேல் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இஸ்ரேலின் முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் யாகோவ் அமிட்ரோர் பிபிசியிடம், மோதல் லெபனானின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்று லெபனான் மக்கள் பலரும் அச்சத்தில் இருப்பதாகக் கூறினார். இது, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் காணப்படுவதைப் போன்ற அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
காஸா மோதல், லெபனான் மோதல் இரண்டிலும் தனது அணுகுமுறையை இருவேறு விதமாகப் பிரித்துக் கொள்ளும் இஸ்ரேலின் ராஜதந்திர முடிவையும் அவர் முன்னிலைப்படுத்தினார். ஹமாஸை முற்றிலுமாக ஒழிப்பதில் கவனம் செலுத்த இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்பதால், இஸ்ரேலுக்கு இது மிகவும் முக்கியமானது என்கிறார் அவர்.
போர் நிறுத்தத்தின் உண்மையான சோதனை ஒப்பந்தம் எட்டப்படுவதில் இல்லை, அதைச் செயல்படுத்துவதில் உள்ளது என்கிறார் அமிட்ரோர். மேலும், “ஹெஸ்பொலா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் அதற்கு எப்படி எதிர்வினையாற்றும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு