25
*400 இற்கும் அதிகமான ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள்…
*95 வீதம் ஈரானின் தாக்குதல் குறைந்துள்ளது என்கிறார் அமெரிக்க போர்ச் செயலாளர்…
*ஈரான் படைகள் “மனச்சோர்வு” அடைந்ததாக மகிழ்ச்சி
*ஆய்வு நிறுவனத்தின் குறை மதிப்பீடுகள்!!!
— — —
அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு ஈரான் மீது தாக்குதல் தொடுத்து இன்று திங்கட்கிழமை 23 ஆவது நாளை தொட்டுள்ளது. பிராந்திய பதற்றத்தை கடந்து இந்தோ – பசுபிக் வரையும் அச்சமான ஒரு சூழல் நிலவுகிறது.
ஈரானின் அணுசக்தி – எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா, விமானத் தாக்குதல்களை நடத்தியது.
பதிலடியாக ஈரான், இஸ்ரேலிய நகரங்கள், வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை தொடராக நடத்தியது.
அமெரிக்கா- இஸ்ரேல், ஈரான் மீது ஆயிரத்துக்கும் அதிகமான இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்க – பிரித்தானிய செய்தி ஊடகங்கள் சில தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.
ஈரான், ஆகக் குறைந்தது 400 இற்கும் அதிகமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அந்த ஊடகங்களின் புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன.
ஆர்.எஸ்.டபிள்யு என்ற போர் ஆய்வுக்கான நிறுவனம் (Institute for the Study of War -ISW) வெளியிட்ட புள்ளி விவரங்களை நியூயோர்க் போஸ்ட் (New york post) என்ற அமெரிக்க ஊடகம் வெளியிட்டிருக்கிறது.
ஆனால், இந்த ஆய்வு நிறுவனம் இஸ்ரேலிய மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே தனது ஆய்வை செய்திருக்கிறது.
ஈரான் இராணுவ அதிகாரிகள் எவரையும் இந்த ஆய்வு நிறுவனம் தொடர்பு கொண்டு விவரங்களை பெறவில்லை.
அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு இராணுவ நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்து மதிப்பிடப்பட்ட 410 முதல் 440 ஈரானிய ஏவுகணைகளில், ஏறத்தாள 290 அழிக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் போஸ்ட் (New york post) சுட்டிக்காட்டுகிறது.
ஈரான் ஏவுகணைகள் பெருமளவில் தடுக்கப்பட்டதால், ஈரான் படைகள் தற்போது “மனச்சோர்வு” (Depression) அடைந்துள்ளதாகவும் நியூயோர்க் போஸ்ட்அந்த ஆய்வு நிறுவனத்தை மேற்கோள் காட்டி விபரிக்கிறது.
அதேநேரம், ஈரான் தற்காப்பில் மாத்திரம் “பூஜ்ஜியக் கட்டுப்பாடு” (zero restraint) என்ற கொள்கையுடன், அதாவது சேதங்கள் – ஆபத்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து, நீண்ட காலத்துக்கு தாக்குதல் திறனை மேற்படுத்தும் நோக்கில், பதில் தாக்குதல்களை மாத்திரம் நடத்தி வருவதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.
பெப்ரவரி 28 ஆம் திகதி- போர் ஆரம்பத்தின் முதல் நாள் – ஈரான் வளைகுடா நாடுகளில் சுமார் 182 பொலிஸ்டிக் (ballistic missiles) ஏவுகணைகளை ஏவியது.
ஆனால், சென்ற 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 9 பொலிஸ்டிக் ஏவுகணைகள் மட்டும் நடத்தியது. இது ஈரானின் பலவீனமான நிலை என கொமண்ஸ் லைப்ரரி பார்லிமென்ட் (commonslibrary.parliament) என்ற பிரித்தானிய செய்தி ஆய்வு தளம் கூறுகிறது.
ஓப்புரேசன் எபிக் ப்யூரி (Operation Epic Fury) எனப்படும் தாக்குதல் ஆரம்பத்தில் இருந்து ஈரானின் ஏவுகணை அளவு 90% குறைந்துள்ளதாகவும், அதன் ஒரு வழி தற்கொலை ட்ரோன் தாக்குதல்கள் 95% குறைந்துள்ளது என்றும் அமெரிக்க போர் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) கடந்த வாரம் கூறியதாக இந்த செய்தி ஆய்வுத் தளம் சுட்டிகாட்டுகிறது.
அதாவது, ஈரான் இதுவரைக்கும் நடத்திய தாக்குதல்களை மேற்கு – ஐரோப்பிய ஊடகங்கள் குறை மதிப்பீடு செய்கின்றன என்பது தெரிகிறது.
ஆனால், பொது மக்களின் உயிரிழப்புகள் – காயங்கள் பற்றிய எந்த ஒரு மதிப்பீட்டையும் மேற்கு – ஐரோப்பிய ஊடகங்கள் முக்கியப்படுத்த விரும்பவில்லை.
ஈரானின் ஃபார்ஸ் நியூஸ் ஏஜென்சியில் (Fars News Agency), அல்ஜசீரா (aljazeera) போன்ற ஊடகங்கள் மாத்திரமே உயிழப்புகள் பற்றிய விவரங்களை வெளியிடுகின்றன.
-அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்