0
மீன் உணவுகளை விரும்புபவர்கள் பலர் இருந்தாலும், அந்த எல்லா வகைகளிலும் கணவாய்க்கு ஒரு தனி இடம் உண்டு. எத்தனை விதமான மீன்கள் இருந்தாலும், கிரேவியாக சமைத்தாலும், பொரித்தாலும் கணவாய் தரும் சுவை எதற்கும் ஒப்பில்லை. அதன் மென்மையும் சுவையும் உண்மையில் தனித்துவமானவை.
KFC ஸ்டைலில் சிக்கன் சாப்பிட்ட அனுபவம் அனைவருக்கும் இருக்கும். ஆனால் அதே KFC ஸ்டைலில் கணவாயை மொறுமொறுப்பாக சமைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா? வெளியில் வாங்கும் ஸ்னாக்ஸ்களை விட, வீட்டிலேயே சுத்தமாகவும் சுவையாகவும், கிரிஸ்பியாகவும் தயாரிக்க முடியும். இந்த முறையில் செய்தால், வெளியிலிருந்து வாங்கிய மாதிரி மொறுமொறுப்பான கணவாய் ஃபிரை கிடைக்கும்.
முதலில் கணவாயை நன்றாக சுத்தம் செய்து, தோலை நீக்கி வெந்நீரில் கழுவி, குறுக்காக உருளை வடிவில் துண்டுகளாக வெட்ட வேண்டும். அதன் பின்னர் சீரகப் பொடி, தனியா பொடி, கரம் மசாலா, மிளகாய் பொடி, உப்பு, முட்டை, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து ஒரு மசாலா தயார் செய்ய வேண்டும். இந்த மசாலாவில் நறுக்கிய கணவாயை நன்கு ஊறவைத்து விடுங்கள்.
அடுத்ததாக, பிரெட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாக அரைத்து, பிரெட் கிரம்ப்ஸ் போல செய்து கொள்ள வேண்டும். மசாலாவில் ஊறிய கணவாய் துண்டுகளை முதலில் அந்த மசாலாவிலேயே நனைத்து, பின்னர் பிரெட் மாவில் நன்றாக புரட்டி எடுத்து, அரை மணி நேரம் உலர விட வேண்டும்.
பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கணவாய் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக மொறுமொறுப்பாக வறுத்து எடுத்தால், KFC ஸ்டைலில் கிரிஸ்பியான கணவாய் ஃபிரை தயாராகிவிடும். இதை சாஸ் அல்லது மயோனைஸுடன் சேர்த்து சாப்பிட்டால், சுவை இன்னும் அலாதியாக இருக்கும். வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஸ்நாக் அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.