• Mon. Apr 6th, 2026

24×7 Live News

Apdin News

Liquor Death | விஷம் கலந்த மது குடித்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மூவர் கைது!

Byadmin

Apr 6, 2026


ஒரே பாட்டிலில் மது அருந்திய மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஏதோ சதி நடந்திருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

காவல்துறையின் தகவலின்படி, உயிரிழந்த மூவரும்- மளிகை கடை உரிமையாளரான பாபுராம் (60), அவரது கடையில் பணிபுரிந்த ஜிதேந்திரா (35) மற்றும் அங்கித் என்கிற தௌலத் (40) கடந்த வெள்ளிக்கிழமை மாலை அரசு அங்கீகாரம் பெற்ற நாட்டு மது விற்பனை நிலையத்தில் மதுவை வாங்கி, அங்கேயே அருந்த தொடங்கினர்.

எனினும், மது அருந்திய சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டதுடன், வயிற்றுவலியும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஜிதேந்திரா மற்றும் அங்கித் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாபுராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், மீரட் மண்டல கூடுதல் காவல்துறைத் தலைவர் (ADG) பானு பாஸ்கர், மாவட்ட ஆட்சியர் வி.கே. சிங், முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) அவினாஷ் பாண்டே மற்றும் மாவட்ட கலால் துறை அதிகாரி பிரதீப் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த மதுபானம் ‘நச்சுத்தன்மை வாய்ந்ததா அல்லது காலாவதியானதா’ என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று SSP அவினாஷ் பாண்டே தெரிவித்தார். அந்த மது பாட்டிலில் குறிப்பிடப்பட்டிருந்த உற்பத்தித் தேதி பிப்ரவரி 11, 2026 என்று இருந்தது. மேலும், அதே தொகுதியைச் சேர்ந்த (batch) மற்ற பாட்டில்கள் குறித்து இது போன்ற எந்த புகாரும் வரவில்லை.

கலால் துறை ஆய்வக அறிக்கையில் மெத்தனால் அல்லது குளோரல் ஹைட்ரேட் போன்ற நச்சு பொருட்கள் ஏதும் இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இச்சம்பவம் சாதாரண மது அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்ல என்றும், ஒரு சதியின் பகுதியாக அரங்கேற்றப்பட்ட கொலை என்றும் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளையும், தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களையும் ஆய்வு செய்ததுடன், அப்பகுதி மக்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், இந்த வழக்கு சந்தேகத்திற்குரிய ஒன்றாக கருதப்பட்டது.

காவல் துறையினரின் விசாரணையின் போது, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான பவன் அஹ்லாவத், உயிரிழந்த அங்கித்தின் சகோதரியான அல்காவுடன் தனக்கு நீண்ட காலமாக தொடர்பு இருந்து வந்ததாக ஒப்புக்கொண்டார்.

தனது சகோதரருக்கு இருந்த மது பழக்கத்தாலும், அவரது வன்முறை சார்ந்த நடவடிக்கைகளாலும் அல்கா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இதன் விளைவாகவே, அங்கித்தை கொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டது.

அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பவன் தனக்கு அறிமுகமான அசோக் வர்மா என்பவரிடம் இருந்து நச்சு ரசாயனத்தை பெற்றார். அந்த ரசாயனத்தை ஒரு பாக்கெட் மதுவில் கலந்து, மீண்டும் அந்த பாக்கெட்டை மூடி (seal செய்து), அங்கித்திடம் ஒப்படைத்தார்.

அந்த மதுவை அங்கித் அருந்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் உடனிருந்த ஜிதேந்திராவும் பாபுராமும் அதே பாட்டிலில் மது அருந்தியதால், அவர்களும் உயிரிழந்தனர். காவல்துறையினர் அல்கா, பவன் அஹ்லாவத் மற்றும் அசோக் வர்மா ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

By admin