பட மூலாதாரம், X/@isro
இந்திய மண்ணிலிருந்து, இது வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை சாத்தியமாக்கியது LMV3-M5 ராக்கெட். இது’பாகுபலி’ ராக்கெட் என்று பரவலாக அழைக்கப்படுகிறது.
இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் ஞாயிறன்று 4410 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இதுவரை வேறு நாடுகளை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி அந்த நிலைமை இல்லை. இது இந்திய விண்வெளி துறைக்கு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன், “செயற்கைகோள் ஏவுதல் கடினமாகவும் சவாலானதாகவும் இருந்தது. வானிலை ஒத்துழைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் வெற்றியடைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்திய கப்பற்படையின் பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் CMS-03 ஐ விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள்” என்று பிரதமர் மோதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாகுபலி திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில், ” இந்தியாவுக்கு இது பெருமையான தருணம். இந்த ராக்கெட் தனது வலிமை மற்றும் பளுவின் காரணமாக பாகுபலி என்றழைக்கப்படுவதால் பாகுபலி (திரைப்பட) குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
LMV3 ராக்கெட் சந்திரயான் -3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாகும். இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுவேதான் ககன்யான் திட்டத்திலும் பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவிக்கிறது.
இதற்கு முன்பு செலுத்தப்பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் எவை?
இந்தியா இதற்கு முன்பு, CMS-03 செயற்கைக்கோளை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
2018-ம் ஆண்டு ஏவப்பட்ட GSAT 11 செயற்கைக்கோள் 5,854 கிலோ எடை கொண்டது. இது தென் அமெரிக்காவில் பிரான்ஸ் நாட்டின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருக்கும் ஃப்ரெஞ்ச் கியானா என்ற பகுதியில் கோரோவ் என்ற இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து Ariane-5 VA-246 எனும் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் முக்கிய ஏவுதளங்களில் ஒன்றாகும்.
Geostationary orbit -ல்(புவிநிலை வட்டப்பாதை) இதை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் வெவ்வேறு நாடுகளால் ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் சில : பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தால் 2013-ம் ஆண்டு ஏவப்பட்ட Inmarsat-4A F4 எனும் செயற்கைக்கோள் 6469 கிலோ எடை கொண்டிருந்தது. 2012-ம் ஆண்டு ஏவப்பட்ட EchoStar XVII எனும் அமெரிக்க செயற்கைக்கோள் 6100 கிலோ எடை கொண்டிருந்தது.
இருந்தபோதிலும் CMS-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது நான்கு காரணங்களால் இந்தியாவுக்கு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.
1. தற்சார்பு
இந்தியா இந்த ராக்கெட்டை கொண்டிருப்பதன் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறையும். இதனால் ஏவுதல் செலவு குறையும் என்பதை தாண்டி தற்சார்பு நிலைக்கு இந்தியா செல்லும்.
2013-ம் ஆண்டு GSAT 7 எனும் தகவல் தொடர்பு செயற்கைகோளை ஃப்ரெஞ்ச் கியானாவிலிருந்து இஸ்ரோ ஏவியுள்ளது.
இந்த செயற்கைக்கோளின் காலம் முடிவடைவதால் அதை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக GSAT-R எனப்படும் CMS-03 செயற்கைக்கோளை ஞாயிறன்று விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
இந்திய கப்பற்படைக்கு பயன்படக்கூடிய தகவல்களை வழங்குவதே இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும்.
“பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களுக்காக செலுத்தப்படும் செயற்கைக்கோளை வேறு நாட்டிலிருந்து ஏவுவதை விட இந்திய மண்ணிலிருந்தே ஏவுவது இந்தியாவின் தகவல்கள் பாதுகாக்கப்பட உதவும். எனவே, குறைவான செலவு, தற்சார்பு, பாதுகாப்பு என பல்வேறு விதங்களில் இது உதவும்” என்று பிபிசி தமிழிடம் பேசிய, மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

அதிகபட்ச எடையை விட கூடுதல் எடையை ஏந்தி சென்றது எப்படி?
LMV3 ராக்கெட் அதிகபட்சமாக 4.2 டன் (4200 கிலோ) எடையை Geosynchronous Transfer Orbit (GTO) வரையிலும், 8000 கிலோ எடையை குறைந்த புவி வட்டப் பாதை வரையிலும் ஏந்தி செல்ல முடியும்.
ஆனால் ஞாயிற்றுகிழமை GTO-வில் ஏவப்பட்ட CMS-03 செயற்கைக்கோள் 4410 கிலோ எடை கொண்டது. ராக்கெட்டின் அதிகபட்ச எடை திறனை விட 200 கிலோ அதிகமாக இருந்தாலும், இது எப்படி சாத்தியமானது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன்விளக்கினார்.
“செயற்கைக்கோளின் கூடுதல் எடையை ஏந்தி செல்லும் வகையில் ராக்கெட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதீத வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கும் வகையில் ராக்கெட்டில் வெப்ப பாதுகாப்பு அமைப்பு இருக்கும். பொதுவாக LMV3 ராக்கெட்டில் இது 245 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த முறை விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் வெப்ப பாதுகாப்பு அமைப்பின் எடை 165 கிலோ மட்டுமே.
எடை குறைந்தாலும், பாதுகாப்பு குறையாதவாறு அமைய தேவையான ஆய்வுகள் செய்த பிறகே இந்த எடை முடிவு செய்யப்பட்டது. செயற்கைக்கோளை சற்று குறைந்த உயரத்தில் வட்டப் பாதையில் நிலை நிறுத்தினோம். இப்படி வேறு சில மாற்றங்களும் செய்து, இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம்” என்றார்.
LMV ராக்கெட்டின் மற்றொரு வடிவமும் தயாராகி வருகிறது என்கிறார் த வி வெங்கடேஸ்வரன். அதில் 6டன் முதல் 8 டன் வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும்.
“இப்போது 4 டன் எடை திறன் கொண்ட ராக்கெட்டை 4.4 டன் வரை ஏந்தி செல்ல செய்துள்ளனர். வருங்காலத்தில் 6டன் முதல் 8 டன் வரையிலான எடையை ஏற்றிச் செல்வதற்கான ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வந்துவிட்டால், இந்தியா எந்த நாட்டையும் நம்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலையை எட்டும்” என்கிறார் அவர்.
ஏனென்றால் விண்ணில் செலுத்தப்படக்கூடியவை பொதுவாக அந்த எடைக்குள்ளேயே இருக்கும் என்கிறார் முனைவர் த வி வெங்கடேஸ்வரன்.
” இனி வரும் காலங்களில் ஸ்மார்ட் மெட்டீரியல்களே பயன்படுத்தப்படும். அதாவது குறைந்த எடையில் அதிக திறன் கொண்ட பொருட்கள். எனவே விண்ணில் செலுத்த வேண்டியவற்றின் எடை பெரும்பாலும் அந்த வரம்புக்குள் இருக்கும்” என்றார்.
பட மூலாதாரம், முனைவர் த வி வெங்கடேஸ்வரன்
2. க்ரையோஜெனிக் என்ஜின் மறு- இயக்கம் (Cryogenic restart)
க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ராக்கெட்டின் என்ஜினை மீண்டும் செயல்பட துவக்குவது (Cryogenic restart) முக்கியமான செயலாகும்.
க்ரையோஜெனிக் என்ஜின் என்பது மிக குளிர்ந்த நிலையில் திரவ ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற எரிபொருளை பயன்படுத்துவதாகும். இந்த என்ஜினை பயன்படுத்தும் ராக்கெட் ஒரு இடத்தை சென்றடைந்த பிறகு, அங்கிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல அதை மீண்டும் இயக்கத் தொடங்குவது cryogenic restart எனப்படும்.
இந்த தொழில்நுட்பம் விண்வெளி துறையில் இருக்கும் பிற நாடுகளால் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டதாகும், இதை இந்தியாவே செய்து காட்டியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஊடகங்களிடம் பேசினார்.
“செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு 100 விநாடிகள் கழித்து, மீண்டும் ராக்கெட்டை இயக்கினோம். இதனை நிலத்தில் பல தடவை வெற்றிகரமாக செய்து பார்த்துள்ளோம். ஆனால் முதல் முறையாக இதனை விண்வெளியில் செய்து பார்த்துள்ளோம். அது வெற்றி அடைந்துள்ளது” என்று நாராயணன் கூறினார்.
க்ரையோஜெனிக் மறு துவக்கம் என்பது ஒரு வாகனத்தை நிறுத்திவிட்டு, அதை மீண்டும் ஸ்டார்ட் செய்வது போல என விளக்குகிறார் த வி வெங்கடேஸ்வரன்.
“அப்படி மீண்டும் இயக்கும் போது சிக்கல் இல்லாமல் அதை எளிதாக இயக்க முடிகிறதா என்பதுதான் கேள்வி, அதை தான் சோதித்துப் பார்த்துள்ளனர்.” என்கிறார்.
பட மூலாதாரம், X/@isro
3. ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்கள்
இதன் மூலம் பல வட்டப் பாதைகளில், பல செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் நிலை நிறுத்த முடியும். அதாவது எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனம் அந்த வெவ்வேறு இடங்களில் நின்று சரக்குகளை இறக்கி வைப்பது போன்றது.
குறைந்த புவி வட்டப்பாதையில் (Low Earth Orbit) செயற்கைக்கோள்களை ஏந்தி செல்ல பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை கொண்டு ஏற்கெனவே பல செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் இந்தியா செலுத்தியுள்ளது.
2017-ம் ஆண்டு PSLV-C37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை செலுத்தி, 2014-ம் ஆண்டு 37 செயற்கைக்கோள்களை செலுத்திய ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது இந்தியா.
Geostationary orbit (புவி நிலை வட்டப்பாதை) என்பது குறைந்த புவி வட்டப் பாதையை (Low Earth Orbit) விட உயரத்தில் இருக்கும் வட்டப்பாதையகும். Geosynchronous Transfer Orbit என்பது இந்த புவி நிலை வட்டப்பாதைக்கு செல்லும் வழியில் அதற்கு முன்பு இருக்கக் கூடியதாகும். இந்தப் பாதைகளில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த ஜிஎஸ்எல்வி ( GSLV) ராக்கெட் தேவைப்படும். இதிலும் பல செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவுவதை சாத்தியமாக்க, க்ரையோஜெனிக் மறு துவக்கம் பயன்படும்.
“நான்கு டன் ஏந்தி செல்லக்கூடிய ராக்கெட்டில் 1.5 டன் எடைக்கான செயற்கைக்கோள் மட்டுமே பொருத்தப்படுகிறது என்றால், மீதமுள்ள இடத்தை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும்.” என்று முனைவர் த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.

4. ககன்யான் திட்டம்
டிசம்பர் மாதத்தில் LMV3 ராக்கெட்டின் மற்றொரு ஏவுதல் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்திலும் LMV 3 ராக்கெட் பயன்படுத்தப்படும் என்று CMS-03 செயற்கைக்கோள் ஏவுதலின் திட்ட இயக்குநர் டி.விக்டர் ஜோசப் தெரிவிக்கிறார்.
மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று ஆளில்லா திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் கீழ் அதிக எடை கொண்டவை விண்ணில் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கும் என்பதால், தற்போதைய வெற்றி அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
“ககன்யான் திட்டத்தின் குறிப்பாக பிற்பகுதிகளில் இது மிகவும் உதவியாக இருக்கும்” என்று த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு