பட மூலாதாரம், Getty Images
லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோற்கடித்தது.
முதலில் பேட் செய்த லக்னெள அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 22 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பஞ்சாப் அணி 2 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. லக்னெள அணி 3 போட்டிகளைச் சந்தித்து இரண்டில் தோல்வியடைந்துள்ளது. இரண்டு புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது.
ஆட்டநாயகன் பிரப்சிம்ரன்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பவர்ப்ளேவிலேயே முடிவானது. பந்துவீச்சு பவர்ப்ளேவில் லக்னெளவின் டாப் ஆர்டர்கள் உள்பட 3 விக்கெட்டுகளை எடுத்தது, பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் பவர்ப்ளேவில் வெளுத்து வாங்கி 23 பந்துகளில் அரைசதம் அடித்தது ஆகியவை வெற்றிக்குக் காரணமாகின.
பஞ்சாப் அணியின் பதற்றத்தைக் குறைத்து, 34 பந்துகளில் 69 ரன்கள் (3 சிக்சர், 9 பவுண்டரி) சேர்த்த பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். லக்னெள அணியின் அப்துல் சமது, ஆயுஷ் பதோனி கடைசி நேரத்தில் ஓரளவு நிலைத்து ஆடாமல் இருந்திருந்தால், லக்னெள அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.
பட மூலாதாரம், Getty Images
லக்னெள அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கரம் (28), மார்ஷ் (0), ரிஷப் பந்த் (2), மில்லர் (19) எனப் பலரும் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினர். அதிலும் கேப்டன் ரிஷப் பந்த் 3 போட்டிகளிலும் சேர்த்து 17 ரன்கள் மட்டுமே சேர்த்து அணியின் உரிமையாளர்களை அதிருப்தியில் வைத்துள்ளார்.
பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பிரப்சிம்ரன் சிங் தவிர கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 பந்துகளில் 52 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து கேப்டனுக்குரிய பொறுப்புடன் செயல்பட்டார்.
இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய நேகல் வதேரே அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 43 ரன்கள்(4 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள்) சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
வெற்றியின் மந்திரம்
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “இது போன்ற தொடக்கம்தான் தேவைப்பட்டது. ஒவ்வொரு வீரரும் தங்கள் பங்கை உணர்ந்து விளையாடினர். தங்களால் முடிந்த அளவைவிட சிறப்பாகப் பங்களித்தனர்.
திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினார்கள். என்னைப் பொருத்தவரை இதுதான் சரியான வீரர்கள் தேர்வு. கலவை என்று இல்லை. சரியான நேரத்தில் சரியான வீரர்கள் விளையாடுவார்கள்.
ஒவ்வோர் அணியும் வெற்றி பெறுவதற்குத் திறமையும், சக்தியும் இருக்கிறது. வெற்றி தேவை என்ற மனநிலையோடு போட்டியை அணுக வேண்டும். இதைத்தான் எப்போதுமே வீரர்களிடம் கூறுவேன். என்னால் முடிந்த பங்களிப்பை அளிக்க முயற்சி செய்வேன். அடுத்த போட்டி குறித்து இப்போதே சிந்தனை வந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
தடுமாறிய லக்னெள அணி
பட மூலாதாரம், Getty Images
பவர்ப்ளே ஓவர்களிலேயே லக்னெள அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரில் மார்ஷ் பேட்டில் எட்ஜ் எடுத்து யான்செனிடம் கேட்சானது. கடந்த இரு போட்டிகளிலும் அரைசதம் அடித்த மார்ஷ், இந்த முறை ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்தார்.
பெர்குஷனை நியூசிலாந்து அணியினர் பந்து தேய்ந்த பின்புதான் பந்துவீச அழைப்பார்கள். ஐபிஎல் தொடரிலும் பல அணிகளிலும் நடுப்பகுதியில்தான் பெர்குஷன் பந்துவீசியுள்ளார். ஆனால், நேற்று தொடக்கத்திலேயே பெர்குஷனை பஞ்சாப் அணி பயன்படுத்தியது. பூரனை 4 முறை பெர்குஷன் ஆட்டமிழக்கச் செய்திருப்பதால் விரைவாக பெர்குஷன் அழைக்கப்பட்டார்.
ஆனால், பெர்குஷன் பந்துவீச்சில் பூரன் ஆட்டமிழப்பதற்குப் பதிலாக மார்க்ரம் விக்கெட்டை இழந்தார். சிக்சர், பவுண்டரி என அதிரடியாகத் தொடங்கிய மார்க்ரம் 28 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
ரிஷப் பந்த், சுழற்பந்துவீச்சில் பலவீனம் என்பதை அறிந்து அவர்கள் களமிறங்கியதும் மேக்ஸ்வெலை பந்துவீச அழைத்தனர். எதிர்பார்த்தது போலவே ரிஷப் பந்த் 2 ரன்னில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் சஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விக்கெட்டை 3வது முறையாக மேக்ஸ்வெல் சாய்த்தார். ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்த் 3 போட்டிகளிலும் சேர்த்து எடுத்த ரன்கள் 17 மட்டுமே.
பட மூலாதாரம், Getty Images
நீயா நானா போட்டியில் சஹல், பூரன்
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் நிதானமாக பேட் செய்து தன்னால் ஆன பங்களிப்பை அணிக்கு அளித்தார். மேக்ஸ்வெல் வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரிகளை பூரன் விளாசினார். நீயா, நானா என்ற போட்டியில் சஹலும், பூரனும் மோதினர்.
சஹல் பந்துவீச்சில் பலமுறை பீட்டன் ஆகிய பூரன், சிக்சர், பவுண்டரி என விளாசினார். இறுதியில் இருவருக்குமான போட்டியில் சஹல் வென்றார். பூரன் 30 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்த நிலையில் அவரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் 19 ரன்கள் சேர்த்த நிலையில் யான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லக்னெள அணி 16வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் சேர்த்தது. ஆனால், 7வது விக்கெட்டுக்கு ஆயுஷ் பதோனி, அப்துல் சமது இருவரும் சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.
இருவரும் 21 பந்துகளில் 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். யான்சென் வீசிய ஓவரில் முதல் பந்தில் ஒரு சிக்சரையும், அர்ஷ்தீப் வீசிய 18வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்கூப்பில் ஒரு சிக்சரையும் சமது விளாசினார்.
அந்த ஓவரில் லக்னெள 20 ரன்கள் சேர்த்தது. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரிலேயே பதோனி 33 பந்துகளில் 41 ரன்களிலும், சமது 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
பிரப்சிம்ரன், வதேரா அதிரடி
பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் அணி, 172 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. பிரப்சிம்ரன் சிங் அதிரடியாகத் தொடங்கினாலும், சகவீரர் பிரயான்ஸ் ஆர்யா 9 ரன்னில் திக்வேஷ் ரதி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ், பிரப்சிம்ரனுடன் ஜோடி சேர்ந்தார். ஸ்ரேயாஸ் நிதானமாக ஆட, பிரப்சிம்ரன் சிங் வெளுத்து வாங்கினார். ஷர்துல் தாக்கூர், ஆவேஷ் பந்துவீச்சில் முதல் இரு ஓவர்களிலும் சிக்சர், பவுண்டரி எனத் துவைத்து எடுத்தார். பவர்ப்ளேவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்தது.
திக்வேஷ் ரதி பந்துவீச்சில் பிரப்சிம்ரன் அடித்த ஷாட் ஸ்லிப்பில் கேட்சாக வந்ததை மார்ஷ் பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்சை தவறவிட்டதற்கு லக்னெள அணி பிரப்சிம்ரனிடம் பெரிய விலை கொடுத்தது.
ரவி பிஸ்னோய், மணிமாறன் சித்தார்த் இருவரின் பந்துவீச்சையும் வெளுத்த பிரப்சிம்ரன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 9.1 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது.
பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த நிலையில் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், பிரப்சிம்ரன் இருவரும் 84 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய நேகல் வதேரா, ஸ்ரேயாஸுடன் சேர்ந்தார். மிகுந்த பொறுப்புடன், நிதானமாக ஆடிய ஸ்ரேயாஸ் அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் அடிக்கவும் மறக்கவில்லை.
பஞ்சாப் வெற்றிக்கு 36 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்டன. ஆவேஷ் கான் வீசிய 15வது ஓவரில் ஸ்ரேயாஸ் பவுண்டரி, சிக்சர் என 12 ரன்களும், ஷர்துல் வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என நேஹல் வதேரா 16 ரன்களும் சேர்த்து வெற்றியை எளிதாக்கினர்.
அப்துல் சமது வீசிய 17வது ஓவரில் ஸ்ரேயாஸ் சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார். ஸ்ரேயாஸ் 30 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களுடனும் வதேரா 43 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மோசமான பந்துவீச்சு
பட மூலாதாரம், Getty Images
லக்னெள அணி சேர்த்த 171 ரன்களை நிச்சயமாக டிபெண்ட் செய்திருக்க முடியும். ஆனால் அதற்கான வலுவான பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் களமிறக்கப்படவில்லை.
மயங்க் யாதவ் உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. மிட்ஷெல் மார்ஷ் நன்றாகப் பந்துவீசக்கூடியவர். ஏன் ரிஷப் பந்த் அவருக்கு பந்துவீச வாய்ப்புத் தரவில்லை என்று கேள்விகள் எழுகின்றன.
வேகப்பந்துவீச்சில் 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய ஷமர் ஜோஸப் இருக்கிறார். அவரைக் களமிறக்கி இருக்கலாம். மற்ற வகையில் லக்னெள அணியில் தேடினாலும் வேகப்பந்துச்சாளர்கள் இல்லை.
சுழற்பந்துவீச்சிலும் ரிவி பிஸ்னோய், திக்வேஷ் ரதி பந்துவீச்சில் பெரிதாக டர்ன் இல்லை. கடந்த போட்டியில் பந்து வீசிய பிரின்ஸ் யாதவை ஏன் அமர வைத்தார்கள் என்றும் கேள்விகள் எழுகின்றன.
அணியில் இளம் ஆல்ரவுண்டர்கள் ராஜ்யவர்தன் ஹங்கரேகர், யுவராஜ் சௌத்ரி, அர்ஷின் குல்கர்னி இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் லக்னெள இருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் பஞ்சாப் அணியை மிரட்டும் அளவுக்கும், விக்கெட் எடுக்கும் அளவுக்கு லக்னெள பந்துவீச்சில் பலமில்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு