பட மூலாதாரம், Fenamad
-
- எழுதியவர், ஸ்டெஃபானி ஹெகார்ட்டி
- பதவி, உலக மக்கள்தொகை செய்தியாளர்
-
பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார்.
அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார்.
“ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்,” என்று அவர் கூறுகிறார். “எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்.”
அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் தாமஸ், வெளியாட்களுடன் தொடர்பைத் தவிர்க்கும் இந்த நாடோடி மக்களுக்கு அண்டை வீட்டாராகவே இருந்தார். இருப்பினும், மிகச் சமீப காலம் வரை, அவர் அவர்களை அரிதாகவே பார்த்திருந்தார்.
மாஷ்கோ பைரோ மக்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகத்துடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர். அவர்கள் நீண்ட வில் மற்றும் அம்புகளைக் கொண்டு வேட்டையாடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றுக்கும் அமேசான் மழைக்காடுகளை நம்பியுள்ளனர்.
“அவர்கள் மிருகங்களைப் போலவும், பல வகையான பறவைகளைப் போலவும் சத்தம் எழுப்பியும், விசில் அடித்தும் என்னைச் சுற்றி வளைக்கத் தொடங்கினர்,” என்று தாமஸ் நினைவு கூர்கிறார்.
“நான் தொடர்ந்து ‘நோமோல்’ (Nomole) (சகோதரர்) என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். பின்னர் அவர்கள் கூடினர், அவர்கள் நெருக்கமாக இருந்ததாக உணர்ந்தோம். எனவே நாங்கள் ஆற்றை நோக்கி ஓடினோம்.”

மனித உரிமைகள் அமைப்பான சர்வைவல் இன்டர்நேஷனல் (Survival International) சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை, உலகில் இன்னும் குறைந்தது 196 ‘தொடர்பற்ற குழுக்கள்’ இருப்பதாகக் கூறுகிறது. மாஷ்கோ பைரோ பழங்குடியினர் அவற்றில் மிகப் பெரிய குழுவினர் என்று நம்பப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க அரசுகள் அதிக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தக் குழுக்களில் பாதி பேர் அடுத்த தசாப்தத்தில் அழிக்கப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது.
மரங்களை வெட்டுதல், சுரங்கத் தொழில் அல்லது எண்ணெய் எடுப்பது போன்றவற்றால் அவர்களுக்கு மிகப் பெரிய அபாயங்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. தொடர்பற்ற குழுக்கள் சாதாரண நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள். எனவே, சுவிசேஷ மிஷனரிகள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடனான தொடர்பு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
சமீபத்தில், மாஷ்கோ பைரோ மக்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அதிகமாக வரத் தொடங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கிராமம் ஏழு அல்லது எட்டு குடும்பங்களைக் கொண்ட ஒரு மீன்பிடி சமூகம். இது அருகிலுள்ள குடியிருப்புக்கு படகில் செல்ல 10 மணி நேரம் ஆகும் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்தப் பகுதி தொடர்பற்ற குழுக்களுக்கான பாதுகாக்கப்பட்ட காப்பகமாக அங்கீகரிக்கப்படவில்லை. இங்கு மரங்களை வெட்டும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
மரங்களை வெட்டும் இயந்திரங்களின் சத்தம் சில சமயங்களில் இரவும் பகலும் கேட்கிறது. மாஷ்கோ பைரோ மக்கள் தங்கள் காடு அழிக்கப்படுவதைக் காண்கிறார்கள் என்று தாமஸ் கூறுகிறார்.
நுவேவா ஓசியானியாவில், மக்கள் முரண்பட்ட உணர்வுகளுடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மாஷ்கோ பைரோவின் அம்புகளைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள், ஆனால் காட்டில் வாழும் தங்கள் “சகோதரர்கள்” மீது அவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது, மேலும் அவர்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்.
“அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே வாழ விடுங்கள், நாம் அவர்களின் கலாசாரத்தை மாற்ற முடியாது. அதனால்தான் நாங்கள் இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம்,” என்று தாமஸ் கூறுகிறார்.
பட மூலாதாரம், Fenamad
மாஷ்கோ பைரோவின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு, வன்முறை அச்சுறுத்தல் மற்றும் மரங்களை வெட்டுபவர்களால் மாஷ்கோ பைரோ மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக நுவேவா ஓசியானியா மக்கள் கவலைப்படுகிறார்கள்.
நாங்கள் கிராமத்தில் இருந்தபோது, மாஷ்கோ பைரோ மக்கள் மீண்டும் தங்கள் இருப்பை உணர வைத்தனர். இரண்டு வயது மகள் கொண்ட இளம் தாய் லெடிசியா ரோட்ரிக்ஸ் லோபஸ் காட்டில் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் சத்தத்தைக் கேட்டார்.
“பலரின் கூக்குரல் சத்தங்களை கேட்டோம். ஒரு பெரிய குழு கத்துவது போல இருந்தது,” என்று அவர் எங்களிடம் கூறினார்.
மாஷ்கோ பைரோ மக்களை அவர் சந்தித்தது அதுவே முதல் முறை, அதனால் அவர் ஓடினார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகும், பயத்தால் அவரது தலை துடித்துக் கொண்டிருந்தது.
“மரம் வெட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் காடுகளை வெட்டுவதால் அவர்கள் பயத்தில் ஓடி வந்து எங்களுக்கு அருகில் வந்து விடுகிறார்கள்,” என்று அவர் கூறினார். “அவர்கள் எங்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது.”
2022 இல், இரண்டு மரம் வெட்டுபவர்களை மாஷ்கோ பைரோவினர் தாக்கினர். ஒருவர் வயிற்றில் அம்பு பாய்ந்தது. அவர் உயிர் பிழைத்தார், ஆனால் மற்றொருவர் உடல் சில நாட்களுக்குப் பிறகு ஒன்பது அம்பு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

பெரு அரசு தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அவர்களுடன் தொடர்பை ஆரம்பிப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடனான ஆரம்ப தொடர்பால், நோய், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டு முழு குழுக்களும் அழிக்கப்படுவதைக் கண்ட பழங்குடி உரிமைக் குழுக்களின் பல தசாப்தகால போராட்டத்திற்கு பிறகு இந்த கொள்கை முதல் முறையாக பிரேசிலில் உருவானது.
1980களில், பெருவில் உள்ள நஹாவ் (Nahau) மக்கள் வெளி உலகத்துடன் ஆரம்பத் தொடர்பு கொண்டபோது, அவர்களின் மக்கள் தொகையில் 50% பேர் சில ஆண்டுகளில் இறந்தனர். 1990களில், முருகானுவா (Muruhanua) மக்கள் அதே விதியை எதிர்கொண்டனர்.
“தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள் தொற்றுநோயியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். எந்தவொரு தொடர்பும் அவர்களுக்கு நோய்களைப் பரப்பக்கூடும். எளிமையான நோய்கள் கூட அவர்களை அழித்துவிடக்கூடும்,” என்று பெருவியன் பழங்குடி உரிமைக் குழுவான ஃபெமனாட்டைச் சேர்ந்த இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே கூறுகிறார். “கலாசார ரீதியாகவும் எந்தவொரு தொடர்பும் அல்லது தலையீடும் ஒரு சமூகமாக அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்.”
தொடர்பற்ற பழங்குடியினரின் அண்டை பகுதியை சேர்ந்தவர்களுக்கு, இந்த கொள்கையின் யதார்த்தம் சிக்கலானதாக இருக்கலாம்.
மாஷ்கோ பைரோவை அவர் சந்தித்த காட்டுத் திறந்தவெளியில் தாமஸ் எங்களைச் சுற்றிக் காட்டும்போது, அவர் நின்று, கைகளை குவித்து விசில் அடித்து, பின்னர் அமைதியாகக் காத்திருக்கிறார்.
“அவர்கள் பதிலளித்தால், நாம் திரும்பிச் செல்ல வேண்டும்,” என்று அவர் கூறுகிறார். பூச்சிகள் மற்றும் பறவைகளின் சலசலப்பு மட்டுமே கேட்கிறது. “அவர்கள் இங்கு இல்லை.”
ஒரு பதற்றமான சூழ்நிலையைத் தனியாகச் சமாளிக்க நுவேவா ஓசியானியாவின் குடியிருப்பாளர்களை அரசு விட்டுவிட்டதாகத் தாமஸ் கருதுகிறார்.
மாஷ்கோ பைரோ குழுவினர் எடுத்துச் செல்ல தனது தோட்டத்தில் அவர் காய், கனிகளைத் தரும் செடிகளை நடுகிறார். இது அவரும் மற்ற கிராம மக்களும் தங்கள் அண்டை வீட்டாருக்கு உதவவும், தங்களைப் பாதுகாக்கவும் கண்டுபிடித்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
‘இந்த வாழைப் பழங்களை வைத்துக்கொள்ளுங்கள், இது ஒரு பரிசு’, நீங்கள் அவற்றைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். என்மீது அம்பு எய்யாதீர்கள் என அவர்களிடம் சொல்வதற்கான வார்த்தைகள் எனக்கு தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும்.”
கட்டுப்பாட்டு நிலையத்தில்…
அடர்ந்த காட்டின் மறுபுறத்தில், சுமார் 200 கிமீ தென்கிழக்கில், நிலைமை மிகவும் வேறுபட்டது. அங்கு, மனு ஆற்றுக்கு அருகில், ஒரு வனக் காப்பகமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் மாஷ்கோ பைரோ வாழ்கின்றனர்.
பெருவின் கலாசார அமைச்சகம் மற்றும் ஃபெனமாட் இங்கு ‘நோமோல்’ கட்டுப்பாட்டு நிலையத்தை நடத்தி வருகின்றன. இதில் எட்டு முகவர்கள் பணியாற்றுகின்றனர். மாஷ்கோ பைரோவுக்கும் உள்ளூர் கிராமங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல கொலைகளில் முடிந்தபின்னர், 2013 இல் இது அமைக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு நிலையத்தின் தலைவராக உள்ள அன்டோனியோ ட்ரிகோசோ யடால்கோவின் வேலை அது மீண்டும் நிகழாமல் தடுப்பதுதான்.
மாஷ்கோ பைரோ மக்கள் அடிக்கடி, சில சமயங்களில் வாரத்திற்குப் பல முறை வருகிறார்கள். அவர்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அருகிலுள்ளவர்களை விட வேறுபட்டவர்கள். அவர்களுக்கு ஒருவருக்கொருவர் தெரியாது என்று முகவர்கள் நம்புகிறார்கள்.
பட மூலாதாரம், Fenamad
“அவர்கள் எப்போதும் ஒரே இடத்தில் வெளியே வருகிறார்கள். அங்கிருந்துதான் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்,” என்று அன்டோனியோ அகலமான மனு ஆற்றின் குறுக்கே எதிரே உள்ள ஒரு சிறிய கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையைச் சுட்டிக் காட்டுகிறார். அவர்கள் வாழை, மரவள்ளிக்கிழங்கு அல்லது கரும்புகளைக் கேட்கிறார்கள்.
“நாங்கள் பதிலளிக்கவில்லை என்றால், அவர்கள் நாள் முழுவதும் அங்கேயே உட்கார்ந்து காத்திருக்கிறார்கள்,” என்று அன்டோனியோ கூறுகிறார். சுற்றுலாப் பயணிகள் அல்லது உள்ளூர் படகுகள் கடந்து சென்றால், முகவர்கள் அதைத் தவிர்க்க முயல்கிறார்கள். பொதுவாகக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். கட்டுப்பாட்டு நிலையத்தில் உணவுப் பயிர்களை வளர்க்க ஒரு சிறிய தோட்டம் உள்ளது. உணவு தீர்ந்து போகும்போது, அவர்கள் உள்ளூர் கிராமத்தில் இருந்து பொருட்களைக் கேட்கிறார்கள்.
இவை கிடைக்கவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் திரும்பி வருமாறு முகவர்கள் மாஷ்கோ பைரோவினரிடம் சொல்கின்றனர். இதுவரை அது வேலை செய்து சமீபத்தில் சிறிய மோதல்கள் மட்டுமே நடந்துள்ளன.
வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 40 பேரை அன்டோனியோ வழக்கமாகப் பார்க்கிறார்.
அவர்கள் தங்களுக்கு விலங்குகளின் பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள். தலைவருக்கு கமோடோலோ (தேனீ) என்று பெயர். அவர் ஒரு கண்டிப்பான மனிதர் என்றும் ஒருபோதும் சிரிப்பதில்லை என்றும் முகவர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு தலைவர், ட்கோட்கோ (கழுகு) ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவர், அவர் நிறையச் சிரிக்கிறார் மற்றும் முகவர்களை கேலி செய்கிறார். யோமாக்கோ (டிராகன்) என்ற ஒரு இளம் பெண் இருக்கிறார், அவருக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாக முகவர்கள் கூறுகிறார்கள்.
மாஷ்கோ பைரோ வெளி உலகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் சந்திக்கும் முகவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றியும், அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றும் கேட்கிறார்கள்.

ஒரு முகவர் கர்ப்பமாகி மகப்பேறு விடுப்பில் சென்றபோது, குழந்தை விளையாடுவதற்கு ஒரு ஹவுலர் குரங்கின் தொண்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட கிலுகிலுப்பையை (rattle) அவர்கள் கொண்டு வந்தனர்.
அவர்கள் முகவர்களின் உடைகள், குறிப்பாக சிவப்பு அல்லது பச்சை நிற விளையாட்டு உடைகள் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். “நாங்கள் நெருங்கும் போது, பழைய, கிழிந்த, பொத்தான்கள் இல்லாத ஆடைகளை அணிந்து கொள்கிறோம் – அதனால் அவர்கள் அவற்றைப் பறித்துக் கொள்ள மாட்டார்கள்,” என்று அன்டோனியோ கூறுகிறார்.
“முன்பு, பூச்சி நார்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அழகான பாரம்பரிய பாவாடைகளை அணிந்தார்கள், ஆனால் இப்போது அவர்களில் சிலர், சுற்றுலாப் படகுகள் கடந்து செல்லும்போது, ஆடைகள் அல்லது பூட்ஸ்களைப் பெறுகிறார்கள்,” என்று கட்டுப்பாட்டு நிலையத்தில் ஒரு முகவரான எட்வர்டோ பாஞ்சோ பிஸார்லோ கூறுகிறார்.
பட மூலாதாரம், Fenamad
ஆனால் காட்டில் உள்ள வாழ்க்கை பற்றி குழுவினர் கேட்கும்போதெல்லாம், மாஷ்கோ பைரோ உரையாடலைத் துண்டிக்கிறார்கள்.
“ஒருமுறை, அவர்கள் எப்படித் தீ மூட்டுகிறார்கள் என்று நான் கேட்டேன்,” என்று அன்டோனியோ கூறுகிறார். “அவர்கள் என்னிடம், ‘உங்களிடம் மரம் இருக்கிறது, உங்களுக்குத் தெரியும்’ என்று சொன்னார்கள். நான் வலியுறுத்திக் கேட்டபோது, அவர்கள், ‘உங்களிடம் ஏற்கெனவே இந்த விஷயங்கள் அனைத்தும் உள்ளன – நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டனர்.”
யாராவது சிறிது காலம் வராமல் இருந்தால், அவர்கள் எங்கே என்று முகவர்கள் கேட்பார்கள். மாஷ்கோ பைரோ, “கேட்காதே” என்று சொன்னால், அந்த நபர் இறந்துவிட்டார் என்று அர்த்தம் என்று அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.
பல வருட தொடர்பு இருந்தபோதிலும், மாஷ்கோ பைரோ எப்படி வாழ்கிறார்கள் அல்லது ஏன் காட்டில் இருக்கிறார்கள் என்பது பற்றி முகவர்களுக்கு இன்னும் குறைவாகவே தெரியும்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், “ரப்பர் பிரபுக்கள்” என்று அழைக்கப்படுபவர்களால் பரவலான சுரண்டல் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பி, ஆழமான காட்டுக்குத் தப்பிச் சென்ற பழங்குடி மக்களின் வாரிசுகள் என்று நம்பப்படுகிறது.
மாஷ்கோ பைரோ, தென்மேற்குப் பெருவின் ஒரு பழங்குடி மக்களான யினியுடன் (Yine) நெருங்கிய உறவுடையவர்கள் என்று வல்லுநர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ஒரே மொழியின் பழமையான வட்டார மொழியைப் பேசுகிறார்கள். அதை முகவர்களும் (அவர்களும் யினி பழங்குடியினரே) கற்றுக்கொள்ள முடிந்தது.
ஆனால், யினி மக்கள் நீண்ட காலமாக ஆற்றுப் பயணிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களாக இருந்தனர். அதேசமயம், மாஷ்கோ பைரோ இந்த விஷயங்களை எப்படிச் செய்வது என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க நாடோடிகளாகவும் வேட்டையாடுபவர்களாகவும் மாறியிருக்கலாம்.
“அவர்கள் ஒரு பகுதியில் சிறிது காலம் தங்கி, ஒரு முகாமை அமைத்து, முழு குடும்பமும் கூடுகிறார்கள் என நான் புரிந்துகொள்கிறேன்,” என்று அன்டோனியோ கூறுகிறார். “அந்த இடத்தை சுற்றியுள்ள அனைத்தையும் வேட்டையாடியவுடன், அவர்கள் வேறொரு இடத்துக்குச் செல்கிறார்கள்.”
பட மூலாதாரம், Fenamad
ஃபெனமாட்டின் இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே, 100-க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நேரங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்துள்ளனர் என்று கூறுகிறார்.
“அவர்கள் தங்கள் உணவை பல்வகைப்படுத்த வாழைப்பழங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கைக் கேட்கிறார்கள், ஆனால் சில குடும்பங்கள் அதன்பிறகு மாதங்கள் அல்லது வருடங்களாக மறைந்துவிடுகின்றன,” என்று அவர் கூறுகிறார்.
“அவர்கள், ‘நான் சில காலம் சென்றுவிட்டு, பின்னர் திரும்பி வருவேன்’ என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்கள்.”
இந்தப் பகுதியில் உள்ள மாஷ்கோ பைரோ மக்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆனால் சட்டவிரோதச் சுரங்கத் தொழில் பரவலாக இருக்கும் ஒரு பகுதியுடன் இணைக்கும் ஒரு சாலையை அரசு கட்டமைக்கிறது.
ஆனால், மாஷ்கோ பைரோ வெளி உலகத்துடன் இணைய விரும்பவில்லை என்பது முகவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
“இந்த நிலையத்தில் எனது அனுபவத்திலிருந்து, அவர்கள் வெளியுலகுடன் நெருங்கிய தொடர்பை விரும்பவில்லை என்பது தெரிகிறது,” என்று அன்டோனியோ கூறுகிறார்.

“ஒருவேளை குழந்தைகள் விரும்பலாம், அவர்கள் வளரும்போது, நாங்கள் ஆடை அணிந்திருப்பதைக் காணும்போது ஒருவேளை 10 அல்லது 20 ஆண்டுகளில் மாறலாம். ஆனால் பெரியவர்கள் மாற மாட்டார்கள். நாங்கள் இங்கு இருப்பதை கூட அவர்கள் விரும்பவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
2016 இல், மாஷ்கோ பைரோவின் காப்பகத்தை நுவேவா ஓசியானியா உள்ளிட்ட பகுதிகளுக்கு நீட்டிக்க ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அது ஒருபோதும் சட்டமாக இயற்றப்படவில்லை.
“அவர்கள் எங்களைப் போலச் சுதந்திரமாக இருக்க வேண்டும்,” என்று தாமஸ் கூறுகிறார். “அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் அமைதியாக வாழ்ந்தார்கள், இப்போது அவர்களின் காடுகள் அழிக்கப்படுகின்றன – அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை நாங்கள் அறிவோம்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு