பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 117 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 43 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது. கொல்கத்தாவுக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றி என்பதால், மைனஸ் நிகர ரன்ரேட்டில் இருந்த மும்பை இந்தியன்ஸ் 2 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியது.
வான்ஹடே மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 12 போட்டிகளில் விளையாடி, அதில் 10வது வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது. எந்தவொரு அணிக்கு எதிராகவும் ஒரே மைதானத்தில் 10 வெற்றியை எந்த அணியும் ஐபிஎல் தொடரில் பதிவு செய்யவில்லை.
கொல்கத்தா அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலும் 2 தோல்விகள் மோசமானதாக அமைந்ததால் நிகர ரன்ரேட்டில் மிகவும் பின்தங்கி கடைசி இடத்தில் இருக்கிறது. ஐபிஎல் சீசனில் பங்கேற்கும் 10 அணிகளும் குறைந்தபட்சம் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. ஆர்சிபி, டெல்லி அணி மட்டுமே 2 வெற்றிகளுடன் உள்ளன. இனிமேல்தான் ஒவ்வோர் ஆட்டத்திலும் சூடு பிடிக்கும்.
அறிமுக ஆட்டநாயகன்
மும்பை அணியின் வெற்றிக்கு மூலகாரணமாக இருந்தது அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார்தான். ஐபிஎல் அறிமுகத்திலேயே 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் அறிமுக ஆட்டத்தில் அமித் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் அஸ்வனி குமார் அவரின் சாதனையை முறியடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
பேட்டிங்கில் குறைவான ஸ்கோர் என்பதால், கடந்த 2 போட்டிகளிலும் ஃபார்மின்றி தவித்த தென் ஆப்பிரிக்க பேட்டர் ரெக்கில்டன் இந்தப் போட்டியில் வெளுத்து வாங்கி, அரைசதம் அடித்து 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்கை தனக்குரிய ஸ்டைலில் 9 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
‘மதியம் சாப்பிடாமல் இரவு களமிறங்கினேன்’
பட மூலாதாரம், Getty Images
ஆட்டநாயகன் விருது வென்ற அஸ்வனி குமார் பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததும், இந்த விருது கிடைத்ததும் மிகப்பெரிய விஷயம். இதை ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
மொஹாலி மாவட்டம், ஹான்ஜேரி எனும் சிறிய கிராமத்தில் இருந்து வந்துள்ளேன். என்னுடைய கடின உழைப்பு, கடவுளின் அருளால் இங்கு வந்தேன். என்னால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பதற்றமாகவும் இருந்தது” என்றார்.
என்ன நடக்குமோ என்ற பதற்றத்தோடு இருந்ததாகவும், இதனால் மதியம் சாப்பிடக்கூட இல்லை என்றும் கூறிய அவர், “ஆனால் அனைவரும் பெருமைப்படும் வகையில் வெற்றி கிடைக்க உழைத்துள்ளதாகவும்” தெரிவித்தார்.
கொல்கத்தாவின் மோசமான பேட்டிங்
கொல்கத்தா அணியின் பேட்டிங் இந்தப் போட்டியில் மோசமாக இருந்தது. ராமன்தீப் சிங் தவிர அணியில் உள்ள மற்ற எந்த வீரரும் 20 ரன்களைக்கூட எட்டவில்லை. 20 ஓவர்களைக்கூட ஆட முடியாத நிலையில் 16 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்துக்கொண்டனர்.
கொல்கத்தா அணி, ஏலத்தில் நம்பிக்கை வைத்து ரஸல், சுனில் நேரேன், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் எனப் பலரையும் தக்கவைத்தது. ஆனால், ஒருவர்கூட சிறப்பாக பேட் செய்யவில்லை. அதிலும் ஆண்ட்ரே ரஸல் 3 போட்டிகளாகியும் ஒரு போட்டியில்கூட இன்னும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.
ரூ.23 கோடிக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் அய்யரும் 3 போட்டிகளாக மோசமாக ஆடி வருகிறார். கேப்டன் ரஹானே முதல் போட்டியோடு சரி, அதன் பின் நிலையற்ற ரீதியில் பேட் செய்து வருகிறார். ரிங்கு சிங் தொடர்ந்து இதேபோன்று ஆடினால், விரைவில் இந்தியாவின் டி20 அணியில் சேர்க்கப்படாமல் போகலாம்.
முதல் ஓவரில் 30வது முறையாக விக்கெட் வீழ்த்திய போல்ட்
டிரன்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே யார்கரில் சுனில் நரேன் டக்-அவுட்டில் வெளியேறினார். ஐபிஎல் தொடரில் 30வது முறையாக போல்ட் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
போல்ட் பந்துவீச்சை ஐபிஎல் தொடரில் 5 முறை சந்தித்த நரேன், 5 முறையும் அவரிடமே ஆட்டமிழந்துள்ளார். போல்டின் 19 பந்துகளைச் சந்தித்த நரேன் 23 ரன்களை சேர்த்துள்ளார்.
தீபக் ஹசர் வீசிய 2வது ஓவர் முதல் பந்தில் டீகாக் ஒரு ரன்னில் அஸ்வனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது ஓவரை அறிமுக வீரர் அஸ்வனி வீசி, முதல் பந்திலேயே ரஹானே(11) விக்கெட்டை சாய்த்தார்.
ரூ.23 கோடி மதிப்பு வீரர்
பட மூலாதாரம், Getty Images
அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் 3 ரன்னில் தீபக் சஹர் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரெக்கல்டனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்ப்ளே ஓவர்கள் முடியும்போது கொல்கத்தா அணி 41 ரன்களுக்கு டாப்-ஆர்டர் விக்கெட்டுகள் உள்பட 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்குச் சென்றது. ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் ரகுவன்ஸி 26 ரன்னில் நமன்திரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பல சீசன்களாக ஃபார்மின்றி, எந்த அணியாலும் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்த மணிஷ் பாண்டேவை கொல்கத்தா ஏலத்தில் எடுத்து பெரிதாக எதிர்பார்த்தது. ஆனால் மணிஷ் பாண்டேவும் ஏமாற்றினார்.
ரிங்கு சிங் 17 ரன்னிலும், மணிஷ் பாண்டே 19 ரன்னிலும் அஸ்வனி குமார் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆண்ட்ரே ரஸல் 5 ரன்னில் அஸ்வனி பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். அதன்பின் கடைசி வரிசை வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா அணியில் ஒரு பார்ட்னர்ஷிப்கூட 50 ரன்களை எட்டவில்லை. 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த கொல்கத்தா அணி, அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. 20 ஓவர்களைக்கூட முழுமையாக ஆடாத கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஃபார்முக்கு வந்த ரெக்கில்டன்
பட மூலாதாரம், Getty Images
மும்பை அணி, 117 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரெக்கெல்டன் தான் சந்தித்த முதல் 4 பந்துகளும் பீட்டன் ஆகிய நிலையில் எட்ஜ் எடுத்து பவுண்டரியும், சிக்ஸரும் சென்றபின் நம்பிக்கையுடன் ஆடினார். கொல்கத்தா பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்த ரெக்கில்டன் விரைவாக ரன்களை சேர்த்தார்.
ரோஹித் சர்மா ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த நிலையில் 13 ரன்னில் ரஸல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது போட்டியிலும் ரோஹித் சர்மா பேட்டிங் எடுபடவில்லை. முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளேவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்த்தது.
அடுத்து வந்த வில் ஜேக்ஸ், ரெக்கில்டனுடன் சேர்ந்தார். வில் ஜேக்ஸ் பெரிய ஷாட்டுக்கு முயன்றும் பெரிதாகப் பயனிக்கவில்லை. ஆனால் ரெக்கில்டன் சிக்ஸர், பவுண்டரி என துவம்சம் செய்து 33 பந்துகளில் அரைசதம் எட்டினார். ஷாட்கள் பெரிதாக அமையாமல் விரக்தியுடன் ஆடிய வில் ஜேக்ஸ் 18 ரன்னில் ரஸலிடம் விக்கெட்டை இழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஸ்கை புதிய மைல்கல்
அடுத்து களமிறங்கிய 360 டிகிரி பேட்டர் சூர்யகுமார் யாதவ், தொடக்கம் முதலே சிக்ஸர், பவுண்டரி என ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 9 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி என 27 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ரெக்கில்டன் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சூர்யகுமார் யாதவ் டி20 போட்டியில் 8,000 ரன்களை கடந்துள்ளார். இந்த எட்டாயிரம் ரன்களை கடக்க 5,256 பந்துகளை ஸ்கை சந்தித்து, 2வது அதிகவேக 8 ஆயிரம் ரன்களை குவித்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆண்ட்ரே ரஸல் 4,749 பந்துகளில் அதை எட்டி வேகமாக எட்டாயிரம் ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
யார் இந்த அஸ்வனி குமார்?
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் ஹான்ஜேரி எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வனி குமார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அஸ்வனி குமாரின் குடும்பம் ஏழ்மையானது. ஆகையால், கிரிக்கெட் பயிற்சிக்குப் பணம் செலுத்தக்கூட முடியாத நிலையில் இருந்தார். பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களிலும் சென்று கிரிக்கெட் ஆடி 18 வயதில் அஸ்வனி குமார் முதல் தரப் போட்டியில் விளையாடத் தொடங்கினார்.
அதன் பிறகு பஞ்சாப் அணிக்காக ஒரு ஆட்டத்தில் ரஞ்சிக் கோப்பையிலும், 50 ஓவர் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் ஒரு ஆட்டத்திலும் அஸ்வனி ஆடினார். பஞ்சாப் அணியில் 2022-23 சீசனில் ஏராளமான திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததால் அஸ்வனிக்கு இடம் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி பந்துவீச்சாளர்கள் உடல்ரீதியாகவும் வலுவாக இருந்தநிலையில் அஸ்வனி குமார் சாதாரன உடல்வாகுடன் இருந்ததால் யாரும் இவரைப் பெரிதாக நினைக்கவில்லை.
கடந்த 2023 சண்டிகரில் பேட் கிரிக்கெட் அகாடெமியில் அஸ்வனி குமார் சேர்ந்த பிறகு அவரின் திறமை மெருகேறியது. 2024-25 சயத் முஸ்டாக் அலி கோப்பைக்காக, அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து பந்துவீசும் வாய்ப்பு அஸ்வனி குமாருக்குக் கிடைத்தது.
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் முன்பே பல போட்டிகளில் இவரின் பந்துவீச்சைப் பார்த்த சிஎஸ்கே நிர்வாகம் அஸ்வனி குமாரிடம் ஏதோ திறமை இருப்பதைக் கண்டறிந்தது. 2024 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ், சிஎஸ்கே அணியினர் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக அஸ்வனி குமாரை சேர்த்தபோது இவரின் திறமையைக் கண்டு வியந்தனர்.
அதிலும் அஸ்வனி குமாருக்கு தனிப்பட்ட முறையில் கால் செய்த பஞ்சாப் நிர்வாகம் தங்களுக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வர வேண்டும், சிஎஸ்கே முகாமுக்கு செல்லக்கூடாது என்று தெரிவித்ததாக கிரிக்இன்போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் பயிற்சிக்காக, 2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாகவே அஸ்வனி குமார் சென்றார். அப்போது அஸ்வனி குமாரிடம் ஏதோ திறமை இருப்தைக் கண்டறிந்த மும்பை அணி நிர்வாகம், அவரைக் கவனித்தது. பந்துவீச்சில் அதிகமான வேகம் இல்லை, சராசரியாக 135 கி.மீ வேகம்தான். ஆனால் பேட்டர்கள் விளையாட முடியாத அளவுக்குச் சரியான லென்த், ஸ்விங் செய்தல், பல்வேறு வேரியேஷன்களுடன் வீசுவதைப் பார்த்து ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு எடுத்தனர்.
ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்ட பிறகு, சண்டிகரில் தனது பயிற்சியாளர் வீரேந்திர சிங்கிடம் சென்று தனிப்பட்ட முறையில் உடல் தகுதி மேம்பட அஸ்வனி குமார் பயிற்சி எடுத்து, பந்துவீச்சு பயிற்சி எடுத்து தவறுகளைத் திருத்தினார். மும்பை அணிக்குள் அஸ்வனி வந்தபின் அவரின் பந்துவீச்சு திறமை இன்னும் சிறப்பாக மாறியது.
பஞ்சாப் அணிக்காக அஸ்வனி குமார் ஆடியபோது அவரின் பயிற்சியாளராக இருந்தது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர்தான். கிரிக்இன்போ தளத்துக்கு ஜாபர் அளித்த பேட்டியில் “அஸ்வனி குமார் கடின உழைப்பாளி, எப்போது பார்த்தாலும் வலைப் பயிற்சியில்தான் இருப்பார், அவரை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். அவரால் 140 கி.மீ வேகத்தில் பந்துவீச முடியும், யார்கர், பவுன்சர், ஸ்லோவர் பந்துகளைச் சிறப்பாக வீச முடியும். சரியான இடத்துக்கு அஸ்வனி சென்றது மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
மும்பை அணி நிர்வாகம் கொல்கத்தா அணிக்காக களமிறங்கப் போகிறீர்கள் என்று அஸ்வனி குமாரிடம் கூறியதில் இருந்து பதற்றத்துடன் இருந்துள்ளார். இதனால் நேற்றைய மதிய உணவைக்கூட சாப்பிடாமல், வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு இரவு ஆட்டத்தில் அஸ்வனி விளையாடியுள்ளார்.
கேப்டன் ஹர்திக் பாண்டியா, அஸ்வனியிடம் பந்தை கொடுத்துவிட்டு “எஞ்சாய் யுவர்செல்ஃப்” என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு உற்சாகமடைந்த அஸ்வனி குமார் முதல் ஓவர் முதல் பந்திலேயே ரஹானே விக்கெட்டை சாய்த்தார். ஆண்ட்ரே ரஸுலுக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசிய அஸ்வனி அவரை க்ளீன் போல்டாக்கினார்.
அஸ்வனி குமாரின் பந்துவீச்சில் அதிவேகமும் இல்லை, குறைந்த வேகமும் இல்லை, சராசரியாக 130 கி.மீ வேகத்தில்தான் வீசுகிறார். பந்துவீச்சில் வேரியேஷன் செய்யும்போது மட்டும் 140 கி.மீவேகத்துக்கு பந்தை அஸ்வனி வீசுகிறார். பஞ்சாபில் கடந்த ஆண்டு நடந்த ஷெர் இ பஞ்சாப் டி20 தொடரில் டெத் ஓவர்களை அஸ்வனி சிறப்பாக வீசியுள்ளார். அதிமான நெருக்கடி நேரத்தில்கூட, அஸ்வனி நிதானமாக, லென்த்தை கட்டுக்குள் வைத்தே பந்துவீசினார்.
இந்த சீசனில் மும்பை அணி சுழற்பந்தவீச்சாளர் விக்னேஷ் புத்தூர், வேகப்பந்துவீச்சாளர் ராஜூ, அஸ்வனி குமார் ஆகியோரைக் கண்டறிந்து திறமையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு