பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோ நகரில் காவல்துறையினர் கொக்கேன் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருள் மூட்டைகளை கைப்பற்றும் போது, அதில் மத அடையாளமாக தாவீதின் நட்சத்திர (the Star of David) முத்திரை குத்தியிருப்பதைக் கண்டனர்.
இந்த தாவீதின் நட்சத்திரம் , யூத நம்பிக்கையின் அடையாளமாக இல்லை. ஆனால் யூதர்கள் இஸ்ரேலுக்கு திரும்புவது, கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு வழிவகுக்கும் என்ற சில பெந்தகோஸ்தே கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது.
இந்த முத்திரை குத்தப்பட்ட போதைப்பொருட்களை விற்கும் இந்த கும்பலின் பெயர் Pure Third Command ஆகும். இது ரியோ-டி-ஜெனிரோ பகுதியைச் சேர்ந்த மிகவும் சக்தி வாய்ந்த குற்றக் குழுக்களில் ஒன்றாகும்.
தங்களுடைய எதிரிகளை அழித்தல் மற்றும் சுவிசேஷ கிறிஸ்தவத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுதல் ஆகிய இரண்டு விஷயங்களுக்காக இக்குழு பெயர் பெற்றது.
இந்த குழுவின் தலைவர்களில் ஒருவருக்கு கடவுள் தன்னை வெளிப்படுத்தியதாக கருதப்படுகிறது. இதன் பிறகு, இந்த குழு அந்நகரின் வடக்கில் உள்ள ஐந்து குடியிருப்புகளைக் (favelas) கட்டுப்படுத்தியது. இது தற்போது இஸ்ரேல் வளாகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தகவல் விவியன் கோஸ்டா என்ற இறையியலாளர் எழுதிய “Evangelical Drug Dealers” என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கும்பல், தங்களை ஒரு “குற்றப்படையாகப்” பார்க்கிறார்கள் என்றும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளின் “உரிமையாளராக” இயேசு இருப்பதாகவும் எண்ணுகிறார்கள் என்றும் விவியன் கோஸ்டா கூறுகிறார்.
சர்ச்சைக்குரிய வகையில், சிலர் அவர்களை “நார்கோ-பெந்தேகோஸ்துக்கள்” (Narco-Pentecostals) என்று அழைத்து வருகின்றனர்.
ஒரு துப்பாக்கி மற்றும் பைபிள்
போதகர் டியாகோ நாசிமென்டோ ஒரு தனித்துவமான கதையைக் கொண்டிருக்கிறார். அவர் குற்றம் மற்றும் மத போதனை ஆகியவற்றை அவரது வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டத்தில் இரண்டையும் அனுபவித்துள்ளார். துப்பாக்கி ஏந்திய கும்பலை சேர்ந்த ஒரு நபரிடம் இருந்து பைபிள் வாசகங்களைக் கேட்டு அவர் கிறிஸ்தவரானார்.
42 வயதில், இளமையானத் தோற்றத்தில், புன்னகைத் ததும்பும் முகத்தோடு உள்ள டியாகோ நாசிமெண்டோ, ஜான் வெஸ்லியின் போதனைகளைப் பின்பற்றும் போதகர். ஆனால் அவர் ஒரு காலத்தில் ரியோவின் ரெட் கமாண்ட் (Red Command) குற்றக் கும்பலில் உறுப்பினராக இருந்ததை தற்போது நம்புவது கடினம். அவர் விலா கென்னடி குடியிருப்பில் ரெட் கமாண்ட் கும்பலின் நடவடிக்கைகளை நிர்வகித்தும் வந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலுக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகும் அவர் குற்றம் புரிவதை விடவில்லை. ஆனால் அவர் கொக்கேன் போதைக்கு அடிமையான போது இந்த கும்பலுக்குள் இருந்த அவரது அஸ்தஸ்து சரியத்தொடங்கியது.
“நான் என் குடும்பத்தை இழந்தேன். சுமார் ஒரு வருடம் தெருவில் வாழ்ந்தேன். போதைப்பொருள் வாங்குவதற்காக என் வீட்டிலிருந்து பொருட்களை விற்கும் அளவிற்கு சென்றேன்,” என்று அவர் கூறுகிறார்.
அந்த நேரத்தில், அவர் வறுமையின் உச்சத்தில் இருந்த போது, அக்குடியிருப்பில் உள்ள ஒரு பிரபலமான போதைப்பொருள் வியாபாரி அவரை அழைத்தார்.
“அந்தப் பிரபலமான போதைப்பொருள் வியாபாரி, ‘இதிலிருந்து வெளிவர ஒரு வழி இருக்கிறது, ஒரு தீர்வு இருக்கிறது, அது இயேசுவை ஏற்றுக் கொள்வது’ என்று அந்தப் பிரபலமான போதைப்பொருள் வியாபாரி எனக்கு போதிக்கத் தொடங்கினார்” என அவர் நினைவு கூர்ந்தார்.
இளம் வயதில் போதைப்பொருளுக்கு அடிமையான அவர், அந்த போதைப் பொருள் வியாபாரியின் அறிவுரையை ஏற்று, கடவுளை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினார்.
போதகர் நாசிமெண்டோ இன்னும் குற்ற கும்பலைச் சேர்ந்தவர்களை சந்தித்து, அவர்களுடன் நேரத்தைச் செலவிடுகிறார். ஆனால் இந்த முறை அவர் சிறைச்சாலைகளில் அவர்களுக்கு போதனை வழங்கும் பணியின் மூலமாக அவர் இதனை செய்து வருகிறார்.
அவரது வாழ்க்கை மாறியது போல, மற்றவர்களின் வாழ்க்கையை மாற்ற அவர் தற்போது உதவுகிறார்.
குற்ற கும்பலை சேர்ந்தவர் ஒருவரின் மூலம் அவர் மதமாற்றம் செய்யப்பட்டிருந்த போதிலும், மதமும் குற்றமும் ஒன்றாக இருக்க முடியாது என்று அவர் நம்புகிறார்.
“நான் அவர்களை சுவிசேஷ கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக பார்க்கவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
“தவறான பாதையில் செல்பவர்களாகவும், கடவுள் பயம் கொண்டவர்களாகவும்தான் அவர்களைப் பார்க்கிறேன், ஏனென்றால் கடவுள் தங்கள் உயிரைக் காப்பவர் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”
“மதம், குற்றங்கள் ஆகிய இரண்டையும் இணைத்து, சுவிசேஷ கிறிஸ்தவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் என்று எதுவும் இல்லை. ஒருவர் இயேசுவை ஏற்று பைபிளில் உள்ள கட்டளைகளைப் பின்பற்றினால், அந்த நபர் போதைப்பொருள் வியாபாரியாக இருக்க முடியாது”, என்றும் அவர் தெரிவித்தார்.
‘முற்றுகையின் கீழ் வாழ்வது’
சில கணிப்புகளின்படி, இந்த பத்தாண்டுகளின் முடிவுக்குள் சுவிசேஷ கிறிஸ்தவம், பிரேசிலின் மிகப்பெரிய மதமாக வளர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவத்தை முந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ந்துவரும் இந்த பெந்தேகோஸ்தே இயக்கம், இந்த கும்பலின் கட்டுப்பாட்டில் இருக்கும் குடியிருப்புகளில் வாழும் மக்களிடையே சிறந்த தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வாழும் மக்களிடையே பெந்தேகோஸ்தே கிறிஸ்தவம் வளர்ந்துவந்தது. இந்த வளர்ந்து வரும் நம்பிக்கையை பயன்படுத்தி அந்த கும்பல்களில் சிலர் அதிகாரத்தைப் பெற முயற்சிக்கின்றனர்.
ஆனால், அவர்கள் ஆப்ரிக்க -பிரேசிலிய மதங்களை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதே அவர்களுக்கு எதிராக வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு ஆகும்.
ரியோவின் ஃப்ளூமினென்ஸ் ஃபெடரல் பல்கலைக் கழகத்தின்(Fluminense Federal University) சமூகவியல் பேராசிரியரான கிறிஸ்டினா விட்டல், ரியோவின் ஏழைச் சமூகங்கள் நீண்ட காலமாக இந்தக் குற்றக் கும்பல்களின் “முற்றுகையின் கீழ்” வாழ்ந்து வருவதாகவும், இது இப்போது அவர்களின் மத சுதந்திரத்தைப் பாதிக்கிறது என்றும் கூறுகிறார்.
“இஸ்ரேல் வளாகத்தில், பிற மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள் அவற்றைப் பொது வெளியில் கடைப்பிடிப்பதைக் காண முடியாது.” என்றும் அவர் தெரிவித்தார்.
ஆப்ரிக்க -பிரேசிலியன் உம்பாண்டா மற்றும் கேண்டம்ப்லே ஆகிய மத நம்பிக்கைகளின் வழிபாட்டு இடங்கள் அங்கு மூடப்பட்டுள்ளன. சில சமயங்களில் அந்தக் கட்டடங்களின் சுவர்களில் இக்கும்பலைச் சேர்ந்தவர்கள், “இது இயேசுவின் இடம்” என்ற செய்திகளை வரைந்து வைக்கின்றனர், என்கிறார் விடல்.
ஆப்ரிக்க – பிரேசிலிய மத நம்பிக்கைகளை பின்பற்றுபவர்கள் நீண்ட காலமாக பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த போதைப்பொருள் கும்பலைத் தவிர பலர் அவர்களை இலக்காக கொண்டுள்ளனர்.
ஆனால், போதைப்பொருள் கும்பல்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள், சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார் இன மற்றும் சகிப்புத்தன்மையற்ற குற்றங்களுக்கான ரியோ காவல் துறையின் தலைவர் டாக்டர் ரீட்டா சலீம்.
“இந்த வழக்குகள் மிகவும் தீவிரமானவை, ஏனெனில் அவை ஒரு குற்றவியல் அமைப்பாக, ஒரு குழு மற்றும் அதன் தலைவரால் செயல்படுகின்றன. அக்குழு, அது ஆதிக்கம் செலுத்தும் அனைத்துப் பகுதியிலும் பயத்தை ஏற்படுத்துகின்றது” என்கிறார் டாக்டர் ரீட்டா சலீம்.
மேலும் அவர் கூறும்போது, இஸ்ரேல் வளாகத்தில் முதன்மை குற்றவாளி என்று கருதப்படும் நபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். குற்றம் சுமத்தப்பட்ட அந்த நபர், மற்றொரு குடியிருப்பில் உள்ள ஆப்ரிக்க -பிரேசிலிய மத நம்பிக்கையின் வழிபாட்டு இடங்களைத் தாக்க ஆயுதம் ஏந்தியவர்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
‘நவீன சிலுவைப் போர்’
ரியோவின் குடியிருப்புகளில், மதப் பயங்கரவாதம் பற்றிய குற்றச்சாட்டுகள் முதன் முதலில் 2000களின் முற்பகுதியில் கவனத்தை ஈர்த்திருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் அப்பிரச்னை “அதிக அளவில் அதிகரித்துள்ளது” என்று ரியோவின் சிட்டி ஹாலைச் சேர்ந்த மத பன்முகத்தன்மையின் ஒருங்கிணைப்பாளர் மார்சியோ டி ஜகுன் கூறுகிறார்.
பிரேசிலில் இந்த பிரச்னை இப்போது தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மற்ற பிரேசில் நகரங்களிலும் இதேபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று கேண்டம்ப்லே மதத்தின் பாபலோரிக்ஸா (உயர் மதகுரு) ஜகுன் கூறுகிறார்.
“இது நவீன சிலுவைப்போரின் ஒரு வடிவம்,” என்றும் அவர் கூறுகிறார். “இந்த தாக்குதல்களின் பின்னணி மதம் மற்றும் இனம் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை அளிக்கிறது. அவர்கள் ஆப்ரிக்காவிலிருந்து வந்த மதங்களை வேறுபடுத்தி, இறைவனின் பெயரில் தீமையை ஒழிப்பதாகக் கூறி வருகின்றனர்.” என்றும் குறிப்பிட்டார்.
ஆனால் பிரேசிலில் மதமும் குற்றமும் நெடுங்காலமாக பின்னிப் பிணைந்துள்ளன என்கிறார் இறையியலாளர் விவியன் கோஸ்டா. கடந்த காலங்களில், இக்கும்பலைச் சேர்ந்தவர்கள், ஆப்ரிக்க-பிரேசிலிய தெய்வங்கள் மற்றும் கத்தோலிக்க புனிதர்களிடம் இருந்து பாதுகாப்பைக் கேட்டார்கள் என்று தெரிவித்தார்.
“ரெட் கமாண்ட் குழுவின் தொடக்கத்தையோ அல்லது Third Command குழுவின் தொடக்கத்தையோ பார்த்தால், ஆப்ரிக்க மதங்கள் [மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவம்] அவற்றின் தொடக்கத்திலிருந்தே உள்ளன.
அதில் புனித செயின்ட் ஜார்ஜ் இருப்பதையும் பச்சை குத்துவது , சிலுவைகள், மெழுகுவர்த்திகள், காணிக்கைகள் ஆகியவற்யையும் காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அதனால்தான் இதை நார்கோ -பெந்தேகோஸ்தாலிசம் என்று அழைப்பது, குற்றத்திற்கும் மதத்திற்கும் இடையிலான வரலாற்று மற்றும் பாரம்பரியமான உறவைக் குறைப்பதாகும்.
நான் அதை ‘நார்கோ-மதவாதம்’ என்று அழைக்க விரும்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.
மத நம்பிக்கை மற்றும் குற்றவியலை சம்பந்தப்படுத்தும் இந்த விஷயத்தை ஒருவர் என்னவென்று அழைத்தாலும், ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிரேசிலின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத சுதந்திரத்தின் உரிமையை இது பாதிக்கிறது.
வன்முறையில் ஈடுபடும் போதைப்பொருள் கடத்தல் செய்பவர்கள் தங்கள் அதிகாரத்தின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றொரு வழியாகவும் இது உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.