புதிய வருமான வரி: உங்கள் சம்பளம் என்ன? எவ்வளவு வரி கட்ட வேண்டும்?- எளிய விளக்கம்
2025 – 2026 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியர்களிடையே மிகவும் அதிக கவனம் ஈர்த்த அறிவிப்புகளில் ஒன்றாக வருமான வரி குறித்த அறிவிப்பு இருந்தது.
அதற்கு காரணம் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி குறைப்பு நடவடிக்கை.
கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து தற்போது புதிய வருமான வரி முறையில் 12 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
2019-ல் 5 லட்சமாகவும், 2023-ல் 7 லட்சமாகவும் உயர்ந்தபட்ட நிலையில் தற்போது 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2025 -2026 நிதியாண்டுக்கு நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளை இந்த பட்ஜெட்டில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், சேமிப்புகளை ஊக்குவிக்கக்கூடிய, வீட்டுக்கடன் உள்ளிட்டவர்களுக்கு வரி விலக்கு பெறக்கூடிய பழைய வருமான வரி முறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு இது பொருந்தாது. புதிய வருமான வரிமுறைக்கு மட்டுமே பொருந்தும் என்பதாகும்.
இந்தியாவில் தனிநபர் வருமான வரி அதிகமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு பாஜக அரசு புதிய வருமான வரி தாக்கல் முறை எனும் ஒரு புதிய முறையை கொண்டு வந்தது.
தற்போது இந்தியர்கள் இரு வருமான வரி தாக்கல் முறைகளில் எதை வேண்டுமானாலும் எந்த ஆண்டில் இருந்து வேண்டுமானாலும் தங்கள் வரியை தாக்கல் செய்யலாம்.
பழைய வருமான வரி முறையை பொறுத்தவரையில் வருடந்தோறும் 2.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது. 2.5 லட்சம் முதல் ஐந்து லட்சத்துக்கு 5 சதவீதம் வரி.
5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி. அதாவது 5 லட்சத்துக்கு மேல் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு லட்சத்துக்கும் அரசுக்கு 20 ஆயிரம் ருபாய் வரி கட்ட வேண்டும்.
10 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி. ஒருவர் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பாதித்தால் ஒவ்வொரு லட்சத்துக்கும் 30 ஆயிரம் ரூபாய் வரி கட்ட வேண்டும்.
ஆனால், 2020-ல் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்திய புதிய வருமான வரி முறை வேறு விதமாக இருந்தது. வரி விலக்கு பெறும் பல அம்சங்கள் ஒழிக்கப்ட்டன, அதே சமயம் வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வரப்பப்ட்டு, பழைய வருமான வரியை ஒப்பிடும் போது ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் பெறுபவர்களுக்கு குறைவான வரி செலுத்தும் வகையில் புதிய வருமான வரி முறை அமைக்கப்பட்டது. மேலும் இது மக்கள் புரிந்து கொள்வதற்கு, வரித் தாக்கல் செய்வதை ஊக்கப்படுவதற்கும் எளிமையாக இருக்கும் என மத்திய அரசு கூறியது.
நிர்மலா சீதரமானின் இன்றைய பட்ஜெட் உரையில் பழைய வருமான வரி தாக்கல் முறையை பயன்படுத்துவர்களுக்கு எந்த வித சலுகை அறிவிப்பும் இல்லை. எனவே பழைய வரி முறையை பயன்படுத்துபவர்கள் புதிதாக மிகப்பெரிய அளவில் வரியை சேமிக்க முடியுமா என நீங்கள் ஆராய்ந்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான். ஆனால் உங்களை சிந்திக்கத் தூண்டும் வகையில் புதிய வருமான வரி முறையில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
புதிய வருமான வரி முறையில் வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்தியது மட்டுமின்றி, வரி குறைப்பையும் செய்திருக்கிறது மத்திய அரசு.
முதல் 4 லட்சம் ரூபாய்க்கு வரி கிடையாது. 4 முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம். 8 முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீதம். 12 லட்சம் முதல் 16 லட்சம் ரூபாய்க்கு 15 சதவீதம். 16 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய்க்கு 20 சதவீதம். 20 முதல் 24 லட்சம் ரூபாய்க்கு 25 சதவீதம். 24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்.
புதிய வருமான வரி முறையில் சேமிக்கத் தூண்டும் அம்சங்கள் இல்லை என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், வரி குறைப்பு காரணமாக மத்திய தர வர்க்கத்தினர் கையில் அதிக பண புழக்கம் வர இந்த வரிமுறை உதவும். இது அவர்கள் சேமிக்கவும், முதலீடு செய்யவும் உதவும் என்கிறார் நிர்மலா சீதாராமன்.
கடந்த ஆண்டுகளை போல அல்லாமல், இனி இந்த புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தால், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்றவர்கள் சுமார் 80 ஆயிரம் ரூபாயும், 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற்றவர்கள் 70 ஆயிரம் ரூபாய் வரையிலும் வரியை சேமிக்க முடியும் என்கிறார் அவர்.
புதிய வருமான வரி முறை காரணமாக ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அரசு நேரடி வருமான வரி இழப்பு ஏற்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் தரவுகள் அடிப்படையில் பார்த்தால், 2020-21 நிதியாண்டில் 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் தனி நபர் வருமான வரி தாக்கல் மூலம் நேரடி வரியாக மத்திய அரசுக்கு கிடைத்தது. அது 2023-24-ல் 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் தகவல்களின் படி, 2019-20 நிதியாண்டில் 6 கோடியே 48 லட்சம் பேர் வரி தாக்கல் செய்துள்ளனர். 2023 – 24 நிதியாண்டில் இதில் 8 லட்சத்து 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஆகவே நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அரசு கூறும் இழப்பு வரும் ஆண்டுகளில் ஈடுகட்டப்படக்கூடும் என்றே தெரிகிறது.
முழு விவரங்கள் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.