வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு தப்பித்து வந்தவர்களில் ஒரு குழுவினர், துணிச்சலான, இதுவரை யாரும் செய்யாத ஒரு பணிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். யுக்ரேன் போரின் முன் களத்திற்கு சென்று, அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள வடகொரிய வீரர்கள் தப்பிக்க உதவுவதே இந்த திட்டம்
வட கொரிய ராணுவத்தின் மனநிலை மற்றும் அமைப்பை பற்றிய தங்களின் ஆழமான புரிதல் காரணமாக, வட கொரிய வீரர்களின் மனதை மாற்றி அவர்களை தப்பிக்க வைக்க முடியும் என இந்த குழு வாதிடுகிறது.
வடகொரிய ராணுவத்தினர் தங்கள் மரணங்களை “கெளரவமாக” கருதுவதற்கு மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர் என்று இந்த குழு கூறுகிறது.
முன்னதாக, யுக்ரேனில் நடக்கும் போரில் சண்டையிடுவதற்காக வட கொரியா சுமார் 10,000 வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கை என்று பலரும் நினைக்கின்றனர். நாட்டிற்கான நிதியைப் பெறுவதற்கும் அதன் ராணுவத் தொழில்நுட்பத்தை நவீனமயமாக்குவதற்கும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக பலர் நினைக்கின்றனர்.
போரில் ஈடுபட்டிருக்கும், ஒவ்வொரு ராணுவ வீரரும் மாதம் ஒன்றுக்கு 2,000 டாலர்கள் சம்பாதிப்பதாக தென் கொரியாவின் தேசிய உளவு பிரிவு கூறுகிறது.
1970களில் வியட்நாம் போரிலும் வடகொரிய வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் யுக்ரேனில் நடக்கும் போர் வட கொரிய வீரர்கள் பங்குபெறும் முதல் நவீன கால போராகும்.
1950 முதல் 1953 வரை முறையே சீனா மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் நீடித்த கொரியப் போரின் முடிவுக்கு பின்பும் வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே ஒரு பதற்றமான உறவே நீடிக்கிறது.
70 ஆண்டுகளுக்கு முன்னர் கொரிய தீபகற்பம் இரண்டு நாடாக பிரிந்ததிலிருந்து 34,000 வட கொரியர்கள் தென் கொரியாவிற்கு தப்பி வந்துள்ளனர்.
‘வடகொரிய வீரர்கள் ஆபத்தில் உள்ளனர்’
வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தப்பித்து வந்தவர்களால் நடத்தப்படும் வட கொரிய கிறிஸ்துவர் சிப்பாய்கள் சங்கம், வட கொரிய டிஃபெக்டர் சீனியர் ஆர்மி ஆகியவை வட கொரியாவின் முடிவை கண்டித்துள்ளன. மேலும் தங்களை யுக்ரேன் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோருகின்றனர்
“கிம் ஜாங் உன் ஆட்சியின் மனிதாபிமானமற்ற நடத்தையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ராணுவ வீரர்களை பீரங்கிக்கு தீவனமாக்கி தனது ஆட்சிக்கு நிதியளிப்பதற்கும், போர்க் கருவிகளை நவீனமயமாக்குவதற்கும் வடகொரியா திட்டமிடுகிறது” என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“அனுப்பப்பட்ட வட கொரிய வீரர்கள், ‘எனது மரணம் ஒரு பெருமைக்குரியது’ என்று கற்பிக்கப்பட்ட மாயையை நம்பி போரில் சண்டையிடக் கூடும். ஆனால் அது உண்மையில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்” என்றார் முன்னாள் வடகொரிய அதிகாரியும் வட கொரிய கிறிஸ்துவர் சிப்பாய்கள் சங்கத்தின் தலைவருமான சிம் ஜு-இல்.
“நானும் ஒருவேளை போர்முனையில் இருந்திருந்தால், வட கொரிய வீரர்களுடன் சேர்ந்து தோட்டாக்களை எதிர்கொண்டிருப்பேன். ஆனால் போரின் உண்மைகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பிப்பதில் மட்டுமே எனது கவனம் உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
உத்திகள்
போர்முனையில் நிறுத்தப்பட்டுள்ள வட கொரிய படைகளை தொடர்பு கொள்ள பல்வேறு வழிகளை இந்த குழுவினர் முன்வைத்தனர்.
சமூக ஊடக பிரசாரங்கள், மெகாஃபோன் ஒளிபரப்புகள் மற்றும் ட்ரோன்-மூலம் அனுப்பப்படும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலம் உளவியல் போரை நடத்தி அவர்கள் மனதை மாற்றலாம் என்று நம்புகின்றனர்.
“யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் இதுபற்றி பரப்புரை செய்தல், ட்ரோன் மூலம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், வீரர்கள் இருக்கும் இடத்தை நெருங்க முடிந்தால் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி செய்திகளை சொல்லுதல் போன்ற செயல்பாடுகளால் உளவியல் போர் நடத்துவோம்” என்கிறார் வேர்ல்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் நார்த் கொரியன் ஸ்டடீஸின் இயக்குனர் முனைவர் அஹான் சான்- இல்.
வடகொரியாவில் பொதுமக்களை கொண்ட ஒரு தற்காப்பு படையில் பணியாற்றியுள்ள சான்- இல் யுக்ரேனில் நடக்கும் போரில் வட கொரிய சிறப்புப் படைகள் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலை கொண்டுள்ளார். ஊடுருவல், உள்கட்டமைப்பை நாசப்படுத்துதல் மற்றும் படுகொலை செய்ய பயிற்சியளிக்கப்பட்ட Storm Corps படையும் போரில் ஈடுபட்டிருக்கலாம் என்கிறார் அவர்.
யுக்ரேன் போரில் நிறுத்தப்பட்டிருக்கும் வட கொரிய வீரர்கள் தப்பி செல்வதற்கு தூண்டும் நோக்கத்தில் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு தப்பித்து வந்த சிலர் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர் என்று சில செய்திகள் வெளிவந்துள்ளன
சவால்கள்
நடைமுறை மற்றும் ராஜ்ஜீய சவால்கள் இந்த குழுக்களின் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகின்றன.
தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் யுக்ரேன் மீது பயணத் தடை விதித்துள்ளது. மீறுபவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது 7,000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
வட கொரியாவில் இருந்து தப்பித்தவர்களை யுக்ரேனுக்கு அனுப்புவது வடகொரியா மற்றும் ரஷ்யாவை கோபப்படுத்தலாம். பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கலாம் என்ற கவலையும் உள்ளது.
“நாங்கள் போராடுவோம் என்று அறிவிப்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் உண்மையில் படைகளை அனுப்புவது ராஜ்ஜீய உறவுகளின் அடிப்படையில் ஒரு நுட்பமான விஷயம்” என்று வட கொரிய பலூன் அமைப்பின் தலைவர் லீ மின்-போக் கூறினார். இந்த அமைப்பும் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தப்பித்து வந்தவர்களால் உருவாக்கப்பட்டதுதான்.
சிலர், வட கொரிய வீரர்களை போரில் இருந்து பின்வாங்குமாறு வற்புறுத்துவது சாத்தியமா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
வட கொரியாவின் Storm Corps படையின் முன்னாள் உறுப்பினரான லீ வூங்-கில், இத்தகைய முயற்சிகள் தீங்கு விளைவிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறார்.
“நீங்கள் அவர்களைக் குறை கூற முயன்றால், அவர்கள் உங்கள் நெற்றியை குறிவைத்து சுடுவார்கள்” என்று அவர் கூறினார்.
”தென் கொரியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் வட கொரிய நாட்டைச் சேர்ந்த சிலருக்கு வட கொரிய ராணுவத்தின் சமீபத்திய ஆழ்ந்த செயல்பாடுகள் பற்றிய புரிதல் இல்லை’’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வட கொரிய கிறிஸ்துவர் சிப்பாய்கள் சங்கத்தைச் சேர்ந்த சிம், வட கொரிய துருப்புக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் ஒழுக்கம் மற்றும் விசுவாசத்தை உடைப்பதில் சவால் இருக்கும் என்று கூறுகிறார்.
தென் கொரியாவின் பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த டூ ஜின்-ஹோவைப் பொறுத்தவரை, ஒலிபெருக்கி மூலம் தகவல்களை கடத்த நினைப்பது அதிக அபாயங்களை ஏற்படுத்தும்.
”போரில் வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு அருகே, வடகொரியா அரசுக்கு எதிராக ஒலிபெருக்கியை இயக்கியவுடன், அவர்கள் ட்ரோன்களால் தாக்கப்படுவார்கள்.” என்று எச்சரிக்கிறார் அவர்
Storm Corps படையின் முன்னாள் உறுப்பினர் லீ வூங்-கில், நேரடி தொடர்பு முறைகளை தவிர்த்து இணையம் வழியாக பரப்புரை செய்வதை பரிந்துரைக்கிறார்.
”நேரடி தொடர்பை விட வீடியோ பதிவு போன்ற செயல்முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று அவர் நம்புகிறார்
“வட கொரியாவை விட்டு வெளியேறியவர்கள் தென் கொரியாவிற்கு வந்து மகிழ்ச்சியாக வாழ்வது போன்ற சிறிய வீடியோக்களை ஒளிபரப்புவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”
வட கொரிய வீரர்கள் இணையம் வழியாக அந்த வீடியோக்களை பெறுவது சாத்தியமற்றது. எனவே இதன் ஆடியோக்கள் கொண்ட MP3 ப்ளேயர்கள் அல்லது பழைய வகை செல்போன்களை அவர்களுக்கு கிடைக்கும்படி செய்யலாம் என்று லீ பரிந்துரைக்கிறார்.
உறுதி
இதுபோன்று அபாயங்கள் மற்றும் சவால்கள் இருக்கும் நிலையில், சில குழுக்கள் யுக்ரேன் போரில் இருந்து வடகொரிய வீரர்களை பின்வாங்க வைக்கும் இந்த பணியில் உறுதியாக உள்ளனர்.
“வட கொரியாவில் இருந்து வெளியேறிய நாங்கள் அர்த்தமுள்ள செயல்களைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். மீதம் இருக்கும் எங்கள் வாழ்நாளை இதுபோன்ற பணிகளில் பங்களிப்பது அர்த்தமுள்ளதாக மாற்றும்” என்று சிம் கூறினார்.
இந்த குழுக்களின் திட்டங்கள் இன்னும் திட்டமிடல் நிலையில் இருக்கிறது. இதனிடையே யுக்ரேன் அரசாங்கம் இதுதொடர்பாக ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. யூடியூப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் வட கொரிய வீரர்களை குறிவைத்து “கொரிய ராணுவ வீரர்களுக்கு செய்தி” என்ற தலைப்பில் ஒரு பரப்புரை வீடியோவை வெளியிட்டுள்ளது.
”வடகொரியாவில் இருந்து தப்பித்து தென்கொரியாவில் தஞ்சம் அடைந்த குழுக்கள் யுக்ரேனுக்கு செல்வது குறித்து தங்களுக்கு எந்த நிலைப்பாடும் இல்லை என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
யுக்ரேனிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹியோர்ஹி டைக்கி, ”வட கொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தஞ்சம் புகுந்த மக்கள் குழுக்கள் வரவேற்கப்படுகின்றனர். எங்கள் சர்வதேசப் படையில் சேர ஊக்குவிக்கிறோம்” என்று பிபிசியிடம் கூறினார்.
“யுக்ரேனில் அவர்களை வரவேற்க நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அவர்களுடன் பணியாற்றத் தயாராக உள்ளோம். வட கொரிய ராணுவத்தைப் பற்றிய அவர்களின் அறிவு எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது” என்று அவர் கூறினார்.
“யுக்ரேனுக்கு எதிரான ஒரு போரில் வட கொரிய துருப்புக்களை புதின் ஈடுபடுத்துவது ஒரு தீவிர உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அதற்கு உலகளாவிய எதிர்வினை தேவைப்படுகிறது.” என்றும் அவர் விவரித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு