ராவல்பிண்டியில் நேற்று நடந்த குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் வங்கதேச அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து அணி.
முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. 237 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணி 23 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் இந்த முறை அரையிறுதிக்குக் கூட தகுதி பெறாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. அதேநேரம், குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
வங்கதேச அணியைப் பொருத்தவரை அந்த அணியில் கேப்டன் ஷாண்டோ(77), ஜாகீர் அலி(47) சேர்த்த ஸ்கோர்தான் ஓரளவு கவுரமான ஸ்கோர் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியின் அருமையான தொடக்கத்தை அளித்து, நடுவரிசை வீரர்கள் சோபிக்கத் தவறியதால், எதிர்பார்த்த ஸ்கோரைக் கொண்டுவர முடியவில்லை.
பந்துவீச்சிலும் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு நெருக்கடியளித்து, 3 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தினர்.இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருக்கலாம், ஆனால் அதன்பின் ரச்சின் ரவீந்திரா, லேதம் கூட்டணியை பிரிக்க முடியாமல் வெற்றியை தாரைவார்த்தனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேச அணி கிரிக்கெட்டில் இருக்கிறது. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்தவிதமான குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமும் இல்லாமல்தான் இருக்கிறது. பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு ஏற்ற இறக்கங்கள் வந்தன, கோப்பைகளை வென்றுள்ளன. ஆனால், வங்கதேசம் அணி இதுவரை அந்த உயரத்தை எட்டவே இல்லை. சராசரியான பேட்டிங், சராசரிக்கும் குறைவான பீல்டிங், பந்துவீச்சு என்ற ரீதியில்தான் வங்கதேசத்தின் பயணம் தொடர்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வங்கதேச அணி கேப்டன் ஷாண்டோ அதிகபட்சமாக 77 ரன் எடுத்தார்.
ரவீந்திரா சதத்தால் மீண்ட நியூசிலாந்து
237 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு வில்லியம்ஸன்(5), யங்(0) ஆகியோர் அதிர்ச்சிக்குரிய வகையில் ஆட்டமிழந்தனர், 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. ஆனால், 4வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டு ஆட்டத்தை கையில் எடுத்தனர்.
இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரவீந்திரா சதம் அடித்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். லேதம் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். பிலிப்ஸ் 21, பிரேஸ்வெல் 11 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
நியூசிலாந்தில் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக பிரேஸ்வெல் உருவாகி வருகிறார். இந்த ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஆட்டநாயகன் விருது வென்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் ரச்சின் ரவீந்திரா
“இந்தியாவுக்கு எதிரான போட்டியை எதிர்பார்க்கிறோம்”
நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர் கூறுகையில் ” சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி. வங்கதேசம் சவாலாக இருப்பார்கள் எனத் தெரியும். பந்துவீச்சில் எங்களுக்கு சவாலாக இருந்தார்கள், சமாளித்துவிட்டோம். பிரேஸ்வெல் பந்துவீச்சு அற்புதம்.
இரவில் பனிப்பொழிவின் போதும், பகல் நேரத்திலும் இருவிதமாக ஆடுகளத்தின் தன்மை மாறியது. காயத்திலிருந்து மீண்டு வந்த ரவீந்திரா அருமையான இன்னிங்ஸ் கொடுத்தார். இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடுவார் என நம்புகிறேன். துபை வித்தியாசமான ஆடுகளம், வித்தியாசமான சூழல்” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நியூசிலாந்து அணியின் கேப்டன் சான்ட்னர்
இந்தியா, நியூசிலாந்து முன்னேற்றம் – பாகிஸ்தான் வெளியேற்றம்
வங்கதேசத்தை வீழ்த்தியதன் மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி 4 புள்ளிகளுடன் நிகரரன்ரேட்டில் 0.863 என்ற கணக்கில் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணியும் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் 0.647 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது.
மார்ச் 2-ஆம் தேதி துபைல் நடக்கும் குருப் ஏ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும்.
போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி மோசமான தோல்விகளுடன் தொடரிலிருந்தே வெளியேறியது. இனி ஆறுதல் வெற்றிக்காக வங்கதேசத்துடன் வரும் 27-ஆம் தேதி ராவல்பிண்டியில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் மோதுகிறது.
பாகிஸ்தான் அணி கடந்த 1996ம் ஆண்டுக்குப்பின் ஐசிசி சார்பில் நடக்கும் போட்டியை 30 ஆண்டுகளுக்குப் பின் இப்போது நடத்தியது. இதற்காக கோடிக்கணக்கான செலவில் மைதானங்களை, அரங்குகளை, ஆடுகளங்களை சீரமைத்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் கடைசி இடம், 3 உலகக் கோப்பைத் தொடர்களிலும் அரையிறுதிக்கு செல்ல முடியாத நிலை, டி20 உலகக்கோப்பைத் தொடரில் முதல் சுற்றோடு வெளியேற்றம், இப்போது ஐசிசி சாம்பியன்ஸ் தொடரை நடத்தியும் அதில் அரையிறுதி கூட தகுதி பெறாத நிலையில் மோசமான நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 1992ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணியின் ஒத்த தன்மைகள் ஏதும் இல்லாத நிலையில் இப்போது அந்த அணி இருக்கிறது.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் மிகப்பெரிய சரிவுகளுக்குச் சென்றிருந்தாலும், அவர்கள் யாரும் ஊகிக்க முடியாத வகையில் ஏதேனும் ஒன்றைச் செய்து மீண்டனர்.
பாகிஸ்தான் வீரர்கள் வெற்றிக்கு அருகே சென்று போராடி தோற்கவில்லை, அதேநேரத்தில் தோல்வியை ஏற்றுக் கொள்ள பழகி விட்டார்கள் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்று வர்ணனையாளர்கள் கூறுகிறார்கள்.
இந்திய அணிக்கு எதிரான பாகிஸ்தானின் தோல்வி ஆட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை அல்லது கவனக்குறைவால் ஏற்பட்டது அல்ல. அருமையான ஆடுகளத்தில் டாஸ் வென்று, வேகம் குறைந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்தனர். திட்டமிடலுடன்தான் களத்துக்கு பேட் செய்ய வந்தனர். இந்திய தரப்பில் பிரதான வேகப்பந்துவீச்சாளர் ஷமி இல்லாத நிலையில் எந்த விதமான ரிஸ்கும் எடுக்காமல் ஓவருக்கு ஐந்து ரன்கள் எடுத்து விளையாடும் அளவுக்கு கூட அவர்களின் பேட்டிங் இல்லை. டாட் பந்துகள் அதிகரித்து, இறுதியில் ரிஸ்க் எடுத்து ஆட முயன்ற போது விக்கெட்டுகள் விழுந்தன.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஓரளவு திட்டமிடல் இருந்தது, தொடக்கத்திலேயே இரு அருமையான பந்துகள் மூலம் ரோஹித் சர்மா, சுப்மன் கில்லை வீழ்த்தினர். ஆனால், இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று முயலும் போது இந்திய பேட்டர்களிடம் இருந்த ஆழமான தீர்க்கம், விளையாட்டின் தரம் பாகிஸ்தான் பந்துவீச்சில், வீரர்களின் மன திடத்தில் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.
2017-ஆம் ஆண்டுதான் பாகிஸ்தான் அணி கடைசியாக கிரிக்கெட்டில் அதன் உச்சத்தை தொட்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பின் கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி எந்தவிதமான முன்னேற்றத்தையும், குறிப்பிடத்தகுந்த எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை, ஐசிசி தொடர்களிலும் குறிப்பிட்ட அளவு முன்னேறவும் இல்லை.
ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்படுத்தினாலும், கடந்த ஆண்டு இறுதியில் முகமது அப்பாஸ் டெஸ்ட் போட்டிகளில் திரும்ப அழைக்கப்படும் அளவுக்கு இந்த மூவரின் திறமை தேக்கமடைந்தது.
அப்ரிடி, நசீம், ராஃப் ஆகியோருக்கு மாற்றாக புதிய வேகப் பந்துவீச்சாளர்கள் உருவாக்கப்படவில்லை, இதனால் முறையான ஓய்வு இல்லாமல் திறமையை மெரூகூட்ட முடியாமல் தேக்கமடைந்திருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சில் சயீத் அஜ்மலுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளரை உருவாக்கவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
உள்நாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த உள்நாட்டு தொடர்கள் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தலைவர்கள் மாறுகிறார்கள், திட்டமிடுகிறார்கள். ஆனால் சிறந்த வீரர்கள் உருவாகவில்லை.