0
சட்டவிரோத புலம்பெயர்வைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கையெழுத்திட்ட “ஒருவர் உள்ளே, ஒருவர் வெளியே” (‘one in, one out’) ஒப்பந்தத்தின் கீழ், மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம், ஒரு சிறிய குழந்தையுடன் இங்கிலாந்திற்கு வந்தனர்.
இவர்களே மேற்படித் திட்டத்தின் படி வந்த முதல் நபர்கள் ஆவர்.
இந்த முன்னோடித் திட்டத்தின் (pilot scheme) கீழ் இதுவரை இங்கிலாந்தில் இருந்து நான்கு புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வருகை இடம்பெற்றுள்ளது.
இவர்களுக்கு மூன்று மாத விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விசாக்கள் மூலம் அவர்களுக்கு வேலை செய்யும் உரிமை இல்லை. அத்துடன், பொது நிதியுதவி பெறுவதற்கான வழிமுறையும் இல்லை. இருப்பினும், அவர்கள் இங்கிலாந்தில் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க முடியும்.
தொடர்புடைய செய்தி : பிரான்ஸ்க்கு திருப்பி அனுப்பப்படும் இரண்டாவது புலம்பெயர் நபர்
இது “இங்கிலாந்திற்கு சட்டவிரோதமாக நுழைவது பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்ற தெளிவான செய்தியை ஆட்கடத்தல் கும்பல்களுக்கு அனுப்புவதாக” உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
“சிறிய படகுகள் மூலம் வரும் நபர்களைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வெளியேற்றுவோம்” என்று அரசாங்கம் கூறியுள்ளது.
ஜூலையில் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், மக்கள் ஆங்கில கால்வாய் வழியாக ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்க உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது.
“மனித துயரத்திலிருந்து இலாபம் ஈட்டும்” குற்றவியல் கடத்தல் வலையமைப்புகளை அகற்றுவதற்கு பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் முயல்கிறார்.
இந்த ஆண்டு இதுவரை 30,000க்கும் அதிகமான மக்கள் சிறிய படகுகள் மூலம் ஆங்கில கால்வாயைக் கடந்துள்ளனர்.