பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற முன்னோடி ஒப்பந்தத்தின் கீழ், இதுவரை 281 அகதிகளை இங்கிலாந்து மீண்டும் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த திட்டத்தின் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் மூலம் 350 பேர் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த இரு எண்ணிக்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு, பிரான்ஸ் தரப்பில் ஏற்பட்ட செயல்பாட்டு சிக்கல்களால் ஏற்பட்டதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக, அகதிகளை ஏற்றிச் செல்ல இருந்த ஒரு விமானம், பிரான்ஸுக்கு செல்ல முடியாமல் போனதாகவும், வருங்கால விமானங்கள் மூலம் இந்த சமநிலை சரிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் நிழல் உள்துறை அமைச்சர் கிறிஸ் பிலிப், கடந்த ஆண்டு மட்டும் 41,000-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக இங்கிலாந்து வந்த நிலையில், வெறும் 281 பேரையே திருப்பி அனுப்பியிருப்பது அரசின் தோல்வியை வெளிப்படுத்துவதாக குற்றம்சாட்டினார். இந்த திட்டத்தின் கீழ் சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பு மிகக் குறைவு என்றும் அவர் விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த ஷபானா மக்மூத், திருப்பி அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை ஒப்புக்கொண்டாலும், கைது நடவடிக்கைகள் மற்றும் விரைவான நாடுகடத்தல் தொடர்பான நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக விளக்கினார். சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயை சட்டவிரோதமாக கடக்க முயல்வோரைக் கட்டுப்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2025ஆம் ஆண்டில் மட்டும் 41,472 பேர் சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட சுமார் 5,000 அதிகமாகவும், 2022க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகவும் உள்ளது.
ஒப்பந்தத்தின் படி, இங்கிலாந்து ஒருவரை பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பினால், அதற்குப் பதிலாக இங்கிலாந்தில் தஞ்சம் கோரத் தகுதியான ஒருவரை ஏற்க வேண்டும். கால்வாயை கடக்கும் நபர்களை உடனடியாக கைது செய்து, சுமார் இரண்டு வாரங்களுக்குள் அவர்களை பிரான்ஸுக்கு அனுப்புவதற்கான நடைமுறையிலும் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
கடந்த செப்டம்பரில் இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான அகதி எண்ணிக்கைகள் ஏற்றத் தாழ்வாகவே இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் எண்ணிக்கைகள் குறைவாக இருந்தாலும், சமீப மாதங்களில் சிறிதளவு அதிகரித்துள்ளது. இருப்பினும், மொத்தமாக கால்வாயை கடக்கும் அகதிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த திட்டத்தின் தாக்கம் இன்னும் குறைவாகவே உள்ளது.
இந்த முயற்சி ஒரு முன்னோடி திட்டமாக வடிவமைக்கப்பட்டதாகவும், பிரான்ஸுடன் புதிய முறையில் இணைந்து செயல்பட முடிகிறதா என்பதை சோதிப்பதே இதன் நோக்கம் என்றும் மக்மூத் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் திட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், இங்கிலாந்து வரத் தகுதியானவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, பிரதமர் அலுவலகமும் திட்டத்தை ஆதரித்து பேசியுள்ளது. திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு திசையில் எண்ணிக்கை அதிகமாகவும் மற்றொரு திசையில் குறைவாகவும் இருக்கலாம் என்றும், காலப்போக்கில் இந்த நிலை மாறக்கூடும் என்றும் பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
The post one in, one out: திருப்பி அனுப்பப்பட்டவர்களைவிட அதிகமான அகதிகள் இங்கிலாந்து வருகை appeared first on Vanakkam London.